Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கண்ணனுக்கு பிடித்த கனகதாசர்!

பகுதி 1

கிராமப்புர சாலை ஒன்றில், மத்வ மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் பல்லக்கில் போய்க் கொண்டிருந்தார். அவருடைய இஷ்ட தெய்வம், உடுப்பி கிருஷ்ணர். சீடர்களும் அடியார்களும் பலர் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். சாலையின் இரு பக்கங்களிலும் ஏராளமான துளசிச் செடிகள், காடுபோல நெருங்கி வளர்ந்திருந்தன. பச்சைப் பசேல் என வளர்ந்திருந்த துளசிச் செடிகளைப் பார்த்ததும், சுவாமிகளின் மனம் பரவசப்பட்டது. அந்தத் துளசியைக் கொண்டு, உடுப்பி கிருஷ்ணரை வழிபட விரும்பினார் அவர்; உடனே, மானசீகமாகவே ஏராளமான துளசியைப் பறித்து, பெரிய அழகான மாலை ஒன்றைத் தொடுத்தார். மானசீகமாகத் தொடுத்த மாலையை மானசீகமாக உடுப்பி கிருஷ்ணருக்கு, இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் தொங்கும் படியாக அணிவித்தார், சுவாமிகள்.

அணிவிக்கப்பட்ட அந்த மாலை, உடுப்பி கிருஷ்ண விக்கிரகத்தின் இருபக்கங்களிலும் சமமாகத் தொங்கவில்லை. மனம் வருந்திய சுவாமிகள், மாலையை எடுத்து சரிசெய்து, பகவானுக்கு இரு பக்கங்களிலும் சரிசமமாக இருக்கும்படியாக அணிவித்தார். ஊஹும்! சரியாக அமையவில்லை. பலமுறை முயற்சி செய்தும், சரியாக அமையவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார்சுவாமிகள்; ‘‘ப்ச்! நம் பக்திக்குறைவினால்தான், இப்படி நடக்கிறது போலும்! இல்லாவிட்டால், கண்ணன் ஏன் அடியேன் மாலையை ஏற்க மறுக்கப் போகிறார்?’’ என எண்ணி வருத்தப்பட்டார். போய்க் கொண்டிருந்த பல்லக்கு, துளசி வனத்தின் வழியாகப் போனது. அப்போது தூரத்தில் இருந்து, ஆடு மேய்ப்பவர் ஒருவர், பல்லக்கை நோக்கி ஓடி வருவது தெரிந்தது. அருகில் நெருங்கிய அவர், ‘‘சுவாமி...! சுவாமி..!.’’ என அழைத்தார். அதற்குள் வியாசராஜரின் சீடர்களும், கூட இருந்தவர்களும், ‘‘யார் நீ? சுவாமிகள் போய்க்கொண்டிருக்கும் போது, தடங்கல் செய்கிறாயே! விலகிப்போ!’’ என்றார்கள்.

ஆடு மேய்ப்பவர், விடுவதாக இல்லை; கூடவே ஓடினார். ஏதோ கூச்சல் கேட்கிறதே என்று வெளியே எட்டிப்பார்த்த வியாசராஜர், ‘‘பல்லக்கை நிறுத்துங்கள்!’’ என்றார். பல்லக்கு நின்றதும், ‘‘என்னப்பா! ஏன் கூடவே ஓடி வருகிறாய்? என்ன சொல்ல விரும்புகிறாய்? சொல்!’’ என்றார் வியாசராஜர். ஆடு மேய்ப்பவர் சொல்லத் தொடங்கினார்; ‘‘சுவாமி! தாங்கள் உடுப்பி கிருஷ்ணரின் கழுத்தில், துளசி மாலையைச் சரியாக அணிவிக்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்கள். நம் உடுப்பி கிருஷ்ணர் கையில் மத்து இருக்கிறது அல்லவா? தாங்கள் சாற்றும் துளசி மாலை, அந்த மத்தில் மாட்டி தடுக்கப்படுகிறது. ஆகையால் மத்தில் மாட்டாமல் தாங்கள் மாலையைச் சாற்றினால், அது சரியாக இருக்கும். தாங்கள் அப்படிச் செய்ய வேண்டும் என்று, பணிவோடு வேண்டிக்கொள்கிறேன்என்றார், ஆடு மேய்ப்பவர். சுவாமிகள் வியந்தார்;

‘‘நாம் செய்வது மானசீக பூஜை! இது நம்முடன் இங்கு இருப்பவர்களுக்குக் கூடத் தெரியாது. மாலை சாற்ற முடியாமல், மனதில் கஷ்டப்படுவது இந்த ஆடுமேய்ப்பவருக்கு எப்படித் தெரிந்தது?’’ என்று வியந்தார். வியந்தது மட்டுமல்ல! அதை ஆடு மேய்ப்பவரிடத்துலேயே கேட்டார் சுவாமிகள். அதற்கு பதில் சொல்லத் தொடங்கினார்; ‘‘சுவாமி! அடியேனும் மானசீக பூஜை செய்கிறேன். அதே உடுப்பி கண்ணனின் திருவடிகளில் இதே துளசிமாலையை, அடியேனும் சாற்றி வருகிறேன்.

அப்போதுதான், தாங்கள் துளசி மாலையைப் பகவானுக்குச் சாற்ற முடியாமல் கஷ்டப்படுவதை உணர முடிந்தது’’ என்றார் ஆடுகளை மேய்ப்பவர். இந்த ஆடு மேய்ப்பவர்தான், பிற்காலத்தில் வியாசராஜரின் பிரபலமான சீடர்களில் ஒருவரான கனகதாசர் என்பவராக ஆனார். கனகதாசர்! அடியார் உள்ளங்களிலும் தெய்வீகப் பாடல்களைப்பாடும் பக்தர்களின் உள்ளங்களிலும் இருக்கும் உத்தமர். மும்பை - தார்வாட ஜில்லா - பங்காபுரத் தாலுகாவைச் சேர்ந்த ‘பாட’ எனும் கிராமத்தில், ஆடு மேய்ப்பவர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

பரம்பரையாக முன்னோர்கள் செய்து வந்ததைப் போலவே, ஏராளமான ஆடுகள் வைத்து, அவற்றைப் பராமரித்து வந்த அவர் பெயர், பீரேகௌடா (வீரைய கவுண்டர். நாம் வீரையா என்றே பார்க்கலாம்) வீரையாவின் மனைவி, பச்சம்மாள். கணவரும் மனைவியும் கருத்தொருமித்து, ஒற்றுமையாக நல்லறம் நடத்தினார்கள். வீடு தேடி வரும் விருந்தினர்களை மனம் கோணாமல், முகம் கோணாமல் உபசரித்தார்கள். நிறைய செல்வம் இருந்தாலும், மிகுந்த பணிவுடன் நடந்து, தெய்வ பக்தியிலும், அடியார் பக்தியிலும் தலைசிறந்து விளங்கினார்கள். எந்த நேரத்தில் யாருடன் பேசினாலும் வார்த்தைகளால்கூட, யாரையும் புண் படுத்தாத நல்லொழுக்கம் கொண்டவர், வீரையா.

வீரையாவின் நல்லொழுக்கமும் நன்னடைத்தைகளும் கேட்டு அறிந்த ‘ஆனைகொந்தி’ எனும் சமஸ்தான அரசர், வீரையாவை அழைத்துத் தன் அரண்மனையில் ஓர் அதிகாரியாக நியமித்துக் கொண்டார். அப்போது வீரையாவின் அமைதியான தோற்றமும் நல் ஒழுக்கமும் கண்டு, ஸ்ரீநிவாஸாசாரியார் என்ற வைணவ வேதியர் ஒருவர், வீரையாவிற்கு சங்கு, சக்கர முத்திரைகளைச் செய்தார். அது முதல் வீரையா வைணவ சம்பிரதாயத்தைக் கடைபிடித்து வந்தார். திருப்பதி வெங்கடேசப் பெருமாளைத் தன் குலதெய்வமாகக் கொண்டார். ஊரே பாராட்டி மகிழ்ந்தது. வீரையாவுக்கும் பச்சையம்மாளுக்கும் செல்வ வசதி, சிறந்த பதவி, புகழ் எனப்பலவும் இருந்தாலும்,பிள்ளையில்லாக் குறை அவர்களை வாட்டியது.

போதாக்குறைக்கு முதுமைப்பருவம் அவர்களை எட்டிப்பார்க்கும் நேரம். வீரையா தன் மனைவியுடன் திருப்பதி சென்று பெருமாளிடம் முறையிடத் தீர்மானித்தார். ஒரு நல்லநாளில் கணவரும் மனைவியுமாக மஞ்சள் ஆடை உடுத்தி, கோவிந்த நாம சங்கீர்த்தனம் புரிந்தபடியே திருப்பதி சென்று, பெருமாளிடம் முறையிட்டார்கள். பெருமாளின் அழகில் தங்களை மறந்தார்கள். சில நாட்கள் அங்கேயே தங்கி, பாபநாசம் முதலான தீர்த்தங்களில் எல்லாம் நீராடி, திருவேங்கடத்தானை முறையே வழிபாடு செய்தார்கள்.

ஒருநாள் இரவு வீரையாவின் கனவில் திருப்பதி பெருமாள் காட்சியளித்து, தம் கையிலிருந்த பிரசாதத்தை நீட்டி, ‘‘பக்தா! இதோ! பிரசாதம் தருகிறேன்.. இதை நீ பாதி உன் மனைவி பாதியாக அருந்துங்கள்! உங்களுக்கு ஓர் ஆண் மகன் பிறப்பான்’’ என்றுகூறி மறைந்தார். கனவு கலைந்தது. விழித்தெழுந்த வீரையா, தன் கையிலிருந்த பெருமாள் பிரசாதத்தைக் கண்டு வியப்புற்றார். மனைவியை எழுப்பித் தன் கனவைப் பற்றி விரிவாகச் சொல்லி.

‘‘இதோ! பார்! பெருமாள் தந்த பிரசாதம்’’ என்று காட்டினார். மனைவி மகிழ்ந்தாள். பிறகு இருவருமாகப் பிரசாதத்தை ஒரு தூய்மையான இடத்தில் வைத்துவிட்டுப் புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி, வெங்கடாசலபதியைத் தரிசித்து, பிரசாதத்தை ஆளுக்குப் பாதியாக அருந்தினார்கள். மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கி, அதன் பிறகு ஊர் திரும்பினார்கள். திருப்பதியில் இருந்து திரும்பியதும், பெருமாள் பிரசாத மகிமையால், பச்சையம்மாள் கருவுற்றாள். பத்தாவது மாதம் இளம் சூரியனைப் போன்றதொரு ஆண் குழந்தையைப் (16ம் நூற்றாண்டு) பெற்றாள். இதற்கு விழா கொண்டாடி அன்னதானம், தங்கதானம் உட்படப் பல தானங்கள் செய்தார், வீரையா. பத்தாவது நாள், குழந்தையைத் தொட்டிலில் போட்டுப் பெயரிடும் விழாவையும் கொண்டாடினார், வீரையா. குழந்தைக்குத் ‘திம்மப்பன்’ எனப் பெயரிட்டார்கள். திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்குத் ‘திம்மப்பன்’ என்று ஒரு பெயருண்டு.

அந்தப் பெருமாள் தந்த பிரசாதத்தால் பிறந்த குழந்தை என்பதால், குழந்தைக்கு அப்பெயரை இட்டார்கள். திம்மப்பன், நடைபழகும் போதே கொடையும் பழகினான். அந்தச் சிறுவயது முதலே அடுத்தவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனாக விளங்கினான். தர்மதேவதையின் அவதாரமல்லவா? தர்மதேவதையே திம்மப்பனாக வந்து (கனகதாசராக) அவதரித்தார், என ஸ்ரீ மத்வாச்சாரியார் தாம் எழுதிய `‘மஹாபாரத தாத்பர்ய நிர்ணயம்’’ என்ற நூலில் விவரித்திருக்கிறார். திம்மப்பனுக்கு ஐந்து வயதானபோது, வீரையாவும் பச்சையம்மாளும் இறைவனடி சேர்ந்தார்கள்.

திம்மப்பன், கனகனாக மாறிய வரலாறு

ஐந்து வயதிலேயே பெற்றோரை இழந்த திம்மப்பன், அதன் பின் ஏழு வருடங்கள் ஆதரவளிக்கும் உறவுகளின்றி அல்லல்பட்டான். ஆனால், திம்மப்பனின் நற்குணங்களை அறிந்த ஊர் மக்கள், மிகுந்த அன்போடு அவனை ஆதரித்தார்கள். ஒருநாள்... எதிர்பாராவிதமாகத் திம்மப்பனுக்கு ஏழு கொப்பறைகள் (வாய் அகன்ற பெரும் பாத்திரங்கள்) தங்கம் புதையலாகக் கிடைத்தது. அனைத்தும் பொற்காசுகள். அனைவரையும் மயக்கும் அவ்...வளவு தங்கத்தைப் பார்த்தும், திம்மப்பன் மயங்கவில்லை. அவ்வளவு பொற்காசுகளையும் ஏழை எளியவர்க்கு வழங்கினான். அவற்றைப் பெற்றவர்கள் மகிழ்ந்தார்கள். அவர்களின் மகிழ்ச்சியையும் முக மலர்ச்சியையும் கண்டு மனம் மகிழ்ந்தான் திம்மப்பன். கனக (தங்க) த்தில் கடுகளவுகூட உள்ளம் வைக்காத திம்மன், அன்று முதல் ‘கனகன்’ என அழைக்கப்பட்டான்.

வயது பதினாறு ஆனது. குணத்தாலும் கனகன் எனும் பெயர் பெறும் அளவில் கனகனின் நற்குணங்கள் வளர்ந்தன. பரந்த நெற்றி, பெருத்த தோள்கள், வீரம், களங்கமற்ற உள்ளம், பரோபகார சிந்தை, உண்மையைக் கடைபிடித்தல், அன்பு - எனப் பலவற்றிலும் சிறந்து விளங்கிய கனகனைக் கண்டால், தீயவர்கள் எல்லாம் கனகன் பார்வையில் படாமல் விலகினார்கள். தீயவர்கள் ஒதுங்கிய அந்தக் காலத்தில், நல்லவர்கள் எல்லோரும் கனகனைத் தேடி வந்தார்கள்.

நல்லவர்கள் அனைவரும் தேடி வந்த கனகனைத்தேடி, தெய்வம் வரத் தீர்மானித்தது. ஒருநாள்... கனகன் தூங்கிக் கொண்டிருந்த போது, கனகன் கனவில் ஆதிகேசவ சுவாமி ஒரு வேதிய வடிவில் தோன்றினார். அந்த ஊரில் ஓரிடத்தைச் சுற்றிக் காட்டி, ‘‘கனகா! இந்த இடத்தில் ஆதிகேசவ விக்கிரகம் இருக்கிறது. அதை எடுத்து ‘காகி நிலை’ என்ற ஊருக்குக் கொண்டு சென்று, அங்கு பிரதிஷ்டை செய்!’’ என்றுகூறி மறைந்தார். பொழுது விடிந்ததும் கனகன் தன் கனவைப்பற்றி, தன்னைச் சுற்றியிருந்த நல்லவர்களிடம் கூறினான். அனைவரும் வியந்து ஆதிகேசவ சுவாமி கனவில் குறித்துச் சொன்ன இடத்திற்குப் போய்த் தோண்டிப் பார்த்தார்கள். ஆதிகேசவ சுவாமியின்அழகான விக்கிரகம் ஒன்று கிடைத்தது.

பலசாலிகளான நான்கு பேர்கள் ஒன்றாகச் சேர்ந்து, தூக்க வேண்டிய அளவிற்குப் பெரும் விக்கிரகமாக இருந்த அதை, கனகன் மட்டுமே தூக்கிக் கொண்டு ‘காதிநிலை’ என்ற ஊருக்குச் சென்று, அந்த ஊராரிடம் நடந்த அனைத்தையும் சொன்னான். அந்த ஊர்க்காரர்கள் பெரும் மகிழ்ச்சியோடு, ‘‘நாங்கள் எல்லோரும் எல்லா உதவிகளையும் செய்கிறோம். சுவாமியே சொன்னபடி இங்கேயே பிரதிஷ்டை செய்யுங்கள்!’’ என வேண்டினார்கள். கனகன் மறுப்பானா என்ன? அந்த ஊரிலேயே ஆதிகேசவசுவாமியைப் பிரதிஷ்டை செய்து, பூஜை, நைவேத்தியங்கள் எல்லாம் தடங்கலின்றி நடைபெற, வேண்டிய ஏற்பாடுகளையும் செய்துதிரும்பினான்.

கனகனுக்கு மணப்பருவம் வந்தது. வந்து சேர்ந்த உற்றாரெல்லாம் தகுந்த கன்னிகையாகப் பார்த்துக் கனகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். இல்லறம் நல்லறமாக நடந்தது.

எல்லோரும் கொண்டாடும்படியாக நடந்து கொண்டான், கனகன். அதைப் பார்த்த உற்றாரும் ஊராரும், ‘‘இவன் தந்தையைப் போலவே நற்குணங்கள் வாய்க்கப் பெற்றவன்’’ என்று புகழ்ந்தார்கள். கூடவே ‘கனக நாயகன்’ என்ற பட்டத்தையும் சூட்டினார்கள். கனகன் புகழ் ‘ஆனைகொந்தி’ என்ற சமஸ்தானத்தின் அரசருக்கு எட்டியது. அவர் கனகனை அழைத்து, ‘பங்காபுர’ப் பகுதிக்கு அதிபதியாக நியமித்தார்.

‘‘இதுவும் ஆதிகேசவ சுவாமியின் அருள்தான்’’ என்று எண்ணிய கனகன், அவர் அளித்த பதவியை ஏற்றான். பங்காபுரத்தில் ஆதிகேசவ பெருமாளுக்குப் பெரியதோர் ஆலயத்தைக் கட்டினான். தினப்பூஜை, மாத விழா, ஆண்டு விழா என அனைத்தும் நடப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்தான். அன்னதானம், சொர்ணதானம், ஆடைதானம் முதலானவைகளையும் செய்தான். ஊரார் அனைவரும் கனகனைக் கொண்டாடினார்கள். ஊரார் கொண்டாடும்போது, பெருமாள் சும்மாயிருப்பாரா? அந்த ஊர்க்காரர்கள் அனைவர் கனவிலும் ஒரே நேரத்தில் திருப்பதி பெருமாள் காட்சியளித்தார். ‘‘திருப்பதியில் கொண்டுவந்து செலுத்த வேண்டிய காணிக்கைகள் எல்லாவற்றையும் இனிமேல் கனகனிடம் செலுத்தலாம்’’ என்றுகூறி மறைந்தார்.

ஒரே நேரத்தில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கனவு வந்ததில், அனைவரும் வியந்தார்கள்; கனகனும் ஆச்சரியப் பட்டான். எல்லோரும், அவரவர்கள் திருப்பதி பெருமாளுக்குச் செலுத்த வேண்டிய காணிக்கைகளைக் கனகனிடம் கொண்டு வந்து சமர்ப்பித்தார்கள். கனகனோ, ‘‘திருப்பதி பெருமாள் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று’’ என்று எண்ணி, தன்னிடம் சமர்ப்பிக்கப்பட்ட காணிக்கைகளை எல்லாம், திருப்பதிக்கு அனுப்பி வைத்தான். அதை அறிந்த ஊரார், கனகனை மேலும் புகழ்ந்தார்கள்.

அவ்வாறு புகழ்வது கண்டு ஒரு சிலருக்குப் பொறாமை - எரிச்சல் உண்டானது. அவர்கள் உடனே, ‘‘நமது ராஜ்ஜியத்தின் வருமானம் எல்லாவற்றையும் கனகன் வீண் ஆடம்பர விஷயங்களில் செலவு செய்கிறான்’’ என்று எழுதி அரசருக்கு அனுப்பினார்கள். அதைப் பார்த்த அரசர், எந்த விசாரணையும் செய்யாமல், கனகனைப் பதவியிலிருந்து நீக்கி, பங்காபுர அரசாங்கத்தையும் எடுத்துக் கொண்டுவிட்டார். கனகன் வருந்தவில்லை; ‘‘தான் தந்ததைத் தானே எடுத்துக் கொண்டார் அரசர். இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?’’

என்று நினைத்தான்; ஆனைகொந்தியில் இருந்து புறப்பட்டு, காதிநிலை போய்ச் சேர்ந்தான். கனகன், காதிநிலை போய்க் குடியேறியதும், சில நாட்களில் கனகனின் மனைவி இறைவன் திருவடிகளை அடைந்தாள். அதன்பின், கனகன் கட்டுப்பாட்டை இழந்தவனாக ஆனான். காட்டிற்குப்போய்க் கொடிய விலங்குகளை வேட்டையாடத் தொடங்கினான். நாளாகநாளாக வேட்டையில் விருப்பம் அதிகமானது. வேட்டை நாய்கள் பலவற்றைக் கொண்டுவந்து வளர்க்கத் தொடங்கினான். கனகன் இவ்வாறு வேட்டையில் தீவிரமாக இருந்தபடி, வீணாகக் காலத்தைக் கழித்து வந்தபோது, ஒருநாள் இரவு... கனகன் கனவில் ஆதிகேசவபெருமாள் காட்சி கொடுத்தார்.

‘‘கனகா!.. என்ன இது? நாய்களைப் பிடித்துக் கொண்டு வேட்டையாடும் வெறியில் இருக்கிறாயே! வாழ்நாளை வீணாகக் கழிக்காதே! நரகம் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. தாசனாகமாறு! நல்வழியில் நட!’’ என்று சொல்லி மறைந்தார்.

(வரலாறு தொடரும்...)

- பி.என்.பரசுராமன்.