Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில்

ராஜகோபுர தரிசனம்!

2000 ஆண்டுகள் பழமையான சிவன் தலம். மூலிகை மணம், கண்ணுக்கு பசுமை விருந்தளிக்கும் அறப்பள்ளி, வல்வில் ஓரி என்னும் மன்னன் ஆண்ட பகுதியும், காலாங்கி முனிவர் மற்றும்

சித்தர்கள் தவம் செய்த இம்மலையில் அமைந்துள்ளது இந்த அழகிய ஈஸ்வரர் கோயில். கி.பி. 986ம் நூற்றாண்டில் உத்தம சோழனின் தாயார் செம்பியன் மாதேவியார் கொல்லிமலையிலுள்ள பன்னிரண்டு ஊராரிடத்து நூறு கழஞ்சுப் பொன் கொடுத்து, அதன் வட்டியில் வரும் வருவாயில் ஒவ்வொரு திங்களும் அறப்பள்ளி ஈஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்த ஆவனச் செய்ய வேண்டும் என்பதை அங்குள்ள கல்வெட்டுகள் குறிக்கின்றது.

இத்தல இறைவிக்கு அறம் வளர்த்த நாயகி என்று பெயர். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும் வரலாற்றுச் சிறப்பும் உடைய கொல்லிமலையில்தான் அறப்பளீஸ்வரர் திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.கொல்லிமலையில் உள்ள எண்ணற்ற மூலிகைகளை சேகரிக்க சித்தர்கள் இங்கு வருகிறார்கள். இவர்கள் முதலில் கொல்லிப் பாவை கோயிலுக்குச் சென்று தேவியிடம் அனுமதி பெற்ற பின்னரே மூலிகைகளைச் சேகரிக்கின்றனர். அதனை கொல்லிப் பாவை சந்நதியில் வைத்து வழிபட்ட பிறகுதான் எடுத்துச் செல்கிறார்கள். அறப்பளீஸ்வரர் கோயிலின் வடபுறத்தில் வற்றாத ஐந்து ஜீவ நதிகள் ஒன்றாக கலந்து 150 அடி உயரத்தில் இருந்து பூத்தூவலாய் விழுகின்றன. இந்த அருவி பின் ஆறாக உறையூரில் பாய்ந்து காவிரியில் கலக்கிறது.

தேவர்களும், மகரிஷிகளும் இங்கு தவமிருந்த போது அசுரர்கள் அவர்களை துன்புறுத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்து தங்களை மீட்க ரிஷிகள் விஸ்வகர்மா உதவியுடன் ஒரு பெண் சிலையை வடிவமைத்தார்கள். அந்தச் சிலைக்கு ‘கொல்லிப்பாவை’ என்று பெயர் சூட்டினர். அந்தச் சிலை மீது மோகம் கொண்ட அசுரர்கள் அருகில் நெருங்கிய போது, அவர்களை வதம் செய்து அம்பிகை

ரிஷிகளை காப்பாற்றியதாக புராணங்களில் கூறப்படுகிறது. உயிர்களின் வாழ்க்கை மகத்துவம் பெற இறை வழிபாடே ஒரே வழி என்று உணர்ந்த சித்தர்கள், நதிக்கரை, மலைகள் மற்றும் குகைகளில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து தவம் மேற்கொண்டனர். அவ்வாறு தவம் செய்ய சித்தர்கள் தேர்ந்தெடுத்த இடங்களில் ஒன்று கொல்லிமலை. அறத்தை மையமாகக் கொண்டு வாழ்வியலை பின்பற்றிய சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இத்தல ஈஸ்வரன் ‘அறப்பளீஸ்வரர்’ என்று அழைக்கப்

படுகிறார். பிற்காலத்தில் இயற்கை மாற்றங்கள் காரணமாக சிவலிங்கம் மண்ணுக்குள் புதைந்து போனது.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொல்லிமலையில் விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது, அங்கு லிங்கம் இருந்ததையும் கலப்பை பட்ட இடத்தில் ரத்தம் வருவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அரசன் வல்வில் ஓரி லிங்கம் கிடைக்கப் பெற்ற இடத்தில் சிவாலயம் நிறுவினான். இன்றும் அந்த லிங்கத்தின் மீது கலப்பையினால் ஏற்பட்ட தழும்பினை காணலாம். இது ஒரு பழமையான சிவன் கோயில். தொல்பொருள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. கோபுரம் துவக்கம் முதல் விக்ரமாதித்யன் காலம் வரை விரிவடைந்ததாக கருதப்படுகிறது. பசுமை மலைப்பகுதி என்பதால் கோபுரம் உயரமில்லாத பாணியில் கட்டப்பட்டிருக்கலாம். முழுக்க முழுக்க தொண்டை பாணியில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் மேல் கட்டங்களில் சிற்பக்கலை மற்றும் கல்வெட்டுகள் உள்ளன. அதனைப் பார்க்கும் போது சோழர்கள் அல்லது பாண்டியர்கள் காலத்தில் அவை விரிவடைந்திருப்பது தெரிய வருகிறது. இந்த சிற்ப வேலைப்பாடுகள் அனைத்தும் மிகவும் நுணுக்கமாக செய்யப்பட்டுள்ளன. மேலும் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் இயற்கை, பூஜைகள், தெய்வீக படங்கள் மற்றும் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. மகிழ்ச்சி, ஆன்மீக அமைதி சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திலகவதி