Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வேண்டாம், கேலி..!

சிலர் இறைவனையும் மறுமையையும் கிண்டல்- கேலி செய்துகொண்டிருப்பார்கள். இறுதி வேதம் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில் மறுமையைக் கிண்டல் அடிக்கும் பேர்வழிகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கப்பட்டு வந்தது.ஓர் எடுத்துக்காட்டு பார்ப்போம்.“நீங்கள் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த மறுமை எப்போதுதான் நிறைவேறும்?” என்று எதிரிகள் சிலர் எகத்தாளமாகக் கேட்டனர்.உடனடியாக இறைவன் அதற்குப்பதில் அளித்தான். “அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஒரேயொரு பயங்கர ஓசையேயன்றி வேறில்லை. அவர்கள் உலக விவகாரங்கள் குறித்து தர்க்கித்துக்கொண்டிருக்கும்போதே திடீரென்று அது அவர்களைப்பிடித்துக்கொள்ளும்.” (குர்ஆன் 36:48-50)இது தொடர்பாக நபிமொழி நூல் களில் ஒரு நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.

கப்பாப் என்று ஒரு நபித்தோழர். இவர் அரிவாள், ஈட்டி போன்றவற்றைத் தயாரிக்கும் கொல்லர் வேலை செய்து வந்தார். நபிகளார் மீது ஆழமான அன்பும் நேசமும் கொண்டிருந்தார்.ஆஸ்பின்வாயில் என்பவர் இறைமறுப்பாளராக இருந்தார். இவருக்குக் கப்பாப் ஒரு வாள் தயாரித்துத் தந்திருந்தார். அதற்குரிய பணத்தைத் தராமல் ஆஸ் பின் வாயில் இழுத்தடித்து வந்தார்.ஒரு நாள் ஆஸிடம் சென்று, தமக்குரிய பணத்தைத் தரும்படி கேட்டார் கப்பாப். அவன் திமிராக, “நீ முஹம்மதை நிராகரிக்கும் வரையில் உனக்கு நான் பணம் தர மாட்டேன்” என்றான்.உடனே கப்பாப், “நீ மரணித்து மீண்டும் உயிருடன் எழுப்பப்படும் நாள் வரை முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்” என்றார்.“என்னது? எனக்கு மரணமா? நான் மீண்டும் மறுமையில் எழுப்பப்படுவேனோ?” என்று கேட்டான் ஆஸ்பின்வாயில்.“ஆமாம்...” என்றார் கப்பாப்.“சரி. மறுமையில் மீண்டும் உயிருடன் எழுப்பப் படும்போது அங்கே எனக்குப் பணமும்பிள்ளைகளும் வழங்கப்படும்.

உன் பணத்தை மறுமையில் வாங்கிக் கொள்” என்று கிண்டலடித்தான்.இந்த நிகழ்வின் பின்னணியில் உடனே வேத வசனம் அருளப்பட்டது.“எவன் நம்முடைய வசனங்களை மறுக்கின்றானோ, பொருட் செல்வமும் மக்கள் செல்வமும் எனக்கு வழங்கப் பட்டுக்கொண்டே இருக்கும் என்றும் கூறுகின்றானோ அவனை நீர்பார்த்தீரா? அவன் மறைவான உண்மைகளை அறிந்துகொண்டானா? அல்லது கருணை மிக்க இறைவனிடம் ஏதேனும் உடன்படிக்கை செய்து வைத்திருக்கிறானா? அப்படி ஒன்றும் இல்லை. அவன் பிதற்றுவதை நாம் எழுதிவைத்துக்கொள்வோம். அவனுக்குத் தண்ட னையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்.”( குர்ஆன் 19:77-79)இறைவன், மறுமை போன்ற நம்பிக்கைகளைக் கேலிசெய்வதை விட்டொழிப்போம். அவ்வாறு கேலி செய்வது இறைவனின் தண்டனைக்கே வழிவகுக்கும்.

- சிராஜுல் ஹஸன்.