Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஞ்சிபுரம், திருகச்சி அனேகதங்காவதேஸ்வரர்

கிரகங்களே தெய்வங்களாக
திருகச்சி அனேகதங்காவதம் என்ற வார்த்தையானது அனேகம் மற்றும் அவதம் என்ற சொற்களின் சேர்க்கை ஆகும். இதில், அனேகம் என்ற சொல்லுக்கு யானை என்று பொருள். அவதம் என்றால் குடி கொண்ட என்று பொருள். இதே பெயரில் இமயமலை அடிவாரத்தில் கௌரிகுண்டம் திருத்தலத்தில் ஓர் இடம் உள்ளது. கஜமுகம் கொண்ட விநாயகர் சிவலிங்க திருமேனியை பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலமாகும்.
பிரம்மாவின் புத்திரராகிய மரீசி மகரிஷி, தடாகத்தில் நீராடச்சென்றபோது, நீரிலிருந்த தாமரை மலரில் ஒரு குழந்தையைக் கண்டார். குழந்தைக்கு "வல்லபை' என பெயரிட்டு வளர்த்து வந்தார். சிவபக்தையாக இருந்த அவளை இரண்ய அசுரனான கேசி பிடித்துச் சென்றான். வல்லபை, தன்னை காத்தருளும்படி சிவனிடம் வேண்டினாள். சிவன், விநாயகரை அனுப்பி வல்லபையை மீட்டுவர எண்ணினார். அப்போது அம்பிகை சிவனிடம், விநாயகன் அசுரர்களை அழித்து வெற்றி பெற அருள் செய்ய வேண்டும் என்றாள். சிவன், இத்தலத்தில் தன்னை வணங்கிவிட்டு சென்றிட அசுரர்களை வெற்றி கொள்ள வலிமை உண்டாகும் என்றார்.
விநாயகரும் அசுரர்களை அழிக்க செல்லும்முன்பு, இவ்விடத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின், வல்லபையை மீட்டு வந்தார். சிவன், அம்பாள் இருவரும் விநாயகருக்கு இத்தலத்திலேயே வல்லபையை மணம் முடித்து வைத்தனர்.
இத்தலத்தின் பெருமை  குபேரன், தன் முற்பிறவியில் செய்த புண்ணியபலனால், அருந்தமனின் மகனாப்பிறந்து, அளகைக்கு அரசனானான். அசுரகுருவான சுக்கிரன், அவன் மீது பொறாமை கொண்டு தொல்லைகள் கொடுத்தான். எனவே, இங்கு சிவனை வேண்டி தன்னை காக்கும்படி வேண்டினான் குபேரன். சிவன், அவனுக்காக சுக்கிரனை விழுங்கி அவனது கர்வத்தை அடக்கினார். இத்தலத்தில் சிவன், பெரிய லிங்கவடிவில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். காஞ்சி காமாட்சி அம்மனே சிவனுக்குரிய அம்பாள் என்பதால், இங்கு அம்பாளுக்கு சந்நதி இல்லை.
சுந்தரர், சேக்கிழார், சம்பந்தர் ஆகிய மூவரும் பாடல் பாடிய திருத்தலமாக உள்ளது.
இங்கு உள்ள தெய்வத்திற்கு சூரியன், சந்திரன், செவ்வாய், வியாழன், சுக்ரன், கேது, ஆகிய கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளன.
*சுக்ரன் பாதிப்புள்ளவர்கள்,அனுஷ நட்சத்திர நாளில் சுவாமிக்கும் தேனும் தினையும் நெய்வேத்தியமாக கொடுத்தால் சுக்ரனின் பாதிப்புகள் குறையும்.
*ஜாதகத்தில் ஆறாம் பாவத்தில் (6ம்) சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றவர்கள் இத்தலத்தில் கிருத்திகை நட்சத்திர நாளிலோ அல்லது ஏகாதசி அன்றோ அங்குள்ள மந்தாகினி நதியில் நீராடி சுவாமிக்கு அறுகம்புல் மாலை கொடுத்து அபிஷேக அர்ச்சனை செய்தால் சூரியன், செவ்வாய் பாதிப்புகள் குறையும். மருத்துவம் மற்றும் காவல் துறையில் இருப்பவர்கள் இதைச் செய்தால் பாதிப்புகள் குறையும்.
*திருமணத்தடை உள்ளவர்கள் அஸ்வினி நட்சத்திர நாளில் வெள்ளெருக்கம் பூவையும் அறுகம்புல்லையும் சேர்த்து மாலையாக தொடுத்து கொள்ளில் செய்த கொழுக்கட்டையை நைவேத்தியமாக படைத்து அபிஷேக அர்ச்சனை செய்தால் எப்படிப்பட்ட திருமணத்தடையும் விலகி, பொன் பொருள்சேரும் குபேர சம்பத்து உண்டாகும்.
*வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் காண திருவோணம் நட்சத்திரம் அன்றோ அல்லது ஏகாதசி திதி அன்றோ மூன்று உருண்டைகளாக தேனும் தினையும் படைத்து  அர்ச்சனை செய்து அந்த பிரசாதத்தை கருப்புநிற பசுவிற்கு கொடுத்தால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.