Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கணியூர் முதல் சந்நியாசி

பெஜாவர் (Pejavara), பலிமார் (Palimaru), சோதே (Sodhe), கணியூர் (Kaniyuru), புட்டிகே (Puttige), அதமார் (Adamaru), ஷிரூர் (Shirur) மற்றும் கிருஷ்ணபுரா (Krishnapura) என்னும் அஷ்ட மடங்களை நிறுவினார், மத்வர். மேலே கூறிய அஷ்ட மடங்களின் பெயர்கள் கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்தின் பெயராகும். அங்கு தன் சீடர்களை அனுப்பி வைத்து, துவைத தத்துவத்தை நிலைநாட்டினார்.

கணியூர் என்னும் கிராமம்

அந்த வகையில், தற்போது நாம் காணவிருக்கும் மகான் ``ஸ்ரீராம தீர்த்தர்’’. இவர், 1316 - ஆண்டில் பிறந்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீராம தீர்த்தர், கணியூர் மடத்தை சார்ந்த முதல் மகான். ``ஸ்ரீ கணியூர் மடம்’’ (Sri Kaniyuru Mutt). கர்நாடக மாநிலம், மங்களூர் என்னும் இடத்தில்தான் கணியூர் கிராமம் இருக்கிறது. இந்த கிராமம், மங்களூரில் இருந்து பெங்களூருக்கு செல்லும் அகல ரயில் பாதையில் (Broadguage Railway Line) அமைந்துள்ளது.

புத்தூர் என்னும் இடத்தில் இருந்து, குக்கே சுப்ரமண்யா கோயில் ஆகியவையை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 100 (SH-100) இந்த கிராமத்தின் வழியாகதான் செல்கிறது. அத்தகைய பெருமை பெற்ற கிராமம். ஜகத்குரு ஸ்ரீ மத்வாச்சாரியார், உடுப்பியில் கிருஷ்ணரை பிரதிஷ்டை செய்த கையேடு எட்டு மகான்களுக்கும் சந்நியாசம் கொடுத்து, உடுப்பி கிருஷ்ணரை பூஜிக்க ``பர்யாய’’ என்னும் புதிய வழிபாட்டு பூஜை முறையையும் நியமித்தார். பர்யாய என்பது, உடுப்பி கிருஷ்ணரை இந்த அஷ்ட மடத்தை சேர்ந்த எட்டு மடாதிபதிகளும், இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை சுழற்சியின் அடிப் படையில் பூஜிப்பதே பர்யாய என்பதாகும்.

பட்டட தேவரு

அதில், கணியூர் மடத்திற்காக ``ஸ்ரீராம தீர்த்தருக்கு’’ சந்நியாசம் திட்சை கொடுத்து, அவரை முதல் முதலாக கணியூர் மடத்திற்கு மடாதிபதியாக நியமித்தார் மத்வர் என்று கூறப்படுகிறது. சந்நியாசம் கொடுத்தது மட்டுமல்லாது, ஸ்வஸ்திக் சின்னத்தில் அமர்ந்து, நான்கு கைகளைக் கொண்டு, இருகைகளில் சங்கு மற்றும் சக்கரத்தை கொண்டுள்ள யோக நரசிம்ம விக்ரகத்தையும் வழங்கினார் என்றும் சொல்லப்படுகிறது.

இது தவிர, ஸ்ரீ மத்வாச்சாரியாரால் பூஜிக்கப்பட்டு வந்த, “கரால நரசிம்மர்” என்று அழைக்கப்படும் மற்றொரு நரசிம்ம விக்ரகமும், ஸ்ரீ கணியூர் மடத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விக்ரகத்தை, கன்னடத்தில் “பட்டட தேவரு” என்று அழைக்கிறார்கள், கணியூர் மடத்தினர்கள். பட்டட தேவரு என்றால், தமிழில், ``தலைமைக் கடவுள்’’ என்று பொருளாகும். ஆகையால், கணியூர் மடத்திற்கு நரசிம்மர் மிகவும் விசேஷமானவர். ஆகையால், இந்த மடத்தில் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி அன்று மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும்.

இந்த இரண்டு முக்கிய விக்ரகங்களைத் தவிர, கருடவாகன லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ கோபாலகிருஷ்ணர், ஸ்ரீ விட்டலா, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீ கடகோலு கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீ வேதவியாசர் ஆகிய விக்ரகங்களும், கணியூர் மடாதிபதிகளால் இன்றும் பூஜிக்கப்பட்டு வருகின்றது.

மத்வர் பிறந்த இடத்தை பராமரிக்கும் கணியூர் மடம்

உடுப்பிக்கு அருகிலுள்ள புனித தலமான பஜக க்ஷேத்திரம், ஸ்ரீ மத்வாச்சாரியார் பிறந்த இடமாகும். இது கணியூர் மடத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பது கணியூர் மடத்திற்கு கூடுதல் பெருமையாகும். ஆம்.. பஜக க்ஷேத்திரம், கணியூர் பகுதிக்கு உட்பட்டு வருவதால், இவை கணியூர் மடத்திற்கே பெருமை சேர்க்கும் விஷயமாக கருதப்படுகிறது.

மத்வர், தான் குழந்தை பருவத்தில் விளையாடிய பொருட்கள் அனைத்தும் இன்றும்கூட பஜகவில் நினைவுச் சின்னங்களாக பாதுகாத்து வருகின்றனர். குறிப்பாக, ஸ்ரீ மத்வாச்சாரியாரின் கால்தடங்கள், குழந்தைப் பருவத்தில், பால் மற்றும் தயிர் பாத்திரங்களின் மீது வைத்திருந்த பெரிய கற்கள் போன்ற சில வரலாற்று நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சீடர் ஸ்ரீரகுநாத தீர்த்தர்

கணியூர் மடத்தின் குரு பரம்பரையில், மத்வாச்சாரியாருக்குப் பிறகு முதலாவது பீடாதிபதியாக ``ஸ்ரீராம தீர்த்தர்’’ பீடத்தை அலங்கரித்தார் என்று கூறப்படுகிறது. மேலும், பல வருடங்கள் சமஸ்தான பூஜைகளை செய்திருக்கின்றார். அதன் பின்னர், தனது சீடரான ஸ்ரீரகுநாத தீர்த்தரிடம் கணியூர் மடத்தை ஒப்படைத்தார். ``சுமத்வ விஜயா’’ என்னும் உயரிய மத்வநூலில், ஸ்ரீ நாராயண பண்டிதாச்சாரியார், ஸ்ரீராம தீர்த்தரை “ஸ்ரீ மத் ராமபாதாஷ்ரயா” என்று பெருமையுடன் போற்றியுள்ளார். ஸ்ரீராம தீர்த்தர், கணியூர் மடத்தை திறம்பட வழி நடத்தி அப்போது புதியதாக உதயமான துவைத தத்துவத்தை பக்தர்களிடையே கொண்டு சேர்த்த பெருமை இவரையே சேரும். மேலும், பல பக்தர்களை துவைத மார்க்கத்திற்கு செல்ல வித்திட்டவரும்கூட.

தெரியாத பிருந்தாவனம்

ஸ்ரீ ரகுநாத தீர்த்தரிடம் பீடத்தை ஒப்படைத்த பிறகு, ஸ்ரீராம தீர்த்தர், ``மகா பஹுல பஞ்சமி’’ அன்று பாகீரதி நதிக்கரை ஓரத்தில் உள்ள ஒரு இடத்தில் பிருந்தாவனமானார் என்று கூறப்பட்டாலும், மிக துல்லியமாக ஸ்ரீராம தீர்த்தரின் பிருந்தாவனம் எங்கு உள்ளது என்பது தெரியவில்லை. ஆகையால், ஸ்ரீராம தீர்த்தரின் ஆராதனை தினமான ``மகா பஹுலா பஞ்சமி’’ அன்று, மிக விமர்சையாக கணியூர் மடத்திலேயே நடைபெறுகிறது.

யாரேனும் ஆராய்ச்சியாளர்கள், ஸ்ரீராம தீர்த்தரின் மூலபிருந்தாவனம் எங்கு உள்ளது என்று கண்டுபிடித்து தரவேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகும். தற்போது, கணியூர் மடாதிபதியாக ஸ்ரீ வித்யாவல்லப தீர்த்தர் மடத்தை நிர்வகித்து வருகின்றார். பக்தர்களின் உதவியோடு, மத்வர் பிறந்த பஜக இடத்தை பல மடங்கு மேம்படுத்திருக்கிறார். தற்போது, சாதுர்மாதம் என்பதால், நான்கு மாதங்கள் சென்னையில் தங்கியிருந்து விரதத்தை மேற்கொண்டு வருகின்றார், ஸ்ரீ வித்யாவல்லப தீர்த்தர்.

ஸ்ரீ கணியூர் மடத்தின் குருபரம்பரை:

01) ஸ்ரீ ராம தீர்த்தர்

02) ஸ்ரீ ரகுநாத தீர்த்தர்

03) ஸ்ரீ ரகுபதி தீர்த்தர்

04) ஸ்ரீ ரகுநந்தன தீர்த்தர்

05) ஸ்ரீ யதுநந்தன தீர்த்தர்

06) ஸ்ரீ விஸ்வாத்ம தீர்த்தர்

07) ஸ்ரீ விஸ்வநாத தீர்த்தர்

08) ஸ்ரீ வேதகர்ப்ப தீர்த்தர்

09) ஸ்ரீ வாகிஷ தீர்த்தர்

10) ஸ்ரீ வரதபதி தீர்த்தர்

11) ஸ்ரீ விஸ்வபதி தீர்த்தர்

12) ஸ்ரீ விஸ்வமூல தீர்த்தர்

13) ஸ்ரீ வேதபதி தீர்த்தர்

14) ஸ்ரீ வேதராஜ தீர்த்தர்

15) ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தர்

16) ஸ்ரீ விபுதேஷ தீர்த்தர்

17) ஸ்ரீ வரிஜாக்ஷ தீர்த்தர்

18) ஸ்ரீ விஸ்வேந்திர தீர்த்தர்

19) ஸ்ரீ விபுதவந்த்ய தீர்த்தர்

20) ஸ்ரீ விபுதாதிராஜ தீர்த்தர்

21) ஸ்ரீ வித்யாராஜ தீர்த்தர்

22) ஸ்ரீ விபுதப்ரிய தீர்த்தர்

23) ஸ்ரீ வித்யாசாகர் தீர்த்தர்

24) ஸ்ரீ வாசுதேவ தீர்த்தர்

25) ஸ்ரீ வித்யாபதி தீர்த்தர்

26) ஸ்ரீ வாமன தீர்த்தர்

27) ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தர்

28) ஸ்ரீ வித்யாசமுத்திர தீர்த்தர்

29) ஸ்ரீ வித்யாவாரிநிதி தீர்த்தர்

30) ஸ்ரீ வித்யாவல்லப தீர்த்தர்

(தற்போதைய சுவாமிஜி)

தொகுப்பு: ரா.ரெங்கராஜன்