Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கொப்பு கொண்ட பெருமாள் கோயில்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி சின்னம சமுத்திரம் கிராமத்தின் எல்லை வரை, கிழக்குத் தொடர்ச்சி மலையான கல்வராயன் மலை நீட்சி பெற்றுள்ளது. இம்மலைத்தொடரில் சின்னசமுத்திரம் கிராமத்தையொட்டி ஏறக்குறைய 2200 அடி உயரத்தில் கொப்பு கொண்ட பெருமாள் மலைக்குன்று அமைந்துள்ளது. இந்த மலைக்குன்றின் உச்சியில், இப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் இரு நூற்றாண்டு பழமையான கொப்பு கொண்ட பெருமாள் மலைக்கோயில் அமைந்துள்ளது. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை முக்கியத்தொழிலாகக் கொண்ட பெத்தநாயக்கன்பாளையம் பகுதி மக்கள், கால்நடைகள் மேய்ப்பதற்கும், இயற்கை விளைபொருட்களைப் பறிப்பதற்கும் இந்த மலைக்குன்றுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இரு நூற்றாண்டுக்கு முன் இந்த மலைக்குன்றுக்கு சென்று பெண் ஒருவர் காதில் அணிந்திருந்த தங்க கொப்பு (தோடு) கழன்று புதருக்குள் விழுந்துவிட்டதாகவும், தனது தங்க கொப்பை மீட்க புதரை அப்புறப்படுத்தியபோது, பெருமாள் காட்சியளித்து, தங்கக் கொப்பை மீட்டுக் கொடுத்ததாகவும், இதனையடுத்து, பெருமாள் குடிகொண்ட இந்த மலைக்குன்றில் கோயில் எழுப்பிய இப்பகுதி மக்கள், கொப்பு கொண்ட பெருமாள் என்ற பெயரிலேயே வழிபட்டு வருவதாகவும் செவி வழிச்செய்திகள் உலவி வருகின்றன. இக்கோயில் மூலவரான மாயவர் பெருமாள், தலையில் கொப்பு மகுடம் தரித்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வருவதால் கொப்பு கொண்ட பெருமாள் என விளங்கி வருவதாகவும் இப்பகுதி மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

ஆண்டுதோறும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கொப்பு கொண்ட பெருமாளுக்கு, வெகுவிமரிசையாக திருவிழா எடுத்து இப்பகுதி மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.பழமை வாய்ந்த இந்த மலைக்

கோயிலில் மூன்று நிலை கொண்ட, 37 அடி உயர ராஜகோபுரமும், மண்டபமும், 11 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலையும் அமைக்கப்பட்டு 2014ம் ஆண்டு கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பங்களிப்போடு கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையைசீரமைத்து கருங்கற்களைக் கொண்டு 1,893 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. வேண்டுதல் நிறைவேற்றும் கொப்பு கொண்ட பெருமாளுக்கு இப்பகுதி

மக்கள் காளைகளை நேர்ந்துவிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதும், இக்கோயிலில் குழந்தை வேண்டி வரம் பெற்றவர்கள் தங்களது குழந்தைகளுக்கு பெருமாள், பெருமாயி எனப் பெயர் சூட்டி வருவதும் இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்..

ஜெயசெல்வி