Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேலைக்காரர்களுக்கு கூலி கொடுத்த முருகன்

கிழக்கு நோக்கி அமைந்துள்ள திருச்செந்தூர் கோயிலின் முன்புறம் மன்னார் வளைகுடா கடல் ஆர்ப்பரிப்பதால் கோயிலின் மேற்கு வாசலில் ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிகமூர்த்தி ஸ்வாமிகள் காலத்தில் இக்கோபுரம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் தன் கனவில் தோன்றியிட்ட கட்டளையை ஏற்று, கட்டும்போது பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாத நிலையிலும், தளராமல் இப்பணியை செய்து முடித்துள்ளார். பணியாளர்களுக்கு தினமும் சம்பளத்திற்குப் பதில் இலையில் பொதிந்த விபூதியையே அளித்துள்ளார். அவர்களும் பக்தி சிரத்தையோடு அதை பெற்றுக் கொண்டு தூண்டுகை விநாயகர் முன்னிலையில் அவற்றை பிரித்த போது, அது அவரவர்களுக்கு உரிய சம்பளமாக மாறியிருப்பதைக் கண்டு சிலிர்த்தனர்.

தங்க மூடையாக மாறிய உப்பு மூடை

முருகப் பெருமான் காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு முகம்மதியர் கனவில் தோன்றி, ஸ்வாமிகளுக்கு ஒரு மூடை உப்பு கொடுக்கப் பணித்துள்ளார். மறுநாள் காலை அம்மூடை முழுவதும் தங்கக்காசுகளாக நிரம்பியிருந்தது என்றும் இதுவே கோபுரம் கட்டி முடிக்கப் போதுமானதாக இருந்தது என்றும் கூறுவர். இக்கோபுரம் 9 நிலைகளுடன் 137 அடி உயரத்தில் 9 செப்பு கலசங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

முருகன் வேலால் ஏற்படுத்திய நாழிக்கிணறு

திருச்செந்தூர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் நாழிக்கிணறு சென்று நீராட வேண்டும். தரை மட்டத்திலிருந்து 24 அடி ஆழமுள்ள இக்கிணற்றுக்குள் படிகள் மூலம் இறங்கினால் ஒரு சதுர அடி பரப்பளவில் நாழிக்கிணறு அமைந்துள்ளது. இக்கிணற்றின் ஆழம் 7 அடியாகும். தன் படை வீரர்களின் தாகம் தணிக்கவும், சிவபூஜைக்காகவும் முருகப்பெருமான் தனது வேலாயுதத்தால் இங்கு குத்தியதால், இக்கிணறு தோன்றியதாகக் கூறுவர்.

பேரீச்சம்பழம் நிவேதனம்

முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு, பேரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன.

காவல் தெய்வத்திற்கே முதல் பூஜை

திருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு. திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.

ஜி.ராகவேந்திரன்