Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வினைகளை வேரறுப்பான் விநாயகப் பெருமான்

முத்துக்கள் முப்பது

விநாயகர் சதுர்த்தி 27-8-2025

1. முன்னுரை

நாம் ஆவலோடு எதிர்பார்த்த விநாயகர் சதுர்த்தி திருவிழா வந்துவிட்டது. குதூகலமான இந்த விழாவைக் கொண்டாடுவதற்கு நாடே தயாராகிவிட்டது. ஐந்து கரங்களை உடைய ஆனைமுகனைத் தமிழ் வருடந்தோறும் ஐந்தாவது மாதம் ஆன ஆவணி மாதம் வளர்பிறைச் சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, 27.8.2025 புதன்கிழமை ஹஸ்த நட்சத்திரம் சித்திரை நட்சத்திரமும் கூடிய புதன்கிழமையில் வருகிறது. விநாயகப் பெருமானின் பெருமையையும், விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டிய முறைகளையும், விநாயகரைப் பற்றி பல்வேறு தத்துவங்களையும் இந்த முப்பது முத்துக்கள் தொகுப்பில் காண இருக்கின்றோம்.

2. எந்த அடிப்படையில் கொண்டாடுகிறோம்?

நம்முடைய சமயப் பண்டிகைகள் பெரும்பாலும் திதியை அனுசரித்துத் தான் கொண்டாடப்படுகின்றன. முருகருக்கு கந்த சஷ்டி, விநாயகருக்கு சதுர்த்தி, பெருமாளுக்கு அஷ்டமி, சூரியனுக்கு சப்தமி, அம்பாளுக்கு தசமி (விஜய தசமி) சிவபெருமானுக்கு பிரதோஷ தினமான திரயோதசி என திதிகளின் அடிப்படையில்தான் பெரும்பாலான விரதங்களும் உற்சவங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சூரிய நாராயண பூஜை பௌர்ணமியிலும், முன்னோர்களுக்கான பூஜை அமாவாசையிலும் அமைக்கப்பட்டிருக்கும். விநாயகருக்கு உரிய தினம் சதுர்த்தி. சதுர்த்தி என்பது நான்காவது திதி. இது வளர்பிறை தேய்பிறை என வருடத்திற்கு 24 சதுர்த்தி வரும். ஒவ்வொரு சதுர்த்தியிலும் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவதன் மூலம், வினைகளை வேரறுத்து நல்வாழ்வு வாழும் நலமான வாய்ப்பினைப் பெறுகிறோம்.

3. இந்த ஆண்டு சிறப்பு

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி தினம் புதன்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 7:00 மணி வரை சந்திரனுக்குரிய ஹஸ்த நட்சத்திரம் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்குரிய சித்திரை நட்சத்திரம் நாள் முழுவதும் இருக்கிறது. சதுர்த்தி திதி மாலை சுமார் 4:00 மணி வரை இருக்கிறது பிறகு பஞ்சமி வந்து விடுகிறது. ஆவணி மாத அமாவாசைக்கு பிறகு சாந்திரமான முறையில் வரும் வளர்பிறை நான்காம் நாளே விநாயகர் சதுர்த்தி தினமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இதற்கு அடுத்த நாள் ரிஷி பஞ்சமியும், அதற்கு அடுத்த நாள் சம்பா சஷ்டி விரதமும் தொடர்ந்து வருகின்றன.

4. முதல் வழிபாடு மூத்த பிள்ளைக்கே

விநாயகர் வழிபாடு ஆறு சமயங்களில் காணாபத்தியம் என்னும் பிரிவில் இருந்த தொன்மையான வழிபாடுகளில் ஒன்று. புராணங்களின் படி விநாயகப் பெருமான் லோக மாதாவான பார்வதி தேவியால் உருவாக்கப்பட்டவர். அப்படி உருவாக்கப்பட்ட உருவத்தில் யானையின் தலையைப் பொருத்தி யானை முகமாக மாற்றியவர் சிவபெருமான். எனவே சிவபார்வதியின் அம்சமாகவும் அவர்களின் பிள்ளையாகவும் அறியப்படுபவர் விநாயகர்.

முருகனுக்கு முன் உள்ள பிள்ளை என்பதால் மூத்த பிள்ளை என்று அழைக்கப்படுகிறார். இவருடைய தோற்றத்தைப் பற்றி பல்வேறு புராணக் கதைகள் இருக்கின்றன. எந்த வழிபாட்டிலும் முதல் வழிபாடாக விநாயகர் வழிபாட்டை நடத்திவிட்டுத் தான் மற்ற காரியங்களைத் தொடங்குகின்றனர். வினைகளை வேரறுத்து வெற்றியைத் தருவது விநாயகரின் பணி. அதனால் முதல் பூஜையாக விநாயகர் பூஜை நடத்துகின்றனர்.

5. விநாயகரின் பெயர்கள்

விநாயகருக்கு பல்வேறு திருநாமங்கள் இருக்கின்றன. கணபதி என்று அழைக்கிறார்கள். விநாயகன் என்று துதிக்கிறார்கள். விக்னேஸ்வரன் என்று போற்றுகின்றார்கள். கஜமுகன் என்று கைகூப்புகிறார்கள். லம்போதரன் என்றும் அழைக்கின்றார்கள். ஒவ்வொன்றுக் கும் ஒவ்வொரு பொருள் உண்டு. காரணம் உண்டு. பூதகணங்களிற் கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார். யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார். கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானை முகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார். விக்கினங்களைத் தீர்ப்பதால் விக்னேஸ்வரன்.

6. லம்போதரன்

விநாயகருக்குரிய குறிப்பிடத்தக்க அடையாளம் அவருடைய பெருவயிறு. தும்பிக்கை. ஒடிந்த தந்தம். கையில் வைத்திருக்கும் மோதகம். கஜமுகன் என்று அவருடைய முகத்தை வைத்து திருநாமம் சூட்டியவர்கள் அவருடைய வயிற்றை வைத்து சூட்டிய திருநாமம்தான் லம்போதரன். ‘லம்பம்’ - தொங்குவது. ‘உதரம்’ - வயிறு. அதாவது தொந்தியுள்ளவர். புரந்தர தாஸர் ஸங்கீதத்தில் பால பாடம் ஆரம்பிக்கும் போது பிள்ளையார் கீதத்தை “லம்போதர லகுமிகரா” என்றே ஆரம்பித்திருக்கிறார்.

‘லகுமிகரா’ என்றால் ‘லக்ஷ்மிகரா’; ஸெளபாக்கியங்களை உண்டாக்கு பவர். பிள்ளையார் என்றாலே அவருடைய பானை வயிறுதான் முதலில் நினைவுக்கு வரும். இந்த விஷயம் ‘பேழை வயிறும்’ என்று விநாயகர் அகவலில் வருகிறது. கையில் பூர்ணமுள்ள மோதகத்தை வைத்திருப்பவர், தாமே பூர்ணவஸ்து என்று காட்டத்தான் பானை வயிற் றோடு இருக்கிறார்.

7. நான்குயுகங்களிலும் நான்கு அவதாரங்கள்

கணேச புராணம், கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுகின்றது. முதல் யுகமான கிருத யுகத்தில் காஸ்யப முனிவருக்கும் அதிதி தேவிக்கும் பிள்ளையாக அவதரித்து அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். கிருதயுக அவதாரத்தில் பிள்ளையாரின் திருநாமம் மகாகடர்.

அடுத்த யுகமான திரேதாயுகத்தில் அம்பிகைபார் வதியின் பிள்ளையாக அவதரித்து, அழகான மிகப்பெரிய மயிலை தம் குழந்தைப் பருவத்தில் பிடித்து விளையாடியதால் மயூரேசர் என்ற திருநாமம் மூன்றாவது யுகமான துவாபரயுகத்தில் கஜானனன் என்ற திருநாமத்துடன் அவதரித்து, பராசர மகரிஷி மற்றும் பராசர மகரிஷியின் தேவி வத்ஸலாவால் சிறப்பாக வளர்க்கப்பட்டார். கலியுகத்தில் சிவபெருமானுக்கும் அம்பிகை பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து அதர்மம் செய்வோரின் செயல்களில் தடங்கல்களையும் தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்கியும் வருவதாகக் கணேச

புராணம் குறிப்பிடுகின்றது.

8. சிவமகா புராணமும் விநாயகரும்

சிவமகா புராணத்தில் உள்ள கதை அற்புதமானது. முற்காலத்தில் யானை முகம் கொண்ட கஜாசுரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தான். சிவபெருமான் அவனுக்குக் காட்சியளித்து வேண்டிய வரம் கேட்குமாறு கூறுகிறார். அதற்குக் கஜாசுரன், தன் வயிற்றில் சிவபெருமான் லிங்க வடிவில் தங்கியிருக்க வேண்டும் என்று வரம் கேட்டுப்பெற்றான். இதை அறிந்து கலக்கமடைந்த பார்வதி தேவி விஷ்ணுவிடம் விஷயத்தைச் சொல்ல விஷ்ணு மற்றும் நந்தி ஆகிய இருவரும் தெருக்கூத்து நடத்துபவர்கள் போன்ற உருவம் கொண்டு கஜாசுரனின் அரண்மனைக்கு வந்தனர். நந்தியின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த கஜாசுரன், அவர் வேண்டுவதை அளிப்பதாக வாக்களிக்கிறான். அதற்கு நந்தி அவனிடம் சிவபெருமானை விடுவிக்குமாறு கேட்கிறார். கஜாசுரனும் தான் கொடுத்த வாக்கின்படி சிவபெருமானை விடுவித்தான்.

9. கஜாசுரன் கேட்ட வரம்

கஜாசுரன் சிவபெருமானை நோக்கி பிரபஞ்சத்தில் தன் நினைவு என்றும் அழியாமல் நிலைக்க வேண்டும் என்று வேண்டுகிறான். அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், கஜாசுரனின் யானைத் தலையைக் கொய்து அவரைப் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கிறார். மேலும் அவனது யானைத் தோலை உடுத்திக் கொண்டு கஜசம்ஹார மூர்த்தியாகக் காட்சியளித்தார். பிறகுச் சிவபெருமான் தன் வாகனமான நந்தியில் அமர்ந்து கொண்டு கயிலாயம் வருகிறார்.

சிவபெருமான் கயிலாயம் வந்து கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ந்த பார்வதி, அவரை வரவேற்கும் முன்பு நீராட நினைத்தார். நந்தி இல்லாததால் பார்வதி தாம் குளிக்கும் மஞ்சள் விழுதால் ஒரு சிறுவனைச் செய்து அதற்கு உயிர் கொடுத்தார். அவனுக்கு விக்னங்களைத் தீர்ப்பவன் என்ற பொருளில் விநாயகர் என்ற பெயர் சூட்டினார். தான் தயாராகி வரும் வரை ஒருவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று விநாயகரிடம் அறிவுறுத்துகிறார்.

10. கணபதி அவதாரம்

கயிலாயம் வந்தடைந்த சிவபெருமானை விநாயகர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவபெருமான் தன் திரிசூலத்தால் விநாயகரின் தலையைக் கொய்தார். பிறகு நடந்ததை அறிந்து கோபம் கொண்ட பார்வதி, பிரபஞ்சத்தையே அழிக்க முடிவெடுத்தார். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பிரம்மதேவர் வேண்டிக்கொண்டார். அதற்குப் பார்வதி, விநாயகரை உயிர்த்தெழச் செய்ய வேண்டும் மற்றும் விநாயகரையே அனைவரும் முழுமுதற் கடவுளாக வணங்க வேண்டும் என்று இரு நிபந்தனைகள் விதித்தார்.

அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், வடக்கில் தலை வைத்து இறந்த நிலையில் படுத்திருக்குமாறு முதலில் தென்படும் உயிரினத்தின் தலையைக் கொய்து எடுத்து வருமாறு சிவகணங்களை அனுப்பினார். அதன்படி சிவகணங்கள் கஜாசுரனின் தலையுடன் திரும்பி வந்தனர். அதை விநாயகரின் உடலோடு பொருத்தினார் பிரம்மதேவர். பிறகு விநாயகருக்கு உயிரளித்த சிவபெருமான், அவனுக்கு முழுமுதற் கடவுள் என்ற பட்டமும் கணங்களுக்கு அதிபதியாக கணபதி என்றும் பெயரையும் வழங்கினார்.

11. கதைகள் சொல்லும் செய்தி

நம்முடைய புராணக் கதைகள் ஏதோ ஒரு தத்துவத்தை, சொல்வதற்காக எழுதப்பட்ட கதைகள். எனவே அந்தக் கதைகளின் சம்பவங்களை வரிக்கு வரி அப்படியே அர்த்தப்படுத்திக் கொண்டு தர்க்கம் செய்து கொண்டிருக்க கூடாது. ஒரு விஷயத்துக்கு இரண்டு மூன்று கதைகள் கூட இருக்கும். அப்படி அந்தக் கதைகள் இருப்பதற்கு வெவ்வேறு கோணத்தில் அந்த செய்தியைத் தெரிவிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.

எனவே எந்தப் புராணக் கதைகளிலும் நாம் சாரத்தை மட்டும் கிரகித்துக் கொள்ள வேண்டும். விநாயகர் கதையின் அடிப்படையைக் கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயம் நமக்குப் புலப்படும். பார்வதி தேவி மஞ்சளை வைத்து பிள்ளை யாரை உருவாக்கியதாக உள்ள புராணக் கதை ஒரு அற்புதமான விஷயத்தைச் சொல்லுகிறது. பிடித்து வைத்ததால் (பார்வதிக்கு) பிள்ளையாரானவர் விநாயகப் பெருமான். இதன் பொருள் நாம் எந்தப் பொருளை விநாயகரை நினைத்து பிடித்து வைத்தாலும் அதில் உடனடியாக பிள்ளையார் வந்து அமர்ந்து கொள்கிறார். இதனை ஆவாகனம் என்று பூஜை முறையில் சொல்வார்கள். அதை சொல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கதை தான், மஞ்சள் பிள்ளையார் கதையும் பிறகு அவருக்குக் கிடைத்த யானை முகமும்.

12. வெல்லத்தைக் கிள்ளி வெல்லப் பிள்ளையாருக்கு

இன்றைக்கும் பிள்ளையாரை முதன் முதலில் பெரும்பாலும் மஞ்சளில் தான் பிடித்து வைக்கிறோம். “அஸ்மின்னு ஹரித்ரா பிம்பே ஸ பரிவாரம் ஸூ முகம் மகா கணபதிம் ஸ்ரீவிநாயகம் தியாயாமி ஆவாஹயாமி” என்பது ஆவாஹன மந்திரம். மஞ்சள் கிடைக்காத இடத்தில் வெல்லத்தால் பிடித்து வைக்கலாம். அதைவிட இன்னும் சிறப்பு அந்த வெல்லத்தையே கிள்ளி வெல்லப் பிள்ளையாருக்குப் பூஜை செய்யலாம்.

இந்த எளிமையான விஷயம் வேறு எந்த வழிபாட்டு முறையிலும் இல்லை. அதனால் தான் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு தெருவிலும், மக்கள் மனதில் பிள்ளையார் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். சாணத்தில் பிள்ளையாரைப் பிடிக்கலாம். களி மண்ணால் பிள்ளையாரைப் பிடிக்கலாம். மரத்தில் அவரை வடிக்கலாம். (வெள்ளெருக்கு வேரினால் செய்யப்பட்ட விநாயகர் வடிவம்). கருங்கல்லில் அவரைச் செதுக்கலாம் களிமண்ணில் ஆக்கலாம். ஏன் நம்முடைய மனதையே உள்ளங்கையால் தொட்டு பிள்ளையார் இங்கே வர வேண்டும் என்று நினைத்தால்கூட பிள்ளையார் மனதில் வந்து அமர்ந்து கொள்ளுகின்றார்.

13. தமிழகத்தின் வீதிகளில் பிள்ளையார்

ஒவ்வொரு ஊரிலும் ஓரிரண்டு சிவன் கோயில்கள் இருக்கும் ஓரிரண்டு திருமால் ஆலயங்கள் இருக்கும். அம்மன் ஆலயங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். ஆனால் வீதிக்கு வீதி விநாயகர் தான் இருப்பார். ஆலமரம் அரசமரம், ஆற்றங்கரை, குளத்தங்கரை என்று அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கக்கூடிய எளிமையான தெய்வம் விநாயகர். ஆற்றில் நீராடச் செல்லும் போது அவரை வணங்கி விட்டுத்தான் செல்ல வேண்டும்.

நீராடிவிட்டு வரும்போது அவரை வணங்கிவிட்டுத்தான் வரவேண்டும். எந்த ஆலயத்தில் வழிப்படச் சென்றாலும் அவரை வணங்கி விட்டுத் தான் உள்ளே செல்ல வேண்டும். எனவே, கோபுர வாசலிலேயே அவர் குடியிருப்பார். ஒரு தெருவிற்குள் நுழைந்தால் அவரை வணங்கி விட்டுத்தான் தெருவுக்குள் நுழைய வேண்டும் என்பதால் தெருமுனையில் அவர் இருப்பார்.

14. இத்தனைப் பெயர்களா?

ஏதோ ஒரு விதத்தில் ஒரு கதை அவருடைய கோயிலோடு தொடர்புபடுத்திச் சொல்லப்படுகிறது. வித்தியாசமான வேடிக்கையான பெயர்களில் விநாயகர் அழைக்கப்படுவதை நாம் காண்கின்றோம். விநாயகரின் பெயர்களில் சில. இரட்டைப் பிள்ளையார், வெள்ளம் காத்த பிள்ளையார், குறும்பறுத்த பிள்ளையார், கூத்தாடும் பிள்ளையார், செங்கழுநீர் பிள்ளையார், முத்தாச்சி பிள்ளையார், நரமுக பிள்ளையார், பொள்ளாப் பிள்ளையார், கள்ளவாரணர், கடுக்காய்ப் பிள்ளையார், முத்து விநாயகர், முக்குருணி விநாயகர், ஜெகன்நாதப் பிள்ளையார், தேரடிப் பிள்ளையார், ராஜகணபதி, கோரக்க விநாயகர், உச்சிப் பிள்ளையார், பிரளயம் காத்த பிள்ளையார், வெள்ளை விநாயகர், வெயில் உகந்த விநாயகர், மிளகுப் பிள்ளையார், நெற்குத்தி விநாயகர், சுயம்பு விநாயகர், காரண விநாயகர். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

15. மழை வரம் தரும் பிள்ளையார்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தில் ஆயிரத்தெண் விநாயகர் அருள்புரிகிறார் சித்திரை மாதத்தின் போது நடக்கும் பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் நடராஜப் பெருமானுடன் பஞ்சமுக ஹேரம்ப கணபதி திருவீதி உலா வருகிறார் திருநெல்வேலி மாவட்டம் மாதேவியில் மிளகு பிள்ளையார் அருள் தருகிறார். மழை பெய்வதற்காக இவரது உடலில் மிளகை அரைத்து தடவி அபிஷேகம் செய்கிறார்கள் விநாயகர் லிங்க வடிவத்திலேயே அருள்புரியும் இடம் விழுப்புரம் அடுத்த தீவனூர் இவருக்கு நெற்குத்தி விநாயகர் என்று பெயர் லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்யும் பொழுது விநாயகரை நாம் தரிசனம் செய்யலாம்.

ராமநாதபுரம் உப்பூரில் வெயில் உகந்த விநாயகர் அருள்கிறார் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை அவருக்கு தெற்கு புறத்திலும் தை மாத முதல் ஆனி மாதம் வரை வடக்கு புறத்திலும் சூரியன் கதிர்களைப் பாய்ச்சி வணங்குகின்றார். ஆத்தூரில் தலையை ஆட்டும் விதமாக தலையாட்டி விநாயகர் தரிசனம் தருகின்றார். நந்தியோடு இருக்கும் விநாயகர் கோயம் புத்தூர் மத்தம்பாளையத்தில் உள்ளார்.

16. தேவாரம் தொகுக்கக் காரணமான பிள்ளையார்

சிதம்பரத்திற்கு அருகில் 16 கி.மீ தொலைவில் உள்ள திருநாரையூரில் நம்பியாண்டார் நம்பிக்கு அருள் புரிந்தவர் பொள்ளாப் பிள்ளையார் இவர்தான் சைவத் திருமுறைகள் (தேவாரம்) தொகுக்கக் காரணமானவர். திருநாரையூர் ஸ்ரீ சவுந்தரேஸ்வரர் சந்நதிக்கு தென்மேற்கு திசையில் தனி சந்நதியில் பொள்ளாப் பிள்ளையார் அருள்பாலித்து வருகின்றார். பொள்ளாதே - என்றால் உளியால் செதுக்கப்படாது தானாகத் தோன்றியது என்று பொருள். பொள்ளாப் பிள்ளையார் இல்லாவிட்டால் தேவாரப்பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்காது. ஒவ்வொரு வருடமும் வைகாசி திங்கள் புனர்பூச நட்சத்திரத்தில் நம்பியாண்டவர் நம்பி குருபூஜை விழா திருமுறை விழாவாக கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் அன்னதானம் வழங்கப்படுகின்றது.

17. தில்லையில் தேவாரம் காட்டியவர்

திருநாரையூரில் உள்ள பிள்ளையார், தேவாரத் திருமுறைகள் தில்லை நடராஜர் கோயிலில் இருப்பதாகக் காட்டித் தந்தார். ராஜராஜசோழன் இந்தத் திருமுறைகளைத் தேடி தில்லை பெருங்கோயிலுக்கு வந்தார். தில்லைப் பெருங்கோயிலில் எந்த இடத்தில் இந்த சுவடிகள் இருக்கின்றன என்பது தெரியவில்லை, மறுபடியும் விநாயகப் பெருமானை வேண்ட அவர் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் மேற்கு உள் பிரகாரத்தில் உள்ள அறையில் உள்ளதாகக் காட்டித் தந்தார். சிதம்பரத்தில் மேற்கு உள் பிரகாரத்தில் உள்ள விநாயகருக்கு திருமுறை காட்டிய விநாயகர் என்ற திருநாமம். சிதம்பரத்தில் இன்னும் ஒரு விசேஷம் எல்லாத் தெருக்களிலும் விநாயகர் சந்நதிகள் உள்ளன.

18. முக்குறுணி விநாயகர்

முக்குறுணி விநாயகர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள பெரிய விநாயகர். மீனாட்சி அம்மன் சந்நதிக்கும் சுந்தரேஸ்வரர் சந்நதிக்கும் இடையே கிளிக்கூண்டு மண்டபத்துக்கு வடக்குப் புறம் அமைந்துள்ளது. ஒரு குறுணி என்பது 6 படி, முக்குறுணி என்பது 18 படி. விநாயகர் சதுர்த்தி அன்று இவருக்கு 18 படி பச்சரிசி மாவால் செய்யப்பட்ட கொழுக்கட்டை படைக்கப்படுகிறது, இவருக்கு அபிஷேகம் செய்ய பக்கவாட்டில் உள்ள படிகளில் ஏறிச் செல்ல வேண்டும்.

மீனாட்சி அம்மன் கோயில் கட்டிய போது மன்னர் திருமலை நாயக்கர் கோயில் கட்ட மண் வேண்டி மதுரை நகருக்கு வெளியில் அமைந்துள்ள வண்டியூர் என்ற இடத்தில் ஒரு பெரிய தெப்பக் குளத்தை வெட்டினார். அப்போது அங்குள்ள ஒரு பாறையை வெட்டி எடுத்து மிகப்பெரிய பிள்ளையார் சிலையைச் செய்து மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது.

19. விடல் தேங்காய் (சிதம்பரம் முக்குறுணி) விநாயகர்

சிதம்பரம் நடராஜர் கோயிலின் ராஜகோபுரம் என போற்றக்கூடிய தெற்கு கோபுர வாயிலைத் தாண்டினோமானால், இடது பக்கம் தனியொரு அழகிய ஆலயம் கொண்டு ஸ்ரீ முக்குறுணி விநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கின்றார். முகப்பு மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பக்ருஹம் என்ற அழகியதொரு வரிசையில் ஆலயம் தனியாக அமைந்துள்ளது. முகப்பு மண்டபத்தின் விதானத்தில் - மேற்கூரையில், விநாயகரின் 16 வடிவங்கள் (ஷோடச கணபதிகள்) எழில் கொஞ்ச வரையப்பட்டுள்ளன.

சிதம்பர பூஜை பத்ததியின் படி, முக்குறுணி விநாயகர் ‘த்ரிசிவாக்ய கணபதி’ என்று போற்றப்பட்டு வழிபடப்படுகின்றார். சிதம்பரம் கோயிலின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் இங்கு செய்யப்படும் கணபதி ஹோமம் தான் ஆரம்பம். இங்கு விடல் தேங்காய் வழிபாடு சிறப்புக்குரியது. செயல்கள் சிறக்கவும், வேண்டிய காரியம் நிறைவேறினாலும் - பக்தர்கள் இங்கு 1008 தேங்காய்களை விடல் தேங்காயாக உடைக்கும் வழக்கம் இன்றளவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

20. விநாயகரின் ஆறுபடை வீடுகள்

முருகனுக்கு எவ்வாறு ஆறுபடை வீடுகள் உள்ளதோ அதேபோல் விநாயகருக்கும் ஆறுபடை வீடு உள்ளன. விநாயகரின் அறுபடை வீடுகள்:

திருவண்ணாமலை: அல்லல் போக்கும் விநாயகர்.

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்): ஆழத்து விநாயகர்.

திருக்கடவூர்: கள்ள வாரண விநாயகர்.

மதுரை: காரிய சித்தி விநாயகர்.

பிள்ளையார்பட்டி: கற்பக விநாயகர்.

திருநாரையூர்: பொல்லாப் பிள்ளையார்.

21. பிள்ளையாரை ஏமாற்ற முடியுமா?

திருவாரூருக்குத் தெற்கே திருக்காறாயில் என்று ஒரு ஸப்தவிடங்க க்ஷேத்ரம்; தியாகராஜா ஏழு விதமான நாட்டியமாடும் ஏழு ஸ்தலங்களில் ஒன்று. இங்கே அருள் புரியும் பிள்ளையாருக்கு கடுக்காய் பிள்ளையார் என்று திருநாமம். இதன் பின்னணியில் ஒரு அற்புதக் கதை உண்டு. அந்த ஊருக்கு ஒரு வியாபாரி ஜாதிக்காய் மூட்டைகள் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தான். அந்த காலத்தில் ஜாதிக்காய்க்கு வரி உண்டு.

அதனால் சுங்கச் சாவடியில் கடுக்காய் மூட்டை என்று பொய் சொல்லி - முன்னேற்பாடாக வண்டியில் முன்னாடியும் பின்னாடியும் கடுக்காய் மூட்டைகளும் போட்டுக் கொண்டு வந்திருந்தான்; சரி என்று வரி இல்லாமல் விட்டு விட்டார்கள். விநாயகர் சும்மா விடுவாரா? அவர் எல்லா மூட்டைகளில் இருந்ததையும் கடுக்காயாகவே மாற்றிவிட்டார். மறுநாள் மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த வியாபாரி, “ஐயோ!” என்று தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டான். அப்புறம் பிள்ளையாருக்கு வேண்டிக் கொண்டு, கடுக்காய் மறுபடி ஜாதிக் காயானால் அதற்குண்டான வரியும், அபராதமும் கட்டுவதாக ஒப்புக் கொண்டான். அவரும் கடுக்காயை மாற்றிப் பழையபடியே ஜாதிக் காயாகப் பண்ணினார். பிள்ளையாருக்கு இந்த சம்பவத்தால் கடுக்காய்ப் பிள்ளையாரென்று பேர் வந்து விட்டது!

22. முப்பத்தியிரண்டு விநாயக மூர்த்தங்கள்

பிள்ளையாரின் 32 வடிவங்கள் பிரசித்தி பெற்றவை. இவை ஒவ்வொன்றுக்கும் தியான ஸ்லோகங்கள் உண்டு.

தத்துவங்கள் உண்டு.

உச்சிட்ட கணபதி.

உத்தண்ட கணபதி.

ஊர்த்துவ கணபதி.

ஏகதந்த கணபதி.

ஏகாட்சர கணபதி.

ஏரம்ப கணபதி.

சக்தி கணபதி.

சங்கடஹர கணபதி.

சிங்க கணபதி.

சித்தி கணபதி.

சிருஷ்டி கணபதி.

தருண கணபதி.

திரயாக்ஷர கணபதி.

துண்டி கணபதி.

துர்க்கா கணபதி.

துவிமுக கணபதி.

துவிஜ கணபதி.

நிருத்த கணபதி.

பக்தி கணபதி.

பால கணபதி.

மஹா கணபதி.

மும்முக கணபதி.

யோக கணபதி.

ரணமோசன கணபதி.

லட்சுமி கணபதி.

வர கணபதி.

விக்ன கணபதி.

விஜய கணபதி.

வீர கணபதி.

ஹரித்திரா கணபதி.

க்ஷிப்ர கணபதி.

க்ஷிப்ரபிரசாத கணபதி.

23. கரும்பாயிரப் பிள்ளையார்

கும்பகோணத்தில் கும்பேச்வர சுவாமி கோயிலுக்கு வடமேற்கே கரும்பாயிரப் பிள்ளையார் கோவிலிருக்கிறது. ஒரு நாள் ஒரு கரும்பு வியாபாரி வண்டி நிறைய கரும்புகளை எடுத்துக் கொண்டு சர்க்கரை ஆலைக்குச் சென்று கொண்டிருந்தான். வழியில் பல சிறுவர்கள் கரும்பு கேட்க அவன் அவர்களை விரட்டிக் கொண்டிருந்தான். ஒரு சிறு துண்டு கரும்புகூட யாருக்கும் தரக் கூடாது என்பதின் உறுதியாக இருந்தான்.

அவனைச் சோதிக்க எண்ணிய விநாயகர் சிறுவன் போல வந்து அவனிடம் சாப்பிடுவதற்காக ஒரு துண்டு கரும்பு கேட்டார். ஆனால் அவன் தரவில்லை. வழியில் உள்ளவர்கள் சின்னப் பிள்ளை தானே, ஒரு துண்டு சாப்பிடத் தந்தால் என்ன என்று கேட்க, அவன் இது நல்ல கரும்பு கிடையாது, சாப்பிட்டால் கரிக்கும் என்றான்.

ஆலைக்குச் சென்று இறக்கிய போது அவர்கள் “கரும்புச் சாறு நிறைய வருமா?” என்று கேட்க, “வேண்டுமானால் சாப்பிட்டுப் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்” என்று ஒரு துண்டு எடுத்து அவர்களுக்குக் கொடுக்க அவர்கள் ‘‘அய்யய்யோ! இது என்ன கரிக்கிறது? இந்தக் கருப்பு எங்களுக்கு வேண்டாம்’’ என்று சொல்லிவிட அப்பொழுதுதான், தான் செய்த தவறு அவனுக்குப் புரிந்தது. உடனே விநாயகர் கோயிலுக்குச் சென்று மன்னிப்பு கேட்டுக் கொண்டான். விநாயகரும் அவனை மன்னித்து அந்த கரும்புகளை பழையபடி இனிக்கச் செய்தார். அதனால் அங்குள்ள விநாயகருக்கு கரும்பாயிர விநாயகர் என்ற பெயர் வந்தது.

24. விநாயகர் திருவுருவ தத்துவம்

ஆன்மாவைப் பொருந்தி நின்று மல, கன்ம, மாயைகளைத் அழித்து இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன. ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந் தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது. பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. தந்தம் ஏந்திய கை காத்தலைக் குறிக்கிறது. துதிக்கை அனுக்ரகம் செய்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலைக் குறிக்கிறது. மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது.

25. பெரிய காதுகள் ஏன்? மோதகம் ஏன்?

மகாபாரதத்தை எழுதுவதற்காகத் தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தைவிட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துவதாகக் கூறப்படுகின்றது. விநாயகரின் முறம் போன்ற பெரிய காதுகள் செவியில் விழும் செய்திகளைச் சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றன. தாமே பூர்ணவஸ்து என்று காட்டத்தான் கையில் பூர்ணமுள்ள மோதகம். ‘மோதகம்’ என்றால் ஆனந்தம், ஆனந்தம் தருவது. விக்நேச்வரரே நல்ல நிறைவைக் காட்டுவது பானை வயிறு.

26. பாடாத கவிஞர்கள் இல்லை

விநாயகப் பெருமானைப் பாடாத கவிஞர்களே இல்லை. வேறு விஷயங்கள் பாடினாலும் காப்புச் செய்யுளில் விநாயகரைப் பாடாமல் இருக்க மாட்டார்கள்.

‘‘ஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணுயா மதேவா:

பத்ரம் பச்யேமாக்ஷிபி: யஜத்ரா:

ஸ்த்திரைரங்கைஸ் துஷ்டுவாகும்

ஸஸ்தனூபி:

வ்யசேம தேவஹிதம் யதாயு:’’

என்று தொடங்கும் கணபதி அதர்வஷீர்ஷா உபநிஷத் பிரசித்தமானது. கணபதி ஹோமங்களில் பிரயோகிக்கப்படுகிறது. ஔவையார், விநாயகர் மேல் பாடிய அகவல் ‘‘சீதக்களப செந்தாமரை’’ எனத் தொடங்கும் விநாயகர் அகவல். அதி அற்புதமானது. விநாயகர் அகவலைத் தினமும் பாராயணம் செய்துவருவோரைத் தீவினை நெருங்காது, நல்லதே நடக்கும் என்பது நம்பிக்கை. கணேச பஞ்சரத்னம் ஆதிசங்கரர் இயற்றிய, விநாயகப்பெருமானை வழிபடும் ஸ்லோகம்.

விக்நேச்வரரின் கன்னத்தில் மத ஜலம் வழிந்து கொண்டு இருப்பதை ஆசார்யாள் “கபோல தான வாரணம்” என்று [கணேச பஞ்சரத்தினத்தில்] சொல்லியிருக்கிறார். ‘கபோலம்’ என்றால் கன்னம். ‘தானம்’ என்றால் மத ஜலம். ராகவ சைதன்யர் என்று ஒருத்தர் “மஹாகணபதி ஸ்தோத்ரம்” என்று செய்திருக்கிறார். பல கீர்த்தனைகள் விநாயகரின் மேல் பாடப்பட்டு இருக்கின்றன. அதில் வாதாபி கணபதி என்ற அம்சத் வெளியாக முத்துசுவாமி தீட்சிதரின் பாடல் முக்கியமானது. அருட்பிரகாச வள்ளலார் விநாயகர் மீது பாடல்கள் இயற்றியிருக்கிறார். பாரதியார் பாடிய விநாயகர் நான்மணிமாலை அதி அற்புதமானது.

27. எப்போது முதல் விநாயகர் சதுர்த்தி விழா?

விநாயகர் சதுர்த்தி விழா வெகுகாலமாக தென்னகத்தில் பிரசித்தமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இன்றைக்கு உள்ள பிரமாண்டமான ஊர்வலங்களும் பொது இடங்களில் விநாயகர் வழிபாடும் ஒரு காலத்தில் இருந்ததா என்பது தெரியவில்லை. பதினாறாம் நூற்றாண்டில் மகாராஷ்டிரா மன்னர் சத்ரபதி சிவாஜி தமது ஆட்சிக்காலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை பிரமாண்டமாக கொண்டாடினார் என்கிறார்கள். மிகப் பெரிய விநாயகர் ஊர்வலங்களுக்கு வழி செய்தவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரரான பால கங்காதர திலகர்.

1893 ஆம் ஆண்டு சர்வஜன கணேஷ் உற்சவம் என்ற பெயரில் தேசபக்தியையும் தெய்வ பக்தியையும் கலந்து விநாயகர் திருவிழாவை மக்களை திரட்டு வதற்கான யுத்தியாக அவர் தொடங்கி வைத்தார். இந்தியாவில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. நேபாளம், சிங்கப்பூர், மலேசியா, ரீயூனியன், இலங்கை, அமெரிக்க முதலிய மேல் நாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா அங்குள்ள இந்திய மக்களால் கொண்டாடப்படுகிறது.

28. எப்படிக் கொண்டாடுவது?

விநாயகர் சதுர்த்தி விழா மிக எளிமையாகவும் கொண்டாடலாம். மிகப் பிரமாண்டமாகவும் கொண்டாடலாம். வெறும் அறுகம்புல், கொஞ்சம் தீர்த்தம், பொரிகடலை இவற்றில் மனமகிழ்ந்து அருள்பவர் மகா கணபதி. இந்த வருடம் 27.8.2025 புதன்கிழமை எப்படி விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடலாம் என்று பார்க்கலாம்.

முதல் நாளே வீட்டையும் பூஜை அறையையும் மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை அறையில் சுத்தமான மனைப் பலகை வைத்து அதன்மீது கோலம் போடுங்கள். தலைவாழை இலை ஒன்றை நுனி வடக்கு பக்கம் பார்ப்பது போல வைத்து பச்சரிசியை பரப்பி வையுங்கள் அவரவர் வழக்கப்படி களிமண் பிள்ளையார் அல்லது குடும்பப் பிள்ளையாரை அரிசி தாம்பாளத்தில் வைக்கலாம் அருகே ஒரு கலசத்தில் நீர் நிரப்பி மாவிலை தேங்காய் வைத்து கும்ப கலசம் செய்யுங்கள்.

அருகம்புல் வன்னி மந்தாரை இலைகள் பிள்ளையாருக்கு விசேஷமானவை. நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றும் 21 என்ற கணக்கில் வைக்கவும். பூஜையின் போது மண் அகலில் நெய் தீபம் ஏற்றி வணங்கலாம். விநாயகரின் அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யலாம். விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை, விநாயகர் கவசம் படிப்பது சிறப்பான பலன்களைத் தரும். சக்திக்கு தகுந்தபடி பால், இளநீர், சந்தனம் போன்ற அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்ய வேண்டும். விநாயகர் காயத்ரியை சொல்லுங்கள்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர வரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா: என்ற கணபதியின் மூல மந்திரத்தை தொடர்ந்து சொல்லுங்கள் குறைந்தபட்சம் ஓம் கம் கணபதயே நம: என்று மட்டும் சொன்னாலும் போதும்.

29. பூஜை ஏற்பாடுகள், நிவேதனங்கள்

விநாயகருக்கு கொழுக்கட்டை, எள் உருண்டை, பாயசம், பால், தேன், வெல்லம், முந்திரி, அவல், பொரி, சோளம், விளாம்பழம், நாவல் பழம், வடை, சுண்டல், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், ஆப்பிள், கரும்பு என்று பலவகை நிவேதனங்களை அவரவர் வசதிக்கு ஏற்றபடி வைத்து வணங்கலாம். சனீஸ்வரரை அடக்கும் சக்தியை விநாயகர் பெற்றதால் எள் கொழுக்கட்டை விசேஷமானது ராகு தோஷத்திலிருந்து நீங்க உளுத்தம் கொழுக்கட்டையும் சந்திராஷ்டமம் கஷ்டம் தராமல் இருக்க அரிசிமாவும் குரு சுக்கிரன் போன்ற சுப கிரகங்களின் அருள் கிடைக்க வெல்லத்தையும் யானைக்கு பிரியமான தேங்காயும் கடலைப் பருப்பும் விநாயகர் சதுர்த்தியில் நிவேதனமாக இடம் பெற வேண்டும்.

எருக்கு மாலை விசேஷம் அது எல்லா விஷத்தையும் முறிக்கும் வல்லமை கொண்டது. கொழுப்பை கரைப்பது அறுகம்புல். நம் உடல் கொழுப்பையும் மனதில் ஏற்படும் கொழுப்பையும் இந்த அறுகம்புல் நீக்கிவிடும். ஒரு காலத்தில் உப்பினால் பிள்ளையார் பூஜை செய்து அரசர்கள் போரில் வெற்றி கண்டிருக்கிறார்கள்.

30. நிவேதனம், பலன்கள்

தூப தீபம், நிவேதனம் செய்து விநாயகரை வழிபடுங்கள் அன்று பூஜை செய்யும் வரை உபவாசம் இருப்பது நல்லது. பொதுவாக நான்காம் பிறையைப் பார்க்கக் கூடாது என்பார்கள். ஆனால் விநாயகர் சாப விமோசனம் பெற்ற சந்திரனை, சதுர்த்தி மட்டும் பார்த்தால் நல்லது என்பார்கள். சந்திரனைப் பார்த்துவிட்டு பிள்ளையாரை மறுபடியும் நமஸ்காரம் செய்யுங்கள். இவை எல்லாவற்றையும்விட முழுமனதோடு நம்முடைய மனதை அவருக்குத் தந்து வழிபட வேண்டும். ஆத்ம சமர்ப்பணம் என்பார்கள்.

நம் வீட்டில் விநாயகரை எப்பொழுது வரவழைத்து வழிபடத் தொடங்கினோமோ, அந்த வேளையில் இருந்து ஒவ்வொரு வேளையும் அவருக்கு நம்மால் இயன்ற வழிபாடும் நிவேதனமும் செய்ய வேண்டும். குடும்ப வழக்கப்படி அடுத்த நாளோ மூன்று நாட்கள் கழித்தோ ஐந்து நாட்கள் கழித்தோ நம்முடைய வசதிப்படி அவரை வணங்கி, அதன் பிறகு புனர்பூஜை செய்து, பக்கத்தில் உள்ள நீர் நிலையில் விசர்ஜனம் செய்ய வேண்டும்.

பூஜை முடிந்ததும் கலச நீரை வீடு முழுக்க தெளிக்கலாம். மேலும், கிணற்றிலோ அல்லது குளிக்கும் நீரிலோ கலந்து குளிக்கலாம். பூஜைத் தேங்காயை வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தலாம். விநாயகரை வழிபட்டால், நம்முடைய செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும் தடைகள் விலகும் சுபகாரிய முயற்சிகள் பலனளிக்கும்.

எஸ். கோகுலாச்சாரி