Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சுமையான வாழ்வும் உறவும் சுகமாகட்டும்!

இன்றைய சமூகம் ஓரளவிற்கு பொருளாதார மேன்மையை அடைந்துள்ள போதிலும், மனநலத்தைப் பேண வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. காரணம் உறவுகளில் வளர்ந்துவரும் அதீத எதிர்பார்ப்புகள் பல உறவுகளை சிதைத்து வருகின்றது.திருமண நாள், பிறந்தநாள், திருமண ஆண்டு,வீட்டுத் திறப்புவிழா போன்ற சில தனிப்பட்ட வாழ்வு சார்ந்த தருணங்கள் இப்போது ‘‘சமூக ஒப்பீட்டின் போட்டி மேடையாக’’ மாறிவிட்டன. இந்தக் கால இளையவர்கள் பெரும்பாலோரும், அத்தகைய நாள்களில் தனது வாழ்க்கைத் துணையிடமோ, பெற்றோரிடமோ, பிள்ளைகளிடமோ அல்லது நண்பர்களிடமோ ஒரு சிறப்பான அனுபவத்தை எதிர்பார்க்கின்றனர். அது பரிசாக இருக்கலாம், விருந்தாக இருக்கலாம். போட்டோஷூட்டாக இருக்கலாம், வெளிநாடு சுற்றுலா அல்லது பிரபலங்கள் போல் பிரமாண்ட கொண்டாட்டமாக இருக்கலாம்.இந்த எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், மனதில் ஏமாற்றம் மேலோங்குகிறது.

மனஅழுத்தம், தவிப்புகள், துயரம் ஆகியவை நம்மை நமக்குள்ளேயே சுருண்டுவிடச் செய்கின்றன. சிலர் ஆத்திரம் கொண்டு உறவுகளை முறித்துக்கொள்கிறார்கள். சிலர் விரக்தியில் தற்கொலைக்குத் துணிவதையும் நாம் மறக்கக் கூடாது.பெற்றோர்களும் இக்கால மாற்றத்தை ஏற்று, தங்கள் பிள்ளைகளுக்கு அதீத மகிழ்ச்சியை வழங்க வேண்டும் என்பதற்காக, தேவைக்கு மேல் சென்று ஆடம்பர ஏற்பாடுகளும், விருப்பத்தைவிட வியப்பளிக்கும் பரிசுகளும் வழங்கத் தொடங்கியுள்ளனர். ஒன்று கேட்டால் இரண்டு வாங்கி கொடுப்பது, இயல்பு மற்றும் வழக்கத்திற்கு அதிகமான பரிசுப்பொருட்களை வழங்குதல், உயர்தர உணவகங்களுக்கு அழைத்துச்செல்லுதல் போன்றவை பாசத்தின் வெளிப்பாடு என நாம் கருதினாலும், பலர் மனத்தளவில் ஒரு ‘‘பெருமை காட்டும் போட்டி’’யாகவே இதனை ஏற்கின்றனர். தங்கள் கௌரவத்தை காண்பிக்கும் ஊடகமாக சில பெற்றோர் பிள்ளைகளை மாற்றிவிட்டனர். இதுவும் எதிர்பார்ப்புகளுக்குச் சூடேற்றும் எண்ணெயாகவே மாறுகிறது.

உண்மையில், உறவுகளில் மகிழ்ச்சியை தருவது பரிசுகளோ, நிகழ்ச்சிகளோ அல்ல. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும்மனநிலையும், அன்பும் பாசமும் தரும் நேரங்களும் தான். எதிர்பார்ப்புகள் என்பது மனிதருக்கே உரியது. ஆனால் அதன் அளவை, எல்லையை தெளிவுற அறிவது மிக மிக அவசியம்.அன்பை வெளிக்காட்ட வேண்டிய தருணங்களில் பாசமுள்ள வார்த்தைகள் மற்றும் நேரத்தைச் செலுத்துங்கள் அது போதுமானது. வாழ்க்கையின் சிறப்பை விழாக்களில் காண்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு நாளிலும் வளர்க்க முயற்சியெடுங்கள். பரிசுகளுக்கும் புகழுக்கும் அப்பாற்பட்ட மகிழ்ச்சியை பாசத்தால் வளர்த்துக்கொள்ளப்பழகுங்கள்.இறைமக்களே, இறைவேதம் இதுபற்றி இப்படியாகக்கூறுகிறது. ‘‘ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது’’ (பிலிப்பியர் 2:3-5). எனவே, உறவுகளில் நீடித்த நிலைத்த ஒற்றுமை வேண்டும் என்றால் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருக்கும் அதீத எதிர்பார்ப்புகளைக் குறைத்து, எனக்காக அல்ல, பிறருக்காக என்ற விவிலியக்கோட்பாட்டுடன் நன்றியுடனும் இறைபக்தியுடன் வாழ்வோம். அதுதான் நாம் சுமையாகக் கருதும் வாழ்வையும் உறவையும் சுகமாக்கும் ஒரே ஆயுதமாகும்.

- அருள்முனைவர். பெ. பெவிஸ்டன்.