Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தடைகளை தகர்க்கும் மஹாகணேசர்

காமேஸ்வர முகாலோக கல்பித ஸ்ரீ கணேஸ்வரா…

மஹா கணேச நிர்பின்ன விக்ன யந்த்ர ப்ரஹர்ஷிதா

நாம் இந்த முறை இரண்டு நாமங்களை சேர்த்துப் பார்க்கலாம். காமேஸ்வர முகாலோக கல்பித ஸ்ரீ கணேஸ்வரா.

இதற்கு அடுத்ததாக… மஹா கணேச நிர்பின்ன விக்ன யந்த்ர ப்ரஹர்ஷிதா.

நாம் தொடர்ந்து பண்டாசுர யுத்தத்தின் பொதுவான அர்த்தத்தையும், அதற்குள்ளே சொல்லப்படும் தத்துவார்தத்தையும் தொடர்ந்து பார்த்துக் கொண்டே வருகிறோம்.

பாலா திரிபுர சுந்தரி பண்ட புத்திரர்களை வதம் செய்ததை பார்த்தோம். விஷங்கனை மாதங்கி வதம் செய்ததை பார்த்தோம். விசுக்ரனை வாராஹி வதம் செய்ததை பார்த்தோம். பண்ட சைன்னியத்தை சக்தி சைன்னியம் வதம் செய்ததை பார்த்தோம். இப்படியெல்லாம் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வருகிறோம்.

இதிலிருந்தெல்லாம் என்ன தெரிகிறதெனில், சக்தி சைன்னியம் என்று சொல்லக் கூடிய, ஞான மயமாக இருக்கக் கூடிய அம்பாளினுடைய சைன்னியம் அஞ்ஞான மயமாக இருக்கக் கூடிய பண்டனுடைய சைன்னியத்தை எதிர்த்து முன்னேறிக் கொண்டே இருக்கிறது என்பது தெள்ள தெளிவாகத் தெரிகிறது.

பண்டனுடைய சைன்னியம் பலமானதுதான். அப்படியிருந்தாலும் கூட அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அஞ்ஞான விருத்திகள் எவ்வளவுதான் பெரியளவில் செயல்பட்டாலும் கூட, ஞான ஸ்பூர்த்தி வந்துவிட்டால், ஞான விருத்தி வந்து செயல்பட ஆரம்பித்து விட்டால், அஞ்ஞான விருத்தியை அழித்துவிட்டு ஞான விருத்திதான் முன்னேறும். அதை யாராலும் தடுக்க முடியாது.

அதனால், பண்டாசுரனுக்கு ஒரு பயம் வரும். புத்திரர்களை அனுப்பினால் பாலா சம்ஹாரம் செய்து விடுகிறாள். விஷங்கன், விசுக்ரனை அனுப்பினால் மாதங்கியும் வாராஹியும் சம்ஹாரம் செய்து விடுகிறாள். என்ன செய்தாலும் ஒரு எதிர்வினை வந்து கொண்டே இருக்கிறதே என்று பயம் வந்து விடுகிறது. அதனால், என்ன செய்தாலும் ஏதாவது ஒரு எதிர்வினை வந்து கொண்டிருக்கிறதே என்று அவன் நினைக்கும்போது, அவனுக்குள் வித்தியாசமான முயற்சியை அங்கு கைக்கொள்கிறான்.

அது என்ன முயற்சி?

இதுவரை வெளிப்படையாக தன்னுடைய படைகளை அனுப்பினான் அல்லவா? அதாவது வெளிப்படையாக தன்னுடைய புத்திரர்களை அனுப்பினான். விஷங்கன், விசுக்ரனை அனுப்பினான் அல்லவா? யாரை அனுப்பினாலும் அதை சம்ஹாரம் செய்து விடுகிறாள், அம்பிகை. இப்படி வெளிப்படையாக செய்வதைத் தாண்டி சூட்சுமமாக வேலை பார்க்க வேண்டும்போலிருக்கிறது என்று நினைக்கிறான். நாம் நம் வழக்கு மொழியில் உள்ளடி வேலை என்று சொல்வோம் அல்லவா? அதுபோலத்தான். ஏதாவது செய்ய வேண்டும் போலிருக்கிறது. வெளிப்படையாக செய்வதில் ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்று சூட்சுமமாக செய்யத் தொடங்குகிறான். நவீன ராணுவத்தில் கொரில்லா தாக்குதல் என்று சொல்வார்கள். அதாவது மறைந்திருந்து தாக்குவது. ஒரு காட்டிற்குள்ளோ அல்லது மலையிலோ மறைந்திருந்து தாக்குவது.

இப்போது பண்டாசுரன் விக்ன யந்த்ரம் என்கிற யந்த்ரத்தை உருவாக்குகிறான். நாம் சொல்லக்கூடிய அந்த விக்னம் இருக்கிறதல்லவா? obstacles, hindrance என்கிற தடைகள், அதாவது விக்னத்தை ஒரு யந்த்ரமாக உருவாக்குகிறான். இப்போது அம்பாளுக்கு  சக்ரமே  யந்த்ரமே அம்பாளுக்கு ரதமாக இருக்கிறது என்று பார்த்தோம். வாராஹிக்கும் மாதங்கிக்கும் அந்தந்த ரதமே யந்த்ரமாக இருக்கிறது என்று பார்த்தோம். இவ்வளவு பெரிய யந்த்ர சைன்னியம் இருக்கும்போது, அவள் விக்னத்தை ஒரு யந்த்ரமாக உண்டாக்குகிறாள். அதை உண்டாக்கி விசுக்ரன் என்று நாம் பார்த்தோமல்லவா… அந்த விசுக்ரனிடம் கொடுக்கிறாள். இவனை வாராஹி சம்ஹாரம் செய்து விட்டாள். ஆனால், அவனை சம்ஹாரம் செய்வதற்கு முன்னால் இந்த சம்பவம் நடக்கின்றது.

என்ன நடக்கிறதெனில், அந்த விசுக்ரன் சென்று, இந்த விக்ன யந்த்ரத்தை கொண்டு சென்று, சக்தி சைன்னியத்திற்கு நடுவில் அந்த சக்தி சைன்னியத்திற்கே தெரியாமல் வைத்து விட்டு வந்து விட்டான். ஆனால், அதற்குப் பிறகு வாராஹி சம்ஹாரம் செய்துவிட்டு வந்து விட்டாள். ஆனால், அந்த விக்ன யந்த்ரம் சைன்னியத்திற்கு நடுவே இருக்கிறது. இப்படி நடுவில் இருப்பது யாருக்கும் தெரியவில்லை.

இந்த விக்ன யந்த்ரம் வைத்ததால் என்ன நடக்கிறது?

சக்தி சைன்னியத்தில் இருப்பவர்கள் அனைவருமே அம்பாளினுடைய அம்சம்தான். ஆனால், இந்த விக்ன யந்த்ரம் நடுவே இருப்பதால், காரணமே தெரியாமல் ஒருவிதமான களைப்பு. ஒருவிதமான சோர்வு. ஒருவிதமான சோம்பேறித்தனம். மனதிலேயும் உடலிலேயும் வலிமையற்று இருப்பது. போர் செய்வதற்கான ஆர்வம் இல்லாமல் இருப்பது. தன்னைத்தானே தாழ்மையாக நினைத்துக் கொள்வது என்று அத்தனையும் வந்து விட்டது. ஆங்கிலத்தில் சொன்னால், inferiority complex, insecuriry, ஆர்வமே இல்லாத தன்மை என்று எல்லாமுமே வந்து புகை மூட்டம் போல மூடிக் கொண்டு விட்டது. இன்னும் பேச்சு வாக்கில் சொன்னால் செய்வினை செய்ததுபோல் இருப்பது. எப்போதும் cloudy mood லேயே இருப்பது. இதெல்லாம், இந்த விசுக்ரன் இந்த விக்ன யந்த்ரத்தை வைத்தவுடன் வந்து விட்டது.

இப்போது சக்தி சைன்னியத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. நன்றாகத்தானே போர் செய்து கொண்டிருந்தோம். திடீரென்று அந்தப் படையில் இருப்பவர்களெல்லாம் சோர்ந்து, சோர்ந்து விழ ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், என்ன பெரிய யந்த்ரம் வைத்தாலும் சரிதான், அம்பிகையை தொட முடியாதல்லவா? அம்பாளுக்கு நன்றாகவே தெரியும்… என்ன நடக்கிறதென்று. சுற்றிச் சுற்றி இருக்கும் சைன்னியத்தில் உள்ளவர்களெல்லாம் மயங்கி மயங்கி விழுவதை அம்பாள் பார்க்கிறாள். மறைமுகமாக தாக்குதல் நடப்பதை அம்பாள் உணருகிறாள். இதுவரையிலும் நடந்ததெல்லாம் கண்ணுக்கு தெரிந்து நடக்கக் கூடிய தாக்குதல். இப்போது நடக்கக் கூடியது கண்ணுக்குத் தெரியாமல் நடக்கக்கூடிய தாக்குதல்.

கண்ணுக்கு தெரியாமல் நடக்கின்ற தாக்குதலை முறியடிப்பதற்கு அதற்குத் தகுந்தவாறு உள்ள ஒன்றைதான் அனுப்பி முறியடிக்க வேண்டும். தந்திரமான ஒரு காரியத்தை ஒருவர் செய்தார்களெனில், அதை முறியடிக்க நாமும் தந்திரமாக இன்னும் சொல்லப்போனால் சாதூர்யமாக ஏதேனும் செய்ய வேண்டும். நாம் நேரடியாக எதுவும் செய்ய முடியாது.

இப்போது அம்பிகையானவள் அருகிலுள்ள ஈசனை அதாவது காமேஸ்வரனின் முகத்தை பார்க்கிறாள். காமேஸ்வரரை காமேஸ்வரி இப்படிப் பார்க்கிறாள். அப்படிப் பார்த்தவுடனே, சுவாமியின் முகத்தில் சிறிய சிரிப்பு வருகிறது. அம்பிகையின் முகத்தில் சிறிய சிரிப்பு வருகிறது. இரண்டு பேருடைய முகத்திலும் ஒரு ஆனந்தம் வருகிறது. இருவரின் முகத்திலும் வெளிப்பட்ட ஆனந்தத்திலிருந்து, இரண்டு கலந்த ஆனந்தத்திலிருந்து ஆனந்த சொரூபியாக ஒருவர் ஆவிர்பவிக்கிறார். யார் ஆவிர்பவிக்கிறார் எனில், விநாயகப் பெருமான் ஆவிர்பவிக்கிறார். மகா கணபதி ஆவிர்பவிக்கிறார்.

காமேஸ்வர முகாலோக கல்பித ஸ்ரீ கணேஸ்வரா… என்பது இதுதான். இப்படி ஆவிர்பவித்தலைத்தான் இந்த நாமம் சொல்கிறது. காமேஸ்வரனுடைய முகத்தை பார்த்ததால் மகா கணபதியை உண்டு பண்ணிய அம்பாள். மகா கணபதியை உண்டு பண்ணிய லலிதாம்பிகை.

இதுவொரு நாமத்தின் பொருள்.

இதற்கு அடுத்ததாக, இதனுடைய தொடர்ச்சியாக அடுத்த நாமம் இருக்கிறது.

மஹா கணேச நிர்பின்ன விக்ன யந்த்ர ப்ரஹர்ஷிதா…

அந்த மகா கணபதி அங்கு ஆவிர்பவித்துவிட்டு என்ன செய்கிறாரெனில், தாய் தந்தையரை வணங்கிவிட்டு அம்மாவினுடைய கட்டளைப்படி அந்த விக்ன யந்த்ரத்தை உடைத்து தூள் தூளாக்குகிறார். அது எங்கிருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், மகா கணபதி உடைத்து தூள் தூளாக்குகிறார். மகா கணேச நிர்பின்ன… விக்ன யந்த்ரத்தை உருத் தெரியாமல் அழித்து விடுகிறார். பண்டாசுரன் இதை எதிர்பார்த்திருக்கவே மாட்டான். ஏதோ யாருக்கும் தெரியாமல் செய்வினை போன்று வைக்கிறோமே என்று நினைத்தால், மகா கணபதி சென்று எந்த சண்டையும் போடவில்லை. சென்றவுடனே அந்த விக்ன யந்த்ரத்தை தூள் தூளாக்கி விட்டார். அதைப் பார்த்தவுடனே அம்பாளுக்கு …. புல்லரிக்கும் ஆனந்தம் உண்டாயிற்றாம். ப்ரஹர்ஷிதா…. மெய் சிலிர்க்கும் ஆனந்தம் உண்டாயிற்றாம்.

அம்பிகைக்கு இவ்வளவு பராக்கிரமமான செயலை செய்தால் எவ்வளவு பெரிய மகிழ்ச்சி இருக்கும். சாதாரணமாக அம்மாவானவள் ஒரு குழந்தையை பார்த்தாலே மகிழ்ச்சியடைவாள். அந்தக் குழந்தையானவள் தான் நினைக்கிறபடி ஒரு பெரிய காரியத்தை சாதித்துவிட்டு வந்திருக்கிறாளெனில், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டினால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ப்ரஹர்ஷிதா…. என்றால் பூரிப்பு என்றும் அர்த்தம் உண்டு. இதற்கு முன்பு வெவ்வேறு நாமங்களில் நந்திதா… மோதிதா… என்றெல்லாம் பார்த்தோம். ஏனெனில், இங்கு நடந்ததோ பெரிய விஷயம். அதைச் செய்தவர் தன்னுடைய குழந்தை. அதைப் பார்த்து அவ்வளவு சந்தோஷப்படுகிறாள்.

இதுதான் இந்த இரண்டு நாமத்தினுடைய பொதுப் பொருள். ஏன், இந்த இரண்டு நாமத்தையும் சேர்த்துப் பார்க்கிறோமெனில், லலிதோபாக்கியனத்தில் இந்த மகா கண்பதியின் பிரபாவம் வருகின்றது.

இந்த இரண்டு நாமங்களும் மகா கணபதியின் இந்த பிரபாவத்தை காண்பிப்பதால், இந்த இரண்டு நாமங்களையும் சேர்த்தே பார்க்கிறோம்.

இப்போது அத்யாத்மமாக - ஆழமாக நமக்குள் எப்படி நிகழ்கிறது என்பதை பார்ப்போமா? அதாவது ஜீவனுக்குள் இது எப்படி நடக்கிறது என்று பார்ப்போமா?

(சுழலும்)