Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜோதிர்லிங்க தரிசனம்

குஜராத் மாநிலம் சோமநாதம் நகரத்தில் உள்ளது பிராபாச பட்டினம். இங்குதான் சோமநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இது ஒரு கடற்கரைத் தலமாகும். பரந்த அரபிக்கடலின் பின்னணியில், சோம்நாத்தின் அமைதியான சூழல் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தெய்வீக மற்றும் அமைதியான அனுபவத்தை வழங்குகிறது.இந்த ஆலயத்தில் அருளும் இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். அர்ஜுனன் சுபத்திரையை மணம் செய்து கொண்டது இங்கேதான். அகஸ்தியர் லோபா முத்திரையை மணம் செய்து கொண்டதும் இங்கேதான். இங்கேதான் கிருஷ்ணரின் ஆச்சாரியாரான சாந்தீபினி மகரிஷியின் குருகுலம் இருந்ததாகக் கூறுகிறார்கள். அவரது மகனைக் கடலில் இருந்து மீட்டு வந்து தனது குரு தட்சணையாக கிருஷ்ண பகவான் கொடுத்ததும் இங்கேதான்.

என்ன சிறப்பு?

ஸ்கந்த புராணத்தில் ஜோதிர்லிங்க திருத்தலமான சோமநாதர் தலவரலாறு குறித்து செய்தி உள்ளது. தட்சப்பிரசாபதியின் 27 பெண்களை சந்திரன் மணந்தார். ஆயினும் சந்திரன் தனது 27 மனைவியரில் ரோகிணியுடன் மட்டும் அளவு கடந்த அன்பு பாராட்டி மற்ற மனைவியர்களைப் புறக்கணித்தான். இதை மற்ற 26 பெண்களும் தங்கள் தந்தையிடம் முறையிட்டனர். உடனே தந்தையான தட்சப்பிரசாபதி தனது 26 மகள்களின் துயரத்தைக் கண்டு நியாயம் கேட்கச் சென்றார். மாமனாரிடம் சரியான பதில் சொல்லாது அலட்சியம் செய்தான் சந்திரன்.இதனால் சீற்றங்கொண்ட தந்தை தட்சப்பிரசாபதி, சந்திரனுக்கு தொழு நோயால் தேய்ந்து போகக் கடவது என்று சாபமிட்டார். சாபத்தின் விளைவாக அவதிப்பட்டான் சந்திரன். தொழு நோயால் ஒவ்வொரு நாளும் தேய்ந்து வந்த சந்திரன் சாபவிமோசனத்திற்காக பல தலங்களுக்குச் சென்றான். இறுதியில் சௌராஷ்டிரத்தின் கடற்கரையில் உள்ள சோமநாதம் வந்தான். இங்குள்ள பிரபாச தீர்த்தத்தில் பக்தியுடன் நீராடினான். சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தைச் சரணடைந்தான். அதனால் நோய் நீங்கிச் சுகமடைந்தான். இப்படி சந்திர சாபம் விலகிய தலம் இது.ஸ்கந்த புராணத்தில் பிரபாச காண்டம் சோமநாதர் திருக்கோயிலின் சிவலிங்கம் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் பூமிக்கடியில் அமைந் திருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது. மகாபாரதத்திலும் சந்திரன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்ட வரலாறு கூறப்படுகின்றது. கிருஷ்ணர் தனது அவதார முடிவின் போது இங்குள்ள பிரபாச பட்டினத்திற்கு வந்து தங்கியிருந்த காலத்தில், வேடுவனின் கணையால் காலில் தாக்கப்பட்டு இறந்தார் என பாகவத புராணம் கூறுகிறது.

ஏழு முறை கட்டப்பட்ட கோயில்

கஜினி முகமது உட்பட பலரால் படையெடுப்பின் போது சூறையாடப்பட்டது. சிலர் கோயிலை முற்றிலும் இடித்துத் தள்ளினர். விலை உயர்ந்த ஆபரணங்களை வாரிச் சென்றனர். ஒவ்வொரு முறையும் கோயில் புதுப்பிக்கப்பட்டது. முதல், இரண்டு முறை சௌராஷ்டிர தேசத்து வல்லபீபுர யாதவகுல மன்னர், சோமநாதபுர ஆலயத்தை அதே இடத்தில் இரண்டாம் முறையாக சோம நாதரின் ஆலயத்தை சீரமைத்துக் கட்டினார். மூன்றாம் முறையாக, கூர்ஜர பிரதிஹர வம்சத்தின், இரண்டாம் நாக பாதர் மன்னர், சோமநாதபுர ஆலயத்தை மறுபடியும் சீரமைத்துக் கட்டினார்.நான்காம் முறையாக மாளவ நாட்டு போஜராஜனும், பட்டான் நாட்டு சோலங்கி மன்னரும் கி.பி 1042 -இல் சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பினார்கள்.ஐந்தாம் முறையாக கி.பி 1308-இல் சூதசமா வம்ச அரசன் மகிபாலன் என்பவர் சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டினார். அவர் மகன் கேன்கர் (Khengar) என்பவர் 1326-1351-ஆம் ஆண்டில் கோயிலில் சிவ இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார்.ஆறாம் முறையாக 1783 -இல் இந்தூர் நாட்டு அரசி அகல்யாபாய் ஹோல்கர், நாக்பூர் மன்னர் இராஜா போன்ஸ்லே, கோலாப்பூர் மன்னர் சத்ரபதி போன்ஸ்லே மற்றும் குவாலியர் மன்னர் ஸ்ரீமந் பாடில்புவா ஷிண்டே ஆகியோர் ஒன்றுசேர்ந்து, சிதைந்தபோன பழைய சோமநாதபுரம் கோயில் அருகே புதிய சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பினர்.ஏழாம் முறையாகவும், இறுதியாகவும், விடுதலை பெற்ற இந்திய அரசின் உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் படேலும் உணவு அமைச்சராக இருந்த கே. எம். முன்ஷியும் இணைந்து பொது மக்களிடம் நிதி திரட்டி, சோமநாதரின் ஆலயத்தை மீண்டும் கட்டத் துவங்கினர். முதலில் பழைய சோமநாதபுரம் கோயில் இடிபாடுகளை அக்டோபர் மாதம்,1950 -இல் அகற்றினர். சாளுக்கியக் கட்டட முறையில் பிரமிடு வடிவத்தில் விசாலமாகக் கட்டிச் சீரமைக்க எண்ணினர்.சோமநாதபுரம் கோயிலை இடித்துக் கட்டிய இடத்தில் இருந்த மசூதியை சில மைல் தூரத்திற்கு அப்பால் இடம் மாற்றி அமைத்தனர். சோமநாதபுரக் கோயிலை மறுநிர்மாணம் செய்ய மே மாதம் 1951ல், இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர். இராசேந்திரப் பிரசாத் தலைமையில், புதிய கோயிலுக்கு அஸ்திவாரக்கல் நடப்படும் விழா நடைபெற்றது. புதிதாகக் கட்டப்பட்ட சோமநாதரின் ஆலயம் 1995ஆம் ஆண்டு (01-01-1995) பொது மக்களின் வழிபாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டது. சோமநாத் ஆலயத்தின் முழு மாடலையும் வாசலிலே வைத்திருக்கிறார்கள். அங்கே சரித்திரக் குறிப்புகளையும் காணலாம். மிக உயரமான தோரணவாயில், மரத்தாலான அலங்காரக் கதவுகள் இவற்றின் வழியே உள்ளே போகலாம். மூன்று அடுக்குகளாகக் கோபுரம் உயர்ந்து நிற்கிறது. சலவைக்கற்களின் வெண்ணிற அமைப்பில் கருவறையின் வாசல் அமைந்திருக்கிறது. மேலே விநாயகரும் இருபுறம் தேவதைகளும் நம்மை வரவேற்கிறார்கள் . படிகளைத் தாண்டி உள்ளே செல்ல வேண்டும். இடதுபுறமாக கணபதி, வலது புறம் அனுமார் நடுவில் நந்தி பகவான் இப்படி அமைந்திருக்கிறது.மேலே விதானத்தை நிமிர்ந்து பார்த்தால் கண்கள் சொக்கி நிற்கும்படியான

அழகான பூ வேலை நம்மை ஈர்க்கும்.

திறந்திருக்கும் நேரம்,

தரிசன நேரங்கள்: காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.ஆரத்தி நேரங்கள் பின்வருமாறு: காலை ஆரத்தி: 7:00 AM, மதியம் 12:00 PM, மாலை ஆரத்தி: 7:00 PM. இரவு 8:00 மணி முதல் 9:00 மணி வரை ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சி நடைபெறும். சிவராத்திரி விசேஷமானது. நாடெங்கிலும் இருந்து சன்னியாசிகள் பலரும் வந்து கூடுவார்கள். திகம்பர சன்னியாசிகளும் வருவதுண்டு. அவர்களுக்கு நாகபாகர்கள் என்று பெயர். தமிழ்நாட்டில் ரெட்டை நாயனம் வாசிப்பது போல இங்கே இரட்டைப் புல்லாங்குழல் ஊதுவார்கள். முரசு ஒலிக்கும் விறுவிறுப்பான நடனங்கள் நடைபெறும். இதெல்லாம் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் வரும் விழாவில் நடைபெறும்.

எப்படி சென்றடைவது?

சோம்நாத் குஜராத் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுடன் நல்ல போக்கு வரத்துத் தொடர்புகொண்டுள்ளது. சோம்நாத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள வெராவல் ரயில்நிலையம் உள்ளது. அகமதாபாத் சந்திப்பில் இருந்து சுமார் 420 கிமீ தொலைவிலும், வதோதராவில் இருந்து 530 கிமீ தொலைவிலும் உள்ளது இந்த நிலையம். மும்பையிலிருந்து நேரடி ரயில்கள் உள்ளன, இருப்பினும் டெல்லி, கொல்கத்தா மற்றும் பெங்களூரு போன்ற மற்ற மெட்ரோ நகரங்களிலிருந்து இந்த நகரத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் இணைப்பு ரயில்கள் உள்ளன. அகமதாபாத், ஜாம்நகர், ஜூனாகத், வதோதரா மற்றும் சூரத் ஆகியவற்றிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன. சோம்நாத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது கேஷோத் விமான நிலையமாகும். மும்பை, அகமதாபாத் மற்றும் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களில் இருந்து கேஷோத் நகருக்கு வழக்கமான விமானங்கள் உள்ளன.

முனைவர் ஸ்ரீராம்