பகவானிடம் நமக்கு வேண்டியதைக் கேட்கிறோம். இப்படிக் கேட்பதில் மிகுந்த கவனம் வேண்டும். அதைவிடக் கேட்காமல் இருப்பது ஒருவகையில் சிறந்தது. மாணிக்கவாசகரிடம் சிவபெருமான், ‘‘உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டபொழுது, ‘‘எனக்கு என்ன வேண்டுமோ அதை நீ தந்து விடுவாய்” என்று சொல்வதாக ஒரு பாடல் இருக்கிறது.
வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதும் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ! வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டினல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே
நமக்கு வேண்டியதைக் கேட்கும்போது சில சிக்கல்கள் இருக்கின்றன. அதில் நமக்குத் தேவையில்லாததும், நமக்குத் துன்பத்தைத் தருவதும் என சில விஷயங்கள் அமைந்து விடும். இப்பொழுது உள்ள மருத்துவத்தில் நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்ளும் பொழுது சில பக்க விளைவுகளும் ஏற்பட்டு விடுவது போல, நாமாகக் கேட்கும் வரங்களில் பக்கவிளைவுகள் உண்டு. சமயத்தில் அந்த பக்க விளைவுகள், நோயை விடக் கொடுமை யானதாக இருக்கும்.
உண்மையில் பகவானே நம்மிடம், ‘‘உனக்கு என்ன வேண்டும்?’’ என்று கேட்டாலும்கூட, ‘‘எனக்கு இன்னது வேண்டும்’’ என்று கேட்கும் புத்திசாலித்தனம் நமக்கு இல்லை என்பதை புரிந்து கொண்டு, ‘‘எனக்கு என்ன வேண்டுமோ, அதை நீயே தந்துவிடு’’ என்று கேட்பதுதான் சரியாக இருக்கும்.
வரம் கேட்கும் விஷயத்தில் பிரகலாதனைப் பின்பற்ற வேண்டும். எத்தனையோ இடையூறுகள் அவனுடைய தந்தையால் ஏற்பட்டாலும், தன்னுடைய தந்தையை பகவான் வதம் செய்ய வேண்டும் என்று வரம் கேட்கவில்லை. ‘‘என் தந்தையைக்கொன்று என்னைக் காப்பாற்று” என்று கேட்கவில்லை. ஏன் என்னைக் காப்பாற்றிவிடு என்று கூடக் கேட்க வில்லை. தந்தையால் மரணம் நேர்ந்தாலும்கூட பகவத் ஸ்மரணம் (இறை நினைவு) போய்விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.
தன்னை நம்பிய அவனுக்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்டு பகவான் மனம் கொதிக்கிறான். அப்பொழுதெல்லாம்கூட இரணியனுக்கு பகவான் தண்டனை தரவில்லை. பிரகலாதனை நெருப்பில் தூக்கிப் போட்டாலும், விஷம் கொடுத்தாலும், யானையைக் கொண்டு மிதித்தாலும், கல்லைக் கட்டி கடலில் போட்டாலும், மலையிலிருந்து உருட்டி விட்டாலும், காப்பாற்றுவதோடு விட்டு விடுகிறார். இரணியனைக் கொல்லவில்லை. இரணியன் பிரகலாதனின் நம்பிக்கையைச் சோதித்ததால்தான்,
இரணியனுக்குத் தண்டனை தரும் நிலை வந்துவிடுகிறது.‘‘எங்கே இருக்கிறான் உன் இறைவன்?’’ என்று கேட்டு, ‘‘அவன் எங்கும் இருக்கிறான் என்றால், இந்தத் தூணில் இருக்கின்றானா, இருந்தால் தூணை உடைத்து உன்னுடைய இறைவனை நான் கொல்லப் போகிறேன், இல்லாவிட்டால் பொய் சொன்ன உன்னைக்கொல்லப் போகிறேன்” என்று சீற்றத்துடன், எதிர்க்கத் துணிந்தபோதுதான், இரணியனை பகவான் வதம் செய்கிறான். எது நல்லதோ, பகவான் அதைச் செய்வான் என்கிற உறுதி பிரகலாதனுக்கு இருந்தது. அதனால்தான் பகவான் அவனைத் தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டு, ‘‘உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்” என்று கேட்ட பொழுது. “இனி எத்தனை பிறவி வந்தாலும், எப்படிப்பட்ட புழுவாய் பிறந்தாலும் உன்னிடத்தில் அன்பு வைக்கும் மனத்தை மட்டும் தா” என்று வரமாக வேண்டினான்.
என்பு பெறாத இழி பிறவி எய்தினும் நின்
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் என்றான்
- (கம்பன், இரணிய வதை படலம்)
வரம் கேட்கும் விஷயத்தில் மிகவும் நுட்பமான புத்திசாலியான அறிஞர்களும் ஏமாந்து விடுகிறார்கள். பக்குவம் இல்லாதவர்கள் கேட்கும் வரங்கள் எல்லாம், மகிழ்ச்சியாக இருந்தாலும் முடிவில், வேறுவிதமாக மாறி விடுகிறது. மகாபாரதத்தில் சகாதேவன் மிகச் சிறந்த பக்திமான். மிகச் சிறந்த ஜோதிடன். மகாபாரதப் போரை எப்படி நிறுத்தலாம் என்று அவனிடத்திலே கண்ணன் ஆலோசனை கேட்டபொழுது அவன் சொல்வது இதுதான்.
முருகு அவிழ்க்கும் பசுந் துளப முடியோனே! அன்று
அலகை முலைப்பால் உண்டு,
மருது இடைச் சென்று, உயர் சகடம் விழ உதைத்து,
பொதுவர் மனை வளர்ந்த மாலே!
ஒருவருக்கும் தெரியாது இங்கு உன்மாயை; யான்
அறிவேன், உண்மையாக;
திருவுளத்துக் கருத்து எதுவோ, அது எனக்கும் கருத்து!’
- என்றான், தெய்வம் அன்னான்.
இத்தோடு அவன் நிறுத்தி இருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆனால், அவனிடம் விளையாட நினைக்கிறான் பகவான்.‘‘என்னுடைய கருத்து இருக்கட்டும், எப்படிச் செய்தால் போரை நிறுத்தலாம்?’’ என்று கேட்கும் பொழுது, அவன், “கர்ணனை அரசன் ஆக்க வேண்டும், அர்ஜுனனைக் கொல்ல வேண்டும், திரௌபதியின் குழல் களைய வேண்டும், அதோடு உன்னைக் கட்ட வேண்டும்” என்று கேட்க, கண்ணன் வேடிக்கையாக, ‘‘மற்ற மூன்றும் நடந்தாலும் என்னை எப்படி உன்னால் கட்ட முடியும்?” என்று கேட்கிறன்.
பகவானை தன்னுடைய பக்தியால் சகாதேவன் கட்டி விடுகிறான்.
இனிமேல்தான் இருக்கிறது செய்தி. இப்பொழுது ‘‘சரி சரி, என்னுடைய காலை விடு’’ என்று சொல்ல.
சகாதேவன் கேட்கிறான்.
அன்பால் இன்று என்னை அறிந்தே பிணித்தமை நன்று;
என் பாதம்தன்னை இனி விடுக!’ என்று உரைப்ப,
‘வன் பாரதப் போரில் வந்து அடைந்தேம் ஐவரையும்,
நின் பார்வையால் காக்க வேண்டும், நெடுமாலே!’
கடைசி வரியைப் பாருங்கள். எல்லாம் அறிந்த சகாதேவன் ‘‘எல்லோரையும் காக்க வேண்டும் என்று கேட்டிருந்தாலும் பரவாயில்லை. சண்டையே வராமல் செய்தால்தான் உன் காலை விடுவேன் என்று சொல்லி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், தெரிந்தோ தெரியாமலோ எங்கள் ஐவரை மட்டும் காக்க வேண்டும் என்று கேட்கின்றான். விளைவு இதுதான். பாரதப் போரில் அத்தனை பேரும் அழிகிறார்கள். இரண்டு பக்கத்திலும் அழிகிறார்கள். 18 அக்குரோணி படை அழிகிறது. ஒரு அக்குரோணி படை என்பது, காலாட் படைவீரர்கள் 1,09,350, குதிரைகள் 65,610, தேர்கள் 21,870, யானைகள் 21,870 ஆக மொத்தம் 2,18,700 எண்ணிக்கை கொண்டது. இது போன்று கௌரவர் அணியில் 11 அக்ரோணி படைகளும், பாண்டவர் அணியில் 7 அக்ரோணி படைகளும் இருந்தன் இரு அணிகளில் இருந்த 18 அக்குரோணி படைகளின் மொத்த எண்ணிக்கை 39,36,600 ஆகும்.கௌரவர் தரப்பில் கிருபர், அசுவத்தாமன், கிருதவர்மன், கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே போரின் இறுதியில் உயிருடன் எஞ்சினர்.
பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், கிருஷ்ணர், சாத்யகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர். போரில் ஈடுபட்ட மற்ற அனைத்து மன்னர்கள், படைத்தலைவர்கள், படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.....ஐவரையும்,
நின் பார்வையால் காக்க வேண்டும், நெடுமாலே!’
என்றான். அவன் கேட்டதைக் கொடுத்து விட்டான்.
அவன் கேட்டது வரமா சாபமா?
தேஜஸ்வி