Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காசி விஸ்வநாத், வாரணாசி :ஜோதிர்லிங்க தரிசனம்

பாரத தேசத்தில் எத்தனையோ புனிதத் தலங்களும்,புராணத் தலங்களும் இருந்தாலும் காசிக்கு நிகரான ஒரு தலம் இல்லை. காசி வேத வேதாந்த விசாரங்களுக்கும் ஞானப் புலமைக்கும் பெயர் பெற்ற பூமி.சைவர்களுக்கும் காசி மிகச் சிறந்த தலம்வைணவர்களுக்கும் காசி சிறந்த தலம். இங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் மிகவும் புகழ்வாய்ந்த கோயில் .சுவாமி திருநாமம் விஸ்வநாதர். விஸ்வம் என்பது பரந்த உலகத்தையும், நாதர் தலைவன் என்ற தன்மையையும் குறிக்கும். விஸ்வநாதர் என்றால் இந்த பரந்த உலகத்தின் நாயகன், ஆதி நாயகன், ஆதி ஜோதி என்ற பொருள் வரும். வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்குச் செல்ல வேண்டும் என்பது நம் தேசத்து ஆத்திகர்களின் விருப்பம். வாழ்நாளின் அந்திமக் காலத்தை காசியில் கழிப்பதற்கு என்றே செல்லுகின்ற மரபு நம் நாட்டிலே உண்டு. இங்கு இறந்து போகும் தருவாயில் உள்ள ஒவ்வொரு உயிர்களின் காதிலும் ராம நாமமாகிய தாரக நாமத்தை சிவபெருமானே ஓதுவதாக ஐதீகம்.

இந்த கோயிலும்கூட பல்வேறு படையெடுப்புக்களுக்கு ஆளாகி இடிக்கப்பட்டு மறுபடியும் 1780 ஆம் ஆண்டில் மராட்டியப் பேரரசின் இந்தூர் இராணி அகில்யாபாய் ஓல்கர், கட்டி எழுப்பினார். 1835ஆம் ஆண்டில் பஞ்சாப் மன்னர் மகாராஜா இரஞ்சித் சிங், ஒரு டன் தங்கத்தை இந்த கோயிலுக்கு வழங்கினார். கங்கை ஆற்றின் தசாஸ்வமேத படித்துறையிலிருந்து ஒரு குறுகிய தெரு வழியாக காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்கிறது. தற்போது இந்த கோயில் மிகச் சிறந்த முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டு யாத்திரிகர்களுக்கு சௌகரியமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சிவலிங்கம் ஜோதிர்லிங்கங்களில் ஒன்று.

கோயில் அமைப்பு

இக்கோயிலின் உயரம் 51 அடிகளாகும். கோயிலின் உள்ளே நேபாள மன்னரால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய மணி தொங்கவிடப்பட்டு இருக்கிறது. இதன் சத்தம் நீண்ட தூரம் கேட்கும்.. காலையிலும் மாலையிலும் விசுவ நாதருக்கு பூசைகள் நடத்தப்பெறுகின்றன. இங்கு பிரம்ம சொரூபமாக முப்பத்து முக்கோடி சிவலிங்கங்கள் உள்ளன. அவற்றில் சிறந்தது ஜோதிர் லிங்கமான ஸ்ரீவிஸ்வநாதர். கங்கையின் மேற்கு கரையில் மணிக்கர்ணிகாத்துறை அருகில் குறுகிய கடை தெருவில் உள்ளது ஸ்ரீவிஸ்வநாதர் ஆலயம்.விஸ்வநாதர் ஆலயத்தில் ஈசான ருத்ரர் தனது சூலத்தால் கிணறு ஒன்றை உண்டாக்கி சிவனை வழிபட்டார் இதில் நீராடுவோர் ஞானம் பெறுவர் என்பது சிவனாரின் வரம். எனவே இது ஞானவாவி எனப்படுகிறது இங்கு அமர்ந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பது சிறந்தது. விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் தண்டபாணிஸ்வரர், அவி முக்தீஸ்வரர், வைகுண்டேஸ்வரர், பார்வதி ஆனந்த பைரவர், போக அன்னபூரணி, சத்திய நாராயணர்;, சனீஸ்சரேஸ்வரர், நிகும்பேஸ்வரர், கபிலேஸ்வரர், கணபதி, விரூபாக்ஷி, கௌரி, விரூபாக்ஷர், வியாசேஸ்வரர், குபேரேஸ்வரர், விஜய லிங்கர், மற்றும் அவிமுக்த விநாயகர் போன்ற அனைத்து தெய்வங் களையும் தரிசிக்கலாம். ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், துர்க்கை, சண்டிகேஸ்வரர், முருகன், பைரவர் போன்ற பரிவார தேவதைகளும் உண்டு. திருக்கோயிலின் பின்புறம் ஆதி விஸ்வநாதன் சன்னதி உள்ளது. இங்கு ஒரு பெரிய நந்தியும் கிணறும் உண்டு.

ஆலய பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் சாட்சி கணபதி. இவருக்கு எதிரே சகஸ்ர லிங்கம் காட்சி தருகிறார். இங்குள்ள ஆஞ்சநேயர் சந்நதிக்கு பின்புறம் பழமையான ஆலமரம் ஒன்று கம்பீரமாக இருக்கிறது. பிரயாகை, காசி, கயா ஆகியவற்றை இணைப்பது இந்த விருட்சம். இதன் வேர்பாகம் பிரயாகையிலும், மத்திய பாகம் காசியிலும், நுனி பாகம் கயாவிலும் உள்ளது.தெற்கில் உள்ள நுழைவாயில் சிம்ம துவாரம் எனப்படும். இந்த வெளிப்பகுதி வெள்ளித் தகடுகளால் செய்யப்பட்டுள்ளது. விஸ்வநாதரின் கர்ப்ப கிரகத்திற்கு எந்த வாயில் வழியாகவும் தரிசிக்க செல்லலாம். நான்கு வாயில்கள் உண்டு. கர்ப்ப கிரகத்தின் வடகிழக்கு மூலையில் மூன்றுக்கு மூன்று அடி அளவு உள்ள தொட்டி போன்ற அமைப்பில் சுயம்புவான ஜோதிடர் லிங்கமாக விஸ்வநாதர் காட்சி அளிக்கின்றார். பக்தர்கள் தங்கள் கரங்களால் கங்கைநீரை ஊற்றி மலர் தூவி தொட்டு வணங்கலாம். காசி விஸ்வநாதருக்கு வருடத்தில் இரண்டு நாட்கள் பஞ்சமுக அலங்காரம் செய்யப்படும்.

ஸ்ரீ விஸ்வநாதருக்கு ஆறு கால பூஜை நடக்கிறது. அதிகாலை 4 மணிக்கு மயான சாம்பலைக் கொண்டு அபிஷேகம் நடை பெறும். பகலில் ருத்ரம் சமகம் சொல்லி அபிஷேகம் நடைபெறும். மூன்று மணிக்கு சந்தியா கால பூஜை நடைபெறும். பல நெய் தீபங்கள் கொண்ட இந்த ஆரத்தி அற்புதமாக இருக்கும். இரவு 8 மணிக்கு சப்தரிஷி பூஜையும் ஒன்பது மணிக்கு காணலாம். சப்தரிஷி பூஜை என்பது ஏழு அர்ச்சகர்கள் (பண்டாக்கள்) தங்களை விசுக்களாக பாவித்து கொண்டு சிவபெருமானைச் சுற்றி அமர்ந்து பூஜை செய்கின்றார்கள். இரவு 10 மணிக்கு சயன ஆரத்தி எனப்படும் அர்த்த ஜாம பூஜை நடைபெறும். சிவராத்திரி அன்று காசி ராஜ பரம்பரை ஆராதித்த பிறகு தான் ஈசனை மற்றவர்கள் வழிபடலாம். விஸ்வநாதருக்கு வில்வம் ஊமத்தக்காய் எருக்கம் பூ மாலை துலுக்க சாந்தி அணிவித்து இனிப்பு நைவேத்தியத்துடன் தீபாராதனை செய்கிறார்கள்.காசி விசாலாட்சி கோயில் கங்கை ஆற்றின் மீர் படித்துறையில் அமைந் துள்ளது. இக்கோயில் 1893-இல் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் கட்டப் பெற்றது. இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஆதியில் காசி விசுவநாதர் கோயிலில் விசாலாட்சிக்கு என தனி சந்நதி இல்லை. விசாலாட்சி, அன்னபூரணி ஆகிய தேவியர் இருவரும் காசி விசுவநாத லிங்கத்தில் ஐக்கியமானவர்கள் என்பது நம்பிக்கை. ஆகையால் தனிக் கோயில்கள் இல்லை. பி‌ன்ன‌ர் அன்னபூரணி கோயில் 18ஆம் நூற்றாண்டில் பேஷ்வா பாஜிராவால் கட்டப்பெற்றது. விசாலாட்சிக்கு தனிக்கோவில் வேண்டும் என்று எண்ணிய தமிழர்களான நாட்டுக்கோட்டை நகரத்தார், 1893-ல் ஒரு இடம்வாங்கி புதியதோர் கோயிலை கட்டி விசாலாட்சியை பிரதிட்டை செய்தனர். பின்னர் கி.பி 1908-ல் கோயிலை விரிவுபடுத்தி, உற்சவ மண்டபம், மடைப்பள்ளி ஆகியவற்றை உருவாக்கி, விநாயகர், தண்டாயுதபாணி, நவக்கிரகங்கள் ஆகிய பரிவார தெய்வங்களை பிரதிட்டை செய்து கும்பாபிடேகம் செய்துள்ளனர். விசாலாட்சிக்கு உற்சவ மூர்த்தியும் வாகனங்களும் தங்க, வெள்ளி அங்கிகளும் ஆபரணங்களும் உள்ளன. விசாலாட்சி திருவுரு தமிழ்நாட்டில் செய்யப்பெற்றமையால் தமிழ்நாட்டு பாணியில் அழகுற உள்ளது.

நாமே அபிஷேகம் செய்யலாம் காரணம் இதுதான்

வடக்கேயுள்ள ஜோதிர்லிங்கத் தலங்களில் பக்தர்களே அபிஷேகம் செய்யலாம் யோகிகள், தங்கள் சிரசிலுள்ள சகஸ்ரார கமலத்தில் (ஆயிரம் இதழ் தாமரை போன்றது) உள்ள சந்திரமண்டலத்தில், சிவனை ஜோதி வடிவாக தியானம் செய்வார்கள். அப்போது, சந்திரமண்டலத்தில் இருந்து அமிர்தம் கொட்டும். அவர்கள் பரமானந்த நிலையில் திளைப்பார்கள். இதன் காரணமாக, உலக வடிவான ஜோதிர்லிங்கம் குளிரும். அது குளிர்ந்தால் உலகமே குளிரும். அதாவது, மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு இது போன்ற யோகம் சாத்தியமல்ல. நாம் செய்யும் யோகா எல்லாம் உடல்நலத்துக்காக மட்டுமே. லிங்கம் குளிர்ச்சியாக இருக்க வேண்டுமே என்பதற்காகத்தான் வடக்கேயுள்ள ஜோதிர்லிங்கத் தலங்களில் பக்தர்களே அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

சிறப்பு திருவிழாக்கள்:

தை அமாவாசை, ஆடி அமாவாசை, தீபாவளி (அன்னக்கொடி உற்ஸவம்), ஹோலிப் பண்டிகை, சிவராத்திரி, நவராத்திரி. இக்கோயிலில் பூஜை மணி அடிக்கும் சத்தம் கேட்கும்போது மக்கள் அனைவரும் தலையைக் குனிந்துகொள்கின்றனர். பூசை நடக்கும்போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும், மேளதாளங்களும் வாசிக்கப்படுகிறது. வாரணாசியில் பாயும் கங்கை ஆற்றின் கரையில் அமைந்த காசி விசுவநாதர் கோயிலை ஒட்டி பல படித்துறைகள் அமைந்துள்ளது. 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. அவைகளில் சிறப்பானது:

தசவசுவமேத படித்துறை

அரிச்சந்திரன் படித்துறை

மணிகர்ணிகா படித்துறை

லலிதா படித்துறை

ஹரனின் படித்துறை

கங்கா ஆரத்தி

வாரணாசியின் கங்கை ஆற்றின் கரையில் அமைந்த தசவசுவமேத படித் துறையில் நாள்தோறும் மாலை நேரத்தில் கங்கை ஆறுக்கு ஆரத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நிகழ்வை கங்கா ஆரத்தி என்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கங்கா ஆர்த்தியை ஆர்வமுடன் பார்க்க வருகின்றார்கள்.

கோயில் திறந்திருக்கும் நேரம்

காலை 2.30 மணிமுதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். அமாவாசை போன்ற விசேஷ தினங்களில் நாள் முழுதும் திறந்திருக்கும்.

எப்படி அடைவது?

விமானம்,பேருந்து, ரயில் வசதிகள் உண்டு.வாரணாசி சந்திப்பு (பெரும்பாலும் வாரணாசி கான்ட் என்று குறிப்பிடப்படுகிறது) இந்தியாவின் பல் வேறு பகுதிகளுடன் நகரத்தை இணைக்கும் முதன்மை ரயில் நிலையம் ஆகும். நீங்கள் நிலையத்திற்கு வந்தவுடன், உங்களை கோயிலுக்கு அழைத்துச் செல்ல டாக்ஸிகள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் மற்றும் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் உடனடியாகக் கிடைக்கும். வாரணாசி ஒரு விரிவான சாலை வலையமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் உத்தரப் பிரதேசம் மற்றும் அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட் டுள்ளது. அரசு நடத்தும் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் பயண சேவைக்கு உண்டு. தங்கும் விடுதிகள் ஏராளமாக உண்டு.