Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

குரு எல்லோருக்கும் நல்லவரா?

ஒருவருடைய வாழ்க்கையை 12 கட்டங்களும் ஒன்பது கோள்களும் தான்

தீர்மானிக்கின்றன என்பது ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை. இந்த ஒன்பது கோள்களில், சிலரை இயற்கை சுபர்கள் என்றும், சிலரை இயற்கை பாவிகள் என்றும் ஜோதிட சாஸ்திரம் பிரித்து வைத்திருக்கிறது. உதாரணமாக குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகிய நான்கு கிரகங்களை இயற்கை சுபர்களாகவும், சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது என்ற ஐந்து கிரகங்களை இயற்கை பாவிகளாகவும் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்.

ஆனால் இதை மட்டும் வைத்துக்கொண்டு ஜோதிடப் பலன்களை முழுமையாக கணிக்க முடியாது. கிரகங்களை எப்படிப் பிரித்து வைத்திருக்கிறார்களோ, அதைபோல 12 ராசிகளையும், ஆதிபத்தியங்கள் அடிப்படையில், சுப அசுப ராசியாகப் பிரித்து வைத்திருக் கிறார்கள். பெரும்பாலும் திரிகோண ராசிகள், (1,5,9) மற்றும் கேந்திரங்களை (1,4,7,10) சுப ராசிகளாகச் சொல்வார்கள். அந்த இடங்களில் கிரகங்கள் பலம் பெறுவார்கள்.

சுப கிரகங்களுக்கு, அசுப ஆதிபத்தியம் வந்துவிட்டால், அதாவது 6,8,12 ஆதிபத்தியங்கள் வந்துவிட்டால், அவர்கள் சில பாதகங்களைச் செய்யத்தான் செய்வார்கள். இயற்கை சுபர்களாயிற்றே, இவர்கள் பாதகம் செய்ய மாட்டார்கள் என்று நாம் கருதமுடியாது. இது தவிர, பாதகாதிபதிகள் என்று ஒரு கோட்பாடு உண்டு. சர ராசிகளாகிய மேஷம், கடகம், துலாம், மகரம் ராசிகளுக்கு 11-ஆம் இடம் பாதகஸ்தானம். அதை லாபஸ்தானம் என்று மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. அது பாதக ராசியாகவும் செயல்படும்.

அதைப் போலவே ஸ்திர ராசிகளான, ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் முதலிய ராசிகளுக்கு ஒன்பதாம் இடம் பாதகஸ்தானம். அது பாக்கியஸ்தானமாக இருந்தாலும் பாதகஸ்தானமாகவும் செயல்படும். உபய ராசிகளான நான்கு மூலை ராசிகள், அதாவது மிதுனம் கன்னி, தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் நேர் எதிர் முனையான ஏழாவது ராசி பாதக ராசியாகச் செயல்படும்.இங்கே ஒரு நுட்பத்தைக் கவனிக்க வேண்டும். சுப கிரகங்கள் என்று சொல்லப்படும் புதனும் குருவும் தான் இந்த ராசிகளுக்கு அதிபதிகள்.

ஆனால் குருவுக்கு எதிராக புதனும், புதனுக்கு எதிராக குருவும் செயல்படுவதை நினைத்துப் பார்க்கும்போது வியப்பாக இருக்கும்.அதுவும் பாருங்கள். ஏழாவது ராசி என்பது மிக முக்கியமான ராசி. பொதுமக்களின் தொடர்பு, நண்பர்கள், மனைவி அல்லது கணவன் (களஸ்திரம்) முதலிய முக்கியமான உயிர்க் காரகங்கள், தொழில் முதலிய பொருள் காரகங்கள் செயல்படும் முக்கியக் கேந்திரம் இது. உபய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, நன்மையைச் செய்வது போலவே தீமையையும் செய்து விடுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது தவிர, இந்தச் சுபர்களால் இன்னொரு சங்கடம் தரும் அமைப்பும் உண்டு. இவர்கள் கேந்திரத்தில் அமைந்தால் நல்லது என்று எடுத்துக் கொள்ள முடியாது. கேந்திர ஆதிபத்திய தோஷம் என்று ஒரு தோஷமும் உண்டு. குரு, புதன், சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன் முதலிய கிரகங்களுக்கு இந்தத் தோஷம் உண்டு.இந்த விஷயங்களின் அடிப்படையில் சுப கிரகமான குருவின் அமைப்பைக் கவனிக்க வேண்டும். குரு பார்க்க கோடி புண்ணியம், குரு பார்க்க குற்றமில்லை என்றெல்லாம் சொன்னாலும் கூட, பல நேரங்களில் இந்த சுப கிரகங்கள் கஷ்டத்தைத் தந்து விடும்.

குரு பார்க்க புண்ணியங்கள் கிடைப்பது போலவே, பாதகங்களும் நேர்ந்து விடுவது உண்டு. மிதுன லக்கினங்களுக்கு, ஏழாம் அதிபதியாக குரு வந்து, ஏழில் அமர்ந்து, அவரோடு எந்த கிரகமும் சேராமல் இருக்கும் பொழுது, குரு தசையோ, புத்தியோ வந்து விட்டால், அது படுத்தும் பாடு பட்டவர்களுக்குத் தான் தெரியும். அந்தணன் (குரு) தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு என்ற ஜோதிடப்பாடல் இந்த அவதிகளை பட்டியல் போட்டுக் கூறும்.களத்திரம், நண்பர்கள், தொழில், பயணம் என்ற ஏராளமான நன்மைகளைத் தரும் ஏழாம் இடம் உபய லக்கினங்களுக்குப் பாதக ஸ்தானமாகவும் இருப்பதைக் கவனத்தில் கொண்டு, கணக்கிடும் பொழுது தான் ஜோதிட சாஸ்திரத்தின் வேறொரு கோணம் நமக்குப் புரியும்.

இதை அப்படியே மனதில் வைத்துக்கொண்டு, அசுப கிரகங்களான சனி, ராகு, கேது சூரியன் முதலிய கிரகங்களை எடுத்துக்கொண்டால், அவைகள் கேந்திரத்தில் அமைந்து, சுபப்பார்வை பெறும் பொழுது பல நற்பலன்களையும் கொடுத்துவிடும். உப ஜெயஸ்தானமான 3,6,11-ல் அமையும் பொழுது இந்த அசுபர்கள் தங்கள் தசா காலங்களில் ஜாதகரைத் தூக்கி நிறுத்தி விடுகிறார்கள். மிகச் சிறந்த பொருளாதார முன்னேற்றத்தையும், தொட்டதை துளங்கும் தொழில் வளர்ச்சியையும் தந்து தாங்கிப் பிடிக்கிறார்கள்.எனவேதான், ஜோதிட சாஸ்திரத்தில், இந்தக் கிரகம் தீமையைச் செய்யும், இந்த கிரகம் நன்மையைச் செய்யும், என்றெல்லாம் எடுத்த எடுப்பில் சொல்லி விட முடியாது.

தீமையைச் செய்யும் கிரகம் நன்மையைச் செய்யும். நன்மையைச் செய்யும் கிரகம் தீமையையும் செய்யும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பார்த்தால் ‘‘ஐயோ சனி’’ என்று பயப்படவும் மாட்டோம். ‘‘ஆஹா, குரு’’ என்று சந்தோஷப்படவும் மாட்டோம்.இப்பொழுது குருவுக்கு வருவோம். குருவை ராஜ கிரகங்களில் ஒன்றாகச் சொல்லுவார்கள். ஸ்தான பலம் இல்லாவிட்டாலும், பார்வை பலம் என்று குருவுக்குத்தான் சிறப்பான பலனை ஜோதிட சாஸ்திரம் சொல்லி இருக்கிறது.குரு 6ல், எட்டில் மறைந்தாலும்அவருடைய பார்வை அற்புதமான பலன்களைத் தரும். ஆனால் அதே நேரம், அவர் வேறு வகையில் கெட்டிருக்கக் கூடாது. பலம் இழந்து இருக்கக்கூடாது. அஸ்தங்கம் ஆகி இருக்கக்கூடாது.

உதாரணமாக, சனியின் மூன்றாம் பார்வை, பத்தாம் பார்வை பெற்ற குருவுக்கு நாம் சுபபலனை ஜாக்கிரதையாகத் தான் சொல்ல வேண்டும். ஆனால் அதே நேரம், குருவின் ஐந்தாம் பார்வையை அல்லது ஒன்பதாம் பார்வையை சனி பெற்று இருந்தால், சனி சுப பலனைச் செய்வதற்கான வாய்ப்பு அதிகம்.சனியின் பார்வை குருவின் சுப பலனைக் குறைக்கும். குருவின் பார்வை சனியின் தீய பலனைக் குறைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.ஒரு ஜாதகத்தில் திரிகோண ஸ்தானங்கள் என்று சொல்லப்படும் ஒன்று, ஐந்து, ஒன்பது பலம் பெற்றுவிட்டால் அந்த ஜாதகர், கடலில் தூக்கிப் போட்டாலும், ஒரு மீனைக் கவ்விக் கொண்டு வெளியே வந்து விடுவார்.

துரதிர்ஷ்டத்திலும் கூட சில அதிர்ஷ்டங்கள் அவரைத் தூக்கி விட்டு விடும். கஷ்டப்பட்டாலும் கூட முன்னேறி விடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும்.தான் இருக்கும் இடத்திலிருந்து, ஐந்து, ஒன்பது என்ற இரண்டு திரி கோணங்களைப் பார்க்கும் வாய்ப்பு சுப கிரகமாகிய குருவுக்கு மட்டும்தான் உண்டு. எனவே குரு அசுப ஆதிபத்தியம் பெற்றிருந்தாலும் கூட, லக்ன திரிகோணங்களை, பார்வையால் பலப்படுத்தி விட்டால், அந்த ஜாதகர் எப்படியாவது உழைத்து கரை ஏறி விடுவார்.

பராசரன்