Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தெளிவு பெறுஓம்- ?அபய அஸ்தம், வரத அஸ்தம் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

?அபய அஸ்தம், வரத அஸ்தம் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

பெருமாளின் வலது கை கீழே என்னுடைய திருவடியைப் பார் என்றபடி இருந்தால் அதற்கு அபய அஸ்தம் என்று பெயர். உன்னுடைய பயத்தை நான் நீக்குகின்றேன், நீ என் திருவடியைப் பிடித்துக்கொள் என்று பொருள். அதே பெருமாளின் வலது கை நேராக நிமிர்ந்து வரம் தருவதாக இருந்தால் அதற்கு வரத ஹஸ்தம் என்று பெயர். நாம் கேட்பதை தருவதற்கு பெருமாள் தயாராக இருக்கிறார் என்று குறிப்பு.

?தேர்த் தட்டு வார்த்தை என்பது என்ன?

வைணவத்தில் மூன்று முக்கியமான மந்திரங்களில் சரம ஸ்லோகம் என்பது ஒன்று. ரகசியமானது. இந்த சரம ஸ்லோகம் மூன்று விதமாகச் சொல்லப்படுகிறது. ஒன்று வராகப் பெருமாள் பூமாதேவிக்குச் சொன்ன சரம ஸ்லோகம். இரண்டாவது  ராம பிரான் விபீஷணனுக்குச் சொன்ன சரம ஸ்லோகம். இதைத்தான் கடற்கரை வார்த்தை என்று சொல்வார்கள். மூன்றாவதாக தேரில் அர்ஜுனனுக்குக் கண்ணன் கீதையை உபதேசம் சொன்னபொழுது ஒரு சரம ஸ்லோகம் சொல்லுகின்றான். அந்தச் சரம ஸ்லோகத்துக்குத்தான் தேர்த் தட்டு வார்த்தை என்று பெயர். அந்த சரம ஸ்லோகம் இதுதான்.

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ;

அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஶ்யாமி மா ஸுச.

‘‘இதன் சுருக்கமான பொருள்: - எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டு என்னையே சரணடை’’ என்பதாகும். தர்மங்களை விட்டு விட்டு என்றால் பலனை எதிர்பார்க்காது, பலனைத் தியாகம் செய்துவிட்டு என்று பொருள்.

?பிறப்பில்லாத பெருமாளுக்கும் மற்ற கடவுளர்களுக்கும் ஜாதகம் நட்சத்திரம் என்று சொல்கிறார்கள் அது சரியா?

பெருமாள் பிறப்பில்லாதவர். அவர் ஜாதகங்களை எல்லாம் கடந்தவர். காலம் அவருடைய கட்டுப்பாட்டில் இருப்பதால் எந்த கிரகங்களும் அவரைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனாலும் இந்த நிலவுலகத்தில் யுகங்கள் தோறும் பல்வேறு வடிவங்களில் அவர் அவதாரம் எடுக்கிறார்.

(சம்பவாமியுகே யுகே -கீதை)

அவதாரம் எடுக்கிறார் என்றால் தோன்றுகிறார் என்று பொருள். காலத்திற்குக் கட்டுப்படாத பெருமாள், காலத்திற்குக் கட்டுப்பட்ட நிலவுலகத்திலே தோன்றிய நேரம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா. அதுதான் அந்த பெருமாளின் அவதார திருநட்சத்திரமாக நாம் வைத்துக் கொண்டிருக்கிறோம். இது இந்த உலகத்தில் மட்டும் தான் செல்லும். ராமர்  கிருஷ்ணர் முதலியவர்கள் திரேதா யுகத்திலும் துவாபர யுகத்திலும் அவதரித்தவர்கள். அவர்கள் அவதரித்த நாட்களைப் பற்றிய குறிப்பு அந்தந்த இதிகாச புராணங்களில் மிக விரிவாக, முக்காலமும் உணர்ந்த ரிஷிகளால் குறிக்கப்பட்டிருக்கிறது என்பதால் அந்த ஜனன ஜாதகத்தை நாம் ஏற்றுக் கொள்வதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

நமது ஜாதகம் நமது கர்மாக்களின் அடிப்படையில் அமைந்த ஜாதகம். பெருமாளுக்கான ஜாதகம் நமது கர்மாவை விடுவிக்க வந்த ஜாதகம் என்கின்ற வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

?இறைவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்கிறார்களே?

உயர்ந்த பொருட்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது ஆகம முறை. சந்தனம், இளநீர், பால், பன்னீர் முதலிய உயர்ந்த பொருட்களால் அபிஷேகம் செய்வது போலவே பஞ்சாமிர்த அபிஷேகமும் சிறப்பானது. ஆனி மாதம் பௌர்ணமியில் சிவன் கோயில்களில் மூவகைப் பழங்களான மா, பலா, வாழை என அபிஷேகம் செய்வார்கள். அந்த அபிஷேகங்களை கண்ணால் தரிசிப்பது மிகுந்த சிறப்பு. அந்தப் பழங்களைப் போலவே இனிமையான வாழ்க்கையைத் தரும்.

?இழந்த சொத்துக்களைப் பெற யாரை வணங்க வேண்டும்?

இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் பதவி உயர்வுக்கு உலகளந்த பெருமாளை வணங்க வேண்டும். வீடு, நிலம் போன்றவற்றுக்கு வராகப் பெருமானையும் பொதுவாக லட்சுமி நாராயணரையும் வணங்கலாம். இந்திரன் இந்திர பதவியை இழந்தான். அப்பொழுது அந்தப் பதவியை அவனுக்குப் பெற்றுத் தந்தவர் உலகளந்த பெருமாள். வாமனனாக அவதரித்து இந்திரனுடைய கோரிக்கையை நிறைவேற்றி வைத்தார். எனவேதான் இழந்த பதவியைப் பெற வாமன திரிவிக்ரம அவதாரத்தை வணங்க வேண்டும்.

?மனதில் உறுதி இல்லாத தன்மை இருக்கிறது. ஒரு செயலை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் முடியவில்லை. என்ன செய்யலாம்?

அனுமனைத் துணைக் கொள்ளுங்கள். அனுமனைத் துதியுங்கள். சனிக்கிழமை தோறும் அனுமன் சந்நதிக்குச் சென்று பிரார்த்தித்து வாருங்கள். உங்களுடைய துணிச்சலையும் மன உறுதியையும் அதிகப் படுத்தி வைராக்கியத்தையும் தந்து செயலில் வெற்றி காண வைப்பார். காரணம், யாராலும் கடக்க முடியாத பெருங்கடலைக் கடந்து, இலங்கை சென்று, திரும்ப வந்து ராமபிரானுக்கு வெற்றிச் செய்தியைச் சொன்னவர் அனுமன். அப்படி வணங்கும் பொழுது இந்தச் ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.

அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம்வத

ராம தூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ

இதன் பொருள் யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவரான ராம தூதனே! கருணைக் கடலே! என்னுடைய காரியங்களையும் சாதித்துத் தருவீராக.

?கந்தசஷ்டி கவசம் போல மற்ற தெய்வங்களுக்கும் கவசம் உண்டா?

கந்த சஷ்டி கவசம் பிரபலமானது. கவசம், என்றாலே காப்பாற்றுவது என்று அர்த்தம். எல்லா தெய்வங்களுக்கும் கவச நூல்கள் உண்டு. ஷண்முக கவசம், நாராயண கவசம், சக்தி கவசம், சிவகவசம் போன்றவையும் தெய்வங்களுக்குரிய கவச நூல்களாகும்.

?பிராயச் சித்தங்கள் பலனளிக்குமா?

பலன் அளிக்கும் என்பதால்தான் அதை பிராயச்சித்தம் என்று சொல்லுகின்றோம். ஒரு பிராயச்சித்தத்தை யார் சொல்கிறார்கள் என்கிற தகுதி முக்கியம். அவர்களுடைய பக்தி, ஆசாரம், நம்பிக்கை, சுயநலமின்மை, இவைகள் எல்லாம் முக்கியம். நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் என்று பணம் வாங்கிக் கொண்டு கடமைக்கு பிராயச்சித்தம் சொல்லி அதை நாமும் கடமைக்குச் செய்வதால் பிராயச்சித்தம் முழுமை பெறுவதில்லை. சொல்பவர்கள் நன்றாகச் சொன்னாலும் செய்பவர்களுக்கும் அந்த ஆசாரமும் அனுஷ்டானமும் நம்பிக்கையும் முக்கியம்.

?நீண்ட காலம் வாழ எதில் கவனம் செலுத்த வேண்டும்?

நம்முடைய முன்னோர்கள் மிக அதிக காலம் வாழ்வதற்கு காரணம். உடற்பயிற்சிகள் மட்டுமல்ல மிக முக்கியமான காரணம் பிராணாயாமம் என்று சொல்லப்படும் மூச்சுப் பயிற்சி. நம்முடைய வாழ்நாளைக் கட்டுப்படுத்துவது மூச்சு தான். ஒரு மூச்சு உள்ளே போகவும் ஒரு மூச்சு வெளியேறவும் நம்முடைய உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. உற்சாகமோ, சோம்பலோ, தூக்கமோ, உடல் வளர்ச்சியோ, உடல் தளர்ச்சியோ இதைப் பொறுத்து தான் இருக்கிறது.

நம்முடைய வாழ்நாள் 50 வருடம் 60 வருடம் நூறு வருடம் என்றெல்லாம் சொல்கிறோம் அல்லவா. அதெல்லாம் கணக்கு அல்ல. எத்தனை மூச்சுகள் என்பதுதான் கணக்கு. ஒரு தரம் மூச்சு உள்ளே போய் வெளியே வந்தால் நம்முடைய உடம்பின் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. ஒரு மூச்சால் உடல் தேய்கிறது ஒரு மூச்சால் உடல் வளர்கிறது. உள்ளே ஆழமாக இழுத்து நிறுத்தி நிதானமாக வெளியே விடுவதன் மூலமாக நம்முடைய வாழ்நாள் அதிகரிக்கிறது. ஒரு மரத்தை வேகமாக அறுப்பதற்கும் நிதானமாக அறுப்பதற்கும் உள்ள வேறுபாடுதான் இது.

நிதானமாக அறுப்பது போல மூச்சுப் பயிற்சியை நிதானமாக உள்ளே இழுத்து வெளியே விட்டால் நாம் அதிக காலம் வாழலாம். இதற்கு அவசரமில்லாத வாழ்வு, நிதானமாக உண்ணுதல், பரபரப்பில்லாத வாழ்க்கை முக்கியம். சக்கரத்தை கட்டிக்கொண்டு ஏதோ விமானத் தைப் பிடிப்பது போல ஓடிக்கொண்டே இருந்தால் மூச்சுக்கள் அதிகம் செலவழியும். அதிகம் செலவழிந்தால் எப்பேர்பட்டவர்க்கும் வாழ்நாள் குறைந்து கொண்டே போகும்.

?மனைவி கர்ப்பமாக இருக்கும் போது முதல் குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்தலாமா?

பெரும்பாலும் கூடாது. முறை இல்லை. ஆனாலும் ஒரு சில சம்பிரதாயத்தில் செய்கின்றார்கள். இந்த மாதிரி விஷயங்களில் உங்கள் வீட்டில் என்ன மரபு என்று பாருங்கள். உங்கள் குருமார்களோ அல்லது உங்கள் வீட்டில் பெரியவர்களோ இதுவரை எப்படிக் கடைபிடித்தார்களோ அப்படிச் செய்யுங்கள்.

?கேட்பது உயர்ந்ததா? சொல்வது உயர்ந்ததா?

கேட்பதுதான் உயர்ந்தது. நவவித பக்தியில் முதல் பக்தியாக கேட்பதைத்தான் சொன்னார்கள். ஒரு நட்சத்திரத்திற்கு சிரவணம் (திருவோணம்) என்று பெயர் வைத்தார்கள். சிரவணம் என்றால் கேட்பது என்று அர்த்தம். கேட்பது என்றால் நல்லவற்றைக் கேட்பது என்று அர்த்தம். இதைத்தான் வள்ளுவரும் ‘‘கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியினால் தோட்கப்படாத செவி” என்றார். நல்ல விஷயங்களைக் கேட்பதற்கு பழக்கம் இல்லாத காது செவிட்டுக் காது தான் என்பது அவருடைய முடிவு. நமக்கு காது நன்றாக கேட்கிறதா கேட்கவில்லையா என்பதை இந்தக் குறளை வைத்து ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்.

?நீராடும்போது எப்படி நீராட வேண்டும்?

அந்தக் காலத்தில் ஏரி, குளம் ஆறு, குறைந்த பட்சம் வீட்டில் உள்ள கிணறு என்று நீராடுவார்கள். உடலில் உள்ள சூடு குறையும் படி நீராடுவார்கள். இது குறித்து ஒரு சுவையான செய்தியைச்

சொல்லுகின்றேன். ஒரு ராஜா தன் அவையில் உள்ள புலவர்களைப் பார்த்து ‘‘நீராடும்போது பசுவைப் போல நீராட வேண்டுமா? எருமையைப் போல நீராட வேண்டுமா?’’ என்று ஒரு கேள்வி கேட்டார். புலவர்கள் பலரும் எருமை என்றால் கேவலம் என்று நினைத்துக் கொண்டு பசுவைப் போல நீராட வேண்டும் என்று சொல்ல, ஒரே ஒரு புலவர் மட்டும் எருமையைப் போல நீராட வேண்டும் என்றார். மன்னர் அவரிடம் விளக்கத்தைக் கேட்கும் போது சொன்னார்.

நீராடும் பொழுது பசு தண்ணீரில் விழுந்ததும் தெரியாது கரை ஏறுவதும் தெரியாது பாதி உடல் நனைந்திருக்கும் மீதி உடல் நனையாது இருக்கும். எனவே அந்த நீராட்டத்தினால் ஒரு பலனும் இல்லை. எருமை அப்படிக் கிடையாது. அது நீர் நிலையைக் கண்டால் ஆசையோடு வெகு நேரம் அதிலேயே மூழ்கி தன்னுடைய தாபமெல்லாம் தீர்ந்து நிதானமாக மேலே கரைக்கு வரும். மனிதர்களும் அவசரமாக நீராடாமல் நிதானமாக நீராட வேண்டும் என்பதற்காகத்தான் எருமையை உதாரணமாகச் சொன்னேன்” என்றார்.

மன்னர் மகிழ்ந்து அவருக்குப் பரிசுகள் தந்தார்.

இதை ஆண்டாள் நாச்சியாரும் திருப்பாவையில் ‘‘குள்ளக் குளிரக் குடைந்து நீராட வேண்டும்” என்று பாடுகின்றார். நனைந்து குளிரும்படியாக நிதானமாக நீராட்டம் செய்ய வேண்டும். பெருமாளின் கோயில்களில் நிதானமாக பஞ்ச சூக்தங்களைச் சேவித்துக் கொண்டு நீராட்டம் நடைபெறும். பார்க்க ஆனந்தமாக இருக்கும். நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சனம் மார்கழி திரு மஞ்சனம் முதலிய நாட்களில் 3 மணி நேரத்துக்கு குறைவில்லாமல் இறைவனுக்கு நீராட்டம் நடத்துவார்கள். நாமும் நிதானமாக நீராடுவது நம்முடைய உடலுக்கும் மனதுக்கும் நல்லது.

தேஜஸ்வி