தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அனுசரிக்கப்படும் மிக முக்கியமான விரதங்களில் ஒன்று ‘கேதார கௌரி விரதம்’. ‘கேதாரம்’ என்றால் இமயமலைச் சாரல். ‘கேதாரீஸ்வரர்’ என்றால், இமயத்தில் உள்ள கைலாயத்தில் வாழும் ஈஸ்வரன் என்று பொருள். ‘கௌரி’ என்பது அன்னை பராசக்தியைக் குறிக்கும். சிவபெருமானின் அருளைப் பரிபூரணமாகப் பெற, அன்னை பராசக்தியே மேற்கொண்ட விரதம் என்பதாலேயே, இது ‘கேதார கௌரி விரதம்’ என்று போற்றப்படுகிறது. ஒரு சமயம், கைலாயத்தில் சிவனும் பார்வதியும் தம்பதி சமேதராக வீற்றிருந்தனர். அப்போது அங்கு வந்த தேவர்கள், ரிஷிகள், பிரம்மா, இந்திரன் முதலானோர் சிவனையும், பார்வதியையும் சேர்த்து வலம் வந்து வணங்கிச் சென்றனர். ஆனால், அவர்களில் ஒருவரான பிருங்கி மகரிஷி மட்டும், சக்தியை விடுத்து சிவனை மட்டுமே வலம் வந்து தொழுதார். இதனால் மனம் வருந்திய பார்வதி தேவி, பிருங்கி முனிவரின் உடலில் தனது அம்சமாக விளங்கிய ரத்தத்தையும் சதையையும் நீக்கினார். உடனே எலும்புக் கூடாக மாறிய பிருங்கி முனிவரால் நிற்க முடியவில்லை. தன் பக்தனின் நிலை கண்டு இரங்கிய சிவபெருமான், அவருக்கு மூன்றாவது காலாகத் தனது ஊன்றுகோலைத் தந்து அருளினார்.
சிவனின் இந்தச் செய்கையால் மேலும் வருத்தமடைந்த பார்வதி தேவி, “சிவனின் உடலில் பாதியை நான் பெற வேண்டும்” என்ற உறுதியுடன் அவரைப் பிரிந்து, பூலோகம் வந்து வால்மீகி மகரிஷியின் நந்தவனத்தில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். அன்னையின் வேண்டுகோளுக்கு இணங்க, வால்மீகி முனிவரும் அவருக்கென ஓர் ஆசிரமத்தை அமைத்துக் கொடுத்தார். அங்கு தங்கிய அன்னை, வால்மீகி முனிவரிடம், “ரிஷியே! நான் பூவுலகில் இதுவரை யாரும் அனுஷ்டிக்காத ஒரு கடும் விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அந்த விரதத்தையும், அதை அனுஷ்டிக்கும் முறையையும் தாங்கள் எனக்குக் கூற வேண்டும்,” என்று வேண்டினார். அதன்படி, வால்மீகி முனிவர் ‘கேதார விரதத்தின்’ மகிமையைக் கூறி, அதை அனுஷ்டிக்கும் முறையையும் விளக்கினார். “புரட்டாசி மாதம் வளர்பிறை தசமி திதியில் தொடங்கி, ஐப்பசி மாதம் தேய்பிறை தீபாவளி அமாவாசை வரை, 21 நாட்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். தினமும் நீராடி, ஓர் ஆலமரத்தின் அடியில் சிவலிங்கத்தை ஸ்தாபித்து, வெல்லம், சந்தனம், விபூதி, மஞ்சள் உருண்டைகள், அதிரசம், வாழைப்பழம், தேங்காய், வெற்றிலை-பாக்கு ஆகியவற்றுடன் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
21 இலைகள் கொண்ட ஒரு கயிற்றை எடுத்து, தினமும் ஒரு முடிச்சாக 21 முடிச்சுகளைப் போட்டு, விரதம் முடிந்ததும் அதை அணிந்துகொண்டால், பரமனின் பரிபூரண அருள் கிடைக்கும்,” என்றார்.அன்னை பார்வதியே மேற்கொண்ட விரதம் என்பதால், இது ‘கேதார கௌரி விரதம்’ என்று பெரும் சிறப்பு பெற்றது. இந்த விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு சகல நன்மைகளும், நீங்காத செல்வமும், தீர்க்க சுமங்கலி பாக்கியமும் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத ஐதீகம். முறையான பூஜைகள் செய்த பிறகு, கேதாரீஸ்வரரை ஆவாஹனம் செய்ய வேண்டும். இதற்காக, அம்மியையும் குழவியையும் சுத்தப்படுத்தி, அலங்கரித்து, அம்மியின் மேல் குழவியை நிறுத்தி, சிவசக்தியாக பாவித்துக்கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், குங்குமம், நறுமணப் பொடிகளை அணிவித்து, பருத்தி மாலையிட்டு, பூக்கள் சாற்ற வேண்டும். அதன் எதிரில் ஒரு கலசத்தை நிறுத்தி, சங்கல்பம் செய்துகொண்டு, சிவனின் அஷ்டோத்திர மந்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.பூஜை முடிந்ததும், விரதம் இருப்பவரின் கையில் நோன்புக் கயிற்றைக் கட்டி, ஆசீர்வாதம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டின் மூலம் சிவசக்தியின் பேரருளைப் பெற்று, வளமான வாழ்வு வாழலாம்.