Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குபேர வாழ்வு தரும் கும்பேஸ்வரர்

கும்பகோணம்

அனைத்திலும் உறைந்திருக்கும் சர்வேஸ்வரனான ஈசனிடத்தில் பிரளய விளைவுகள் பற்றிய தன் அச்சத்தை உரைத்தார் பிரம்மா: ‘‘பிரளயப் பேரழவில் சிருஷ்டியின் ஆதாரங்களே அழியுமோ எனும் கவலை என் நெஞ்சத்தை தணலாக எரிக்கிறது. மீண்டும் பிரபஞ்ச சிருஷ்டி தொடர காத்தருள வேண்டும்.’’ பிரம்மா கலங்கிய கண்களினூடே மகாதேவனை பார்த்தார். ஈசன் பிரம்மனைப் பார்த்து ‘‘கவலை கொள்ளாதே நான்முகா. யாம் உறையும் புண்ணிய தலங்களிலிருந்து திருமண் கொணர்ந்து, அமுதத்தையும், புனித தீர்த்தமும் கலந்து அழியாத கும்பம் எனும் குடத்தை செய். அதன் மையத்தின் சிருஷ்டியின் ஆதாரங்களை வைத்து மூடு.

உன்னுடைய நான்முகத்தினின்றும் எதிரொலித்துத் தெறிக்கும் வேத வரிகளை அதில் அலை அலையாக நிரப்பு. ஆகமங்களை ஆனந்தமாக கலந்து, புராண இதிகாசங்களை நாற்புறமும் வைத்து, இன்னும் நிறைய அமுதம் பெய்து மாவிலை சொருகி, தேங்காய் வைத்து தர்ப்பையை படரவிட்டு, பூணூலைச் சார்த்தி, வில்வ தளங்களால் அர்ச்சித்து உறியிலேற்று. மேருவின் மேல் பகுதியில் சரிந்திடாமல் நிறுத்திடு. ஆழி ஊழிக்காலம் அசைந்து வரும்போது மேருவின் மேலிருக்கும் கும்பமும் அசையும்.

மெல்ல நகர்ந்து பாரத தேசத்தின் தென் திசையில் சென்று தங்கும். அங்கு சென்று கும்பத்தினின்று பெருகும் அமுத கலையான ஆதாரங்களை உமக்குள் ஏந்தி சிருஷ்டியை தொடரலாம்’’ என்றார், சிவன். அதனைக் கேட்ட பிரம்மனின் திருமுகம் சிவப் பிரகாசமாக ஜொலித்தது. பிரம்மா யுகம் தோறும் நிலைபெறப்போகும் அரும்பெரும் விஷயமான கும்பத்தை செய்து முடித்தார். அதற்காகவே காத்திருந்தது போல, பிரளயப் பேரலை விண்ணுற நிமிர்ந்து வந்தது. மேரு மெல்ல அதிர்ந்தது.

அதன்மேல் அமர்ந்திருந்த அமுதக் கும்பம் நாட்டிய அசைவான ஒய்யாளிபோல இடதும் வலதும் அசைந்தது. பேரலை பெருவாய் பிளந்து வந்தாலும் அதன்மேல் படகுபோன்று கும்பம் மிதந்து ஈசன் திருப்பார்வை பதிந்த அவ்விடத்தில் நின்றது. அசைந்து வந்தது சுழன்று நின்றது. பம்பரமாக சுழன்ற கும்பக் கலசம் திருக்கலச நல்லூர் எனும் தற்போதைய தலமான சாக்கோட்டையாக மாறியது. கும்பம் சில காத தூரம் சென்று தங்கியது. உடனே ஊழியும் அடங்கியது. காந்தத்தினால் கவரப்படும் இரும்புபோன்று அமுதமும், சிருஷ்டி ஆதாரமும் கலந்திருந்த கும்பத்தினால் கவர்ந்திழுக்கப்பட்டார், பிரம்மா.

சிவன் அத்தலத்தை அடையும் பொருட்டு வேடரூபம் தாங்கிவர, கணநாதரும் பிறரும் அவரைப் பரிவாரமாகத் தொடர்ந்தனர். உமாதேவியோடு தென் திசை நோக்கிச் செல்லுகையில் இடைமருதூர் எனும் திருவிடைமருதூருக்கு அருகில் நகர்ந்தனர். அமுதக் குடத்தை கண்ணுற்றனர். சாஸ்தா இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றும் பொருட்டு அழியாத அந்த மாய குடத்தை குறிவைத்து பாணம் தொடுத்தார். ஆனாலும், கும்பத்தை பிளக்க முடியவில்லை. ஈசன் இப்போது முன் வந்தார். பாணாதுறை எனும் இடத்தில் இன்றும் பாணபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.

சிவபெருமான் வேறொரு திக்கிலிருந்து பாணம் தொடுத்தார். இந்த கும்பத்திற்கு வாய் தவிர மூக்கும் இருந்தது. கமண்டலத்திற்கு இருப்பதுபோல, அது வழியாகத்தான் புனித தீர்த்தத்தை செலுத்த முடியும். அப்படிப்பட்ட மூக்கு வழியாக அமிருதம் வெளியேற வேண்டுமென்று பரமேஸ்வரன் நினைத்தார். பாணம் மூக்கை துளைத்தது. அது வழியாக அமுதம் வெளிவந்தது. கும்பத்தின் மூக்கிற்கு கோணம் என்று பெயருண்டு. அந்த கோணம் விழுந்த தலமே கும்பகோணம் என்றாயிற்று. தேவாரத்தில் இத்தலத்தை குடமூக்கு என்றே அழைத்தனர். அமுதப் பெருவூற்று புகுபுகுவென பொங்கியது. அமுதத் துளிகள் தனித் தனி குளமாக திரண்டன. ஒன்று மகாமக குளம் என்றும், மற்றொன்று பொற்றாமரை என்றும் அழைக்கப்பட்டன.

அந்த கும்பகோணத்தில் கும்பேஸ்வரரான பரமேஸ்வரன் கோயில் கொண்டார். அவ்வாறு கும்பேஸ்வரர் அமர்ந்தபோது தன்னைச் சுற்றிலும் சில தலங்கள் உருவாவதற்குக் காரணமானார். ஏனெனில் பூரண கும்பம் என்பது அதன் சிகரமாக விளங்கும் தேங்காய், பூணூல், மாவிலை, தீர்த்தம் என்று எல்லாமும் அடங்கிய விஷயம். அவை என்ன ஆயின? அடுத்தடுத்து ஆச்சரியங்கள் தொடந்தன.

கும்பத்தின் வாய் விழுந்த தலமே குடவாயில் எனும் குடவாசல் ஆகும். அங்கு கோணேஸ்வரராக நிலை கொண்டார் எம்பெருமான். கும்பத்தினின்று நழுவிச் சென்று விழுந்த பொருட்கள் ஒவ்வொன்றும் தனித் தனி லிங்க சொரூபம் பெற்றன. தேங்காய் விழுந்த இடத்துக்கு அருகிலே உள்ளதுதான் இன்றைய மகாமகக் குளம். இதுவே அமுதத் தடாகம். தேங்காய் லிங்க உருப்பெற்று சிவமானது.

இன்றும் குளத்தருகே உள்ள இந்த கோயில் மூலவருக்கு நாரிகேளேஸ்வரர் என்று பெயருண்டு. நாரிகேளம் என்றால் தேங்காய் என்று பொருள். அது மேற்கு பார்க்க இருப்பதால் அபிமுகேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். மாவிலை விழுந்து இத்தலத்தின் விருட்சமான வன்னிமரமாக மாறிற்று. அதுபோல இன்னொரு மாவிலை விழுந்த இடமும் பிரளயத்தை மீறியிருந்தது. பிரளயத்திற்கு புறம்பாக நின்றதால் இன்றும் இத்தலத்திற்கு திருப்புறம்பியம் என்று பெயர். கும்பத்தைச் சுற்றியிருந்த பூணூல் குளத்தின் அருகே விழுந்தது. அங்கு ஸூத்ரநாதர் எனும் திருநாமத்தோடு ஈசன் எழுந்தருளியுள்ளார். ஸூத்ரம் என்றால் பூணூல் என்று பொருள். அங்கே கௌதம முனிவர் பூசித்ததால் கௌதமேச்வரர் ஆலயம் என்றே அதை மக்கள் வழங்குகின்றனர்.

வேடரூபம் கொண்ட மகாதேவன் இத்தலத்திலேயே தன்னொளி வீசி கருணை மயமாக அமர ஆவலுற்றார். கும்பத்து அமுதத்தோடு அத்தல திருமண்ணும் சேர்ந்து லிங்க உருவாயிற்று. ஆதிலிங்கத்தினுள் பரமசிவன் பெருஞ்சோதி வடிவாக உட்புகுந்தார். கும்பம் கும்பேஸ்வரரானது. பிரம்ம சிருஷ்டிக்கு முற்பட்டதால் ஆதிகும்பேஸ்வரர் எனவும், அமுத கும்பேஸ்வரர் எனும் பல்வேறு திருநாமங்களோடு அருளாட்சி செய்தார் ஐயன். வானவரும், தேவர்களும் கும்பேஸ்வரத்தை அடைந்தனர்.

கும்பேசருக்கு பிரம்மோற்சவம் நடத்தினர். எத்தனை யுகாந்திரங்களுக்கு முன்பு அமைந்த கும்பேஸ்வரர் இன்றும் பேரருள் பொழிகின்றார். பாவங்கள் நீங்கும் தலமாக காசியைக் குறிப்பிடும் புராணங்கள், அதைவிட ஒரு படி மேலாக, காசியிலும் கரையாத பாவங்கள் கும்பகோண மகாமக தீர்த்தத்தில் நிவர்த்தி பெறும் என்கின்றன. சோழ தேசத்தின் ரத்னப் பதாகைபோல விளங்குவது குடந்தை. அமுதமும், ஈசனும், வேதமும், நான்முகனான பிரம்மனும் இத்தலத்தை உருவாக்கியதால் தனிப்பெரும் வசீகரத்தை இன்றளவும் பெற்றிருக்கிறது.

கலைகளும், செல்வ வளங்களும், ஆன்மிகமும் ஒன்றுக்கொன்று பின்னிக் கொண்டு படர்ந்து கிடப்பது இத்தலத்தில்தான். ஆன்றோர்களும், சான்றோர்களும், பல்வேறு ரிஷிகளும் அவதரித்தது இங்குதான். அப்பேர்பட்ட இத்தலத்தின் மையத்தே நெற்றித் திருநீற்றைப்போல், செஞ்சிவத்தின் தழல்போல கும்பேஸ்வரரின் ராஜகோபுரம் நெடிதுயர்ந்து நிற்கின்றது. நான்கு கோபுரங்களும் நான்கு வேதங்களை நினைவுபடுத்துகின்றன.

கோயிலின் விஸ்தீரணம் மலைக்க வைக்கிறது. சோழர்கள் முதல் நாயக்கர் காலம்வரை எத்தனை மன்னர்கள் மனமார நேசித்து உருகி உருகி இக்கோயிலைச் செய்திருக்கிறார்கள்! கல்வெட்டுகள் அதை பாங்காக வெளிப்படுத்துகின்றன. மிகப் பெரிய கோயிலாதலால் உள்ளிருக்கும் உள்சுற்றுப் பிராகாரத்திலுள்ள சில சந்நதிகளையும், தெய்வத் திருவுருக் களையும் தரிசித்துவிட்டு பிறகு ஆதி கும்பேஸ்வரரை அடையலாம்.

முதற்பிராகாரமாகிய மூலவர் சுற்றுப் பிராகாரத்தின் கீழ் வரிசையில் தென் பகுதியில் அறுபத்து மூவரின் உற்சவ மூர்த்திகளும், வட பகுதியில் கால பைரவர், சுரகரேசுவரர், சாஸ்தா, கோவிந்த தீட்சிதரின் லிங்க உருவும், அவருடைய பத்தினி நாகம்மாளும் அருள்பொங்க வீற்றிருக்கின்றனர். இதற்கு அடுத்து சந்திரன், சூரியன் ஆகியோரின் திருவு ருவங்கள் உள்ளன. தெற்குத் திசையில் சைவ சமயாச்சார்யார்கள் நால்வரும், அறுபத்து மூவரும், சப்த கன்னியர்களும் உள்ளனர். மேற்குத் திசையில் விநாயகரும், தொடர்ந்து பிட்சாடனர், சுப்ரமணியர் இதையடுத்து தேஜோலிங்கம், அட்சய லிங்கம், கோடி லிங்கம் என சிவச்சக்தி சீராக பரவியிருக்கிறது. சுவாமி அம்பாளின் பள்ளியறையும், கிழக்குப் பகுதியில் கிராத மூர்த்தி எனும் வேடனாக வந்த சிவன் வில், அம்பு ஏந்தியவாறு தெற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். இவரே இத்தலத்தின் மூர்த்தியாவார்.

உட்பிராகாரத்தின் நடுநாயகமாக மூலவர் கும்பேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக விளங்குகிறார். இந்த லிங்க உருவே குடம் போன்று சாயலை கொண்டிருக்கிறது. காலக் கணக்குகளில் அகப்படாத மூர்த்தி நாம் உய்யும் பொருட்டு அமர்ந்திருப்பது பார்க்க நெஞ்சு விம்முகிறது. அருளமுதம் எனும் சொல்லே இத்தலத்திற்குரியதுதான். ஏனெனில் கும்பேஸ்வரரே அமுதக் குடத்தினுள் பேரருள் பெருகி பரவியிருக்கிறார். அமுதம் இருப்பதனால் மரணமிலாப் பெருவாழ்வு அளித்து தன் அருட்குடத்திற்குள் சேர்த்துக் கொள்கிறார். உலகத்தின் சகல வேத ஆகமத்திற்கும் ஆதார கும்பமாக இது விளங்குகிறது. எங்கெல்லாம் கும்பம் வைக்கப்படுகிறதோ அங்கு இந்த கும்பேஸ்வரர்தான் விரைந்தோடி வருகிறார். சந்நதியைவிட்டு நகர மனமில்லாமல் ஏதோ ஒரு சக்தி உந்த அத்தல சக்திபீட நாயகியான மங்களநாயகி சந்நதியை நோக்கி நகர்கிறோம்.

மங்களத்தை விருட்சம் போன்று வளர்ப்பதால் ஞானசம்பந்தப் பெருமான் அம்பாளை வளர் மங்கை என்று தேவாரப் பதிகத்தில் குறிக்கிறார். திருச்செங்கோட்டுத் தலத்தில் ஈசன் தம் பாதி சரீரத்தை கொடுத்ததுபோல இறைவர் முப்பத்தாறாயிரம் கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு அருளினார். அதனால் மந்திரப் பீடேஸ்வரி என்றும், மந்திரபீட நலத்தாள் எனவும் அழைக்கப்படுகிறாள்.

அம்பாளின் உடற்பாகம் திருமுடி முதல் திருப்பாத நகக்கணுவரை ஐம்பத்தோரு சக்தி வடிவ பாகங்களாக காட்சியளிக்கின்றன. ஆகவே மற்ற தலங்கள் ஒரு சக்தி வடிவத்தை பெற்றிருந்தால், இங்கு சகல சக்திகளையும் தன் திருவுருவத்தில் அமைந்த தலையாய சக்தி பீடமாக அம்பாளின் சந்நதி விளங்குகிறது. அனைத்து சகல பலன்களையும் அள்ளி வழங்குவதில் முதன்மையானவள். இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரால் இயற்றப்பட்ட இத்தல நாயக, நாயகியைப் பற்றிய அழகான கீர்த்தனையை இறைவன் முன்பு எழுதி வைத்துள்ளார்கள். வேறெங்கும் காண இயலாத கல் நாதஸ்வரம் இக்கோயிலில் உள்ளது. குறிப்பிட்ட விழாக்காலங்களில் இதற்கென்றே தனிப் பயிற்சி பெற்ற இசைக் கலைஞர் இதனை எடுத்து வாசிக்கிறார்.

சித்தர்களில் முதன்மையானவரான கும்பமுனி சித்தர் மங்களாம்பிகையையும், கும்பேசரையும் தியானித்து முக்தி பெற்றது இத்தலத்தில்தான். வெளிப் பிராகாரத்தில் இவர் அமர்ந்த தனிச் சந்நதியில் ஆதி விநாயகரை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். மொத்தம் பதினான்கு தீர்த்தங்களை தன்னகத்தே கொண்ட கோயில் இது. யுகாந்திரங்கள் கடந்த தலம், பல நூறு தெய்வத் திருவுருவங்கள் பொலிந்து விளங்கும் சந்நதிகள். மாமன்னர்களால் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்ட சிற்பங்கள், புராணங்கள் சொல்வதை அப்படியே தூணுக்குத் தூண் கொண்டு வந்த சிற்பிகளின் இறை பக்தி என்று மனம் இக்கோயிலை வியந்து வியந்து மாய்ந்து போகிறது.

‘‘கும்பகோணமாம் குபேரப் பட்டணமாம்’’ என்று ஒரு வழக்கு மொழி உண்டு. இத்தல நாதரை தரிசிக்க குபேர வாழ்வு கிட்டும் என்பதும் திண்ணம். கும்பகோணத்திற்கு சென்னை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர் என்று பல்வேறு நகரங்களிலிருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன.

கிருஷ்ணா