Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கவலை போக்கும் கமடா தேவி

எப்போதும் அந்த ஆதி சக்திக்கு சேவை செய்து கொண்டிருக்கும் தேவிகளுக்கு, யோகினிகள் என்று பெயர். இவர்கள் பல்லாயிரம் கணக்கில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான ‘‘கமடா யோகினி’’யை பற்றி இந்தக் காணொளியில் காண்போம்.

கமடா தீட்சையும் கமடா யோகினியும்

ஆமை, முட்டைகளை கரையில் இட்டுவிட்டு கடலுக்கு சென்று விடும். கடலுக்கு சென்ற ஆமை கரையில் இட்ட தனது முட்டைகளையே நினைத்துக் கொண்டிருக்கும். அந்த எண்ணங்களின் அதிர்வலையாலேயே, குஞ்சுகள் பொரியும். முட்டையில் இருந்து வெளிப்பட்ட ஆமை குட்டிகள் அனைத்தும் மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல, தாய் ஆமை இருக்கும் நீரையே நோக்கிச் செல்லுமாம். ஒன்று கூட வழிதவறி வேறு திசைக்கு செல்லாது. இப்படி தன்னுடைய நினைப்பாலேயே குழந்தைகளை காக்கும் வல்லமை உடையது ஆமை.

அதைப்போலவே, அகில உலகத்துக்கும் தாயான அம்பிகை, நம்மை பூ உலகில் முட்டையாக விட்டு, நம்மையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். இந்த ஜீவன் நல்ல நிலைக்கு வரவேண்டுமே, உலகாய இன்பங்களில் மயங்கி விடாமல் நமது திருவடியை நாடி வரவேண்டுமே, என்ற கவலையில் அம்பிகை நம்மை பற்றி நினைத்துக் கொண்டே இருக்கிறாளாம். அந்த அம்பிகையின் அந்த சிந்தனை நம்மை கரையேற்றி நல்ல கதிக்கு சேர்க்கிறது. இப்படி, ஆமையை போல, இருந்த இடத்தில், இருந்தபடியே தன்னுடைய நினைப்பாலேயே ஜீவனை உயர்த்துவதற்கு, கமடா தீட்சை என்று பெயர். இந்த கமடா தீட்சையின் வடிவானவள் இந்த யோகினி. நினைப்பால் உயிர்களை காக்கும் அம்பிகையின் ஆற்றல் வடிவானவள்.

கமடா யோகினியின் தோற்றம்

மத்தியபிரதேசத்தின் பெடாகட் என்னும் கோவிலில் பிரதான தேவியாக விளங்குகிறாள் இந்த யோகினி. அழகான பெண்ணின் வடிவம் தாங்கி, கையில் மலர்களை ஏந்தி, ஆமையின் மீது அமர்ந்தவளாக காட்சி தருகிறாள் இந்த யோகினி.

கமடா யோகினியும் ஆமை வாகனமும்

ஆமையை ஒரு பாத்திரத்தில் இட்டு, அந்த பாத்திரத்தை அடுப்பின் மீது வைத்து அடியில் தீ மூட்டினால், அதில் இருக்கும் ஆமை, அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்காது. மாறாக தண்ணீரில் சூடு ஏற ஏற தன்னுடைய உடலை அந்த தண்ணீரின் சூட்டுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளும். கடைசியில் தண்ணீர் கொதிநிலையை அடையும் பொழுது, தனது அத்தனை ஆற்றலையும், தனது உடலில் சீதோஷ்ண நிலையை, அடுப்பில் வைக்கப்பட்ட தண்ணீருக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வதில் பயன்படுத்தியதால், இப்போது தப்பிக்க சக்தியற்று தண்ணீரிலேயே மடிந்து போகும்.

அதைப்போலவே, துன்பத்தை கொடுக்கக் கூடிய இந்த பிறவிக் கடலில் நொடி பொழுதில் மின்னலைப் போல வரும் சுகமே நிரந்தரம் என்று நம்பிக் கொண்டு, இந்தப் பிறவிக் கடலிலேயே ஊறி உயிரை விடும் முன், இறைவனை மனதில் வைத்து பூஜித்து முக்தி அடைய வேண்டும் என்பதை, ஆமையின் மீது அமர்வதன் மூலம் கமடா யோகினி நமக்கு காட்சித் தருகிறாள். தன்னை வழிபடும் உபாசகனுக்கு உலகாய வாழ்வில் பற்றற்ற நிலையை ஏற்படுத்தி முக்தி நிலையை அடைய வழி வகை செய்கிறாள்.

மெதுவாக சென்றாலும் இலக்கை நோக்கி விடாமல் முன்னேறி இலக்கை அடையும் குணம் விலங்குகளில் ஆமையிடம் மட்டுமே இருக்கிறது. தன்னை வழிபடும் பக்தனை தொடர்ந்து இலக்கை நோக்கி முன்னேற வைத்து இறுதியில் அவனது இலக்கை அடையவும், இந்த தேவி உதவி செய்கிறாள்.

கூர்மாவதாரமும் கமடா யோகினியும்

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, அவர்கள் மத்தாக பயன்படுத்திய மந்திர மலை முழுகத் தொடங்கியது. அப்போது திருமாலானவர், ஒரு ஆமையின் வடிவில் மந்திர மலையை தாங்கிப் பிடித்து, பாற்கடல் கடையும் செயல், தடையில்லாமல் நடைபெற உதவினார்.

ஆக, ஆமையானது தடைகளைத் தாண்டி வெற்றியை ஈட்டும் தன்னம்பிக்கையை குறிக்கிறது. திருமாலின் ஆற்றலை குறிக்கிறது. அந்த வகையில் திருமாலின் கூர்மாவதாரத்தின் ஆற்றல் வடிவில் காட்சி தருகிறாள் இந்த யோகினி. அதைப்போலவே, ஆமை ஆனது மண்ணிலும் சரி கடலிலும் சரி, வாழும் ஆற்றலை கொண்டது. அதைப்போல ஆமை வாகனத்தில் காட்சி தரும் இந்த தேவி, அடியார்களுக்கு வாழும் உலகில் சுகத்தையும், இவ்வுலகில் வாழ்ந்த பின் வரும் மறுவாழ்விலும், அதாவது முக்தியோ சுவர்க்கத்தையோ அருள்கிறாள்.

கமடா யோகினியின் கையில் மலர்கள் ஏன்?

மலர்கள் காலையில் மலர்ந்து மாலையில், கலை இழந்து பொலிவிழந்து வாடி வதங்குகிறது. இது மனித வாழ்வின் நிலையாமையை குறிக்கிறது. அதைப்போலவே நிலையாமையை குறிக்கும் இந்த மலர், இறைவனது திருவடியை சென்று அடைந்ததும் பிரசாதம் என்ற உயர்ந்த நிலையை அடைகிறது. மனிதனின் அல்பமான நிலையில்லாத வாழ்க்கை, இறைவனின் திருவடியில் பக்தி செலுத்தும் போது, உயர்ந்த நிலையை அடைகிறது என்பதை காட்டுகிறது மலர்.

இப்படி வாழ்வின் நிலையாமையை பக்தனுக்கு உணர்த்தி, அவனுக்கு ஞானத்தை அருள்பவள் இந்த யோகினி என்பதால் கையில் மலரை ஏந்தி இருக்கிறாள். இப்படி ஒவ்வொரு யோகினியும் மனிதனுக்கு ஒவ்வொரு ஞானத்தை தருகிறாள். அந்த வகையில் கமடா யோகினி மனிதனுக்கு ஞானத்தை கொடுத்து உலக வாழ்க்கையின் நிலையாமையை எடுத்துரைக்கிறார்.

ஜி.மகேஷ்