சுவாமி ஐயப்ப னின் மூலஸ்தானம் சபரிமலை. சபரிமலை என்றவுடன் நினைவுக்கு வருவது 18 படிகள்தான். சபரிமலையில் இந்த 18 படிகளை ஏறிச் சென்ற பின்தான் ஐயப்பனை தரிசிக்க முடியும். ஆனால், கீழே நின்றபடியே 18ம் படிகளுடன் சேர்ந்து ஐயப்பனை தரிசிக்கக்கூடிய ஒரு தலம் சென்னையை அடுத்த வேளச்சேரி அருகேயுள்ள மடிப்பாக்கத்தில் அமைந்துள்ளது. உத்தர சபரிமலை என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.சபரிமலையை போலவே இங்கும் 18 படிகள் உள்ளன. அதற்கு மேல் ஐயப்பன் யோக பட்டத்தில் அருட்பாலிக்கிறார். பக்தர்களாக விரும்பி இறைவனுக்கு ஆலயம் எழுப்புவதுண்டு. ஆனால், இந்த ஆலயமோ ஐயப்பன் விரும்பியதால் கட்டப்பட்டது. 40 ஆண்டுக்கு முன் இந்த ஆலயம் உருவானது. இந்த ஆலயத்தை ஐயப்பன் மண்டலி என்ற அமைப்பு நிர்வகித்து வருகிறது.
1970க்கு முன்னர் மடிப்பாக்கம் ஏரியை சுற்றி ஏராளமான விவசாய நிலங்களும் இருந்தன. 1970ம் ஆண்டு தொடக்கத்தில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தவர்கள் மடிப்பாக்கத்தில் குடியேற தொடங்கினர். இப்போது ஐயப்பன் ஆலயம் இருக்கும் இடமும், அதை சுற்றியுள்ள நிலப்பகுதிகளும் ஒருவருக்கு சொந்தமாக இருந்தது. அந்த நிலங்களை அவர் விற்க முடிவு செய்து, பிளாட் போடுவதற்கான வரைபடம் தயாரித்தார். அப்போது 6வது எண் கொண்ட பிளாட் மட்டும் சரியாக அந்த வரைபடத்தில் அமையவில்லை.
கடின முயற்சியில் வரைபடம் தயாரித்து கொடுத்தார் பொறியாளர். ஒருநாள் நிலத்தின் உரிமையாளரின் கனவில் சிறு குழந்தையாக ஐயப்பன் வந்துள்ளார். ‘‘நீ போடும் பிளாட்டுகளில் 6வது பிளாட் எனக்கு வேண்டும். அதில் நான் நிலையம் கொள்ளப்போகிறேன்’’ என்று கூறியுள்ளார்.விழித்தெழுந்ததும் நிலத்தின் உரிமையாளருக்கு எதுவும் புரியவில்லை. எனினும் ஐயப்பன் கனவில் கூறியதை அவர் அலட்சியப்படுத்தவில்லை. உடனே பிளாட் போடப்பட்ட வரைப்படத்தினை பார்த்தார்.
அதில் 6வது பிளாட், சாலையோரமாக அமைந்திருந்தது. இதைப் பார்த்த நிலத்தின் உரிமையாளருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஐயப்பன் கோயில் கட்ட 6வது பிளாட்டை யாரிடம் கொடுப்பது என்றும் தெரியவில்லை. மற்ற பிளாட்டுகள் விற்பனையான நிலையில் அந்த பிளாட்டையும் அதிக தொகை கொடுத்து வாங்க முன் வந்தனர். ஆனால், நிலத்தின் உரிமையாளர் அந்த இடத்தில் கோயில் கட்ட இருப்பதாக கூறிவிட்டார்.
இந்த நிலையில் மடிப்பாக்கத்தில் வசித்து வந்த பெரியவர்களும் அந்தப் பகுதியில் கோயில் ஒன்று கட்ட வேண்டும் என்று எண்ணினர். அதற்காக நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது நிலத்தின் உரிமையாளர் கோயில் கட்ட தன் நிலத்தினை தானமாக கொடுக்க இருப்பதாக கேள்விப்பட்டு அவரை சந்திக்க சென்றனர்.
ஐயப்பன் கோயில் கட்ட சம்மதித்தால் அந்த நிலத்தினை தானமாக தருவதாக நிலத்தின் உரிமையாளர் சொல்ல பெரியவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டனர். அதன்படியே அவர் நிலத்தை தானமாக கொடுத்தார். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன் மண்டலி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, கோயில் கட்டும் பணிகளை 1975ம் ஆண்டு தொடங்கினர்.
இதனிடையே சென்னை, தியாகராய நகரில் உள்ள சிவா - விஷ்ணு ஆலயத்தில் ஐயப்பன் சந்நதி கட்ட 1967ம் ஆண்டு முடிவு செய்தனர். அதற்காக ஐயப்பன் சிலையை உருவாக்கினர். சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு முன்னால் ஒருநாள் காஞ்சி மகா பெரியவர், அந்த ஆலயத்திற்கு வந்தார். அவரிடம், கோயில் நிர்வாகக் குழுவினர் ஆலயத்தில் ஐயப்பன் சந்நதி கட்டுவது பற்றி கூறினர். ‘‘சிவனும், விஷ்ணுவும் இங்கு ஐக்கியமாகி அருள்பாலிக்கும் போது, ஐயப்பனுக்கு தனி சந்நதி கட்ட தேவையில்லை’’ என்று கூறினார். ‘‘அப்படியானால், இந்த ஐயப்பன் சிலையை என்ன செய்வது?’’ என்று கோயில் அமைப்பாளர்கள் கேட்டனர். ‘‘சிலையை நவதானியத்தில் நிறுத்தி வையுங்கள். போக வேண்டிய இடத்துக்கு ஐயப்பனே போய் விடுவான்’’ என்றார் பெரியவர். அவர்களும் அப்படியே செய்தனர்.
எட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், 1976ம் ஆண்டு ஒருநாள், சிவா - விஷ்ணு கோயில் நிர்வாகி ஒருவரின் கனவில் ஐயப்பன் தோன்றி, ‘‘நான் மடிப்பாக்கத்துக்கு போகப்போகிறேன்’’ என்று கூறியுள்ளார். நிர்வாகிக்கு மடிப்பாக்கம் எங்குள்ளது என்று தெரியவில்லை. மறுநாள் மற்றவர்களிடம் தனது கனவை பற்றி கூறினார். அவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. இதற்கிடையில் மடிப்பாக்கத்தில் உள்ள ஐயப்பன் மண்டலியைச் சேர்ந்த குழுவினர் ஒருவரின் கனவில் தோன்றிய ஐயப்பன், ‘‘நான் மாம்பலத்தில் இருக்கிறேன். என்னை அழைத்துச் செல்லுங்கள்’’ என்று கூறியுள்ளார். அப்போதுதான் சிவா - விஷ்ணு ஆலயத்தில் நவதானியத்தில் ஐயப்பன் சிலை இருப்பது தெரியவந்தது.
உடனே அந்தக் குழுவினர் சிவா - விஷ்ணு ஆலய நிர்வாகிகளை அணுக, அவர்கள், மேளதாளம் முழங்க ஒரு சுப தினத்தில் சுபஹோரை பொழுதில் ஐயப்பன் சிலையை கொடுத்தனர். கோயில் திருப்பணிகள் நிறைவடைந்தன. 1978ம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடந்தது. மேலும், தாந்திரீக முறையில் பூஜை செய்வதற்கான வழிமுறைகளை பின்பற்றி பூஜை நடைபெற்றது. இன்று வரை ஐயப்பன், மடிப்பாக்கம் மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறார். சபரி மலையில் மகரஜோதி தெரியும் அதே நாளில் இங்கும் மகர ஜோதி தீபம் நடத்தப்படுகிறது.
இக்கோயிலில் ஐயப்பனுக்கு பின்புறம் பிருங்கி முனிவரின் விக்கிரகம் உள்ளது. இப்போது பரங்கிமலை என்று அழைக்கப்படுவது முன்பு பிருங்கி மலை என்று அழைக்கப்பட்டது. அந்த மலையில் தவமிருந்த பிருங்கி முனிவர் ஒரு மூலிகையை தேடி மடிப்பாக்கம் ஏரிப்பகுதிக்கு வந்தவர் ஐயப்பனை நினைத்து பூஜித்தார். அதனால் பிருங்கி முனிவரின் விக்கிரகத்தை ஐயனின் சந்நதிக்கு பின்னர் அமைத்துள்ளனர்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கோயிலில் தேவபிரசன்னம் பார்க்கப்பட்டபோது, ஐயப்பன் கோயில் அருகே குருவாயூரப்பனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்று கூறப்பட்டது. இதையடுத்து ஐயப்பன் கோயில் பக்கத்திலேயே குருவாயூரப்பன் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
மகி


