Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவியுடையில் விநாயகர்

காவியுடையில் விநாயகர்

ராமேஸ்வரம் ஆலயத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் சந்நதி பிரகாரத்தில் சந்தான விநாயகர், சௌபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்து அடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது. விநாயகர் பிரம்மச்சாரி என்பதால் இவ்வாறு காவியுடை அணிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

சர்ப்ப நடராஜர்

திருச்சி அருகேயுள்ள திருவாசி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் நடராஜர் தலையில் சேர்த்து கட்டிய சடை முடியுடன் ஒரு காலை நாகத்தின் மீது ஊன்றி ஆடும் கோலத்தில் இருக்கிறார். இவரை சர்ப்ப நடராஜர் என்கின்றனர்.

குழந்தை வடிவில் பைரவர்

திருக்கோஷ்டியூர் அருகே அமைந்துள்ளது டி. வைரவன்பட்டி. இங்குள்ள சிவாலயத்தில் பைரவர் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். நாய் வாகனம் இல்லை. மகப்பேறு தரும் ஆற்றல் உடையவர்.

குதிரை முகத்துடன் நந்தி

முறப்பாடு தலத்தில் நந்தி பெருமான் குதிரை முகத்துடன் காட்சியளிக்கிறார். சோழ மன்னனின் மகள் குதிரை முகம் மாறியபோது. அந்த தோஷம் இத்தலத்திலுள்ள நந்திக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.

சப்தஸ்வர ஆஞ்சநேயர்

மயிலாடுதுறையில் உள்ள கோழிருத்தி வானமுட்டிப் பெருமாள் ஆலயத்தில் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர் சிலையின் ஏழு இடங்களில் தட்டினால் ஓசை எழுகிறது. ஆகவே இவரை சப்தஸ்வர ஆஞ்சநேயர் என்று அழைக்கிறார்கள்.

நரசிம்மரின் மார்பில் இலக்குமி!

நாமக்கல் தலத்தில் நரசிம்ம மூர்த்தியின் திருமார்பில் உள்ள மாலையில் மகா இலக்குமி திருவுருவம் காணப்படுகிறது. சூரிய சந்திரர்கள் கவரி வீச வலது புறம் ஈசுவரரும், இடதுபுறம் பிரம்மாவும் காணப்படுகிறார்கள். மும்மூர்த்தித் தலம் இது.

மணி அடிக்காத கோயில்

சென்னையில் உள்ள வேளச்சேரியை அடுத்துள்ள பள்ளிக்கரணை என்னும் பகுதியில் அன்னை பராசக்தி ஆலயம் உள்ளது. இக்கோயிலில் பெண்கள் கருவறை வரை சென்று பூஜைகள், வழிபாடுகள் செய்கின்றனர். மேலும் இக்கோயிலில் பூஜை செய்யும்போது மணி அடிப்பது இல்லை.

வினோத காணிக்கை

கேரளத்திலுள்ள ‘ஸ்ரீகுருவாயூரப்பன் கோயிலில்’ தோல் நோய் ஏற்பட்டவர்கள் எடைக்கு எடை சேனைக்கிழங்கை காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். இது ஒரு வினோத முறையாகும். மேலும் இங்கு நடைபெறும் நான்கு கால பூஜைகளுக்கும் வித விதமான நிவேதங்கள் செய்து படைக்கின்றனர். அவை, மோர்க்குழம்பு, பால்பாயசம், நெய் பாயசம், தயிர், நெல் பொரி, இலையடை, நெய்யப்பம்

முதலியன இடம் பெறுகின்றன.

குரு தரிசனமும் ஆன்ம தரிசனமும்

அறிவு வடிவமாக வருகின்ற ஞானிகள் மகான்கள். அவதாரபுருஷர்கள் ஆகிய எல்லோரும் மனமடங்குவதற்கான பல்வேறு வழிகளைக் காட்டுகிறார்கள். அவர்களின் எண்ணத்தின் பால் ஒட்டி நிற்கும் வேளையில், நமது அலையும் மனமானது தனது ஆற்றலை இழந்து அவர்கள் கைவசமாகிறது. குருபிரானின் அருளமுக மழையை ஏற்க, மனம் அறிவு மனமாகிறது. தெய்வக் கண்ணாடியாகிறது. ஞான விழி எனும் மூன்றாவது கண் திறக்கிறது.

வயோதிக வடிவில் திருமால்

காஞ்சிபுரம் அருகில் இருக்கும் திருத்தலம் மாகறல். இத்தலத்தில் வைகுந்த வாசன் பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். பெருமாள் சற்றே முதிர்ந்த முகத்துடன், தாடி ைவத்த வயோதிகராகத் தோன்றுகிறார். மேல் வலது கரத்தில் சக்கராயுதமும் இடது கரத்தில் சங்கினையும் ஏந்தி, கீழ் வலது திருக்கரத்தில் அபயம் ஏந்தி காட்சி தருகிறார். கீழ் இடது கரம் சின்முத்திரை காட்டும் விதமாக உள்ளது.