Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பணியத் துணிவோம்!

கோயிலின் பிரகாரத்தை வலம் வரும்போது, சிலருக்கு சில ஆச்சரியங்கள் ஏற்படக்கூடும். சிவாலயங்களில் நாயன்மார்களும், பெருமாள் கோயில்களில் ஆழ்வார்களும் கூப்பிய கைகளுடன் நின்றுகொண்டிருப்பதே அந்த ஆச்சர்யம். அவர்கள்தான் வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வநிலை எய்திவிட்டார்களே! இன்னும் எதற்கு இவ்வளவு பணிவு? அதுவும் தலைக்கு மேலாகக் கையை உயர்த்திக் கும்பிடு? குறிப்பிட்ட நிலையை அடைந்துவிட்டபிறகு எதற்கு இந்தப் பணிவு? என்ற கேள்விகள் எழலாம். அவர்கள் இப்போதும் அப்பணிவைக் கைவிடாது இருப்பதால்தான் நாம் கையெடுத்து வணங்கும் கடவுள்நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் தெய்வநிலை எய்திவிட்டவர்கள்தான். தெய்வநிலை என்பது வெற்றிதான். அந்த வெற்றியை அடையப் பணிவு தேவை. அடைந்த வெற்றியை அப்படியே அடைகாத்து வைத்துக்கொள்ள அதிகப் பணிவு அவசியம். அதனால்தான் அவர்களின் கரங்கள் குவிந்திருக்கின்றன.

வெற்றி அடைவது கடினம் தான். ஆனால், அடைந்த வெற்றியைக் காப்பாற்றுவது அதைவிடக் கடினம். அதற்குத் திறமையை வளர்த்துக் கொள்ளுதல், அயராது உழைத்தல் எனப் பல பணிகளை மேற்கொண்டாலும் பணிவு என்ற குணமே நிரந்தர வெற்றிக்கு ஆதாரமாகும். அதைத்தான் நாயன்மார்களும் ஆழ்வார்களும் இன்னும் பிற இறையடியார்களும் சொல்லாமல் செய்துகாட்டி யிருக்கிறார்கள். தற்போதும் சிலை வடிவில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து பணிவு என்னும் பண்பைக் கற்றுக்கொள்வதுதான் அவர்களின் குருபூஜையை உண்மையாகக் கொண்டாடு வதாகும்.

பணிவு எனும் பண்பு பக்தியிலும் சரி, பணியிலும் சரி, அரிச்சுவடியைப்போல அவசியமானது. அது பணக்காரராக இருந்தாலும், பதவியில் உயர்ந்தவராக இருந்தாலும், பக்தியில் சிறந்தவராக இருந்தாலும், படிப்பில் கரைகண்டவராக இருந்தாலும், யாராக இருந்தாலும், பணிவு அவசியம். அதனால்தான் திருவள்ளுவர் இன்னார், இனியார், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று பார்க்காமல் ``எல்லார்க்கும் நன்றாம் பணிதல்’’ என்று சொல்லி எல்லாரையும் பணியுமாறு பணிக்கிறார். பணியப் பணியத்தான் பக்குவப்படுவோம். ஆணவம் வராமல் அமைதியாக வாழமுடியும். உலகில் ஒப்பற்ற சாதனை களைச் செய்தவர்கள் அனை வரும் கைகொண்ட ஒருகருவி பணிவுதான். `மன்னிக்கவும்’, `தயவு செய்து’, `தாழ்மையுடன்’, `பணிவுடன்’ போன்ற வார்த்தைகள் கண்டிப்பாக நம்மை உயர்த்தியே தீரும். ``தன்னைத் தான் தாழ்த்துகிறவனே உயர்த்தப்படுகிறான்’’ என்கிறது விவிலியம். நாம் தலைகுனியாமல் நம் தலையில் தங்கக்கிரீடம் ஏறாது. நாம் தீய குணங்கள் பல உடையவர்களாகவே இருப்பினும், பணிவு எனும் பண்பு இருந்தால்தான் கடவுளே நம் மீது சற்று இரக்கப்பட்டு இறங்கத் துணிவாராம். இதை, ``பணிந்தவர் அறுவினை பற்றறுத்து அருள்செய துணிந்தவன்..’’ என்கிறார் திருஞானசம்பந்தர். பணிவோம். பணியத் துணிவு வேண்டும். துணிந்து பணிவோம்.

தொகுப்பு: முனைவர் சிவ.சதீஸ்குமார்