Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்

கண்ணனை நினைத்தால் நிம்மதி கிடைக்கும்

கண்ணனின் பெருமைகளைப் பாடாத கவிஞர்கள் இல்லை. காவியங்கள் இல்லை. புராணங்கள் இல்லை. வேதங்களை தொகுத்த வியாசமகரிஷி ஐந்தாவது வேதமாக மகாபாரதத்தையும் எழுதினார்.

நீடாழி உலகத்து மறை நாலோடு ஐந்து என்று நிலை நிற்கவே

வாடாத தவ வாய்மை முனி ராசன் மாபாரதம் சொன்ன நாள்

ஏடாக வட மேரு வெற்பாக வங் கூர் எழுத்தாணி தன்

கோடாக எழுதும் பிரானைப் பணிந்து அன்பு கூர்வாம் அரோ.

மிகச் சிறந்த பிரம்ம சூத்திரத்தையும் தொகுத்து இயற்றினார். இத்தனை சாதனைகளைச் செய்தும் அவர் மனம் திருப்தி அடையவில்லை.

உறியடித் திருவிழா

“உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார் “பாடல் காட்சியை அப்படியே பல ஊர்களிலும் நடைமுறைக் காட்சியாக நாம் காணலாம். கிருஷ்ண ஜெயந்தியின் போது உறியடி விழா பல ஊர்களில் நடக்கும். இரண்டு கம்பங்கள் நட்டு, மேலே பால், வெண்ணை, நெய், தயிர் பானைகள் தொங்கும். வழுக்கு மரத்தில் ஏறி அடிக்க வேண்டும். ஒரு நீண்ட குச்சியை வைத்து மரம் ஏறி அதைச் செய்ய முயலும் போது நான்கு புறங்களில் இருந்தும் தண்ணீரை வாரி இறைப் பார்கள். மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்பார்கள். மஞ்சள் வஸ்திரத்தை அணிந்து கொண்டு, துளசி மாலையை சூட்டிக் கொண்டு, இளைஞர்கள் உற்சாகமாக இந்த கோலாகலத்தில் கோகுலாஷ்டமி கொண்டாடுவது பெரியாழ்வார் காலத்திலிருந்து இருக்கிறது. வரகூர் உறியடித் திருவிழா விசேஷமானது.

வரகூர்

வரகூர், தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள சிறு கிராமம். வரகூர் மக்கள், இங்குள்ள வெங்கடேசப் பெருமாளை தங்கள் குலதெய்வமாகக் கொண்டுள்ளனர். இங்கே, பெருமாள் சந்நதியில், வெள்ளிக்காப்பு வைத்து பிரார்த்தனை செய்துகொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால் பலரும் வருகின்றனர். ஒருகாலத்தில், பூபதிராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் வரகூர் என்றானது. அதாவது நாராயண தீர்த்தர் எனும் அடியவர், பல க்ஷேத்திரங்களுக்குச் சென்று தரிசித்து வந்தார். அப்போது இந்த ஊருக்கு வரும் போது அவருக்கு வழி தெரியவில்லை. அந்த சமயத்தில், பெருமாள், வெண்பன்றியாக வந்து வழிகாட்டியதுடன் தன்னுடைய திருக்கோலத்தையும் காட்டியருளினார். வராகம் என்றால் பன்றி. இதையடுத்து இந்த ஊர், வராகூர் என்று அழைக்கப்பட்டு, பின்னர் வரகூர் என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். இங்கு கிருஷ்ண ஜெயந்தி 10 நாள்கள் நடைபெறும். அதில் உறியடி உற்சவன் ஏக விஷேஷம். வ்வொரு நாளும் பெருமாள் ஒவ்வொரு விதமான கோலத்தில் காட்சி தருவார்.

கிருஷ்ண அவதாரத்தில் எது விசேஷம்?

உமத் பாகவதத்தில் கண்ணனுடையபால லீலைகள் எல்லாமே சிறப்புதான். ஆனால் எந்தநிகழ்ச்சி ஆழ்வார்களை மயக்கியது என்ற ஒரு விவாதம் உண்டு. ஒவ்வொன்றுமே ஒரு தத்துவார்த்த நிகழ்வுதான். பூதனையிடம் பால் குடித்தது, சகடாசூரனை உதைத்து அழித்தது, தேனுகாசூரனை ஒழித்தது, கேசி என்கிற குதிரை முகம் கொண்ட அசுரனை முடித்தது, காளிங்கனின் தலைமீது நர்த்தனம் ஆடியது என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் கண்ணன்வெண்ணை திருடிவிட்டான் என்று சொல்லி, ஒரு பழைய உரலில் வலிமை இல்லாத குறுங்கயிற்றால் யசோதை கட்ட, உலகத்தை எல்லாம் கட்டியவன், ஒரு தாயின் முயற்சிக்கும் செயலுக்கும் கட்டுப்பட்டு நின்றானே, அதைத்தான்

கொண்டாடுகிறார்கள்.

பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய

வித்தகன் மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்

மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு

எத்திறம்! உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே

இப்படியும் ஒரு எளிமையா? (சௌலப்யம்) என்று நினைத்து நினைத்து மூவாறு மாதம் அதாவது 18 மாதம் நம்மாழ்வார் மயங்கியே இருந்தாராம்.