நாம் எல்லோரும் தடையில்லா பண வரவை மட்டும்தான் யோகம் என சிந்திக்கிறோம். யோகம் என்பதற்கு கிரக இணைவின் காரணமாக ஏற்படும் பலன்களை மட்டுமே காண்கிறோம். யோகம் என்ற சமஸ்கிருத வார்த்தையின் பொருள் யூஜ் என்பதாகும். யூஜ் என்பதற்கு இணைதல் அல்லது ஒன்றுடன் ஐக்கியமாதல் என்று பொருள். கிரக இணைதலே இதன் பொருள். கிரகங்களுக்கு ஏற்பதான் ஒரு மனிதனின் சிந்தனையும் சிந்திக்கும் திறனும் இருக்கும் என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். சிந்தனைக்குரிய கிரகங்கள் இணைந்து ஒரு மனிதனை இயக்குகின்றன. யோகம் பல இருந்தாலும் அறிவையும் பொருள் வளத்தை கொடுக்கக்கூடிய யோகம் சில மட்டுமே. அவற்றுள் குறிப்பிடும்படியான யோகம் குபேர நிதி யோகமாகும். இந்த யோகம் உள்ளவர்கள் சிறந்தவர்களாகவும் வல்லவர்களாகவும் இருப்பார்கள். வாழ்வின் அனைத்து விஷயங்களையும் புத்திசாலியாக கடக்கும் சாமர்த்தியசாலிகள் என்றால் கண்டிப்பாக மிகையில்லை. இது சுப யோகம்.சுமுகமான நல் விஷயங்களை வழங்கும் யோகமாகும்.
குபேர நிதி யோகம் என்பது என்ன?
சுப கிரகங்களான வியாழன், புதன், சுக்கிரன் ஆகியன ஒரு பாவகத்தில் இணைந்திருப்பதும். புதன், சுக்கிரன், வியாழன் ஒவ்வொன்றும் பார்வையால் ஒன்றையொன்று தொடர்பு கொள்வது குபேர நிதி யோகம் எனப்படுகிறது. இதில், ஏதேனும் இரண்டு கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று அமைவது அபரிமிதமான யோகத்தை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு புதனும் சுக்கிரனும் இணைந்து குருவின் பார்வையில் இருந்தாலும் குருவின் பார்வையான 5ம் பார்வை, 7ம் பார்வை மற்றும் 9ம் பார்வை ஆகியன புதன் மற்றும் சுக்கிரனுக்கு ஏற்படுமாயின் அதுவும் குபேர நிதி யோகம் என்று சொல்லப்படுகிறது. மூன்று கிரகங்கள் இணைந்து இரண்டு விதமான யோகங்களை தருகிறது என்றால் அது ஆச்சர்யமான அமைப்பாக உள்ளது. ஆம், சரஸ்வதி யோகமும் குபேர நிதி யோகமும் கிட்டதட்ட ஒரே அமைப்பாக உள்ளது என்பதாகும்.
குபேர நிதி யோகத்தின் சிறப்புகள் என்ன?
* சுப கிரகங்கள் இணைந்து எந்த பாவகத்தை தொடர்பு கொண்டுள்ளதோ அந்த பாவகங்கள் தொடர்பான விஷயங்கள் நன்மை பயக்கும்.
* சுப கிரகங்களுக்கு இடையே சில யுத்தங்கள் உண்டு. மாறுபட்ட பலன்கள் உண்டு. அவை வியாழனும் சுக்கிரனும் இணைவது சில அசுப விஷயங்களை ஏற்படுத்தும். அதாவது, முழுமையான தெய்வ நம்பிக்கை இருக்காது.
* 6ம் பாவகத்தில் இந்த அமைப்புகள் ஏற்படுமாயின் எதிரிகள் அதிகம் இருக்க மாட்டார்கள்.
* நிதி என்பது பொன், பொருள் போன்ற பொக்கிஷம். குபேர நிதி யோகம் கலைகளின் பொக்கிஷம் ஆகும்.
* இவருக்கு வாழ்வில் பொருளாதார மேம்பாடு தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
* கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கும் நபர்களாக இருப்பர். எப்பொழுதும் படிப்பின் ஈர்ப்பும், புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஞானமும் ஏற்படும்.
* புதனும் வியாழனும் இணைவதும் சிறப்பானதாகும். அதுபோலவே, வியாழனும் சுக்கிரனும் சிறப்பான அமைப்பாகும். மேலும், புதனும் சுக்கிரனும் இருப்பது இன்னும் சிறப்பான அமைப்பை கொடுக்கும்.
* இதனை லெட்சுமி நாராயண யோகம் என்றும் சரஸ்வதி யோகம் என்றும் அழைப்பர்.
குபேர நிதி யோகத்தின் பலன்கள்...
* அதிகாரம் பெற்றவர்களாக இருப்பர் அல்லது அதிகாரம் பெற்ற நபர்கள் இவர்கள் சொல்வதை வேத வாக்காக எடுத்துக் கொள்வர்.
* உத்யோகத்தில் மிக உயர்ந்த பதவி இந்த யோகம் உள்ளவர்களைத் தேடி வரும் வாய்ப்புகள் உண்டாகும்.
* இந்த மூன்று கிரகங்களே இந்த யோகத்தையும் ஏற்படுத்துகின்றது. இந்தக் கிரகங்களே லக்னாதிபதியாக அமைந்திருந்தால் ஜாதகர் சிறந்தவராக இருப்பார்.
* எந்த ஒரு விஷயத்தையும் சிறப்பாக மாற்றக்கூடிய சிந்தனையை இந்த யோகம் செய்யும்.
* எப்படிப்பட்ட நபருடனும் சுமுகமாக பழகக்கூடிய எண்ணங்களும் சிந்தனைகளும் இவருக்கு உண்டு.
* எல்லோருடனும் இணக்கமாக இருக்கக்கூடிய சூழ்நிலையை ஜாதகர் சிந்திப்பார்.
* பொருள் எவ்வளவு சேர்ந்தாலும் அதில், கர்வமோ பெருமையோ இவருக்கு ஏற்படாது. ஆனால், ஓர் அச்சம் இவருக்கு உண்டு.
* கோச்சாரத்தில் அசுப கிரகங்கள் இந்த கிரகத்தை பார்க்கும் பொழுது சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
* பெண்களுக்கு அதிகமான பரிசுப் பொருட்களை வாங்கித் தரும் அமைப்பினை இந்த யோகம் செய்யும்.
* ஆட்சி, உச்சம் பெற்று கேந்திரங்களில் அமைவது சிறப்பான அமைப்பாகும்.
குபேர நிதி யோகத்திற்கான வழிபாடுகள் என்ன? பரிகாரங்கள் என்ன?
* இந்த யோகம் உள்ளவர்கள் லட்சுமி நாராயணரை புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பை தரும்.
* புத்தகங்கள் வாங்கி படிப்பவர்களுக்கு உதவி செய்யலாம். உடைகள் வாங்கி தானம் செய்யலாம்.
* கூத்தனூர் சரஸ்வதி கோயிலுக்கு சென்று புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் வழிபடுவது சிறப்பை தரும்.
