டிசம்பர் மாதம் ஆரம்பித்துவிட்டாலே தெருக்களில் நட்சத்திரங்களும், விளக்குகளும் தொங்க, வீடுகள் புதுப் பொலிவுடன் ஒளிர்கின்றன. ஜவுளி கடைகள் அனைத்தும், ஜவுளி கடல் போல காட்சியளிக்கின்றன. ஆனால் கிறிஸ்து மஸின் உண்மையான மையம், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மனிதனின் ரட்சிப்பிற்காகவும், பாவத்தில் சிக்குண்ட உலகிற்கு ஒளியைக் கொடுக்கவும், அன்பும் சாந்தமும் நிறைந்த ராஜாவாகவே அவர் வந்தார். அவர் பிறந்தது ஒரு வரலாற்று நிகழ்ச்சி மட்டுமல்ல; நம் வாழ்க்கையை மாற்றும் நித்தியமான கிருபையின் வாசல். இயேசுவின் பிறப்பின் நோக்கம், மனிதரை உயர்த்துவதும், இருளில் இருக்கும் உள்ளங்களுக்கு நம்பிக்கையைத் தருவதும்தான்.
குறிப்பாக, ஏழை எளியோரை கண்ணோக்கி பார்க்கவே அவர் இந்த உலகில் தோன்றினார். மேய்ப்பரான சாதாரண மனிதர்களுக்கே முதலில் சுப செய்திகள் அறிவிக்கப்பட்டது இதற்குச் சாட்சி. நம் வாழ்க்கையிலும் கிறிஸ்துமஸ் ஒரு நினைவு நாளாக மட்டுமல்லாமல், நம்மைச் சுற்றியுள்ள ஏழைகளின் தேவையை உணர்ந்து செயல்படும் நாளாக இருக்க வேண்டும்.
உணவு இல்லாமல் போராடும் ஒருவருக்குச் சாப்பாடு கொடுத்தால், குளிரில் நடுங்கும் குழந்தைக்கு ஒரு துணி போட்டால், அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழும் குடும்பத்துக்கு உதவிக்கரம் நீட்டினால், அதுவே உண்மையானபண்டிகை கொண்டாட்டமாகும்.
கிறிஸ்துமஸை முன்னிட்டு நாம் எவ்வளவு முயற்சியுடன் வீட்டை அலங்கரிக்கிறோமோ, அதே அக்கறையுடன் நம் மனதையும் அலங்கரிக்க வேண்டும். பலர் தேவையற்ற ஆடம்பரச் செலவுகள், போட்டிகள் என்று விழாவை சத்தத்தாலும் விருந்துகளாலும் நிரப்புகின்றனர். ஆனால் இயேசுவின் பிறப்பு நம்மை ஆடம்பரத்துக்குள் அழைக்கவில்லை; தாழ்மைக்குள் அழைக்கிறது. நம் உள்ளத்தில் தூய எண்ணங்கள், கருணை, மன்னிப்பு, நன்றி, பரிசுத்தம் ஆகியவற்றை வளர்க்கும்போதுதான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அர்த்தமடையும். வீடு வெளியில் அழகாக இருந்தாலும், உள்ளத்தில் சினமும் பொறாமையும் இருந்தால், அந்த அலங்காரம் வெறும் வெளிப்புற மேகம்தான். கிறிஸ்துமஸ் என்பது மகிழ்ச்சியின் நாளாக இருந்தாலும், அது சிந்தனைக்கான நாளும் ஆகும். நமக்காக பிறந்த ரட்சகர்,
“உங்களில் சிறந்தவன் தாழ்மையான பணியாளர்” என்று சொல்லிக் கற்று வைத்தார். அந்த உண்மையை நினைவுகூரும் காலமே இந்த விழா. நம் மனதைப் பரிசுத்தப்படுத்தி, தேவன் மகிமைப்படும்படி வாழ்க்கையை மாற்றும் தீர்மானம் எடுக்கும் காலமிது. கிறிஸ்துமஸ் விளக்குகளை அணைக்கும் நேரம் வந்தாலும், நம் உள்ளத்தில் ஒளிரும் கிறிஸ்துவின் ஒளி ஒருபோதும் அணையக்கூடாது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸை வரவேற்கும்போது, இயேசு பிறந்த எளியத் தோற்றத்தை நினைத்து நம் வாழ்க்கையையும் எளிமைப்படுத்துவோம்.
தேவையற்ற செலவுகளைத் தள்ளி வைத்து, உதவி தேடும் ஒருவரின் கண்ணீரை துடைப்பதற்காக நம் கைகளை நீட்டுவோம். அன்பு தேடும் ஒரு இதயத்திற்கு கரம் கொடுப்போம்.
ஒரு சிறிய செயலும் ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உண்டாக்கலாம். அதுவே இந்த பூமிக்கு வந்த ரட்சகரின் மனதை மகிழ்விக்கும் உண்மையான கிறிஸ்துமஸ்.
இம்மானுவேல் என்றால், தேவன் நம்மோடு இருக்கிறார் என்பது பொருள். இந்த உண்மையே நம்முள் ஒளியாக இருந்து, நம் மனதை நற்பண்புகளால் அலங்கரித்து, நம் செயல்களை அன்பால் நிரப்பி, நம் சுற்றத்துக்கு நம்பிக்கையின் வாசமாக மாறச் செய்யட்டும். கிறிஸ்துமஸை கொண்டாடுவதைவிட, கிறிஸ்துவை வெளிப்படுத்தி வாழும் வாழ்க்கையை, வாருங்கள் ஒன்றாக வரவேற்போம்.
- அருள்முனைவர் பெ.பெவிஸ்டன்.


