Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கம்பத்தில் தோன்றிய கம்பத்திளையனார்

முருகனுக்கு சிறப்பு சேர்க்கும் அறுபடை வீடுகளைப் போல, திருவண்ணாமலை திருக்கோயிலும் முருகனின் சிறப்பைப் போற்றுவதில் தனித்துவம் வாய்ந்தது. ஆமாம், முருகனே நேரில் காட்சியளித்த பெருமைக்குரியது இத்திருக்கோயில். இங்கு, இளையனார் எனும் திருப்பெயரில் முருகன் அழைக்கப்படுகிறார்.‘அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு வட அருகில் கண்டு கொண்டேன்’ என அருணகிரிநாதர் பாடிப் பரவசமடைந்தார். இந்தப் பகுதி, அண்ணாமலையார் திருக்கோயிலின் 5ம் பிராகாரத்தில் ராஜகோபுரத்துக்கு அருகே அமைந்திருக்கிறது. அது கம்பத்திளையனார் சந்நதி என்று அழைக்கப்படுகிறது.அருணகிரிநாதருக்கு காட்சி தருவதற்காக ஐந்தாம் பிராகாரத்தில் அமைந்துள்ள வளைகாப்பு மண்டபத்துக்கு அருகே, வடகிழக்கு திசையில் உள்ள தூணில் முருகப் பெருமான் தோன்றினார். கம்பத்துக்குப் (தூண்) பின்னாலிருந்து முருகன் காட்சியளித்ததால், கம்பத்திளையனார் சந்நதி எனும் திருப்பெயர் அமைந்தது. வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானை வணங்கிய நிலையில், காட்சியளிக்கிறார் அருணகிரிநாதர்.

இச்சந்நதியில், மயில் மீது இடதுகாலைப் பதித்து வலது காலைத் தரையில் ஊன்றி நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகப் பெருமானை வணங்குவது பேரானந்தம் தரும். மேலும், மற்றொரு புறத்தில் முருகப் பெருமான் சூரசம்ஹார மூர்த்தியாக காட்சியளிக்கிறார். அதாவது வில்லேந்திய வீரராக! இவ்வாறு முருகன் வில்லேந்திய கோலம், வெகு சில கோயில்களிலேயே காண முடிகிறது. இந்த கம்பத்திளையனார் சந்நதி அவற்றுள் ஒன்று.கம்பத்திளையனார் சந்நதி போலவே, கோபுரத்திளையனார் சந்நதியும் குறிப்பிடத்தக்கது. வாழ்வில் விரக்தி தோன்றி, தன் உயிரை மாய்த்துக் கொள்ள தீர்மானித்த அருணகிரிநாதர், வள்ளால மகாராஜா கோபுரத்தின் மீதேறி அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றபோது, அவ்வாறு விழுந்த அவரைத் தாங்கிப் பிடித்து முருகன் ஆட்கொண்டான். இந்தச் சம்பவம் நிகழ்ந்த இடம்தான் கோபுரத்திளையனார் சந்நதி.மேலும், திருக்கோயிலின் 4ம் பிராகாரத்தையும், 5ம் பிராகாரத்தையும் இணைக்கும் கிளி கோபுரத்துக்கு அருகே அமைந்திருக்கும் பிச்சை இளையனார் சந்நதியையும் பக்தர்கள் தரிசித்து மகிழ்கிறார்கள்.இங்கே முருகனுக்கு தனிப்பட்ட முக்கியத்துவம் இருப்பதால், அறுபடை வீடுகளைப் போலவே முருகனடியார்கள் காவடி ஏந்தி மாட வீதியில் வலம் வந்து வேலவனை வழிபடுகின்றனர்.