Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குற்றம் போக்கும் குற்றம் பொறுத்த நாதர்

ஒரு மனிதன் புரிந்த பாவங்கள் அவனை துன்புறுத்தினாலும், அவன் செய்த புண்ணியம் அவனைக் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும். அத்தகைய பாவங்களைக் கழித்து, குற்ற எண்ணங்களை நீக்கி, நல்லருள் புரியும் திருத்தலமாகத் திகழ்கிறது சு. ஆடுதுறை. பொன்னி நதியென்னும் காவிரியை விடவும் புண்ணியம் மிகுந்த நீவாநதி எனப்படும் வடவெள்ளாற்றின் தென்கரை மீது அமைந்துள்ளது இந்த ஆடுதுறை.திருஞானசம்பந்தர் தனது திருநெல்வாயில் அரத்துறை தேவாரத்தில்.....‘‘மணிகலந்த பொன்னுந்தவரும் புனல் நீவாமல்கு கரைமேல் குரங்காடு சோலைக். குயில்கொண்ட குழைக்காதனே’’

என்று இத்தலத்தையும், இத்தல ஈசனது பெருமையையும் சிறப்பிக்கின்றார்.சுக்ரீவன் மற்றும் சுவேதகேது முனிவர் வழிபட்டதால் இப்பதி சுக்ரீவன் மற்றும் சேத முனிவரின் பெயரால் சு.ஆடுதுறை என்றும், வானரர்கள் என்னும் குரங்குகள் நீவா நதியில் நீராடி, இங்குள்ள ஈசனை வணங்கியதால் திருக்குரங்காடுதுறை என்றும், வானர ஸ்நான தீர்த்தபுரம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. தற்போது சு.ஆடுதுறை என்று வழங்கப்படுகிறது.தஞ்சை மண்ணில் ‘வடகுரங்காடுதுறை’ மற்றும் ‘தென்குரங்காடுதுறை’ என இரண்டு தலங்கள் உள்ளதால் இந்த தலம் வேறுபட்டு சு.ஆடுதுறை என வழக்கில் கூறப்படுகிறது.அனுமனுடன் சீதாபிராட்டியைத் தேடிச்சென்ற வானரங்கள் அன்னை சீதையை ஆஞ்சநேயர் கண்டுவிட்டார் என்கிற விஷயத்தைக் கேட்டு, மதுவனத்தில் நுழைந்து, ஆடிப்பாடிக் கொண்டா டினர். அந்த மதுவனமே இந்த ஆடுதுறை என்று தலபுராணம் கூறுகின்றது. வாலி வழிபட்ட தலமான வாலிகண்டபுரம் என்னும் திருத்தலம் இந்த ஆடுதுறைக்கு அருகாமையில் சான்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நீவா நதியின் பெருமை :-

வசிஷ்டர் இங்கு தவம் புரிந்துவரும் பொழுது, சிவலிங்க பூஜை செய்வதற்கு நதி ஒன்றை ‘‘நீ வா” என்று அழைத்தார். அதுவே நீவா நதி என்றானது. சுவேதகேது முனிவர் நீராடி, இறைவனை வணங்கி பாவம் நீங்கப் பெற்றதால், இந்நதி சுவேத நதி என்றும் அழைக்கப்பட்டது. தமிழில் இதை வெள்ளாறு என்றும் வடவெள்ளாறு எனவும் அழைப்பர். ‘‘மறந்து போன திதியை மகத்தில் கொடு” என்பது முதுமொழி. மாசிமக தினத்தில் நீவாநதியில் திரளாக மக்கள் கூடி முன்னோர்களுக்கு திவசம் கொடுப்பதை இன்றும் காணலாம்.இந்த நீவா நதியின் பெருமையை சம்பந்தர் தனது திருநெல்வாயில் அரத்துறைப் பதிகத்தில்.....

‘‘கந்தமா மலருந்துவரும் புனல்

நிவா மல்கு கரைமேல்’’

என்றும்,

‘‘பொன்னுமா மணியுந்திப்

பொருபுனல் நீவாமல்கு.

கரைமேல்’’

என்றும் போற்றுகின்றார்.

ஏழு துறைகள்:-

தக்ஷ யாகத்தால் பாவம் அடைந்த அகத்தியர், வசிஷ்டர், பரத்வாஜர், பராசரர், கௌதமர், காசியபர் மற்றும் கௌசிகர் ஆகிய ஏழு ரிஷிகளும் தனது தன்மையை இழந்தனர். இப்பாவம் தீர நீவா நதியின் கரைமேல் ஏழு இடங்களில் சிவனைப் பூஜித்து வழிபட்டனர்.அவை..... காரியாந்துறை, திருவாலந்துறை, திருமாந்துறை, ஆடுதுறை, வசிஷ்டத்துறை (திட்டக்குடி) திருநெல்வாயில் அரத்துறை மற்றும் கடம்பந்துறை ஆகியனவாகும். சுவேத நதி என்னும் இந்த வெள்ளாற்றின் வடகரைமேல் மூன்று தலங்களும், தென்கரைமேல் நான்கு தலங்களும் அமையப்பெற்றுள்ளன. இந்த சு. ஆடுதுறை நான்காவது திருத்தலமாக திகழப்பெறுகின்றது.

சுவேதகேதுவின் அபராதம் பொறுத்தல் :-

ஒரு சமயம் உத்தாலக முனிவரின் மகனான சுவேதகேது முனிவர் ஈசனை மனதில் நினைத்து, தவம் புரிந்தார். அப்போது அவரது மனம் ஒருமைப்படாமல் குரங்குபோல் தாவித்தாவி தடுமாறியது. இதனால் தவம் கலைந்த சுவேதகேது, இதைப் பற்றிய காரணத்தை தந்தையிடம் கேட்டார்.அதற்கு உத்தாலகர், ‘‘மகனே சுவேதகேது...நீ உனது தீர்த்த யாத்திரையின்போது தாகத்தால் தவித்தாய். அப்போது அங்கு வந்த தேவலோக நங்கையான திலோத்தமை தனது மோகத்தால் மயக்கி, அவளது மாயாவனத்திற்கு உன்னை கடத்திச் சென்றாள். அப்போது அப்பகுதியில் யாத்திரை மேற்கொண்டிருந்த பிருகு, மரிசீ, அத்திரி, புலத்தியர், புலஹர், கிருது வசிஷ்டர் ஆகியோர் பிரதோஷ காலம் வரவே, அங்கிருந்த சிவலிங்கத்தை வழிபட்டனர்.

அந்த வேளையில் நீ திலோத்தமையின் காதலில் விழுந்து, பேரின்ப லயத்தை மறந்து சிற்றின்பத்தில் மயங்கியிருந்தாய். இந்த குற்றத்தின் விளைவாக நீ மனக் குழப்பத்தில் இருக்கின்றாய்” என்று கூறினார். மேலும் இந்த பாவம் தீர நீவா நதியில் நீராடி, நீலகண்டரை பூஜித்து, பாவமன்னிப்பு வேண்டினால் விமோசனம் கிடைக்கும் என்றும் அருள் மொழிந்தார்.மனம் வருந்திய சுவேதகேது, இதற்கு காரணமான திலோத்தமை மீது தீராத கோபம் கொண்டு, தன் மனம் குரங்கைப் போன்று அலைந்தது போல் குரங்காக பிறந்து அலைய வேண்டுமென சாபமளித்தார். பின்னர், சுவேதகேது முனிவர் தந்தையின் சொல்படி யாத்திரை சென்று, நீவா நதியில் நீராடி, ஆடுதுறை அரனாரை பூஜித்து வழிபட்டார். (அதுமுதல் நீவாநதி சுவேதநதி என்று அழைக்கப்பட்டது) மன்னிப்பு கேட்டு, மனமுருகி வணங்கி நின்றார். மன்னித்ததாக அசரீரி வாயிலாக அருட்சொல் கூறி அருளினார் அரனார். அன்றுமுதல் இத்தலபெருமான் அபராதரட்சகர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழில் குற்றம்பொறுத்தநாதர் என்றும் அழைப்பர்.

திலோத்தமை சாபம் நீங்கியது :-

பாவம் புரிந்த திலோத்தமை முனிவரது சாபத்தை நாரதர் மூலம் கேட்டறிந்தாள். இந்த சாபத்திற்கான விமோசனத்தை குரு பிரகஸ்பதியிடம் கேட்டாள். அவரோ, சுவேதகேது முனிவரையே சந்தித்து, சாபவிமோசனம் கேட்கச் சொன்னார். சுவேதகேது முனிவரைப் பணிந்த திலோத்தமை, சாபநிவர்த்தி அடையும் வழியைக் கேட்டாள். அதற்கு முனிவரோ, ‘‘எனது சாபம் பொய்யாகாது. நீ பெண் உருவை நீக்கி, தேவ அம்சத்துடன் பூமியில் நீலன் என்னும் ஆண் குரங்காகப் பிறந்து, நீவா நதிக்கரையின்மேல் விளங்கும் மதுவனத்தில் உள்ள குற்றம்பொறுத்தநாதரை வழிபட்டு, நற்கதி அடைவாய்’’ என்று கூறியருளினார்.பின்னர் தேவதச்சனின் மகனாக, உடல் முழுக்க நீலம் பூத்த உடலுடன் நீலன் என்னும் குரங்காக பிறந்தாள். அலைந்து திரிந்து, கடைசியாக நீவா நதிக்கரையை அடைந்து, மதுவனத்துள் நுழைந்து, அபராதரட்சகரை வழிபாடு செய்தாள். ஈசனோ.... ‘‘இந்த வானர பிறப்பை பயனுள்ளதாக கழிப்பாய்’’ என்று கூறி, மேலும் ‘‘நீலனே தேவர்கள் வானரவடிவில் கிஷ்கிந்தையில் உருவெடுத்துள்ளனர். நீயும் இராமருக்கு பிற வானரர்களோடு சேர்ந்துதொண்டு செய்வாய்’’ என்றும் கூறினார்.

அதன்படி இராமபிரான் இலங்கைக்கு செல்ல....சேதுபாலம் அமைக்கும் பெரும் பணியை செய்து முடித்தான் நீலன். பின்னர் நீலன்... அங்கதன், சுக்ரீவன், ஆஞ்சநேயர் மற்றும் சுக்ஷேணன் ஆகியோருடன் ஆடுதுறைக்கு வந்து, நீவா நதியில் நீராடி, குற்றம்பொறுத்தநாதரை வணங்கி, தனது சாபம் நீங்கப் பெற்றான். நீவா நதியில் வானரங்கள் நீராடியதால் இத்தலம் வானரஸ்நானதீர்த்தபுரம் என்றும் அழைக்கப்பட்டது. வடவெள்ளாற்றின் தென்கரை மீது மிகப் பிரம்மாண்டமாக நாற்புறமும் உயர்ந்த மதில்களுடன் கம்பீரமாக எழுந்து நிற்கிறது ஆலயம். 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கிழக்கு நோக்கிய ஏழுநிலை இராஜகோபுரம் காண்போரை பிரம்மிக்கச் செய்கிறது. கி.பி.1450ஆம் ஆண்டு விஜயநகர மன்னன் மல்லிகார்ஜுன இராயரால் இந்த இராஜகோபுரம் கட்டப்பெற்றுள்ளது. கோபுர வாயிலின் இரு பக்கங்களிலும் நடன மங்கையர்களின் புடைப்புச் சிற்பங்கள். விதானத்தில் 16 கொடுங்கைகளில் 16 சிற்பங்கள் மற்றும் கங்கை - யமுனை சிற்பங்கள் என அழகிய பல புடைப்புச் சிற்பங்கள் கலை படைப்புகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கே கோடி விநாயகர் கோவில் கொண்டுள்ளார்.

உள்ளே நுழைந்து, சற்று தூரம் நடந்திட... வலது புறத்தில் அலங்கார மண்டபமும், அதையடுத்து கல்யாண மண்டபமும், இடது புறத்தில் ஊஞ்சல் மண்டபமும் உள்ளன. நேராக பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தி மண்டபம். மேலே மூடியவாறு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி முன் மண்டபம் வருகின்றது. வலப்புறம் அம்பிகையின் தனிச் சந்நதி அமைந்துள்ளது. கருவறையில் ஏலவார்க்குழலி என்னும்  சுகந்த குந்தலாம்பிகை நின்ற வண்ணம் அருள்பாலிக்கின்றாள். அம்மன் சந்நதியில் நீலன் மற்றும் அனுமன் ஆகியோரது புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன.அம்பாள் சந்நதிக்கு வலது பக்கம் ஆலய அலுவலகமும், அதையொட்டி கிழக்குத் திருமாளிகை பத்தியும் அமைந்துள்ளது. இங்கு சந்திரனும், வைரவரும் வீற்றருள்கின்றனர். அருகே நவகிரக சன்னதியும் உள்ளது. முன் மண்டபத்தின் இரு பக்கங்களிலும் கணபதி மற்றும் கந்தன் குடிகொண்டருள்கின்றனர். அடுத்ததாக மகா மண்டபம், அர்த்தமண்டபம் மற்றும் மூலஸ்தானம் வருகின்றது. கருவறையுள் கருணைக்கடலாய் திருக்காட்சி அருள்கின்றார்  அபராதரட்சகர். அதாவது குற்றம் பொறுத்தநாதர். வட்டமான ஆவுடையாரின் நடுவே வழவழப்பான பாணலிங்கமாக அருள்புரிகின்றார். நாம் முற்பிறவியிலும், இந்த பிறவியிலும் செய்த குற்றங்களை எல்லாம் மன்னித்து, பொறுத்தருள வேண்டிக்கொண்டு ஆலய பிராகார வலம் வருகின்றோம்.

உள்சுற்றின் ஆரம்பத்தில் நால்வர் மற்றும் 63 நாயன்மார்கள் தரிசனம். தொடர்ந்து மேற்குத் திருமாளிகை பத்தியில், நிருர்தி மூலையில் வலஞ்சுழி விநாயகர் தனிச்சந்நதி கொண்டுள்ளார். பின், தண்டபாணி சுவாமி உள்ளார். மேற்கில் வள்ளி மற்றும் தெய்வானை உடனான  சுப்பிரமணிய சுவாமியின் சந்நதி அமைந்துள்ளது. பக்கத்தில் காசி விஸ்வநாதர், அன்னை விசாலாட்சியுடன் அருள் புரிகின்றார். அழகிய திருமாலின் சிற்பம் மனதை ஈர்க்கிறது. வாயு மூலையில் கஜலட்சுமிதேவி தனியாக சந்நதி கொண்டு திகழ்கின்றாள். பின்னர்  சரஸ்வதிதேவி மற்றும்  வீரபத்திரர் திருக்காட்சி தருகின்றனர்.ஆலயம் தூய்மையாக உள்ளது. பழங்காலப் பொக்கிஷமாக விளங்குகின்றது. சோழர்கால கல்வெட்டுகள் ஆலயமெங்கும் காணப்படுகின்றன. கல்வெட்டில் இவ்வூர்...வடகரை முடிகொண்ட சோழவளநாட்டு உகளூர் கூற்றத்து ஆடுதுறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல ஈசர் குற்றம் பொறுத்தருளிய நாயனார், அபராதட்சமேஸ்வரர் மற்றும் குரங்காடுதுறை உடைய மகாதேவர் ஆகிய பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளார்.இவ்வாலய ஈசனை வழிபட, எப்பேர்ப்பட்ட குற்றங்களையும் பொறுத்து, வெற்றி தந்தருள்வார் என்பது இங்கு நிலவும் நம்பிக்கையாகும்.பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இராமநத்தத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சு.ஆடுதுறை.