Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்த வார விசேஷங்கள்

9.8.2025 - சனி

மேற்கு மாம்பலம் கோதண்டராமர் ஆலயத்தில் கஜேந்திர மோட்சம்

சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர் ஆலயத்தில் வருடத்தில் மூன்று முறை கருட சேவை உற்சவம் நடைபெறுகின்றது. சித்திரை மாதம் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு ராமர் கருடசேவை தந்தருளுகின்றார். இவ்வாலயத்தில் கோதண்டராமர், அரங்கநாதர், நரசிம்மர் சேவை சாதிக்கின்றனர். பௌர்ணமியன்று ஸ்ரீநரசிம்மர் கருட சேவை தந்தருளுகின்றார். ஆடி கருடன் என்றழைக்கப்படும் ஆடி பௌர்ணமியன்று அரங்கநாதர் கருடசேவை தந்தருளி கஜேந்திரனுக்கு மோட்சம் தந்தருளுகின்றார். ஜீவாத்மாவாகிய கஜேந்திரன் தன் பலத்தின் மேல் ஆணவம் கொண்டு சம்சாரமாகிய குளத்தில் உள்ள துன்பம் மற்றும் இறப்பாகிய முதலையுடன் ஆயிரம் வருடங்கள் போராடியும் அதனால் முதலையின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. அது தன் ஆணவத்தை விட்டு பூரண சரணாகதியுடன் ‘‘ஆதிமூலமே’’ என்று அலறிய அடுத்த கணமே அதிருங்கடல் வண்ணன், அஞ்சன வண்ணன், கொண்டல் வண்ணன், பூவைப் பூ வண்ணன், நீலமேனி மணி வண்ணன், வேத சொரூபியான கருடன் மேல் ஆரோகணித்து கையில் சுதர்சன சக்கரத்துடன் வந்து யானையின் துயர் தீர்த்தான் பக்தவத்சலன், கரிவரதன், மஹாவிஷ்ணு. ஆகவே பூரண சரணா கதியை விளக்குவதே இந்தக் கஜேந்திர மோட்சம்.

9.8.2025 - சனி

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஜேஷ்டாபிஷேகம்

ஜேஷ்டாபிஷேகம் என்பது ஆனி மாதத்தில் (சில கோயில்களில் ஆடியில்) கேட்டை நட்சத்திர நாளில் கோயில்களில் நடத்தப்படும் சிறப்பு அபிஷேக நிகழ்வாகும். இது உத்தராயண காலத்தின் இறுதி மாதத்தில், அதாவது தேவர்களுக்கு மாலைக் காலத்தில் நடத்தப்படுவதால் முக்கியத்துவம் பெறுகிறது. ஜேஷ்டாபிஷேகத்தைத் தரிசனம் செய்தால், இந்திரனைப் போல செல்வ வளத்தோடு வாழலாம். இன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்.

9.8.2025 - சனி

ஆவணி அவிட்டம்

ஆவணி மாதத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் வரக்கூடியது ஆவணி அவிட்டம். இதையே எல்லோரும் பொதுவாக ஆவணி அவிட்டம் என்பார்கள். ஆடிமாத அமாவாசைக்கு பிறகு ச்ராவண மாதம் என்பது சாந்திரமான கணக்குப்படி வரும். ச்ராவண மாதத்தில் ச்ரவண நட்சத்திரத்தன்று ஒரு தோஷமும் இல்லாமல் இருந்தால் யஜுர் வேதிகள் ஆவணி அவிட்டம், உபாகர்மா செய்து கொள்வார்கள். சாம வேதத்திற்கு ஆவணி ஹஸ்தம் எடுத்து இருக்கிறது. இப்படி ஒவ்வொருவேதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் மாறி வந்தாலும் ரிக் வேதம்தான் முதன்மையாக இருப்பதினால் அந்த ஆவணி அவிட்டத்தையே எல்லோரும் உபாகர்மா என்று பெயர் வைத்து விட்டார்கள். இந்த உபாகர்மா அன்று தட்சிணாயணத்தில் ஆறுமாதத்திற்கான வேதபாடங்களை படித்து முடித்து உத்தராயண ஆரம்பத்தில் அந்த வேதத்திற்கான அர்த்தங்களையும், தர்ம சாஸ்திரத்தையும்தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி முடியாதவர்கள் ஆவணி அவிட்டத்தில்தாங்கள் படித்த வேத பாகத்தை பூர்த்தி செய்து கொண்டு, ஆவணி அவிட்ட உபாகர்மாக்களைச் செய்து கொண்டு திரும்பவும் அன்று வேத பாடங்களைஆரம்பம் செய்ய வேண்டும்.

9.8.2025 - சனி

திருவோண விரதம்

பெருமாளுக்குரிய மிக முக்கியமான விரதங்களில் ஒன்று திருவோணம் விரதமாகும். வாமன அவதாரத்தின் போது, திருமால் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த விரதம் திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், வாழ்வில் வளம் பெறவும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த விரதத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதால், ஏழு பிறவிகளிலும் பதினாறு வகையான செல்வங்களைப் பெறலாம்.

9.8.2025 - சனி

ஹயக்ரீவர் ஜெயந்தி

ஹயக்ரீவர் ஜெயந்தி, விஷ்ணுவின் அவதாரமான ஹயக்ரீவரின் அவதார நாளாகும். ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் 9-ஆம் தேதி அதாவது இன்று ஹயக்ரீவர் ஜெயந்தி வருகிறது. இந்த நாளில், ஹயக்ரீவரை வழிபடுவதன் மூலம் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம், மேலும் அறிவு தேடுபவர்களுக்கு ஞானம் கிடைக்கும். கலை மற்றும் கல்வியின் கடவுளான சரஸ்வதி தேவி, ஹயக்ரீவரை தனது குருவாகக் கருதுகிறார். ஹயக்ரீவ ஜெயந்தி அன்று, பக்தர்கள் ஹயக்ரீவரை வழிபட்டு, புத்தகங்கள், பேனாக்கள் மற்றும் ஏலக்காய் மாலை போன்ற பொருட்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்வார்கள். இந்த நாளில், ஹயக்ரீவர் ஸ்தோத்திரங்கள் மற்றும் பாடல்களைப் பாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பல கோயில்களில், குறிப்பாக ஹயக்ரீவர் சந்நதிகள் உள்ள கோயில்களில், (திருவஹீந்திரபுரம், செட்டி புண்ணியம்) சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படும்.

9.8.2025 - சனி

கோயம்பேடு ஸ்ரீவிகனசாச்சார்யார் சாத்து முறை

திருமகள் மணாளனான பகவான், மனிதர்கள் அனைத்து வளங்களையும் பெற்று நல்வாழ்வு வாழ அர்ச்சா ரூபியாய் திவ்யமங்கள சிலா உருவத்தோடு திருக்கோவில்களிலும் இல்லங்களிலும் எழுந்தருளுகிறார். பக்தர்கள் இவ்வுலகிலும் ஸ்வர்க்கத்திலும் வாழ்ந்து பின் பிறவியின் முடிவில் வைகுண்டம் அடைய ஆலய வழிபாடு மிகத் தேவையான ஒன்று. கோயிலில் பெருமாளை பூஜிக்கும் முறைகளை பகவானே வகுத்தார். அந்த ஆகம சாஸ்திரங்களுள் ஸ்ரீ வைகாநஸ பகவத் சாஸ்திரம் மிக உயர்வானது. ஸ்ரீவைகானஸ பகவத் சாஸ்த்ரம் என்ற வைஷ்ணவ ஆகமம் பகவானின் இதயத்திலிருந்து தோன்றிய ஸ்ரீவிகனஸ மகரிஷி என்பவர் மூலம் பகவானே நேரடியாக அருளிய அருமையான சாஸ்த்ரம். இதனால் வைகானஸ ஆகமத்தை ஸ்ரீசாஸ்த்ரம் என்றும் அழைப்பர். ஸ்ரீ வைகானஸ பகவத் சாஸ்த்ரத்தை பின்பற்றி நிறைய கோயில்கள் உள்ளன, சில புகழ் பெற்றவைகள் - ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், திருமலை திருப்பதி, ஸ்ரீ பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி, சென்னை, ஸ்ரீ கள்ளழகர் கோயில், மதுரை, ஸ்ரீ ஆண்டாள் கோயில், ஸ்ரீ வில்லிபுத்தூர், ஸ்ரீ ஒப்பிலியப்பன் கோயில், கும்பகோணம். மற்றும் பலப்பல கோயில்கள் பாரதம் முழுவதும் பரந்து உள்ளன. இன்று ஸ்ரீ வைகானஸ பகவத் சாஸ்த்ரத்தை அருளிய ஸ்ரீ ஸ்ரீவிகனஸ மகரிஷியின் சாற்று முறை.

10.8.2025 - ஞாயிறு

காயத்ரி ஜெபம்

ஆவணி அவிட்டம் மறுநாள் காயத்ரி ஜபம். காயத்ரி மந்திரம் வேதங்களில் மிக முக்கியமான மந்திரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குரு முகமாகப் பெறப்படும் மந்திரம்: உபநயனம் போன்ற சடங்குகளின் போது குருவால் இந்த மந்திரம் சீடனுக்கு வழங்கப்படுகிறது. இந்த மந்திரத்தை ஜெபிப்பதால் ஆன்மிக வளர்ச்சி, மன அமைதி, அறிவாற்றல் மேம்படுதல் போன்ற பலன்கள் கிடைக்கும். கிருஷ்ணர் கீதையில், ‘‘நான் மந்திரங்களில் காயத்ரியாக இருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார். இது காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. வேதத்தின் தாயாகிய காயத்ரி அன்னை, ஜெபம் செய்கிறவர்களை பாதுகாத்து, பாவம் போக்குபவள். தினமும் சூரிய நமஸ்காரம் செய்து காயத்ரி ஜெபம் செய்வதோடு, ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் வரும் காயத்ரி ஜெபம் அன்றும் 108 அல்லது 1008 முறை உச்சரித்து வணங்குவது பலனளிக்கும்.

11.8.2025 - திங்கள்

ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதனை

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் (1595-1671) 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் ஆவார். புவனகிரியில் அவதரித்தவர். இங்கு அவதார ஆலயம் உள்ளது. மத்வர் நிலைநாட்டிய துவைத தத்துவத்தை போதித்தவர். பிரஹலாதரின் அவதாரமாகக் கருதப்படுகிறார். இவர் தனது ஆயுள் காலத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்தியதாகவும், இன்றும் தனது பக்தர்களுக்கு ஆசியும் அருளும் புரிந்து கொண்டிருக்கின்றார் என்றும் அவரைப் பின்பற்றுவோர் நம்புகின்றனர். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ``மந்திராலயம்’’ என்ற இடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இவர் உயிருடன் சமாதி (ஜீவசமாதி) நிலையை அடைந்தார். ராகவேந்திர சுவாமி ஆராதனை அனைத்து இடங்களிலும் பக்தர்களால் மிகவும் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

12.8.2025 - செவ்வாய்

மகாசங்கடஹர சதுர்த்தி

செவ்வாய்க் கிழமை மகாசங்கடஹர சதுர்த்தி வருவது மிகவும் சிறப்பு. விநாயகப் பெருமானை வழிபடுவதற்கான ஒரு முக்கியமான நாள் மகாசங்கடஹர சதுர்த்தி. இது விநாயகர் சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தி ஆகும். இன்று விநாயகப் பெருமானுக்கு விரதம் இருந்து, அவரை வழிபடுவது வழக்கம். விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள் செய்து, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல் போன்றவற்றை படைத்து வழிபடுவார்கள். மகாசங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்திக்கு மிக முக்கியமான ஒரு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்த நாளில் விநாயகரை வழிபட்டால், அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

14.8.2025 - வியாழன் - சஷ்டி, வேதாத்திரி மகரிஷி பிறந்தநாள்

‘‘வாழ்க வையகம்’’ ‘‘வாழ்க வளமுடன்’’ என்ற மங்கள வார்த்தைகளை மண் முழுதும் பரப்பிய அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி (ஆகஸ்ட் 14, 1911 - மார்ச் 28, 2006) திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர், ராமலிங்கப் பெருமான் இவர்தம் மரபு நெறி நின்று ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயப் பணி ஆற்றிவந்தவர். சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார். ஆயுர்வேத மருத்துவர் எஸ்.கிருஷ்ணாராவின் நட்பு கிடைக்க, அவர் மூலமாகத் தியானம், யோகா போன்றவைகளைக் கற்றார் மகரிஷி. தனது வாழ்க்கையின் குறிக்கோளாகிய முழுமையை உணரும் நோக்கத்தால் உந்தப்பட்டு; சித்த, ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவத் துறைகளைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். மேலும், இரண்டாவது உலகப் போரின் போது முதலுதவிப் பயிற்சியாளராகவும் பணி புரிந்தார். வறுமையிலேயே வாழ அடியெடுத்து வைத்த அவரது உள்ளத்தில் வறுமை என்றால் என்ன? கடவுள் என்பது எது? அதை ஏன் காண முடியவில்லை? மனித வாழ்க்கையிலேயே ஏன் துன்பங்கள் தோன்றுகின்றன போன்ற கேள்விகள் அவ்வப்போது ஒலித்துக் கொண்டே இருந்தன. இவற்றிற்குக் காரணங்கள் கண்டு தெளிவு பெறுவதற்காக ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். விளைவாகத் தனது 35-ஆவது வயதில் தன்னிலை விளக்கமாக இறைநிலையை உணர்ந்தார். அதன் அடிப் படையில் உலக மக்களுக்காக அவர் அளித்த வாழ்க்கை நெறியே மன வளக்கலை ஆகும். அது இன்று உலகம் முழுவதும் வேர்விட்டு படர்ந்திருக்கிறது. அவருடைய சீடர்களும் பல்வேறு இடங்களில் மனவளக் கலையை பயிற்றுவித்து வருகின்றனர். இன்று அவருடைய பிறந்த நாள்.

15.8.2025 - வெள்ளி

ஆடி கடை வெள்ளி

ஆடி மாத வெள்ளிக் கிழமைகள் அம்மனுக்கு மிகவும் உகந்த நாட்களாகும். குறிப்பாக, ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமை, ஆடி கடைசி வெள்ளி என்று கொண்டாடப்படுகிறது. ஆடி கடைசி வெள்ளியில் அம்மனை மனமுருகி வழிபட்டால், வேண்டிய வரங்களை அம்மன் அருள்வாள், இந்த நாள், புதிய முயற்சிகள் தொடங்கவும், நல்ல காரியங்களை செய்யவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது, இன்று வீட்டையும், பூஜையறையையும் சுத்தம் செய்து, அம்மன் படத்திற்கு மலர்கள் சாத்தி, தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம், சர்க்கரைப் பொங்கல், கூழ் போன்றவற்றை நிவேதனமாக படைத்து வழிபடுவார்கள், வீட்டில் சுமங்கலிப் பெண்களை அழைத்து, மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுத்து அவர்களின் ஆசி பெறுவார்கள்.