Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடமையைச் செய்த கிருஷ்ணர்

கடமையைச் செய்த கிருஷ்ணர்

பாரதப் போர் நடந்துகொண்டிருந்த நேரம் போர் முடிந்ததும்் அர்ஜுனன் நேரடியாகத்தான் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று விடுவான். ஆனால் கிருஷ்ணரோ குதிரைகளைக் குளிப்பாட்டி வருடிக்கொடுத்து உணவிட்டு நீர் காட்டிய பிறகுதான் தங்குமிடம் செல்வார். இதைக்கேள்விப்பட்ட அர்ஜுனன், வேலைக்குத்தான் ஏராளமான ஆட்கள் இருக்கிறார்களே... அவர்களைக்கொண்டு அந்த வேலைகளைச் செய்யக்கூடாதா? என்று கேட்டான். அதற்கு கிருஷ்ணர் ‘‘நான் ேதரோட்டி. இந்த வேலையை நான்தான் செய்ய வேண்டும். கடமையைச் செய்தேன். அதுதானே தர்மம்’’ என்றார்.

உணவின் மேன்மை எது?

பாரதப்போருக்கு முன், பாண்டவ தூதுவராக அஸ்தினாபுரம் சென்றார் பகவான் கிருஷ்ணர். அங்கே, அரண்மனையில் தங்காமல் விதுரரின் வீட்டுக்குச்சென்று உணவருந்தி விட்டு, இளைப்பாறினார். அவருக்காக காத்திருந்த துரியோதனன் போன்றவர்கள், ‘‘உனக்காக நாங்கள் காத்திருக்க... நீயோ, தகுதிக்குப் பொருந்தாத இடத்தில் தங்கி, உணவு உண்டிருக்கிறாய்’’ என்று கேலி செய்தனர்.

அவர்களிடம், ‘இறை நாமத்தை தினமும் உச்சரிக்கிற, இறைவனின் அற்புதங்களையும், லீலைகளையும் உபநியாசம்’ பண்ணுகிற பாகவதர்கள் சாப்பிட்டுவிட்டு மீதம் வைக்கும் உணவு தூய்மையானது. சகல பாவங்களையும் போக்கும் சக்தி அந்த உணவுக்கு உண்டு. அதனால் விதுரர் வீட்டு உணவை உண்டேன்’ என்றார் பகவான் கிருஷ்ணர்.

நண்பரை அன்பால்நெகிழச் செய்த கண்ணன்

ஏழைகளை நண்பனாக ஏற்றுக்கொள்ளவே தயங்கும் காலமிது. ஆனால் கிருஷ்ணர் அப்படியல்ல எப்போதோ தன்னுடன் விளையாடிய ஏழை குசேலரை அவர் மறக்கவில்லை. ஒருமுறை உதவி கேட்க குசேலர் வந்தபோது, தன்னைக்காண குசேலர் வந்துள்ளார் எனத் தெரிந்ததும் கண்ணன் தன் படுக்கையிலிருந்து எழுந்து ஓடோடிச்சென்று வரவேற்றான். அப்போது கண்ணன் துவாரகாபுரி மன்னன்,

‘‘கால்கள் தேய இவ்வளவு தூரம் நடந்து வந்தாயா? எனக்கேட்டு ‘‘உனது திருவடிகள் இவ்வளவு தூரம் நடந்ததால் காய்த்துப்போய் விட்டதே! என்று சொல்லி அவற்றை வருடிக்கொடுத்தான்.’’

கண்ணனின் அன்பைக்கண்ட குசேலர் மெய் மறந்து, போய் இப்படிப்பட்ட நண்பனிடம் எதுவும் கேட்பதா? என எதையும் கேட்காமலேயே திரும்பினாராம் குசேலர்.

தாய்க்கு முதல் பூஜைகாணும் பெருமாள்

திண்டுக்கல்லில் இருந்து18 கி.மீ. தொலைவில் உள்ள ரெட்டியார் சத்திரத்தில் இருந்து 5 கி.மீ.தொலைவில் மலை மீது அமைந்துள்ள கோயில் கோபிநாத சுவாமி கோயில். புல்லாங்குழல் வாசித்தபடி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்் இந்த பெருமாள். இவரது சந்நதி முன் மண்டபத்தில் இவரது தாயார் கோப்பம்மாள் காட்சி தருகிறார். தாய்க்கே முக்கியத்துவம் தரவேண்டுமென்பதன் அடிப்படையில் இவரை பூஜித்த பின்பே கோபிநாதருக்கு பூஜை செய்கின்றனர். தாயும், பிள்ளையும் காட்சி தரும் தலம் என்பதால் குழந்தைப் பாக்கியம் தரும் தலமாக உள்ளது.

இங்கு மூன்று கால பூஜையின்போது சேகண்டி ஒலித்து சங்கு முழங்கும்வழக்கம் உள்ளது. இங்கு கிருஷ்ண ஜெய்ந்தி விழா 3 நாட்கள் நடக்கும். அப்போது மட்டும் உற்சவர் கிருஷ்ணர் மலையிலிருந்து புறப்பாடாகி வீதியுலா சென்று திரும்புவார்.

-நாகலட்சுமி

திரிபங்க கிருஷ்ணர்

மன்னார்குடியில் உள்ளது புகழ்பெற்ற ராஜகோபாலன் ஆலயம். இத்தலத்தில் கிருஷ்ணர் திரிபங்க நிலையில் - அதாவது மூன்றாக வளைந்து, ஒரு காதில் குண்டலத்தோடு ஆநிரை மேய்க்கும் ஸ்ரீவித்யா ராஜகோபாலனாக அருள்கிறார். அம்பிகையும் கிருஷ்ணரும் இணைந்த திருக்கோலம், கோபால ஸுந்தரி என தேவி உபாசகர்களால் வழிபடப்படுகிறது. தேவிக்குரிய ஸ்ரீசக்ரம் கிருஷ்ணரின் காலடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ராஜகோபாலனுக்கு தினமுமே திருவிழா என்பதால் இவரை நித்யோத்சவர் என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர்.

உறியில் தின்பண்டங்கள்

தஞ்சாவூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது வரகூர். வெங்கடேசப் பெருமாள் அருள்புரியும் இத்தலத்தில் ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் காயத்ரி ஜபத்தன்று தொடங்கி கிருஷ்ண ஜெயந்தி வரை உறியடி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆலயத்திற்கு எதிரில் மூங்கில் கழி நடப்பட்டு அதன் உச்சியில் முறுக்கு, சீடை போன்ற தின்பண்டங்களை மூட்டையாகக் கட்டித் தொங்கவிடுவர். யாதவ வேடம் புனைந்த பக்தர்கள் கைகளில் கம்பை ஏந்தி அந்தப் பிரசாதக் கூடையை அடிப்பர். கயிறை மேலும் கீழுமாக இழுப்பதும், உறியடிப்பவர் மீது தண்ணீரை வீசுவதும் நடக்கும். உறியடியில் வெற்றி பெற்றவர், அந்த தின்பண்டங்களை பெருமாளுக்கு நிவேதித்து பிரசாதமாக அனைவருக்கும் தருவர்.

பீடா உண்ணும் கண்ணன்

ராஜஸ்தான் மாநிலத்தில், நாத்வாரா என்ற ஊரில் உள்ளது புகழ் பெற்ற கிருஷ்ணன் கோயில். இத்தலத்தை வடநாட்டு திருப்பதி என்று அழைக்கின்றனர். இங்கு அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கி இரவு முடிய ஏழுவகையான தரிசனங்களும் அலங்காரங்களும் மூலக் கருவறையில் அருளும் கிருஷ்ணருக்கு நடைபெறுகிறது. இதில் இரவு வேளையில் நடைபெறும் சயன தரிசனத்தின் போது பான்(பீடா) நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அந்த பிரசாதத்தைப் பெற குறிப்பிட்ட கட்டணமும் ஆலயத்தின் சார்பில் பெறப்படுகிறது.

கல் வீணை

ஆழ்வார்திருநகரி திருத்தலத்தின் இறைவன், ஆதிநாதர். இவர் திருக்குறுங்குடி நம்பி என்றும் அழைக்கப்படுகிறார். இங்கே கருங்கல்லைக் குடைந்து உருவாக்கப்பட்ட வீணை ஒன்று காணப்படுகிறது. இவ்வீணையின் அடிப்பாகம் மட்டும் பித்தளையினால் செய்யப்பட்டிருக்கிறது. மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் வீணையை மோகனவீணை என்று குறிப்பிடுகிறார்கள்.

பிரமாண்ட கிருஷ்ணர்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் என்ற இடத்தின் அருகில் திப்பிற மலையில் கிருஷ்ணர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த பிரசித்தி பெற்ற மலைக்கோயிலில் வீற்றிருக்கும் கிருஷ்ணர், 13 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சியளிக்கிறார். இந்த ஆலயம் ‘கருமாணித் தாழ்வார் கிருஷ்ணன் கோயில்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

கொடிமரத்தில் ஆமை

பொதுவாக பெருமாள்கோயில் கொடி மரங்களின் உச்சியில் கருடனை அமைப்பது வழக்கம். ஆனால் நாகர்கோவில் நாகராஜா கோயில் சந்நதியின் வலதுபுறமுள்ள அனந்தகிருஷ்ணன் சந்நதியில் உள்ள கொடி மரத்தில் கருடனுக்குப் பதில் ஆமை உள்ளது. பாம்புக்கு கருடன் பகை. இந்த கோயில் நாகத்திற்கான கோயில் என்பதால் கருடனுக்குப் பதில் ஆமை இருப்பதாக கூறப்படுகிறது.

-ஜெயசெல்வி