- வண்ணை கணேசன், சென்னை.
அப்படிச் சொல்ல முடியாது. தொற்றுநோய் என்பதும் உண்டு அல்லவா? நம்முடைய அன்றாட வாழ்வியல் பழக்க வழக்கங்களின் மூலமாகவும் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் குறைவதன் மூலமாகவும் வியாதி என்பது தோன்றலாம். ஒரு சில நோய்கள் பரம்பரையாகவும் வருவதுண்டு. எல்லா நோய்களையும் பரம்பரை வியாதி கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. ஆன்மிக ரீதியாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், அவரவர் செய்த கர்மவினையே அவர்களுக்கு வியாதி ரூபத்தில் வந்து சேர்கிறது. ``பூர்வ ஜென்ம க்ருதம் பாபம் வ்யாதி ரூபேண பீடிதே’’ என்று ஆயுர்வேதம் சொல்கிறது. இந்த ஜென்மாவில் யோகிகளாக வாழ்பவர்களுக்குக் கூட வியாதி என்பது வருகிறது என்று சொன்னால் அதற்கு முன்ஜென்ம வினைப்பயனே காரணம் என்றும் புரிந்து கொள்ளலாம்.
?கருவறையில் இறைவன் இருக்க, கலசம் இல்லாத கோயிலில் விளக்கேற்றி வழிபடலாமா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
கருவறையில் இறைவன் இருக்கிறான் என்று சொல்லிவிட்டீர்களே, அப்படி என்றால் விளக்கேற்றி வழிபட வேண்டும் தானே. கலசம் இல்லாவிட்டாலும், இறைவன் குடிகொண்டிருக்கும் இடத்தில் அவசியம் விளக்கேற்றி வழிபட வேண்டும். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
?வயது மூப்பில் நோயில் கிடக்கும் பெற்ற தாயை எட்டிக்கூட பார்க்காத மகனுடன் இறைவன் இருப்பானா?
- ப.சந்தானம், கரூர்.
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றெல்லாம் அன்னைத்தமிழ் அழகாகச் சொல்லித் தந்திருக்கிறது. பெற்றோருக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை சரிவரச் செய்து வந்தால் மட்டுமே இறையருள் என்பது கிடைக்கும். மாதா, பிதா, குரு இவர்களை அலட்சியப்படுத்துபவனுக்கு தெய்வம் துணை நிற்காது.
?சிலருக்கு இடது கை பழக்கம் இருக்கின்றது. இது நன்மையைத் தருமா? இதை மாற்ற முடியாதா?
- வண்ணை கணேசன், சென்னை.
பார்வதீ வாமபாகம் என்பார்கள். அதாவது சக்தி தேவி ஆகிய அன்னை பரமேஸ்வரனின் இடது பாகத்தில் இடம் பிடித்திருப்பார். இடதுகை பழக்கம் இருப்பவர்கள் சக்தி மிகுந்தவர்களாக இருப்பார்கள். கிரிக்கெட் விளையாட்டில்கூட நிறைய இடது கை ஆட்டக்காரர்கள் இமாலய சாதனை புரிந்திருப்பதை காண இயலும். இடது கை பழக்கம் இருப்பது என்பது தீமையல்ல.
?பக்தி பாடல்களை உருக்கமாகப் பாடுவதால் இறையருளைப் பெற முடியுமா?
- பி.கனகராஜ், மதுரை.
பரமாத்மாவை உணர ஒன்பது வகையான பக்தி மார்க்கம் என்பது உண்டு. இதனை நவவித பக்தி என்று சொல்வார்கள். ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாதசேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்மநிவேதனம் என்று இறைவனின் பால் பக்தியை செலுத்துவதற்கு ஒன்பது வகையான முறைகள் உள்ளன. இவற்றில் இரண்டாவதாக வரக்கூடிய கீர்த்தனம் என்பது இறைவனின் புகழைப் பாடுதலைக் குறிக்கும். இறைவனின் மீது தீராக்காதல் கொண்டு அவனது பெருமையை உருக்கமாகப் பாடுவதால் நிச்சயமாக இறையருளைப் பெற முடியும். திருவையாறு தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துஸ்வாமி தீட்சிதர், பக்த மீரா, துளசிதாஸர் போன்றோரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
?பல லட்சம் நட்சத்திரங்கள் உள்ளபோது 27 நட்சத்திரங்களை பிரதானமாக சொல்வது ஏன்?
- சுபா, ராமேஸ்வரம்.
அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். முதலில் நாம் நினைப்பது போல் அஸ்வனி என்பது ஒற்றை நட்சத்திரம் அல்ல. நூற்றுக் கணக்கான நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு தொகுப்பிற்குத்தான் அஸ்வினி என்று பெயர். இப்படி 27 நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுமே ஒரு நட்சத்திரக் கூட்டம்தான். இதுபோக வானில் எண்ண முடியாத அளவிற்கு நட்சத்திரங்கள் இருந்தாலும், நவகிரஹங்கள் வலம் வரும் பாதையில் குறிக்கிடும் நட்சத்திரக் கூட்டங்களை மட்டும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். வானில் பல்வேறு சூரிய மண்டலங்கள் என்பது உண்டு. நாம் வாழும் இந்த பூமியை உள்ளடக்கிய சூரிய மண்டலம் ஆனது இந்த 27 நட்சத்திரக் கூட்டங்களைக் கொண்ட பகுதியில் அடங்குகிறது. இதனையே 12 ராசி மண்டலங்களாகவும் பிரித்து வைத்திருக்கிறார்கள். வானவியல் என்பது பலவிதமான அற்புதங்களையும் ஆச்சரியங்களையும் கொண்டது.
?ஆடி மாதத்தில் சுபகாரியங்களுக்குத் தடை ஏன்?
- ஜி. செல்வமுத்துக்குமார், கடலூர்.
ஆடிமாதத்தில் எந்த விதமான சுபநிகழ்ச்சியும் செய்யக் கூடாது என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆடி மாதத்தில் குலதெய்வத்தின் கோயிலுக்குக் குடும்பத்துடன் செல்லும் பழக்கத்தினை உடையவர்கள், சுபநிகழ்ச்சியினைத் தவிர்த்தனர். திருமணம் முடிந்த கையோடு தம்பதியரை பிரிக்க வேண்டியிருக்குமே என்பதால், திருமணத்தைத் தவிர்த்தனர். அதே நேரத்தில், க்ருஹப்ரவேசம், வீடு குடி போதல், புதிய வீடு, நிலம் வாங்குதல், திருமண நிச்சயதார்த்தம், வளைகாப்பு சீமந்தம் செய்தல் முதலானவற்றை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆடியில் வாஸ்து புருஷனே நித்திரை விடுவதால் தாராளமாக வீடு குடி போகலாம். ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களில் மட்டுமே வீடு குடிபோவதைத் தவிர்க்க வேண்டும் என்றுரைக்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆடி மாதத்தில் தாராளமாக
சுபநிகழ்ச்சிகளைச் செய்யலாம்.
?போதைப் பழக்கம் உள்ளிட்ட தீய பழக்கம் உள்ளவர்களிடமும் தெய்வசக்தி குடி கொண்டிருக்கிறதே, அது எப்படி?
- இரா.ரங்கசாமி,தேனி.
தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் மட்டுமல்லாது மற்ற உயிரினங்கள் உள்ளிட்ட எல்லாவற்றின் மீதும் உண்மையாக அன்பு செலுத்துவோர் யாராக இருந்தாலும், அவர்களிடத்தில் தெய்வீக சக்தி என்பது குடி கொண்டிருக்கும். இதைத்தான் ``அன்பே சிவம்’’ என்றும் ``அன்பே கடவுள்’’ என்றும் சொல்கிறார்கள்.