Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இசைக்காகவே ஊத்துக்காடு

பகுதி 4

ஊர் முழுதும் ஊத்துக்காடு பற்றிய பேச்சாகவே இருந்தது.``அவர் பாடல்களை அவரே பாட வேண்டும்; நாம் கேட்கவேண்டும். தன்னை மறைத்து வாழும் அவர், நாம் கேட்டால் பாட மாட்டார். ம்..! என்ன செய்வது? ஆ! அதுதான் சரி!’’ என்று அனைவருமாக, திருமணம் நடத்தும் நீலகண்ட சிவாசாரியார் தலைமையில், ராஜா பாகவதரிடம் போனார்கள்.

``ஐயா! நீங்கள்தான் மனம் வைக்க வேண்டும். நீங்கள்தானே ஊத்துக்காடுக்கு, சங்கீத குருவாக இருந்தீர்கள்! நீங்கள் சொன்னால் அவர் மறுக்க மாட்டார். அவரை நெருங்கிப் பேசவே, எங்களுக்கெல்லாம் பயமாயிருக்கிறது. ஊத்துக்காடைப்பற்றிச் சொல்லி, ருத்ரபசுபதி வாசித்துக் காட்டியதைக் கேட்ட பிறகு, எங்களால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை.``கேட்டால், `சங்கீத சாகரமான ஊத்துக்காடிடம் இருந்து நான் அறிந்தது, ஒரு சிறுதுளிதான்’ என்கிறார் ருத்ரபசுபதி.

துளியே இப்படியென்றால், ஊத்துக்காடு எப்படிப்பாடுவார்? எந்த வழியிலாவது ஊத்துக்காடைச் சம்மதிக்க வைத்து, இந்தக் கல்யாண வைபவத்தில் கொஞ்ச நேரமாவது அவரைப்பாடச் செய்ய வேண்டும்’’ என்று ராஜா பாகவதரை நிர்பந்தப்படுத்தினார்கள். ஒருவர் மாறி ஒருவராக அவர்கள் சொன்னவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ராஜாபாகவதரின் கண்களில், கண்ணீர் ததும்பியது; மேல் துண்டால் துடைத்துக் கொண்டு, மென்மையாகப் புன்முறுவல்பூத்து பேசத் தொடங்கினார்.

``எல்லாரும் ஒன்னா வந்ததுல ரொம்ப சந்தோஷம்! குருநாதராவது சிஷ்யனாவது? யாருக்கு யார் குரு? புரியாமல் பேசுகிறீர்கள். ஆரம்ப காலத்துல ஏதோ எனக்குத் தெரிஞ்சத அவனுக்கு சொல்லி வெச்சேன். அதுக்காகப்போய் உரிமை கொண்டாடறதா? அவன் இவன்னு சொல்லவே கூச்சமாயிருக்கு எனக்கு.``கிருஷ்ண பரமாத்மாவையே ஞானகுருவா வெச்சிண்டு சங்கீதத்தோட உச்சாணிக்குப்போய், கரைகண்ட அவன் பாடறது எனக்கே புரியல. அப்படியிருக்கும்போது, அவனப்போய்ப் பாடச் சொல்லிக் கூட்டிண்டு வாங்கோன்னு என்னை ஏவறது என்ன நியாயம்? அவன நெருங்கிப்பேச உங்களுக்கெல்லாம் என்ன பயம் இருக்கோ, அதே பயம்தான் எனக்கும்’’ என்று விரிவாகச் சொல்லி மறுத்தார் ராஜா பாகவதர். வந்தவர்கள் விடவில்லை; ஒரே பிடியாய் நின்றார்கள்.

``ஐயா! நீங்க சொல்றது எல்லாம் சரி! ஆனா அவர் அப்பிடியில்லியே! உங்களப் பாத்தா போதும்; இன்னிக்கும் தோள்ல இருக்கற துண்ட எடுத்துட்டு, அடக்க ஒடுக்கமாத்தான பேசறார். நீங்க என்ன சொன்னாலும் சரி! அது எங்க காதுலேயே விழாது. தயவு பண்ணி, அவர்கிட்ட நீங்க சொல்லுங்கோ!’’ என்று மன்றாடினார்கள். ராஜா பாகவதருக்கு வேறுவழி ஒன்றும் தோன்றவில்லை.

``சரி! நீங்க எல்லாரும் சொல்றதால நான் ஒன்னு செய்யறேன். அவன் கிட்ட உங்க ஆர்வத்தச் சொல்றேன். ஆனாக்க `பாடு’ ன்னு நிர்பந்தப்படுத்த மாட்டேன்’’ என்றார்.

ஊரார் ஒப்புக்கொண்டார்கள். ராஜா பாகவதர் ஊத்துக் காடைத் தேடிச்சென்று, ``நீலகண்ட சிவாசார்யார் க்ருஹத்து கல்யாணத்துல, நீ கொஞ்ச நேரமாவது பாடணும்னு எல்லாரும் ஆசைப்பட்றா’’ என்றார். ஊத்துக்காடு மெள்ளச் சிரித்தாரே தவிர, பதில் ஏதும் சொல்லவில்லை. ஊர்க்காரர்களுக்கு ஏமாற்றமானது. இருந்தாலும் விடுவதாக இல்லை. வேறொரு விதமாக முயற்சி செய்தார்கள். ஊர்ப் பெரிய மனிதர்கள் சிலர் ஒன்றாகச் சேர்ந்து போய், ``நீங்க மறுக்காம வந்து, கல்யாணத்துல மொதல் தாம்பூலம் வாங்கிக்கணும்’’ என்று ஊத்துக்காடை வற்புறுத்தினார்கள்.

``நான் கல்யாணம் ஆகாத கட்டை. எனக்குப் போய் வெத்தல பாக்கா?’’ என்றார் ஊத்துக்காடு. வந்தவர்கள் விடவில்லை; ``கல்யாணத்துல வந்து, நீங்க காலடி வெச்சா, கல்யாணத் தம்பதிகள் மங்கல கரமா இருப்பாங்கறது, எங்க எண்ணம். அப்பறம் உங்க இஷ்டம்’’ என முடித்தார்கள். ஊத்துக்காடு இசைந்தார். அவருக்கு நன்றி செலுத்தி, வந்தவர்கள் மிகுந்த மனநிறைவோடு, வேகவேகமாகத் திரும்பினார்கள்; காரணம்? ஊத்துக்காடு ஒப்புக் கொண்டால், வேறு சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று தீர்மானித்திருந்தார்கள் அவர்கள்; அந்த ஏற்பாடுகளைச் செய்யவே வேகவேகமாகத் திரும்பினார்கள்.

ஊத்துக்காடு கல்யாண வீட்டில் நுழைந்தார்; அன்போடும் பணிவோடும் வரவேற்று அழைத்துச் சென்றார்கள். உணவு வேளையாக இருந்ததால், இலை போட்டார்கள். ``சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும்’’ என வற்புறுத்த, அவர்கள் அன்புக்குக் கட்டுப்பட்டு, ஊத்துக்காடு உண்ண உட்கார்ந்தார். ஏதோ பெயரளவிற்கு உண்டதாகக் கை வைத்துவிட்டு எழுந்த ஊத்துக்காடு, அங்கிருந்து புறப்பட்டார். உண்ணும் இடத்தை விட்டு வெளியே வந்தார், முன்னால் இருந்த பெரிய பந்தலில் ஊரேகூடி அமர்ந்திருக்க, அவர்களுக்கு முன்னால் இருந்த மேடையில் இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. கூட்டத்தைத் தாண்டி, ஊத்துக்காடு வெளியே போக வழியில்லை;``கொஞ்சநேரம் ஓய்வெடுத்துக் கொண்டு, பிறகு போகலாமே!’’ என்றார்கள். வேறு வழியில்லை; வேறுவழியும் இல்லை. ஒரு பக்கமாக உட்கார்ந்தார், ஊத்துக்காடு. நடந்து கொண்டிருந்த கச்சேரி, அவர் காதுகளிலும் விழத்தான் செய்தது. அதில் எதுவுமே ரசிக்கும்படியாக இல்லை அவருக்கு.

ஆனால், மேடையின் முன்னால் இருந்த கூட்டமோ, ``ஹ! பிரமாதம்! பிரமாதம்! பலே! பலே! பேஷ்’’ என்று, அவ்வப்போது கூவிக் கொண்டிருந்தது. சிரக்கம்பங்களும் கைதட்டல்களும் ஏகத்துக்கும் இடம் பெற்றன. கச்சேரியை விட, மக்கள் செய்யும் கூத்துக்கள், பொறுத்துக்கொள்ள முடியாததாக இருந்தன. தாங்க முடியாத ஊத்துக்காடு வாயை இறுக மூடிக் கொண்டார். இரு கைகளையும் இறுக்கமாகக் கட்டிக் கொண்டார். சிறகுகள் இல்லாத குறைதான். இருந்திருந்தால், அப்படியே எழுந்து பறந்திருப்பார்.

ஊத்துக்காடு படும் அவஸ்தைகளை, அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். பந்தலில் ஆரவாரங்கள் தொடர்ந்தன. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஊத்துக்காடு, பொறுமை இழந்தார்; ‘விருட்’டென்று எழுந்தார்; முன்னால் இருந்தவர்களை விலக்கியபடி மேடையை நெருங்கினார்; கை நீட்டித் தம்புராவை வாங்கிக் கொண்டு உட்கார்ந்தார்; கண்களை மூடிக் கண்ணனைத் தியானித்து, கானம் பாடத் தொடங்கினார்.

கூட்டம் முழுதும், ‘‘அப்பாடா! நம் எண்ணம் பலித்தது. தீட்டிய திட்டம் வெற்றி பெற்றது’’ என உள்ளுக்குள் குதூகலித்தது. ராஜா பாகவதர், ருத்ரபசுபதி பிள்ளை முதலான சங்கீத மேதைகள், காதுகளையும் கண்களையும் ஊத்துக்காடு மேல் வைத்து, மனதைக் காலியாக்கிக் கொண்டார்கள். பாடத் தொடங்கிய ஊத்துக்காடு, பாடிக் கொண்டே இருந்தார். கூட்டம் முழுதும் கேட்டு மெய் மறந்தது. மெய் மறந்துகேட்டுக்கொண்டிருந்தது. நேரத்தைப்பற்றி, யாரும் நினைக்கவில்லை. கோழி கூவியது. அனைவர் காதுகளிலும் ஊத்துக்காடு பாட்டு விழுந்து கொண்டிருக்க, ஊத்துக்காடின் காதுகளில் கோழி கூவியது விழுந்தது.

‘‘ஆகா! பொழுது புலர்ந்து விட்டது’’ என்பதை உணர்ந்து பாடலை நிறுத்தினார். அதன்பிறகே, பொழுது விடிந்ததை உணர்ந்தார்கள் ஊரார். தம்புராவைக் கீழே வைத்த ஊத்துக்காடு, நாத வடிவான தெய்வத்தை நமஸ் கரித்துவிட்டு வெளியே நடந்தார். மறைந்தார். அவர் பாடல்கள் மறையவில்லை. அரும்பெரும் பொக்கிஷங்களான அவை, இன்றும் மக்கள் மத்தியிலே பல விதங்களிலும் உலவி வருகின்றன.

(முற்றுப் பெற்றது)

பி.என்.பரசுராமன்