Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பேரருள் பொழியும் லலிதா சஹஸ்ரநாமம்

நாம் எதைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றோம். அல்லது நான் என்னதான் தேடிக் கொண்டிருக்கின்றேன். வாழ்வின் இலக்குகள் என்ன? இன்னொருவர் தேடுவதையே நாமும் தேடிக் கொண்டு உழல்கிறோமே, எல்லோரும் எதைச் செய்கிறார்களோ... அதையே நானும் செய்கிறேனே என்கிற உணர்வேயில்லாமல் ஓடி ஓடி களைத்து மரணம் வரை செல்லும் வாழ்க்கை உணர்த்துவதுதான் என்ன? நம் கண் முன்னால் இன்பம், துன்பம், பிரச்னைகள், பயம், கோபம், காமம், பொறாமை, அசூயை, சோகம், துக்கம், மரணம், இழப்பு, சந்தோஷம் இன்னும் இன்னும் எத்தனையோ நூற்றுக் கணக்கான உணர்வுகள் நம்மை தினம் தினம் அலைகழித்துக் கொண்டிருக்கின்றன. ஏன், இப்படி என்னை அலைகழிக்கின்றன? மனம் சில சமயம் அமைதியான கடல்போல இருக்கிறது. சிலபோது கொந்தளித்து தள்ளுகின்றது.

‘‘இவை அனைத்திற்கும், லலிதா சஹஸ்ரநாமத்திற்குள் விடை இருக்கின்றதா?’’

‘‘ஆமாம், நிச்சயம் விடை இருக்கின்றது. ‘‘ஆனால், அதற்கான விடை இவ்வளவுதான் என்று ஒற்றை வரியிலோ அல்லது பல வரிகளிலோ அல்லது நமது விரும்பும் விதமான விடைகளையோ அவசரப்பட்டு பார்க்கப் போவதில்லை. இதற்கும் முன்பு எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தானே என்றும் பார்க்கப் போவதில்லை. இதற்கான விடையை லலிதா சஹஸ்ரநாமம் எப்படிச் சொல்கின்றது என்பதை நுட்பமான முறையில், பொருள் உணர்ந்து, அடுக்கடுக்காக ஒவ்வொரு நாமத்தில் உள்ளேயும் சென்று தரிசிக்கப் போகிறோம்.

அதற்கு முன்பு வேறொன்றையும் பார்க்க வேண்டும். அதாவது, நம் கண்ணுக்கு எதிரேயுள்ள விஷயத்தையும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு ஜீவனும் அடிப்படையாக தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் என்று சிலது உண்டு. அந்தக் கேள்விகள் நமக்கு பரிச்சயமாகி இருந்தாலும், அந்தக் கேள்விகள் அனைத்தும் நமது சமூகத்தில் புழக்கத்தில் இருந்தாலும், நமது காதுகளுக்கும் மூளைக்கும் அறிவிற்கும் நன்கு பழக்கப்பட்டு, தேய் வழக்காகி விட்ட கேள்விகளாக இருந்தாலும், நாம் விடாது கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கேள்விகள் என்ன தெரியுமா?

உண்மையிலேயே வாழ்க்கை என்றால் என்ன? பல்லாயிரம் முறை, நூற்றாண்டுகளாக இந்த மானுட சமூகம் இந்த கேள்வியை கேட்டபடி உள்ளது. ஆனால், உண்மையாக இந்தக் கேள்விக்கான பதிலையோ அர்த்தத்தையோ நாம் உணர்ந்திருக்கிறோமா? வாழ்க்கை... வாழ்க்கை... நொடிக்கு நூறு தரம் சொல்லிக் கொண்டிருப்போம். உண்மையிலேயே வாழ்வு, வாழ்க்கை போன்ற பதங்கள் சுட்டும் விஷயத்தை அனுபவப் பூர்வமாக வாழ்கிறோமா?

இல்லை. அல்லது தெரியவில்லை. இதையும் தாண்டி ஏதோ வாழ்க்கை போகிற போக்கில் என்று சில பதில்கள் சொல்வோம். ஆனால், நம்முடைய பாரத தேசத்து ஞானிகள், மகான்கள், பழம் பெரும் ரிஷிகள் நமக்கு வேறு விடையை, வாழ்க்கைக்கான அர்த்தத்தை காட்டுகின்றார்கள்.