Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

சுவாமியே சரணம் ஐயப்பா...

ஆத்மா என்கிற சப்தத்தை ஒரு ஜீவன் அறிந்து கொள்ளவே எத்தனையோ பிறவிகள் எடுக்கிறான் என்கிறார்கள், ஞானிகள். தத்துவ ஞானம் பிறந்து எதைநோக்கி ஒரு ஜீவன் உண்மையிலேயே நகர்கிறான் என்பதை அறிந்துகொள்வதற்கே பல பிறவிகளை தாண்டுகின்றான். தான் தேடுவது தன்னையே என்பதை அறிந்து கொள்ளும் வரை மதம் அவனை பல்வேறு வழியினில் ஈடுபடுத்தியபடி இருக்கின்றது. அவனுக்குள் தெளிவு என்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டுவதற்காகவே இங்கு ரிஷிகள் ஆயிரமாயிரம் வழிகளை சீர்படுத்தி வைத்திருக்கின்றார்கள்.

இவை அனைத்துமே ஒரு ஜீவன் முதலில் பக்தனாக மாறி பின்னர் மெல்ல சாதகனாக வளர்ந்து பிறகு ஜீவன் முக்தியை மட்டும் நோக்கியிருக்கும் முமுக்ஷு என்றழைக்கப்படும் அதிதீவிர சாதக நிலையை அடைந்து பின்னர் மெல்ல தன்னிழப்பு என்கிற தன் மனதையும் நான் எனும் அகங்காரத்தையும், நான் தேகம் எனும் அகங்காரத்தையும் அழிக்க முயற்சிக்கின்றான். அப்படிப்பட்ட பெரும் பாதையில் எண்ணற்ற சம்பிரதாயங்களில் ஒன்றே பிரம்மச்சரியம் என்பது.

உண்மையிலேயே பிரம்மச்சரியம் என்பது பிரம்மத்தை ஆஸ்ரயிப்பது. பிரம்மம் என்ன என்பதுபற்றி ஓயாமல் நினைத்துக் கொண்டிருப்பது. அதேநேரம் பிரம்மச்சரியம் என்பது புலன் ஒறுத்தலும் ஆகும். அதாவது எந்தப் புலன்களின் வழியேயும் வரும் சுகங்களை அனுபவங்களை மனதின் வழியே அனுபவிக்காமல் அப்படியே விட்டுவிடுதல். மனதிற்கு சதாநேரமும் புலன்களின் வழியே உள்ளே நுழையும் அனுபவத்தை, அதாவது புலன்களை பயன்படுத்தி வெளிப் பிரபஞ்சத்திலுள்ள விஷய சுகங்களை நுகராது அப்படியே விட்டுவிடுதல். இவை உணவிலிருந்து காமம் வரை அனைத்திற்கும் பொருந்தும்.

அப்போது ஒரு கட்டத்தில் புலன்கள் பேயாட்டம் போட்டுவிட்டு மெல்ல அடங்கும். சமனப்படும். ஓயாது... போ... போ... போ.... அனுபவி என்று சொல்லும் மனதின் எண்ணங்கள் ஓயும். அப்போது அந்த மனதின் பீடமாக உள்ள ஆத்ம ஸ்தானமான உங்களின் சொரூபம் பௌர்ணமி நிலவாக ஜொலிப்பது புரியும்.

இந்த மார்க்கத்தினை மிகத் தீவிரமாக செயல்படுத்தி அதற்குண்டான சம்பிரதாயங்கள், மிகமிக நுட்பமான தாந்த்ரீக சாதனங்களை மந்திரங்களோடு புகுத்திய மார்க்கமே சபரிமலை ஐயப்பன் வழிபாடாகும். தாந்த்ரீக வழிபாடுகள் நிறைய பின்பற்றப்படும் கோயில்கள் நிறைந்தது கேரளம். தாந்த்ரீகம் என்பது சைகைகள், முத்திரைகள், சிட்டிகை, உபசாரங்கள் என்று பல்வேறு கிரியைகளையும் மந்திரங்களையும் கொண்டது. உதாரணமாக வாராஹிக்கு நீங்கள் பூண்டு வெங்காயத்தால் ஆன வடையைத்தான் நிவேதனமாக வைக்க வேண்டும். வாராஹிக்குரிய மந்திரம், கிரியைகள் போன்றவை மற்ற தேவதா உபாசனையிலிருந்து வேறுபடும்.

ஐயப்பன், சிவ வழிபாட்டையும் விஷ்ணு வழிபாட்டையும் தமக்குள் ஏற்றுக் கொண்டவர். அதனாலேயே சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்ததாக கவித்துவமாக சொல்லப்படுகின்றது. சபரிமலை கோயில் சதாநேரமும் பிரம்மச்சரியத்தையே நினைவு படுத்தும் கோயில். நுண்சக்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயம். அதுவொரு மார்க்கம். நாம் பார்க்கும் பிரபஞ்சத்தை விட நமக்குத் தெரியாமல் பார்க்கப்படாமல் இருக்கும் பிரபஞ்சம் மிக மிக பிரமாண்டமானது.

கிருஷ்ணா (பொறுப்பாசிரியர்)