சிற்பமும் சிறப்பும்
அமைவிடம்: சிகாநாதர் திருக்கோயில், குடுமியான்மலை,
புதுக்கோட்டை மாவட்டம்.
காலம்: தற்போதைய வடிவத்தில் உள்ள கோயில், ஆரம்பகால பாண்டியர்கள், சோழர்கள், முத்தரையர்கள், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் தொண்டைமான்கள் போன்ற பல்வேறு அரச வம்சங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான விரிவாக்கங்களின் விளைவாகும். இவ்வாலயம் தற்போது இந்திய தொல்லியல் துறையினரால் நன்கு பராமரிக்கப்படுகிறது.
ஒரு குன்றின் அடிவாரத்தில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில், சிற்பங்களுக்கும், கல்வெட்டுக்களுக்கும் புகழ்பெற்றது. குடுமியான்மலையின் இந்த பிரமாண்டமான கோயில் வளாகத்திற்குள் நுழையும்போது, ஆயிரங்கால் மண்டபம் (1000 தூண் மண்டபம்) அதன் அற்புதமான சிற்பங்களுடன் நம்மை வரவேற்கிறது.இந்த சிற்பத் தூண்களுடன் அமைந்த மண்டபம் விஜயநகரக் கோயில் கட்டடக்கலைப்பாணியில் (பொ.ஆ.16 ஆம் நூற்றாண்டு) அமைந்துள்ளது.
ஆயிரங்கால் மண்டபம் மற்றும் வசந்த மண்டபத்தின் மையப் பகுதியில் உள்ள தூண்களில் ஆக்ரோஷத் தோற்றத்துடன் நரசிம்மர் இரணியனை வதம் செய்யும் காட்சி, கிளிகள் மீது சவாரி செய்யும் ரதி மற்றும் மன்மதன், உலகளந்த விஷ்ணு, அகோர வீரபத்திரர், பத்துதலை ராவணன், மோகினி அவதார விஷ்ணு, ஆறுமுகர், வினை தீர்க்கும் விநாயகர் என எண்ணிலடங்கா எழில் மிகு புடைப்புச் சிற்பங்கள் காண்போரைக் கவர்கின்றன.
இங்குள்ள குகைக் கோயில் கி.பி 8 ஆம் ஆண்டின் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது. குகைக்கோயிலில் லிங்க வடிவில் சிவபெருமான் இத்திருக்கோயிலில் குடுமியுடன் காணப்படுகிறார்.
இறைவன்: சிகாநாதர்
இறைவி: அகிலாண்டேஸ்வரி
இக்கோயிலில் கல்வெட்டுகள் நிறைந்துள்ளன. இவற்றில், பாண்டியர் கல்வெட்டுகள் மிகப் பழமையானவை (பாண்டிய மன்னர் முதலாம் வரகுண வர்மன், பொ.ஆ.787-88 தேதியிட்டவை) எனக் கருதப்படுகிறது. ஆரம்பகால பாண்டியர் மற்றும் சோழர் கால கல்வெட்டுகளில், இந்த கிராமம் ``புனிதமான மற்றும் வளமான மலை’’ என்று பொருள்படும் `திரு நலக்குன்றம்’ என்று குறிப்பிடப்படுகிறது. பின்னர் `சிகாநல்லூர்’ என்றழைக்கப்பட்டு, தற்போது `குடுமியான் மலை’ என்றும் அழைக்கப்படுகிறது.
மது ஜெகதீஷ்