கர்நாடக மாநிலம், சென்னபட்டணம் என்னும் இடத்தில் ``கெங்கல்’’ என்னும் திருநாமத்தில் ஆஞ்சநேயஸ்வாமி அருள்பாலிக்கிறார். கெங்கல் அனுமன், சுமார் ஐந்து அடி உயரம் கொண்ட சுயம்பு அனுமன். மிகப் பெரிய கம்பீர மீசையுடன் வீற்றிருக்கிறார், கெங்கல் அனுமன். இந்த அனுமனின் முழு உருவமும் சிவப்பு நிறத்தால் காணப்படுகிறது. அந்த சிவப்பு நிறத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தால், பொதுவாக அனுமன் கறுப்பு நிற கருங்கற்களில்தான் காட்சியளிப்பார். இந்த அனுமன், சிவப்புநிற பாறைக் கற்களில் காணப்படுவதால், கெங்கல் அனுமன் எப்போதும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகிறார்.
கெங்கல் அனுமன் பெயர் காரணம்
கன்னட மொழியில், ``கெங்கல்’’ என்றால் ``சிவப்பு நிற கல்’’ என்று பொருள். ஆகவே, இந்த அனுமனை ``கெங்கல் ஹனுமந்தா’’ என கன்னடத்தில் அழைக்கிறார்கள். தமிழில், ``கெங்கல் அனுமன்’’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். பொதுவாக, அனுமன் சிலைகளின் மீது சிந்தூரம் பூசப்படுவதால், சில சமயங்களில் ஆரஞ்சு - சிவப்பு நிறத்தில் அனுமன் காணப்படுவார். ஆனால், இக்கோயில் அனுமனோ, சிவப்பு நிற கற்களில் தோன்றியதால், இயற்கையாகவே அனுமன் ஆரஞ்சு - சிவப்பு நிறத்தில் காணப்படுகிறார். சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு, மத்வ மகான் ஸ்ரீவியாசராஜ தீர்த்தர், அப்போதுள்ள இந்த சென்னபட்டணத்தை கடக்கும் போது ஒரு பிரகாசமான சிவப்பு பாறையை கண்டார். அந்த பாறை வியாசராஜருக்கு பிடித்துப்போகவே, கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்தார். அப்போது அவருக்கு ஒரு அனுமனின் தோற்றம் கண்ணுள் தெரிந்தது. கண்களை திறக்காது, கண்களை மூடிக்கொண்டே. அந்த அனுமன் போலவே, அந்த சிவப்பு பாறைகளில் வரைந்தார்.
மன்னர்கள் காத்த கோயில்
சர்வ வியாபியாக இருக்கும் பகவான் அனுமன், வியாசராஜரின் மனதில் தோன்றிய அனுமன் உருவத்தை வரையவரைய அது மெதுவாக சிலையாக மாறிக் கொண்டே வந்தது. இதனைக் கண்ட வியாசராஜரின் சீடரான ஸ்ரீஸ்ரீனிவாச தீர்த்தர், கண்ணீர் மல்க இருகைகளையும் கூப்பி ஆனந்தமாக நின்றுகொண்டு தரிசித்துக் கொண்டிருந்தார். சுற்றியிருந்தவர்களின் கண்களிலும் கண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது. ஸ்ரீவியாசராஜர் வரைந்து முடித்ததும், ஐந்து அடி உயரத்திற்கு, அனுமன் காட்சியளித்தார். தியானத்தில் இருந்த வியாசராஜர், கண்விழித்தார். அனுமனை கண்டு பரவச மடைந்தார். சிறிது காலம் அங்கேயே இருந்து அனுமனை பூஜித்தார். அதன் பிறகு, காலப்போக்கில் ``ஹொய்சள மன்னர்களால்’’ இக்கோயில் விரிவாக கட்டப்பட்டது. ஹொய்சள மன்னர்களுக்கு பிறகு, கோயில் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து பல காலம் இருந்திருக்கிறது.
ஒரே பெயர்
1952 முதல் 1956 வரை நான்கு ஆண்டுகள் கர்நாடக முதல்வராக இருந்த கெங்கல் ஹனுமந்தையா, சிதிலமடைந்த இக்கோயிலை மீண்டும் புதுப்பித்து கட்டினார். இதற்கு ஒரு சுவாரஸ்ய கதை ஒன்றும் கூறப்படுகிறது. கெங்கல் ஹனுமந்தையா, கர்நாடகாவின் இரண்டாவது முதலமைச்சராக பதவிவகித்தவர். அப்போது, இந்த கெங்கல் ஹனுமந்தா கோயிலைப் பற்றி அறிந்த கெங்கல் ஹனுமந்தையா, ``தனது பெயரில் ஒரு கோயிலா! உடனடியாக அந்த கோயிலை நான் காண வேண்டும்’’ என்று ஆவலுற்றார். கோயிலுக்கு சென்று அனுமனை தரிசித்தார். கோயில், சிதிலமடைந்து இருப்பதை கண்டு வேதனையடைந்தார். இக்கோயிலை குறைந்த நாட்களுக்குள் புதுப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கெங்கல் ஹனுமந்தையா உத்தரவிட்ட சில மாதங்களில், இக்கோயில் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. அன்று முதல், கெங்கல் ஹனுமந்தாவின் தீவிர பக்தரானார், கெங்கல் ஹனுமந்தையா.
சனிக்கிழமைகளிலும், அனுமன் ஜெயந்தி போன்ற விசேஷ நாட்களிலும் கெங்கல் ஹனுமந்தையா, இக்கோயிலில் ஆஜராகிவிடுவார். கெங்கல் ஹனுமந்தையா விருப்பப்படியே, அவர் இறந்த பின், அவரது சமாதியை கோயிலின் சற்று அருகிலேயே வைத்துவிட்டனர்.
நேர்மறை அதிர்வு
ஆண்டுதோறும் கோயிலுக்கு எண்ணற்ற பக்தர்கள் வருகிறார்கள். மற்ற பழங்கால கோயில்களைப் போலவே இந்தக் கோயிலும் மிகவும் தனித்துவமானது. கெங்கல் ஹனுமந்தா, மிகவும் சக்தி வாய்ந்தவர். தீய எண்ணம் கொண்டவர்கள், இவரை அணுகவே முடியாது. இக்கோயிலுக்குள் தீய எண்ணம் கொண்டவர்கள் நுழைந்தால், எதிர்மறை அதிர்வுகளை (Negative Vibration) தூண்டி அவர்களை கதிகலங்கச் செய்யுமாம். அதேபோல், தூய மனம் கொண்டவர்கள் இக்கோயிலை தரிசிக்கும் போது, நல்ல நேர்மறை அதிர்வுகளை (Positive Vibration) தூண்டி அவர்களை பாதுகாக்க செய்யுமாம். இது பலருக்கும் நடந்தேறிய அனுபவமாம். மேலும், குழந்தை இல்லாத தம்பதிகள் மற்றும் நீண்ட கால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், இக்கோயிலுக்கு சென்றாலே போதும், நேர்மறை அதிர்வுகளை உணர்ந்து உடனடியாக வேண்டுவது கிடைத்துவிடுகிறது.
கெங்கல் ஹனுமந்தா, தனது மகிமைகளை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு, அனுமனின் முழு உருவ முகத்தையும் காண ஒரு பக்தர், ஆசைப்பட்டு அதனை மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார். தினமும் கெங்கல் ஹனுமந்தா கோயிலுக்கு வருவது, அவரின் முழு உருவ முகம் எப்படி இருக்கும் என்று மனதில் நினைப்பதுமாக இருந்திருக்கிறார்.
திரும்பிய அனுமன்
ஒரு நாள், திடீரென்று கெங்கல் ஹனுமந்தாவின் முகம் வடக்கில் இருந்து சற்று கிழக்கு நோக்கியவாறு திரும்பியதாம். ஒரு பக்க முகமும், ஒரு பக்க கண்ணும், ஒரு பக்க மீசையும் தெரிந்த கெங்கல் ஹனுமந்தாவின் முகத்தில் இரு கண்களும், முழு மீசையும், முழு முகமும் தெரிய ஆரம்பித்தது. இதனைக் கண்ட அந்த பக்தருக்கு, எல்லையில்லா மகிழ்ச்சி. அனைவரிடத்திலும் அனுமனை காட்டினாராம். இன்றும்கூட இவரின் வம்சா வளிகள் இருக்கிறார்களாம். அவர்களும் தொடர்ந்து கெங்கல் ஹனுமந்தாவை வழிபட்டு வருகிறார்களாம்.
அனுமன் மீது வெளிச்சம்
இக்கோயிலின், மேலும் சிறப்புகள் என்னவென்றால், கோயிலின் கட்டடக் கலை மிகவும் அற்புதமாக பார்க்கப் படுகிறது. காரணம், ``மகர சங்கராந்தி’’ நாளன்று (ஜனவரி 14 - 15 தேதிகளில்) அதாவது உத்தராயணத்தின் முதல் நாளில், சூரியக் கதிர்கள் நேரடியாக கெங்கல் ஹனுமந்தாவின் மீது விழுகின்றன. இந்த அற்புத நிகழ்வு, மற்ற நாட்களில் நடக்காது!
இக்கோயிலுக்கு வருகை தந்த ஒரு பக்தர் கூறுகையில்...
``எந்த ஒரு கோயிலுக்குமே இல்லாத ஒரு சிறப்பம்சம் இந்த கோயிலுக்கு இருக்கிறது. இக்கோயிலுக்கு முதல் முதலில் வருகை தந்து, கெங்கல் ஹனுமந்தாவை பிரார்த்தித்தால் போதும், உடனே அவை நிறைவேறிவிடுகின்றன. அதற்கு சாட்சி நான்தான். கெங்கல் ஹனுமந்தாவின் முன்பு நின்றாலே, சக்திவாய்ந்த அதிர்வுகளை உணர்வீர்கள். நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும்சரி, அனுமனை மௌனமாகப் பிரார்த்தனை செய்து கொண்டாலே போதும், அவைகளை உடனே நிறைவேற்றி கொடுப்பார்’’ என்று சிலாகித்துக் கூறினார்.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை: 7.00 முதல் 2.00 வரை, மாலை: 4.00 முதல் 7.00 வரை.
எப்படி செல்வது: பெங்களூரில் இருந்து 52 கி.மீ. பயணித்தால் கெங்கல் ஹனுமந்தா கோயிலை அடைந்துவிடலாம். ஒசூரில் இருந்து 86 கி.மீ. பயணித்தால்
இக்கோயிலை அடைந்துவிடலாம்.