ஒரு மரங்கொத்திப் பறவை, ஒரு பெரிய மரத்தின் அடிவாரத்தில் கொத்தி கொண்டிருந்த அதே நேரத்தில், ஒரு மின்னல் அந்த மரத்தைத் தாக்க, அந்த மரம் கீழே சாய்ந்தது. மரங்கொத்திப் பறவைக்குப் பெருமை தாங்கவில்லை. ``நான் கொத்தியதால்தான், இந்த மரம் விழுந்தது, என் அலகு எவ்வளவு பலம் வாய்ந்தது’’ என்று பெருமை கொண்டது. அதுமட்டுமல்ல, இன்னும் பல பெரிய மரங்களையும் நான் வீழ்த்திக் காட்டுகிறேன் பாருங்கள், என்று சவால் விட்டு போய், தன் அலகை முறித்துக் கொண்டது. இன்று நம்மில் அநேகர் இப்படித்தான் தேவன் அவர்கள் வாழ்க்கையிலும், குடும்பங்களிலும் கிரியை செய்திருக்க, கர்த்தருக்கு மகிமை செலுத்தி தங்களை மறைத்து வாழாமல், என் உழைப்பினால், என் திறமையினால், என் தியாகத்தினால், என் செல்வாக்கினால் இவைகள் சாத்தியமானது எனக்கூறி பெருமை கொள்கிறார்கள்.
உங்கள் மூலம் இதுவரை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தவர்கள் சுமார் எத்தனை பேர் இருப்பார்கள்? என்று தேவ மனிதர் மூடியிடம் கேட்டபோது, அவர் தாழ்மையாக சொன்னார்; ``நான் கணக்குப் பார்க்க ஜீவ புத்தகம் என்னிடத்தில் இல்லை’’ என்றாராம்! கர்த்தர், D.L மூடி பிரசங்கியாரை கடைசி வரையும் வல்லமையாக உபயோகப்படுத்தினதின் ரகசியம் இதுதான்.இறைமக்களே, உங்களைத் தாழ்த்தி, கிறிஸ்துவில் மறைந்து வாழுங்கள். அப்பொழுது பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும் (சங்கீதம் 106:2) கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் பிரஸ்தாபப்படுத்தத்தக்கவன் யார்? என இறைவேதம் அறைகூவலிடு கிறது. தாழ்மையான இதயம் தேவனுக்கு பிரியமானது, ஏனெனில் அவர் அகங்காரிகளை எதிர்க்கிறார், ஆனால் தாழ்மையானவர்களுக்கு கிருபை அளிக்கிறார் (யாக்கோபு 4:6). நாம் எப்போது நம்மை குறைத்துக் கொண்டு தேவனை உயர்த்துகிறோமோ, அப்போதுதான் அவர் நம்மை தகுந்த நேரத்தில் உயர்த்துகிறார். ஆகவே, நம் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் நம்முடைய பெயரை அல்ல, இயேசுவின் பெயரை உயர்த்தி, உயர்வடைவோம்!
- அருள்முனைவர். பெவிஸ்டன்
