Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கால்களில் வெள்ளிக் கொலுசுகளோடு தாமல் தாமோதரப் பெருமாள்

பக்தர்களிடம் என்றென்றும் நீங்காத அன்புடையவர், பக்தர்களால் எப்போதும் தேடப்படுபவர், தாய் யசோதையால் கயிற்றினால் கட்டப்பட்ட காரணத்தினால் வயிற்றில் தழும்பினை உடையவர் தாமோதரன். சமஸ்கிருதத்தில், ``தாமா’’ என்றால் கயிறு, உதாரம் என்றால் வயிறு. இதனாலேயே இவர் தாமோதரன் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். காஞ்சிபுரத்திற்கு அருகில் புகழ்பெற்ற தாமல் என்ற கிராமத்தில் அமைந்துள்ள தலம் ``ஸ்ரீநிருமாலழகி சமேத ஸ்ரீதாமோதரப் பெருமாள் திருக்கோயில்’’.

இத்திருத்தலத்தில், நாபிக்கமலத்திற்குக் கீழே நீண்ட தழும்புடன் தாமோதரன் காட்சி தருவது அபூர்வம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இத்திருக்கோயில், மத்வ சம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்களால் ஆராதனை செய்யப்பட்டு வந்ததாகவும், காலப்போக்கில் வைணவர்களுக்கு தானமாக வந்ததால் ‘‘தானமல்லபுரம்’’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் மருவி இவ்வூர் ‘‘தாமல்’’ என்றானதாகவும் தெரிகிறது.

கிபி.556 ஆண்டு பல்லவர் செப்பேடுகளில் தாமல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வெண்ணெய் திருடும் குழந்தை கண்ணன் மீது, அக்கம் பக்கத்தவர்கள் யசோதையிடம் குறை சொல்லிக்கொண்டே இருந்தார்களாம். யசோதாதேவி, கண்ணனின் விஷமத்தைக் பொறுக்க முடியாது, ஒரு சமயம் கயிற்றைக் கொண்டு உரலுடன் சேர்த்துக் கட்டிவிட்டாள். அன்பிற்கு

கட்டுப்பட்டு கண்டுண்ட கண்ணன், உரலுடன் இரண்டு மரங்களுக்கு இடையில் புகுந்து இரு தேவர்களுக்கு சாப விமோசனம் அளித்தருளினான். இதைக் கண்டு அனைவரும் வியந்து போனார்கள். கண்ணனின் வயிற்றில் கயிறு பதிந்து அதனால் வடு ஏற்பட்டது. அப்போது கண்ணனுக்கு ‘‘தாமோதரன்’’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

கண்ணனின் இந்த லீலைகளில் மனதைப் பறிகொடுத்த மகரிஷிகள், பகவானிடம் இதே திருப்பெயருடன் இத்தலத்தில் எழுந்தருளி மக்களைக் காத்தருள வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ள, இதை ஏற்ற பகவான், மகாலட்சுமித் தாயாருடன் தாமல் திருத்தலத்தில் தாமோதரன் என்ற திருநாமம் கொண்டு எழுந்தருளினார். இத்தலத்துப் பெருமாள், கேட்டதைக் கொடுக்கும் தாமோதரனாகவும், தாயார் கேட்டதைக் கொடுக்கும் திருமாலழகியாகவும் எழுந்தருளி பக்தர்களின் பிரார்த்தனைகளைப் பூர்த்தி செய்து வருகிறார்கள்.

ராஜகோபுரமின்றி அலங்கார நுழைவாயிலோடு அமைந்துள்ள இக்கோயிலின் மூலவர் தாமோதரப் பெருமாள், கருவறையில் உபய நாச்சியார்களோடு அழகு மிளிரக் காட்சி தந்து அருளுவதைக் காணக் கண்கோடி வேண்டும். இத்திருத்தலத்தில் தாமோதரன் நான்கு திருக்கரங்களோடு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். நான்கு திருக்கரங்களும் முறையே சங்கு, சக்கரம், வரத மற்றும் ஊரு ஹஸ்த நிலையில் அமைந்துள்ளன. அர்த்த மண்டபத்தில் அமைந்துள்ள உற்சவர் திருநாமம் ஸ்ரீதேவி பூதேவி சமேத தாமோதரப்பெருமாள்.

தாயார், ஸ்ரீதிருமாலழகி என்ற அழகிய திருநாமத்தோடு ஒரு தனி சந்நதியில் அமர்ந்த திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் அமைந்து அருளுகிறார். உற்சவத் திருமேனியின் திருநாமமும் ஸ்ரீதிருமாலழகியாகும். மற்றொரு தனி சந்நதியில் ஆண்டாள் காட்சி தருகிறார். இச்சந்நதியில், ஆண்டாளின் உற்சவர் திருமேனியும் அமைந்துள்ளது. முன்மண்டபத்தில் விஷ்வக்சேனர், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், குமுதவல்லி, திருமங்கையாழ்வார், திருக்கச்சி நம்பி, ராமானுஜர், வேதாந்த தேசிகர் முதலான ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்களின் சிலாரூபங்கள் அமைந்துள்ளன.

ஆஞ்சநேயர், ஒரு சிறிய சந்நதியில் எழுந்தருளியுள்ளார். பொதுவாக, பெருமாள் நெற்றியில் திருமண், ஸ்ரீசூர்ணத்துடன் காட்சி யளிப்பது வழக்கம். ஆனால், இத்தலத்தில் மூலவர் தாமோதரப் பெருமாள், ரோஹிணி நட்சத்திரத்தன்று நெற்றியில் கஸ்தூரித் திலகத்துடன் காட்சி தந்து, ராஜ அலங்காரத்தில் அருளுகிறார். மத்வர்களுக்கு மதிப்புத் தரும் வகையில், உற்சவர் தினமும்

கஸ்தூரித்திலகத்துடன் காட்சி தருகிறார். இத்தலத்தின் தீர்த்தம், விபுல ஸரஸ். ஸ்தல விருட்சம் விஸ்வம் மற்றும் புன்னை மரம். மூலவர் தாமோதரப் பெருமாளின் கால்களில் வெள்ளிக்கொலுசுகள் மின்னுகின்றன.

குழந்தைச் செல்வம் வேண்டுபவர்கள், இத்தலத்திற்கு வந்து தாமோதரப் பெருமாளை வணங்கி குழந்தைச் செல்வம் தந்தருளுமாறு வேண்டிக்கொள்ள, தாமோதரப் பெருமாளின் திருவருளால் மழலைச் செல்வம் வாய்க்கப் பெற்ற பின்னர், இத்தலத்திற்கு வந்து பெருமாளுக்கு வெள்ளிக் கொலுசை சமர்ப்பித்து வணங்கி மகிழ்கிறார்கள்.தாமல் திருத்தலத்தில் சித்திரையில் மஹாசாந்தி ஹோமம் மற்றும் கோடை உற்சவமும், வைகாசி மாதத்தில் வசந்த உற்சவமும், ஆனிமாதத்தில் தாமோதரப் பெருமாள் லட்சார்ச்சனை, கருட சேவை, அன்னக்கூட திருப்பாவாடை உற்சவம், ஆடியில் தாயார் திருவிளக்கு பூஜை, ஆவணியில் பவித்ரோத்சவம், புரட்டாசி மாதம் முழுவதும் திருப்பதி ஸ்ரீநிவாச திருக்கோலத்தில் சேவை சாதித்தல், கார்த்திகையில் ஆஞ்சநேயர் லட்சார்ச்சனை, மார்கழியில் ஆண்டாள் போகி உற்சவம், மாசியில் மாசி மகம், பங்குனியில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவம் முதலான விழாக்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ள திருப்புட்குழி ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் (இருந்தான்), தாமல் ஸ்ரீதாமோதரப்பெருமாள் (நின்றான்), திருப்பாற்கடல் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் (கிடந்தான்) என மூவரையும் ஒரே நாளில் சேவிப்பது மிகவும் விசேஷம். இந்த திருத்தலத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கடந்த 21 ஏப்ரல் 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றுள்ளது.தாமல் திருத்தலம் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும்.

ஆர்.வி.பதி