Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன்

சிந்து சமவெளி நாகரிகத்தில் காளி வழிபாட்டு சான்றுகள் காணப்படுகின்றன. கொற்றவை வழிபாடு பிற்கால சக்தி வழிபாட்டுக்கு அடிப்படையானது. சக்தியின் பிரதிநிதிகளே இன்றைய கிராம தெய்வங்களான மாரியம்மன், மாகாளியம்மன், ஒங்காளியம்மன், கொங்காலம்மன், அங்காளம்மன் என்ற பெயரில் வணங்கப்படுகிறார்கள். ரேணுகாதேவி வழிபாடு, மழை வழிபாடு, பத்தினி தெய்வம் கண்ணகி வழிபாடு மூன்றும் ஒண்றே. இதன் வழியாகத்தான் இன்றைய மாரியம்மன் வழிபாடாக மக்கள் மாரியம்மனை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் அந்தியூர் வாரச்சந்தை திடலின் மேற்புறத்தில் இரட்டை மாரியம்மன்கள் அருள்கிறார்கள். இவர்களது ஆலயங்கள் அருகருகே அமைந்துள்ளன பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் என்று இவர்களுக்குப் பெயர். இரண்டு ஆலயங்களிலும் கருவறை அர்த்த மண்டபம், மகா மண்டபம், சிம்ம வாகனம் ஆகியவற்றோடு கருவறை கோபுரங்களும் உள்ளன.

பெரிய மாரியம்மன் ஆலயத்தைவிட சின்ன மாரியம்மன் ஆலயம், பெயருக்கேற்றாற்போல சற்று சிறியது. இரண்டு ஆலயங்களிலும் மாரியம்மன் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். கருவறை வாசலில் ஆளுயரத்துக்கு ஆண், பெண் காவல் தெய்வங்கள் கள்வர்கள், தீயவர்கள் அஞ்சும் வகையில் நிற்கிறார்கள்.

பெரிய மாரியம்மன் ஆலயத்து காவல் தெய்வங்களின் கரங்களில் சூலம் காணப்படுகிறது. சின்ன மாரியம்மன் ஆலயத்து காவல் தெய்வங்களின் கைகளில் அரிவாள் காணப்படுகிறது. பெரிய மாரியம்மனுக்கு வைகாசி மாதம் பதினைந்து நாள் விழா நடைபெறுகிறது. சின்ன மாரியம்மனுக்கு மாசி மாதத்தில் பதினைந்து நாள் விழா நடைபெறுகிறது.

இதில் மாவிளக்கும், தாலாட்டு உற்சவமும் குறிப்பிடத்தக்கவை. மாவிளக்கு அன்று அம்மனை அழைக்க குதிரையின் மீது ஏற்றி அணிவகுத்து செல்கிறார்கள். அருகிலுள்ள தெருவில் மாவிளக்கோடு காத்திருப்பவர்கள் அன்னையை வரவேற்கிறார்கள். வரவேற்புக்கு பிறகுதான் அன்னை புறப்படுகிறார். இதனால் இந்த வீதிக்கு மாவிளக்கு மாரியம்மன் கோயில் வீதி என்ற பெயர் வழங்குகிறது. விழாவில் நடைபெறும் தாலாட்டு நிகழ்ச்சியில் அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டுப் பாடுகிறார்கள்.

பெரிய மாரியம்மன் கோயிலில் விநாயகர் தரிசனம் கிடைக்கிறது. பெரிய மாரியம்மன் கோயில் வளாகத்தில் தென்னை மரங்களும் பூச்செடிகளும் காணப்படுகின்றன. ஒவ்வொரு அமாவாசை அன்றும் இரண்டு மாரியம்மன் கோயில்களிலும் பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள். பௌர்ணமியன்று அபிஷேகம் அன்னதானம் நடைபெறும். பெரிய மாரியம்மனும், சின்ன மாரியம்மனும் இப்பகுதி மக்களின் சக்தி வாய்ந்த தெய்வங்களக திகழ்கிறார்கள். இவர்களை வணங்கினால் தொற்று நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஈரோட்டிலிருந்து 35 கி.மீ. தொலைவில்அந்தியூர் அமைந்துள்ளது.