பக்த விஜயம் பகுதி - 8
சென்ற இதழில்... ஜெயதேவரின் பாடல்களைத் தாம் ஏற்றுக் கொண்டதாகச் சிவபெருமானும் நாராயணனும் சொல்லி அருள்புரிந்தார்கள்.
இனி இந்த இதழில்...
தெய்வங்களை நேருக்குநேராகத் தரிசித்த ஜெயதேவர், பரவசம் அடைந்தார். அப்போது பகவான்,``ஜெயதேவா! என் செயல்கள் எல்லாம் உன் ஒருவனுக்குத்தான் தெரியுமே தவிர, மற்ற யாருக்கும் தெரியாது. நீ, நடந்ததைத் தான் எழுதி இருக்கிறாய். ஆகையால், நீ பாடிய பாகவதத்தையும், அஷ்டகங்களையும் நாள்தோறும் அன்போடு பாராயணம் செய்பவர்களின் இதயத்தில் நான் இருப்பேன்’’ என்று சொல்லி மறைந்தார். சிவபெருமானும், ‘‘ஜெயதேவா! நீ செய்த சிவ அஷ்டகங்களையும் உனது சரிதத்தையும் பாராயணம் செய்பவர்களுக்கு, அஷ்ட ஐஸ்வரியங்களையும் கொடுப்பேன் நான்’’ என்று சொல்லி மறைந்தார்.
காசியில் இருந்த புலவர்கள் எல்லாம் ஜெயதேவரைப் புகழ்ந்து துதித்து, அவரிடம் பக்தியுடன் நடக்கத் தொடங்கினார்கள். தெய்வங்களை நேருக்குநேராகத் தரிசித்துப் பேசும் பாக்கியம் பெற்ற ஜெயதேவரோ, எல்லையில்லாத மகிழ்ச்சியில் இருந்தார். மனதில் எந்தவிதமான எண்ணங்களும் இல்லாமல், பேச்சையும் செயல்களையும் வெகுவாகக் குறைத்துக் கொண்டார். தன்னை மறந்த நிலையில் நாடென்றும் காடென்றும் பாராமல், எங்கும் திரிந்தார். ஜோதி வடிவம், அரூபம், பகவான் எனப் பற்பல வடிவங்களில், காட்சி அளித்தார்.
ஜெயதேவர், அவ்வாறு பற்பல வடிவங்களில் காட்சியளித்துக் கொண்டிருந்த அதே வேளையில், அவர் மனைவி பத்மாவதி, அரசரை அழைத்து, ‘‘மன்னா! தன்னை மறந்த நிலையில் நடமாடிக் கொண்டிருக்கிறார். அவர் இனிமேல் நம்முடன் பேசுவதும்கூட, மிகவும் அரிதாகிவிடும். ஆகையால், நீங்கள் உங்கள் நாட்டிற்குச் சென்று, தர்மம் தவறாமல் ஆட்சி செலுத்துங்கள்!’’ என்றாள். அவள் கால்களில் விழுந்து வணங்கிய அரசர், ‘‘அம்மா! ஆட்சியை அற்பமாக நினைக்கிறேன். அதன் மீது எனக்குச் சிறிதளவுகூட விருப்பமில்லை. மோட்ச வாழ்வை விரும்பும் என்னையா உங்களை விட்டுப் பிரிந்து போகச் சொல்கிறீர்கள்?’’ என்றார். அப்போது ஜெயதேவர், ‘‘மன்னா! உனக்கு என்ன குறை நேரிட்டது?’’ எனக்கேட்டார்.
அதைக் கேட்ட மன்னர், ஜெயதேவரை வணங்கி, ‘‘குருநாதா! ஆத்ம ஞானத்தை எனக்குச் சொல்லி உபதேசிக்க வேண்டும். என் உயிர் என்றாவது ஒருநாள் என்னைவிட்டு விலகிப் போவது உண்மையல்லவா? பரந்த வெட்டவெளியில் இருக்கும் விளக்கைப் போலவும், பழுத்த இலையைப் போலவும், அறுகம்புல் நுனியில் இருக்கும் பனித்துளியைப் போலவும், பழுத்த இலையைப் போலவும், நீர்மேல் குமிழி போலவும், சுழற்காற்றைப் போலவும் நிலை இல்லாததாக உள்ள இந்த உயிரை நம்பிப் பாவியானேனே! நிச்சயம் இல்லாத இந்த உடம்பை மெய்யென்று நம்பிப் பொய்யாகிப் போனேன்.
உடம்பை நிலையில்லாதது என்றும், உலகமே மகேந்திர (மாயா) ஜாலம் போல மாறிமாறித் தோன்றி மறையக் கூடியது என்றும் சொல்வதுதான் உண்மை. இதை அறியாமல் பேதையாய்ப் போய் விட்டேனே! சூரியன் என்னும் அளக்கும் கருவியைக் கொண்டு, ஆயுள் என்னும் வாழ் நாட்களை உண்டு, முடிவில் நம்மையும் உண்ணும் யமனுக்குத் தப்பியவர்கள் இந்த உலகில் யாருமே இருந்தது இல்லை; இருக்கப் போவதும் இல்லை. குருநாதா! குழந்தைக்குத் தாயும், மரங்களுக்கு நீரும், குடி மக்களுக்கு அரசனும், பகலுக்குச் சூரியனும், துணையாக இருப்பதைப் போல, அடியேனுக்குத் துணையாக உள்ள நீங்கள்தான் அடியேனைக் காப்பாற்ற வேண்டும்!’’ என்றார்.
மன்னருடைய வாக்கில், அவர் வாழ்வின் இடர்ப்பாடுகளை உணர்ந்ததும், அதிலிருந்து தப்பிப் பிழைத்துத் தெளிவான ஞானத்தை அடைய விரும்பியதும் வெளியாகின்றன. மன்னரின் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்ட ஜெயதேவர், ``மன்னா! சர்க்கரை என்று சொன்னாலும், எழுதினாலும் அது இனிக்குமா? பாகீரதி (கங்கை) என்று சொன்னாலே பாவம் போய்விடுமா? மந்திரத்தை ஓதினால் எல்லாம் கிடைத்து விடுமா? குருபக்தி இருந்தாலே மோட்சம் கிடைத்துவிடுமா? மருந்தென்று சொல்வதால் நோய் நீங்கி விடுமா? என்பவைகளை எல்லாம் யோசித்துப்பார்! முக்தி அடைய வேண்டும் என்ற விருப்பம் உள்ளவனுக்கு, முதலில் வைராக்கியம் இருக்க வேண்டும். வைராக்கியமில்லாத ஞானத்தால் பலனில்லை’’ என்ற ஜெயதேவர் தொடர்ந்து பல வைராக்கியங்களை விவரிக்கத் தொடங்கினார். ஜெயதேவர் விவரிக்கத் தொடங்கிய அந்த வைராக்கியங்களைப் பார்த்தால், அவையெல்லாம் நம்மைத்தான் கூறுவதாகத் தோன்றும்.
வாருங்கள்! பார்க்கலாம். ஜெயதேவர் தொடர்ந்தார்; ‘‘புனிதமான பக்தி நூல்களைப் படிக்கும் போதும், கேட்கும்போதும், இனிமேல் பாவமே செய்யக்கூடாது. புண்ணியமே செய்ய வேண்டும். எப்போதும் இறைவனையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பது, புராண வைராக்கியம் எனப்படும். அடுத்தது, மயான வைராக்கியம்! இறந்தவரின் உடலைக் கொண்டு போகும்போது அதனுடன் செல்பவர்கள், மனம் நொந்துபோய், என்ன வாழ்வு இது? சொத்து, சுகம் என எல்லாம் இருந்தும், அவை அனைத்தும் பயனில்லாமல் போய்விட்டதே! இனிமேல் புண்ணியங்களையும் தர்மங்களையும் நல்லவைகளையும் மட்டுமே செய்து வரவேண்டும் என்று நினைப்பது மயான வைராக்கியம்.
அடுத்தது, பிரசவ வைராக்கியம்! பிரசவத்தின் போது பெண்களுக்குத் தாங்கமுடியாத மிகுந்த வலி ஏற்படும். அப்போது, இனி பிள்ளை பெறும்படியான செயல்களில் இறங்கவே கூடாது எனத் தீர்மானிப்பார்கள் பெண்கள். அந்த வைராக்கியமும் செயலற்றுப் போகும். அடுத்தது, சலன வைராக்கியம்! குடும்பத்தில் ஏதாவது கலகம், பிரச்னை ஏற்பட்டால், ஊஹும்! இனிமேல் வீட்டிலே இருக்கக்கூடாது என்று வீட்டைவிட்டு வெளியேறி, அயல் நாட்டில் போய்த் தனியாக இருப்பது சலன வைராக்கியம். அதுவும் பலன் இல்லாமல் போய்விடும். அடுத்தது, விரும்பிய எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும். யாராவது எதிர்த்தால், அவர்களை அழித்துவிட்டு எதற்கும் அஞ்சாமல் மனம்போன போக்கில் தீவிரமாகப் போய், முறையின்றி விரும்பியவற்றையெல்லாம் அனுபவிப்பது, ராட்சச வைராக்கியம்.
அடுத்தது, சிவபெருமான் தனக்கு உண்டான பிரம்மஹத்தியை விஷ்ணுவால் நீக்கிக்கொண்டதால், விஷ்ணுவே ஆதி தெய்வம் என்றும், விஷ்ணுவும் பிரம்மாவும் சிவபெருனின் அடி முடியைத் தேடிக் காண முடியாமல் போனதால், முழுமுதல் தெய்வம் சிவபெருமானே என்றும் கருதியிருப்பது மத வைராக்கியம்.இப்படிப் பற்பல வைராக்கியங்கள் உண்டு. மன்னா! உண்மையைத் தெரிந்து கொள்! உடம்பை இயக்குவது உயிர்.
அந்த உயிரை நடத்துவது ஜீவன். அந்த ஜீவனைத் துவங்கச் செய்வது ஆத்ம ஞானம். ஆகையால், உடலையும் மற்றவைகளையும் தனதல்ல என்று இருக்க வேண்டும். மன்னா! உடம்பு முதலியவைகளில் அசைவில்லாமல், உறக்க (தூக்கம்) சுகம் ஏற்படுவதைப் போல, ஆத்ம ஞானத்தை உணர்ந்து பிரம்ம மாத்திரமாக இருப்பவருக்குத்தான் ஆனந்தம் தோன்றும். தூக்கம் நம்மை மறக்கச் செய்வதைப் போல, பிரம்ம ஆனந்தமும் நம்மை மறக்கச் செய்யும். மன்னா! நீ எப்போதும் முக்தனாகவே இருக்கிறாய். இனி மேலும் சந்தேகம் கொண்டால், பந்தங்களே அதிகமாகும். மூன்று (ராஜச, தாமச, சாத்விக) குணங்களும், அந்தக் குணங்களின் சேட்டைகளும், (செயல்) பஞ்ச பூதங்களும், பஞ்ச பூதங்களின் தலைவர்களும் மாயையால் நிர்மாணிக்கப்பட்டவை.
மாயை என்பதோ பொய்யானது. (தோன்றுவது போல் தோன்றி மறைவது எதுவோ அது மாயை. உதாரணம்: கானல்நீர்) நீயே எல்லாவற்றிற்கும் சர்வ சாட்சியாக இருக்கிறாய். இதை அறிந்து செயல்பட்டால், உனக்கு மாயை, முக்குணங்கள், பஞ்ச பூத விகாரங்கள் ஆகியவை ஒரு போதும் இல்லை. நீ பஞ்ச பூதங்களிலும் பரவி நிறைந்திருக்கும் பிரம்மமே ஆவாய். இப்படிப்பட்ட ஞான அனுபவத்தால், நான் என்னும் ஜீவ பாவனை நீங்கும். இந்த அனுபவமே நான்கு வேதங்களிலும், பகவத் கீதை, ஆத்ம கீதை போன்ற எட்டு கீதைகளிலும், பதினெட்டு புராணங்களிலும் தெளிவாகக் கூறப் பட்டுள்ளன’’ என்று நீள நெடுகத் தான் சொல்லி வந்த உபதேசங்களை முடித்தார் ஜெயதேவர்.
அத்துடன் நிறுத்தவில்லை ஜெயதேவர்; மன்னர் உட்பட அங்கிருந்த அனைவரையும், தான் (ஜெயதேவர்) சொன்ன வார்த்தைகளை நம்பச் செய்வதற்காக, ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயில் உள்ளே சென்றார். அனைவரும் பின் தொடர்ந்தார்கள். அங்கே விஸ்வநாதர் சந்நதியில் நின்ற ஜெயதேவர்,
‘‘ஏகம் பிரம்மம் துவைதம் நாஸ்தி!’’
- என்று சத்தியம் செய்தார்.
அதே விநாடியில், விசாலாட்சி சமேதராகக் காட்சியளித்த விஸ்வநாதர், அனைவரையும் ஆசீர்வதித்து மறைந்தார். அதன் பிறகு ஜெயதேவரும் மன்னரும் அவர்களைச் சார்ந்தவர்களும், காசி பண்டிதர்களிடம் விடைபெற்றுத் தங்கள் ஊர் திரும்பினார்கள். (இந்த வரலாற்றைச் சொல்லிக் கொண்டு வந்த நாபாஜி சித்தர் இந்த இடத்தில் ஜெயதேவர் வரலாற்றை நிறைவு செய்தார்)இந்த ஜெயதேவரின் சரித்திரத்தையும், அவருடைய அஷ்டபதிகளையும் நாள்தோறும் அன்புடன் பாராயணம் செய்பவர்களும், கேட்பவர்களும், மகாவிஷ்ணு, சிவபெருமான் ஆகியோரின் கருணையையும், பிரம்ம ஞானத்தையும் பெற்று, அஷ்ட ஐஸ்வரியங்களுடன் ஆனந்தமாக வாழ்வார்கள். எனப் பலசுருதி (பலன்) மகாபக்த விஜயத்தில் கூறப்பட்டுள்ளது.
V.R.சுந்தரி