Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிருஷ்ணரை கண்டெடுத்த மத்வர்

பகுதி 2

மகத்துவம் மிக்க மத்வ மகான்கள் - 1

சென்ற இதழில் தொடங்கப்பட்ட ``மகத்துவம் மிக்க மத்வ மகான்கள்’’ என்னும் பகுதியிலே, மகான் ஸ்ரீ மத் மத்வாச்சாரியாரை பற்றியும், உடுப்பியில் இருக்கும் கடகோலு கிருஷ்ணரை பற்றியும், எட்டு மடங்கள், பர்யாயம் என்பது என்ன, போன்ற சுவையான தகவல்களை கொடுத்திருந்தோம். மேலும், புயலில் சிக்கித் தவித்த ஆங்கிலேயர் படகினை மத்வர் மீட்டது, பதிலுக்கு அவர்கள் வைரத்தை பரிசாக தர எண்ணியது, அதை வாங்க மறுத்த மத்வர், அவர்களிடத்தில் இருந்த ஒரு கல்லை கேட்பது, அந்த கல்லை மத்வர் இடத்தில் கொடுப்பது வரை பார்த்தோம்.

இனி...அதை பெற்றுக் கொண்ட மத்வர், ஆங்கிலேயர்களை ஆசீர்வதிக்கிறார். பெற்றுக் கொண்ட கல்லை கீழே வைத்த மத்வர், அதன் மீது தண்ணீரை ஊற்றுகிறார். தண்ணீர் ஊற்ற ஊற்ற அதனுள் சாளக்கிராமத்தினால் ஆன ஒரு அழகிய கிருஷ்ணனின் (கடகோலு கிருஷ்ணர்) உருவம் தெரிகிறது. இதனைக் கண்ட படகில் வந்த ஆங்கிலேயர்கள் வியப்பில் ஆழ்ந்து, மண்டியிட்டு இருகைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி ``ஹரே கிருஷ்ணா... ஹரே கிருஷ்ணா...’’ என்று முழக்கமிட்டனர். கிருஷ்ணனின் முகத்தில் அளவில்லா தேஜஸ். பிறகு மத்வர், தானே அந்த கிருஷ்ணனைத் தலையின் மீது வைத்துக் கொண்டு, அவர் பிறந்த பாஜகா என்னும் இடத்தின் அருகிலேயே இருக்கும் உடுப்பியில் பிரதிஷ்டை செய்தார். அந்த கிருஷ்ணர்தான் தற்போது உடுப்பி கோயிலில் மூலவராக இருக்கிறார்.

இந்த கடகோலு கிருஷ்ணர் பற்றி மத்வர் கூறிய தகவல், மிகவும் சுவாரஸ்யமானது. ‘விஸ்வகர்மா’ என்ற தெய்வச் சிற்பியால் செய்யப்பட்டு, துவாபரயுகத்தில், துவாரகையில், ருக்மணியால் பூஜிக்கப்பட்டு, பின்னர், துவாரகை மூழ்கியபோது, கடலில் மூழ்கிய சிலாவிக்ரகம்தான் கடகோலு கிருஷ்ணர்! பஞ்சபாண்டவர்களின் வனவாச சமயம், அவர்களைக் காண கிருஷ்ணர் அடிக்கடி தேடிச் சென்றதால், கிருஷ்ணர் வெளியே செல்லும் நாட்களில், பாதபூஜை செய்ய முடியாத ருக்மிணிதேவி வருந்தினாள்.

அதனால், தெய்வச் சிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து ருக்மிணிதேவி விரும்பி வேண்டிய வடிவான, அன்னை யசோதையின் தயிர் கடையும் மத்தை பிடுங்கிக் கொண்டு ஓடும் சிலா ரூபத்தை வடித்துத் தர இட்ட கட்டளையின்படி, விஷ்வகர்மா செய்த கிருஷ்ணனே கடகோலு கிருஷ்ணர். துவாரகையில் கிருஷ்ணர் இல்லாத சமயத்தில், மகான்களும், மக்களும் வழிபட்ட கிருஷ்ண விக்ரகமும் இதுவே. துவாரகை, கடலில் மூழ்கிய போது, ருக்மிணி தேவி வழிபட்ட அந்த விக்கிரகமும் கடலில் மூழ்கி, பல ஆயிரம் வருடங்கள் கடந்த பின்னர், ``கிருஷ்ணரை கண்டெடுக்கிறார் மத்வர்’’.

கனகன கிண்டி

முன்னொரு காலத்தில், உடுப்பி கிருஷ்ணனை காண கனகதாசர் என்னும் மகான் வருகிறார். கிருஷ்ணனை தரிசிக்க அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. புரந்தரதாசரை போல், இவரும் பல கீர்த்தனைகளை பாடியிருக்கிறார். ஆகையால், கனகதாசரும்கூட சங்கீத பிதாமகர்தான். மனம் வெதும்பி, கிருஷ்ணனை மனதில் தியானம் செய்து, ஒரு ஆக்ரோஷமான வைராக்கியப் பாடல் ஒன்றை பாடுகிறார்;

``பாகிலனு திறது சேவேயனு கொடு ஹரியே’’ (கதவுகளை திறந்து எனக்கு தரிசனம் தரமாட்டாயா?) என்னும் கன்னடப் பக்தி பாடலை மிக ஆவேசத்துடன் பாடிமுடித்ததும், மத்வர் பிரதிஷ்டை செய்த இடத்தில் இருந்து கனகதாசர் இருக்கும் இடத்தை நோக்கி கடகோலு கிருஷ்ணர், திரும்புகிறார். கனகதாசரின் முன்பாக இருக்கும் சுவர் சுக்கு நூறாக உடைந்து, அதனுள்

கிருஷ்ணர், கனகதாசருக்கு காட்சி தருகிறார்.

அனைவரும் வியப்படைகிறார்கள். கனகதாசரிடம் மன்னிப்பை கேட்கிறார்கள். இன்றும் உடுப்பி கிருஷ்ணனை காண நாம், கனகதாசர் தரிசித்த ஒன்பது துவாரம் (ஒன்பது ஓட்டை) வழியாகத்தான் காண வேண்டும். அதற்கு `கனகன கிண்டி’’ என்று பெயர்.

தவம் இருந்து பெற்றெடுத்த பெற்றோர்கள்

நாம் முன்பே கூறியதை போல் ஸ்ரீ மத்வாச்சாரியார், ஏற்கனவே மூன்று அவதாரங்களை எடுத்ததாக மத்வ சித்தாந்தம் சொல்கிறது. அதன்படி, கேசரி - அஞ்சனாதேவி தம்பதிகள் 12 ஆண்டுக் காலம் அஞ்சனாத்திரி என்னும் மலைப் பகுதியில் கடும் தவம் புரிகிறார். அதன் பயனாக அனுமன் பிறக்கிறார். திருப்பதி மலைக்கு, அஞ்சனாத்திரி என்னும் பெயரும் உண்டு. அதாவது, கிருதயுகத்தில் - விருஷபாத்ரி, திரேதாயுகத்திலே - அஞ்சனாத்திரி, துவாபரயுகத்தில் - சேஷாத்திரி, கலியுகத்துலே - வெங்கடாத்திரி என்று திருப்பதி மலைக்கு பல பெயர்கள் உண்டு. அத்தகைய சிறப்பு மிக்க மலையில் தவம் புரிந்ததினால் அனுமனாக அவதரிக்கிறார்.

அதே போல், குழந்தை வரம் வேண்டி குந்திதேவி கடுமையாக தவம் புரிகிறாள். அதன் பயனாக அவளிடத்தில், பீமனாக அவதரிக்கிறார்.அடுத்ததாக, மத்வரின் பெற்றோர் தவம் இருக்கிறார்கள். சாதாரணத் தவம் இல்லை. சுமார் 17 ஆண்டுக் காலம் ``பயோ விரதத்தை’’ கடைப் பிடிக்கிறார்கள். பயோவிரதம் என்பது பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அருளாசி கிடைப்பதற்காகவும், சந்தானபிராப்தி (குழந்தை பேறு) கிடைப்பதற்காகவும் செய்யப்படும் கடுமையான உபவாசவிரதம். பால்குண மாதத்தின் கடைசி 15 நாட்களில், 12 நாட்கள் பால் மட்டுமே உணவாய் எடுத்துக் கொண்டு, பக்தியுடன் விஷ்ணுவை வணங்கி வழிபடுவதே பயோவிரதத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்.

வெறும் பாலை மட்டுமே உண்பதினால், மத்வரின் தாய் - தந்தையினர் உடல் மெலிந்துவிடுகிறார்கள். இத்தகைய கடுமையான விரதத்தை கடைப்பிடித்த பயனாக அவர்களுக்கு மத்வர் பிறக்கிறார்.

மேலும், திரேதாயுகத்திலே அனுமனாக அவதரித்து, ராமபிரானுக்கு சேவை செய்கிறார். துவாபரயுகத்தில் பீமசேனனாக அவதரித்து, கிருஷ்ண பகவானுக்கு சேவை செய்கிறார். அவரே கலியுகத்தில் ஸ்ரீ மத்வாச்சாரியராக அவதரித்து, ஸ்ரீ வேதவியாச பகவானின் பல கிரந்தங்களுக்கு சரியான பாஷைகளை (உரை) எழுதி, பாமரமக்களுக்கும், எளிமையாக புரியும்படி உருவாக்குகிறார்.

ஏகாதசி மகிமை

ஏகாதசி அன்று விரதம் இருப்பதை கடுமையாக கடைபிடிக்க, மத்வர் அறிவுறுத்துகிறார். மத்வர் எழுதிய ``கிருஷ்ணாமிர்த மஹார்ணபவம்’’ என்னும் கிரந்தத்துலே, ஏகாதசி உபவாசத்தை பற்றியும், கோபிசந்தனம் மகிமை, சாளக்கிராம பூஜையின் விதிகள் போன்றவற்றை கூறுகிறார். இதில், ஏகாதசி உபவாசத்தை கடுமையாக கடைப்பிடிக்க சொல்கிறார்.

`நா காசி நா கயா’’

- என்கிறார்.

அதாவது, காசி, கயா போன்ற சேத்திரங்களுக்கு சென்று வந்த பலனையும் தாண்டியது, ஏகாதசி விரதம் என்கிறார். இதையே, ``சர்வ விரதகளு ஏகாதசிகே ஹிந்தே’’ அனைத்து விரதங்களும் ஏகாதசி விரதத்திற்கு பின்னே என்று புரந்தரதாசரும் உறுதிபட தெரிவிக்கிறார். ஆகையால், ஏகாதசி அன்று கண்டிப்பாக விரதத்தை கடைபிடிக்க வேண்டும். ஏன் ஏகாதசி விரதம் கடைபிடிக்க வேண்டும்? அதன் புராண கதைகள் என்னென்ன என்பதனை பல கட்டுரைகளில் அலசிவிட்டோம். ஆதலால், அறிவியல் (Science) என்ன சொல்கிறது என்பதனைப் பார்ப்போம்.

15 நாட்களுக்கு ஒரு முறை நிச்சயமாக நாம், உணவு உண்ணாமல் (Fasting) ஒரு நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்கிறது இன்றைய அறிவியல் உலகமும், மருத்துவ உலகமும். காரணம், உடலில் வெளியேறாத கழிவுகள் ஏதேனும் இருந்தால், (Toxicate) உணவு உட்கொள்ளாமல் இருக்கும்போது அவை வெளியேறிடும் என்கிறது. ஆகையால், 15 நாட்களுக்கு ஒரு முறை உணவு உண்ணாமல் இருக்க சொல்கிறார்கள்அறிவியலாளர்கள்.

100 கோடி ஏகாதசி செய்த பலன்மத்வ சித்தாந்தத்தில், கிருஷ்ண ஜெயந்தி மிகவும் சிறப்பான முறையில் கடைபிடிக்கப்படும். ஏகாதசி போலவே, கிருஷ்ண ஜெயந்தி அன்று காலையில் எழுந்து ஸ்நானம் செய்துக் கொண்டு, கோபிசந்தனத்தை தரித்துக் கொண்டு, சந்தியாவந்தனம், சாளக்கிராம பூஜை முதலியவற்றை செய்து முடித்த பின்னர், எதையும் உட்கொள்ளாது, கிருஷ்ணனையே நியாயம் செய்து, மாலையில் பஜனை, ``ஹரே...ராமா ஹரே கிருஷ்ணா’’ ஜபம் செய்வது என அன்றைய நாள் முழுவதும் விரதத்தை மேற்கொள்வார். நடுஇரவில்தான் கிருஷ்ணன் பிறந்ததாக ஐதீகம். அதனால், உடுப்பி, ஸ்கான் கோயில்கள் மற்றும் மத்வ சித்தாந்தத்தை பின்பற்று பவர்கள், இரவில் நன்கு குளித்துவிட்டு, கிருஷ்ணனை பூஜை செய்து வழிபடுவார்கள்.

அன்று இரவு, கிருஷ்ணனுக்கு பிடித்த அவுல் பாயாசம், பொரி உருண்டை, வெண்ணெய், நாவல் பழம் ஆகியவைகளை நிவேதித்து, அதனை மட்டுமே அன்றிரவு உட்கொள்வார்கள். ஏகாதசியில் எப்படி மறுநாள் துவாதசி பாரணை (பாரணை என்பது ஏகாதசி மறுநாள் காலையில் விரைவாக உணவை உட்கொள்ள வேண்டும்) முக்கியமோ, அதுபோல, கிருஷ்ண ஜெயந்தி முடிந்து மறுநாள் காலை விரைவாக உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் மேற்கொண்டால், 100 கோடி ஏகாதசி செய்த பலன் கிடைக்கிறது என்று சொல்கிறது சாத்திரம். இதனை சுட்டிக் காட்டி ஒரு உபன்யாசகர் மிக அழகாக விவரித்தார். ``100 கோடி ஏகாதசி செய்த பலன் கிடைக்கிறது என்றால், கிருஷ்ண ஜெயந்தி அன்று மட்டும் விரதம் இருக்கலாமே? ஏன் ஏகாதசியில் விரதம் இருக்க வேண்டும்?’’ என்று என்னிடம் சிலர் கேட்கிறார்கள்.

அவரிடத்திலே சொன்னேன்; ``அதன் ஆழமான தாத்பரியத்தை புரிந்துக் கொள்ள வேண்டும். அதாவது, ஒரு மாதத்திற்கு 2 ஏகாதசி வரும். சில சமயம் மூன்றுகூட வர வாய்ப்புண்டு. நாம் இரண்டு என்றே கணக்கு வைத்துக் கொள்வோம். ஆக, 12 மாதத்தில் 24 ஏகாதசிகள் வரும். இந்த 24 ஏகாதசியிலும் நிர்ஜலம் உபவாசம் இருந்து (தண்ணீர்கூட குடிக்காமல் இருக்க வேண்டும். வயதானவர்கள், கர்ப்பிணிகள், உடல் நிலை சரியில்லாதவர்கள் ஆகியோருக்கு விதிவிலக்கு உண்டு) கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதத்தை கடைபிடித்தால், 100 கோடி ஏகாதசி செய்த பலன் கிட்டும் என்பதே அதன் தாத்பரியம் என்று உபன்யாசகர் மிக அருமையாக விளக்கினார்.

கரிமா - லகிமா சித்து விளையாட்டு

ஒரு முறை மத்வரை சோதிக்க ஒரு கூட்டம் வருகிறது.

`` ஹேய்... நீர்தான் மத்வரோ?’’

(கூட்டத்தில் ஒருவன்)

``ஆம் நான்தான்’’ (மத்வர்)

``உனக்கு அனுமன் - பீமனின் பலம் இருக்கிறதாமே? உன்னை நாங்கள் சோதிக்கலாமா?’’ என்றார் கூட்டத்தில் இருந்த ஒருவன்.``தாராளமாக’’ என்றார் மத்வர். அப்போது ஸ்ரீ மத்வாச்சாரியாருக்கு வயது 70. கூட்டத்தில் இருந்த ஒருவன், ஓடிவந்து மத்வரின் கழுத்தைப் பிடிக்கிறான், தலை முதல் கழுத்து வரை ஒரு பாறாங்கல்லைப் பிடித்ததுபோல் உணருகிறான். கழுத்தை நெரிக்க முடியவில்லை. மண்டியிட்டு மன்னிப்பை கேட்டு ஓடிவிடுகிறான். அதே போல், இன்னொருவன் அவனாலும் முடியவில்லை. அடுத்த படியாக இன்னொருவன், மற்றொருவன் என மாறிமாறி வருகிறார்கள்.

மத்வரை துளிக்கூட அசைக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில், ஒட்டுமொத்த கூட்டமும் மத்வரை தாக்க வருகிறது, அதுவும் தோல்வியே. அனைவரும் மத்வரிடத்தில் மன்னிப்பு கேட்கிறார்கள்.அந்த கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவனை அழைத்து, தன்னை தூக்கும்படி ஆணையிடுகிறார். அந்த சிறுவனும், மத்வரை தனது தோள்களில் தூக்கி சுமந்தபடி செல்கிறான். அங்கு இருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். காரணம், மத்வாச்சாரியார் ஆயக்கலைகள் 64 யும் பயின்றவர். அதில் மிக முக்கிய கலையான ``அஷ்டமா சித்திகள்’’ மத்வருக்கு கைவந்த கலை.

அஷ்டமா சித்திகள் என்பது, 1) அனிமா, 2) மஹிமா, 3) லகிமா, 4) கரிமா, 5) பிராப்தி, 6) பிரகாமியம், 7) ஈசத்துவம், 8) வசித்துவம். ஆகும். மத்வர் இங்கு பயன்படுத்தியது, கூட்டத்தில் ஒருவர் தன்னை அசைக்க நினைக்கும் போது, கரிமா என்னும் அஷ்டமா சித்தியை பயன்படுத்தி, தன்னை கனமாக்கிக்கொண்டு, மழைகளாலும், வாயுவினாலும் (காற்று) அசைக்க முடியாமல் பாரமாயிருத்தல். மழைகளாலும் - காற்றினாலும்கூட அசைக்க முடியாதபோது, இவர்கள் எம்மாத்திரம்?

மத்வர், அந்த சிறுவனை அழைத்து, தன்னை தூக்க சொல்லும்போது, லகிமா என்னும் காற்றைப் போல் லகுவாக தன்னை மாற்றி, அந்த சிறுவனின் மீது பயணித்தார். இப்படி ஸ்ரீ மத் மத்வாச்சாரியாரை பற்றியும், அவரின் பெருமைகள் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்.

பொ.ஊ.1317-ஆம் ஆண்டு, பத்ரிநாத் சென்றதாகவும், அவரின் பூதவுடல் அங்கேயே மறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மத்வர், இன்றும் மகான் ஸ்ரீ வேதவியாஸரிடத்தில் பாடங்களை கற்றுவருவதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீ மத் மத்வாச்சாரியாரை கௌரவிக்கும் விதமாக, அவர் பிறந்த பாஜகா ஷேத்திரத்தில் 32 அடி உயரத்தில், உடுப்பி எட்டு மடம் மடாதிபதிகளினால் நிறுவப்பட்டுள்ளது. மத்வரை தியானித்து, அடுத்த மகானான ஸ்ரீ பத்மநாப தீர்த்தரை பற்றி அடுத்த இதழில் காணலாம்!

பிரம்மம்தா குரவாஹ சக்ஷாதிஷ்டாம் தெய்வம் ஸ்ரீரியாஹ பதிஹ்

ஆசார்யாஹ ஸ்ரீமதாச்சார்யா: ஸம்து மே ஜந்மஜந்மநி

(மத்வ மகான்களின் பயணம் தொடரும்...)

ரா.ரெங்கராஜன்