Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தெளிவு பெறுஓம்

?சோறு, சாதம், அன்னம் இதில் எது உயர்ந்த சொல்? இப்பொழுது சோறு என்று சொல்வதைக் குறைவாக நினைக்கிறார்களே!

- குணசேகரன், திண்டிவனம்.

பசியால் உண்டாகும் சோர்வை ஆற்றுவது சோறு. சோறு என்பது உயர்ந்த சொல். பல உயர்ந்த சொற்களை இப்பொழுது நாம் பயன்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அந்தச் சொற்களை குறைந்த மதிப்புள்ள சொற்களாகப் பயன்படுத்தும் போக்கு அதிகரிக்கிறது. உதாரணமாக நாற்றம் என்பது உயர்ந்த சொல். அது துர்நாற்றத்தைக் குறிக்காது. நறுமணத்தைத் தான் குறிக்கும். நாற்றத் துழாய் முடி நாராயணன் என்பது ஆண்டாள் பாட்டு. நாறு நறும்பொழில் என்பது ஆண்டாள் பாசுரம். இதில் நாறும் என்பது சுகந்த மணத்தைக் குறிக்கிறது.

ஆனால் இப்பொழுது நாறுகிறது என்ற சொல் துர்நாற்றத்தைக் குறிப்பதாக வழக்கத்தில் வந்து விட்டது. இதைப்போல சோறு என்பது உயர்ந்த சொல். பெருஞ் சோற்று உதியன் சேரலாதன், சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு சேர மன்னர். இவன் மகாபாரதப் போரின்போது, பாண்டவர் மற்றும் கௌரவர் ஆகிய இருதரப்பு வீரர்களுக்கும் பெருஞ்சோறு அளித்ததால் இப்பெயரைப் பெற்றான் என்று ஒரு குறிப்பு வருகிறது. எனவே, சோறு என்பது உயர்ந்த சொல் ஆழ்வார் கண்ணனை ‘‘உண்ணும் சோறு பருகும் நீர், தின்னும் வெற்றிலை’’ என்று உயர்வாகச் சொல்லுகின்றார்.

?பாலையும் நீரையும் அன்னம் பிரிக்குமா?

- சந்தானம், திருச்சி.

பிரிக்குமே. நல்ல சூடான நீரை ஒரு தட்டில் போட்டு, மேலே பாலை ஊற்றுங்கள். கொஞ்ச நேரம் கழித்து பாலை அன்னம் பிரித்து தன் உள்ளே இழுத்துக் கொண்டு, நீரைத் தனியாக தட்டின் விளிம்பில் கொண்டு போய் சேர்த்திருக்கும்.

?கிரகங்களை ஆக்டிவேட், டீஆக்டிவேட் செய்யலாம் என்றெல்லாம் சொல்லுகின்றார்களே, இது உண்மையா?

- விமலா, கும்பகோணம்.

ஜோதிட வல்லுநர்கள் இதை எந்த அர்த்தத்தில் சொல்லுகிறார்கள் என்பது தெரியவில்லை ஆனாலும், கிரகங்களை ஆக்டிவேட் செய்யலாம் என்பது உண்மைதான். அதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்லுகின்றேன். ஒரு குழந்தையின் ஜாதகத்தில் புதன் கெட்டு விட்டது என்றால், உடனே, அவனுக்குப் படிப்பு வராது என்று சொல்லி விடுவார்கள். ஆனால், உண்மையில் அவனுக்கு கிரகிக்கும் திறன் கொஞ்சம் கம்மியாக இருக்கும் அல்லது பாடங்களில் கவனம் குறைவாக இருக்கும். இந்த இரண்டு குறைபாட்டினால் படிப்பு பின்தங்கி இருக்கும். இப்பொழுது அவனுக்குப் படிப்பில் ஆர்வம் உண்டாக்கி விடுவது ஒருமுறை.

அல்லது அவனுக்கு கிரகிக்கும் திறன் சற்று கம்மியாக இருந்தால், ஒரு ஆசிரியரை நியமித்து தனிக் கவனம் செலுத்தி ஒரு முறைக்கு இருமுறை அந்த பாடத்தைச் சொல்லித் தருவது ஒருமுறை. இதன் மூலம் அந்த குறைபாட்டை சரி செய்து விடலாம். இப்படிச் சரி செய்தபின் அந்த மாணவன் மிகவும் ஆர்வத்தோடு தானே படிக்க ஆரம்பித்து விடுவான். நான் கல்லூரியில் பல ஆண்டுகள் ஆசிரியராகப் பணி புரிந்தவன் என்கிற அடிப்படையில் இந்தச் சோதனையை செய்து பார்த்திருக்கின்றேன். ஒரு குறிப்பிட்ட பாடத்தில் பின்தங்கிய மாணவனுக்குத் தொடர்ந்து பயிற்சி அளித்து அவனுடைய கவனத்தை கூர்மையாக்கியதன் மூலம் அவன் மிகச்சிறந்த படிப்பாளியாகப் போனான். இப்பொழுது அவருக்கு புதன் ஆக்டிவேட் ஆகிவிட்டது என்று அர்த்தம்.

இதைப்போல ஒவ்வொரு கிரகங்களுக்கும் அதன் காரகத்துவத்தைப் பொறுத்து நீங்கள் செய்யலாம். இப்படியே டீ ஆக்டிவேட் செய்யலாம். உதாரணமாக சுக்கிரனுடைய காரகத்துவங்களில் ஒன்று சர்க்கரை வியாதி. இப்பொழுது சுக்கிரனை டிஆக்டிவேட் செய்ய வேண்டும். அதாவது சர்க்கரை வியாதியைக் குறைக்க வேண்டும். என்ன செய்யலாம்? உணவு கட்டுப்பாடு, உடற் பயிற்சி, மாத்திரைகள் இந்த மூன்றையும் செய்தால் சர்க்கரை கட்டுப்படும் அல்லவா. இப்பொழுது நாம் சுக்கிரனை டிஆக்டிவேட் செய்து விட்டோம் என்று பொருள். இப்படி யோசித்துப் பார்த்தால் கிரகங்களை ஆக்டிவேட் பண்ணலாம் டிஆக்டிவேட்டும் பண்ணலாம்.

?பரிகாரங்களில் எது சிறந்த பரிகாரம்?

- ரமணன், திருக்கோவிலூர்.

மிக எளிமையான பரிகாரம் கோயிலுக்கு தீபம் போடுவதும், ஆலயங்களைச் சுத்தப்படுத்துவதும்தான். ஒரு உதாரணம் சொல்லுகின்றேன். திருமழிசை ஆழ்வார் காலத்தில் ஒரு வயதான பெண்மணி ஒவ்வொரு நாளும் ஆழ்வார் தங்கி இருந்த திருமடத்திற்கு முன்னால் சாணம் தெளித்துக் கூட்டி முழுகி அழகான கோலத்தைப் போட்டு ஒரு விளக்கேற்றி வைப்பாள். இதற்கு எந்தச் செலவும் இல்லை. யோகத்தில் இருந்த ஆழ்வார் ஒருநாள் கண் திறந்து பார்த்து, இத்தனை அழகாக எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் யாரோ நம்முடைய திருமடத்தின் முன்னால் கூட்டி மெழுகிக் கோலம் போட்டு இருக்கிறார்களே...

அவர்களை அழைத்து வா என்று சொல்லி அடுத்தநாள் அந்தப் பெண்மணி வந்தவுடன் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, அவள் எனக்கு முதுமையால் சிரமமாக இருக்கிறது. நான் இளமையாக மாற வேண்டும்’’ என்று வரம் கேட்க ஆழ்வார் அவளை அழகான இளம் பெண்மணியாக மாற்றினார். அந்த இளம் பெண்ணும் அந்த ஊர் மன்னனை மணந்து கொண்டு ராணி ஆனாள். ஒரு சாதாரண கோலம் போடுதலும் விளக்கேற்றுதலும் எத்தனை உயர்வான வாழ்வைத் தந்தது என்பதற்கு உதாரணம்தான் இந்தக் கதை. எனவே, எளிய பரிகாரங்கள் உங்களுக்கு எல்லையற்ற சந்தோஷத்தையும் செல்வங்களையும் அள்ளித் தரும்.

?ஆன்மீகம், ஆன்மிகம் எது சரி?- லலிதா, மாம்பலம். ஆன்மிகம்தான் சரி.?கடவுள் நமக்கு செய்யும் உதவி, நேர்முகமாக இருக்குமா? மறைமுகமாக இருக்குமா?

- நாராயணன், தூத்துக்குடி.

இரண்டு விதமாகவும் இருக்கும். ஒரு சிறிய கதை சொல்லுகின்றேன். ராமானுஜர் காலத்தில் தாழம் கொல்லை பாகவதர் என்று ஒரு பாகவதர் இருந்தார். அவர் திருவரங்கக் கோயிலிலே சில கைங்கரியம் செய்து கொண்டிருந்தார். அதற்கு ஊதியமாக தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு உணவு அவருக்கு வழங்கப்பட்டது. ஒரு நாள் அவர் ராமானுஜரைப் பார்த்து ‘‘என்னுடைய குடும்பம் பெரிதாகி விட்டது இங்கு தரப்படும் உணவு போதவில்லை எனவே சற்று கூடுதலாகக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற கோரிக்கையை வைக்க ராமானுஜரும் சரி, அரங்கன் உனக்கு ஆவன தருவான் என்று சொல்லி அனுப்பி விட்டார். ஆனால், அவருக்கு கூடுதல் உணவு தருவதற்கு பல்வேறு பணிகளில் மறந்து விட்டார்.

சிலநாட்கள் கழித்து ஒருமுறை அந்த பாகவதரைப் பார்த்தவுடன் இவருக்கு திடுக்கிட்டது. இத்தனை நாள் இவருடைய கோரிக்கையை கவனிக்காமல் விட்டுவிட்டோமே இவர் குடும்பம் என்ன பாடுபட்டதோ என்று நினைத்து அழைத்து விசாரிக்கும் பொழுது அந்த பாகவதர் சொன்னார். ஐயா... நீங்கள் சொல்லிய வண்ணம் அடுத்த நாளிலிருந்து எனக்குக் கூடுதல் உணவு வீடு தேடி வந்து விட்டது.

நீங்கள் கொடுத்ததாகச் சொல்லி ஒரு நபர் கூடுதல் உணவைக் கொடுத்துச் சென்று கொண்டிருக்கிறார் என்று சொன்னவுடன், அவருக்கு மனதில் நிம்மதி வந்தது. அதேநேரம் அதை யார் கொடுத்திருப்பார்கள் என்று நினைத்து’’ என்ன பெயரைச் சொல்லி உனக்கு அவர் உணவை கொடுத்தார்?’’ என்று கேட்டவுடன், அவர் சொன்னார். ராமானுஜருடைய ஆணையின்படி ரங்கநாதனாகிய நான் இந்த உணவைத் தருகிறேன் என்று சொல்லிக் கொடுத்தார் என்று சொன்னவுடன் அரங்கனின் திருவடிகளில் சாஷ்டாங்கமாக ராமானுஜர் வணங்கி, இந்த எளியவன் சொன்ன ஒரு சொல்லுக்காக நீ நேரடியாகச் சென்று நிறைவேற்றினாயே என்று கண்ணீர் விட்டார். இந்தக் கதையில் இரண்டு விஷயங்கள் தெரிகின்றன.

மிக முக்கியமாக ஒருவனுடைய உழைப்புக்கு இவ்வளவுதான் உணவு என்பதை விட அவருடைய குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து உணவு கொடுப்பது என்கிற முறை ஒரு காலத்தில் இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது. அடுத்து பகவானை நிஜமாக நம்பினால் நிச்சயமாக அவன் நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவுகிறான் என்பதும் தெரிகிறது.

?திருமணத்திற்காக நாளும் நட்சத்திரமும் குறிக்கிறார்களே அது அவ்வளவு முக்கியமா?

- லோகநாதன், திருக்கழுக்குன்றம்.

கட்டாயம் முக்கியம். அதனால்தான் பஞ்சாங்கத்தில் அத்தனை நுட்பமாக சில விஷயங்களைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இதைத் தகுந்த ஜோதிட நிபுணரிடம் காட்டித்தான் குறிக்க வேண்டும். காரணம் ஒரு முகூர்த்த லக்னம் எடுப்பது என்பது அத்தனை சாதாரண விஷயம் அல்ல அது எல்லோருக்கும் பொதுவானதும் அல்ல. முகூர்த்த லக்னம் முறையாக வைத்தால் ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும் போய்விடும். ஆனால், இப்பொழுது திருமண மண்டபங்கள் எந்த நாளில் கிடைக்கும் என்ற விஷயம்தான் முகூர்த்த நாளைத் தீர்மானிக்கிறது.

?ஆண்டாள் பாசுரங்களுக்கு என்ன சிறப்பு?

- சந்தானம், திண்டிவனம்.

ஆண்டாள் என்றாலே நமக்கு மார்கழி மாதம்தான் நினைவுக்கு வரும். இந்த மாதம் முழுக்க அவளுடைய பிரபந்தமாகிய திருப்பாவையை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கோயிலிலும் ஓதிக் கொண்டிருப்பார்கள். ஆண்டாள் இரண்டு பிரபந்தங்களை இயற்றினாள் ஒன்று திருப்பாவை இன்னொன்று நாச்சியார் திருமொழி. திருப்பாவை மார்கழி என்ற மாதத்தின் பெயரோடு ஆரம்பிக்கும். நாச்சியார் திருமொழி தையொரு திங்களும் என்று தை மாதத்தின் பெயரோடு ஆரம்பிக்கும். வேறு எந்தப் பிரபந்தத்துக்கும் இப்படிப்பட்ட ஒரு சிறப்பு இல்லை.

?கரி நாட்களில் சுப காரியங்கள் செய்யலாமா?

- சாய் கணேஷ், தஞ்சாவூர்.

தமிழ்நாட்டில் கரி நாட்களில் சுப காரியங்கள் செய்வதில்லை. ஆனால், சில குறிப்பிட்ட சமூகத்தினர் கரிநாள், தனிய நாள் முதலியவற்றைப் பற்றி கவலைப்படுவதில்லை. இது அவரவர்கள் குடும்ப வழக்கத்தைப் பொறுத்தது.

?மார்கழி மாதம் பிறந்து விட்டது மார்கழி மாதம் என்பதற்கு என்ன பொருள்?

- வாணிஸ்ரீ, முசிறி.

மார்கழியில் மார்க்கம் என்ற சொல் இருக்கிறது. மாஸானாம் மார்க சீர்ஷா என்பது ‘‘மாதங்களுள் நான் மார்கழி’’ என்பதற்கான வடமொழிச் சொற்றொடர் ஆகும். இது பகவத் கீதையின்படி, மார்கழி மாதத்தின் சிறப்பைக் குறிக்கிறது, குறிப்பாக மாதங்களில் மார்கழி சிறந்த மாதம் என்று கண்ணபிரான் கூறுவதைக் குறிக்கிறது மார்க்கம் என்றால் நல்வழி என்று பொருள். நல்ல சிந்தனைக்கும் நற்கதிக்கும் நற்செயல்களுக்கும் மார்க்கம் சொல்லும் மாதம் மார்கழி அதனால்தான் அந்த மாதத்தில் தெய்வ காரியங்களை மட்டும் செய்கின்றோம் அது பூர்த்தியானவுடன் தை மாதம் பிறந்து பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறோம். மார்கழியில் மார்க்கம் காட்டுவதால் தை மாதத்தில் வழி பிறந்தது அதனால்தான் ‘‘தை பிறந்தால் வழி பிறக்கும்’’ என்ற பழமொழியும் வந்தது.

?ஆப்ரேஷன் செய்து குழந்தையை எடுப்பதற்கு நாள் குறிக்கிறார்களே இந்த முறை சரிதானா?

- மீனாட்சி, நாகப்பட்டினம்.

எப்பொழுதெல்லாம் இறைவனுடைய ஆற்றலுக்கும் பிரபஞ்சத்தின் ஆற்றலுக்கும் எதிர் விசை ஆற்றுகின்றோமோ அதற்கு எதிராக பிரபஞ்சமும் செயல்படும். நீங்கள் என்னதான் பஞ்சாங்கத்தைப் பார்த்து நாள் குறித்து கொடுத்தாலும் கூட அவரவர் “ விதிப்படி அடைய நின்றனரே” என்று ஆழ்வார் சொன்னதுபோல அவரவர்கள் என்ன வரம் வாங்கி வந்தார்களோ, அதன் படிதான் வாழ்க்கை அமையும். ஒரு நிமிட இடைவெளியில் கூட ஜாதக பலன்கள் மாறிவிடும்.

அத்தனை நுட்பமாக ஒரு குழந்தையை வெளியே எடுக்க முடியுமா என்பது சந்தேகத்திற்குரியது. எனவே, தேவைக்கு ஏற்றபடி நாம் ஆபரேஷன் செய்து வெளியே எடுக்கலாமே தவிர ரொம்ப நுட்பமாக நாள் பார்க்க வேண்டியதில்லை. ஆனாலும் கூட அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு ஏதோ காரணத்தினால் வருகின்ற பொழுது முயன்று பார்ப்போமே என்று சிலர் முயற்சிக்கிறார்கள். இறைவனின்மீது பாரத்தை போட்டு முயற்சி செய்தால் சமயத்திலே இறைவன் அதை பலிக்க வைத்தாலும் வைத்து விடுவான்.

?அதிசாரப் பெயர்ச்சி வக்கிரப் பெயர்ச்சி என்றெல்லாம் கிரகங்களுக்குக் கொண்டாட முடியுமா?

- சுந்தரமூர்த்தி, திருவான்மியூர்.

ஒரு காலத்தில் கிரகப் பெயர்ச்சியே கொண்டாடுகின்ற நிலை நம் நாட்டில் இல்லை. ஜோதிடம் பற்றிய ஆர்வம் அதிகமாகி விட்டது. ஜோதிடர்களும் அதிகமாகி விட்டார்கள் என்பதால் இந்த கிரகப் பெயர்ச்சிகள் பெரிய அளவில் பிரபலமாகக் கொண்டாடப்படுகின்றன. கிரகப் பெயர்ச்சியிலும் அதிசாரப் பெயர்ச்சி, வக்கிரப் பெயர்ச்சி என்பதெல்லாம் கொண்டாட வேண்டிய அவசியமே இல்லை. காரணம் கிரக நிலைகள் அதிசாரத்திலும் வக்கிரத்திலும் பெரிய அளவில் மாற்றம் அடைவது கிடையாது. அது ஒரு தோற்றம்தான். ஆனாலும், பலன் சொல்ல வேண்டும் என்பதற்காக அப்படியும் பலன் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

?அதோமுக நட்சத்திரம் என்று ஒன்று இருக்கிறதா?

- லதா கணேசன், தொட்டியம்.

நட்சத்திரங்களில் கீழ்நோக்கு நட்சத்திரங்கள் என்று சில நட்சத்திரங்களை வைத்திருக்கிறார்கள். பரணி, கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம் ,விசாகம் ,மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய 9 நட்சத்திரங்களை கீழ் நோக்கு நட்சத்திரங்கள் என்று குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த கீழ்நோக்கு நட்சத்திரங்கள் தான் அதோ முக நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரம் உள்ள நாளில் பூமிக்கு கீழே செய்ய வேண்டிய செயல்களை எல்லாம் நாம் செய்யலாம். கிணறு வெட்டுதல், குளம் வெட்டுதல் செடி கொடிகளை நடுதல் போன்ற காரியங்களை இந்த நட்சத்திரங்கள் இருக்கும் நாளில் செய்வது சிறப்பு.

?சம்ரோக்ஷணம், கும்பாபிஷேகம் இரண்டும் ஒன்றா?

- மணி, திருநின்றவூர்.

இரண்டும் ஒன்றுதான். இரண்டும் சமஸ்கிருத வார்த்தைகள்தான். ஒன்று தெளித்தல், புரோக்ஷணம் என்கிற பொருளில் வரும் இன்னொன்று நீராட்டுதல் (அபிஷேகம்) என்கிற பொருளில் வரும். குடத்தில் (கடம்) மந்திரங்களால் யாகசாலையில் உருவேற்றப்பட்ட புனித நீரை தெளித்தல் என்ற பொருளில் சம்ரோக்ஷணம் வரும் அதே புனித நீரை அபிஷேகம் செய்தல் என்ற பொருளில் கும்பாபிஷேகம் வரும். இதில் வைணவர்கள் சம்ரோக்ஷணம் என்ற சொல்லையும் மற்ற எல்லா கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் என்ற சொல்லையும் பயன்படுத்துகின்றார்கள்.

?தானங்களிலேயே சிறந்தது அன்னதானமா? உபதேச தானமா?

- ராமகிருஷ்ணன், நாகர்கோவில்.

அன்னதானம்தான். பசியோடு இருக்கும் ஒருவருக்கு உபதேசம் தேவையில்லை. புத்தர் தன்னுடைய சீடரிடம் சொல்லுவார். பசியோடு படுத்து இருக்கின்ற ஒருவனிடம் சீடன் சென்று புத்தரின் புனித மொழிகளை சொல்ல அவன் அசையாமல் படுத்திருப்பான். இதைக் கவனித்த புத்தர் முதலில் அவனுக்கு உணவு கொடு. அவன் எழட்டும் பிறகு அவனுக்கு நீ உபதேசம் செய்யலாம் என்று சொல்லுவார். அதனால்தான் வள்ளலார் அணையா விளக்காக அடுப்பை வடலூரில் ஏற்றினார். பசிப்பிணி போக்குவதுதான் அருளாளர்களின் முதன்மை வேலை என்று அவர் சொன்னார். இன்றைக்கும் நாம் பார்க்கிறோம். உலகத்தில் பல மக்கள் உணவில்லாமல் ஒட்டிய வயிரோடு உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் பல்லாயிரம் டன் உணவுகள் பாதி உண்டும் உண்ணாமலும் தூக்கி எறியப்படுகின்றன.

?படிப்பது சிறந்ததா? சிந்திப்பது சிறந்ததா?

- கார்த்திக் ஷண்முகம், திருநின்றவூர்.

படித்துவிட்டு சிந்திப்பதுதான் சிறந்தது. படிப்பது என்பது உணவு உண்பதுபோல. சிந்திப்பது என்பது சாப்பிட்ட உணவை ஜீரணம் செய்வதுபோல. ஜீரண சக்தி இல்லாமல் எத்தனை உணவு சாப்பிட்டாலும் அது பிரயோஜனப்படாது. சிந்தனை இல்லாதவன் அல்லது சிந்திக்கத் தெரியாதவன் எத்தனை படித்தாலும் அது ஜீரணிக்காமல் உணவு உண்டதை போலத்தான். இதனால் அவனுக்கும் பிரயோஜனம் இல்லை. அந்த உணவும் பிரயோஜனப் படாமல்தான் போகும்.

?ஜெபம் என்றாலே மந்திரத்தை மனதில் உச்சரிப்பது மட்டும்தானா, அல்லது வேறு ஜெபம் உண்டா?

- மஞ்சுளா, திருவள்ளூர்.

லிகித ஜெபம் என்று உண்டு. ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஸ்ரீராமஜெயம் தினசரி எழுதுபவர்களைப் பார்த்து இருக்கலாம். அவர்கள் சிந்தனை முழுக்க ராம நாமத்தில் இருக்கும். கைகள் எழுதிக் கொண்டே இருக்கும். அதற்கும் எண்ணிக்கை உண்டு. இதுவும் ஒருவகை ஜெபம்தான். இதற்கு லிகித ஜெபம் என்று பெயர்.

தேஜஸ்வி