Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மூன்று வகை நிலத்தினர்

கல்வி அறிவிலும் அதை உள்வாங்கிப் பயன் அளிப்பதிலும் மூன்றுவகை நிலத்தினர் உள்ளதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்.அறிவை உள்வாங்கிக்கொள்வதற்கு அவர் மழை பெய்யும் நிலத்தை உவமையாக்கினார்.

நபிகளார்(ஸல்) கூறினார்கள்:“இறைவன் எனக்கு அருளியுள்ள நல்வழிக்கும் கல்விக்கும் எடுத்துக்காட்டு ஒரு நிலத்தில் பெய்த பெருமழையாகும்.

1. அந்த நிலத்தில் நல்ல பகுதியும் உண்டு. அது நீரை உள்வாங்கிக் கொண்டது, அதில் புல்லும் ஏராளமான பச்சைச் செடிகொடிகளும் முளைத்தன.

2. அந்த நிலத்தில் தரிசும் உண்டு. அது நீரை உள்வாங்கவில்லை. ஆனால் தேக்கி வைத்துக் கொண்டது. அதை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். மக்கள் அருந்தினர். கால்நடைகளுக்கும் புகட்டினர். விவசாயமும் செய்தனர்.

3. அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் பெய்தது. அது ஒன்றுக்கும் உதவாத வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. அதில் புற்பூண்டுகள் முளைக்கவும் இல்லை.

“இதுதான் இறைமார்க்கத்தை விளங்கி, இறைவன் எனக்கு அருளியதன் மூலம் பயனடைந்து, தாமும் கற்றுப் பிறருக்கும் கற்பித்தவருக்கு எடுத்துக்காட்டு.

“இறைவன் எனக்கு அருளியதை ஏறிட்டுப் பார்க்காமலும், எனக்கு அருளப்பட்ட இறைவனின் நல்வழியை ஏற்றுக் கொள்ளாமல் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்.” (ஆதாரம்- புகாரி, முஸ்லிம்)

இந்த நபிமொழிக்குப் பேரறிஞர்கள் பலர் நிறைய விளக்கங்கள் அளித்துள்ளனர்.

முதலாம் வகையினர், மனனம் செய்யும் ஆற்றலும், விளங்கிக் கொள்ளும் ஆற்றலும், விளக்கம் அளிக்கும் ஆற்றலும் உள்ளவர்கள்.

கல்வியை உள்வாங்கிச் சிந்தித்து, ஆய்வு செய்து, தாமும் பயன்பெற்றுப் பிறர்க்கும் தம் அறிவாற்றல்மூலம் பயன் அளிப்பவர்கள்.

தண்ணீரை உள்வாங்கிய நிலம் விதவிதமான தாவரங்களை முளைப்பிப்பதைப் போன்றது இவர்களின் உவமை.

இரண்டாம் வகையினர், இருப்பதை மனனம் செய்து, எழுதி வைத்துப் பாதுகாப்பவர்கள். இவர்களுக்குள் ஆய்வு செய்யும் ஆற்றல் குறைவாகவே இருக்கும். இவர்களும் மனிதகுலத்திற்குப் பயனுள்ளவர்களே.நீரை உள்வாங்காவிட்டாலும் தேக்கிவைத்துப் பயன்தரும் நிலத்தைப் போன்றவர்கள்.

மூன்றாம் வகையினர், சிறிதளவும் அறிவாற்றல் இல்லாதவர்கள். இவர்கள் எந்தச் செடியும் முளைக்காத, தண்ணீரைத் தேக்காத கட்டாந்தரைக்கு ஒப்பானவர்கள்.

மக்களுக்கு மழை எந்த அளவு தேவையானதோ அந்த அளவு, ஏன் அதைவிட அதிகமாகவே கல்வி அறிவு தேவை என்பதை உவமையுடன் அழகாக அறிவுறுத்துகிறது இந்த நபிமொழி.முதல் இரண்டு வகை நிலங்களாய் நாமும் விளங்கி மனிதகுலத்துக்குப் பயன் அளிப்பவர்களாய்த் திகழ்வோம்.

- சிராஜுல் ஹஸன்