*திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் குத்துக்கல் வலசை என ஒரு இடம் உள்ளது. இங்கு 1300 ஆண்டுகள் பழமையான முருகன் கோயில் உள்ளது. இங்கு முருகனை அமர்ந்த கோலத்தில்
காணலாம்.
*குமரகிரி ஸ்ரீ தன்டாயுதபாணி திருக்கோயில் (சேலம்). இதனை குட்டி பழனி என அழைக்கின்றனர்! இங்கு திரிசத அர்ச்சனை என ஒன்று உண்டு. அடிபட்டவர்களுக்கும் விபத்தில் சிக்கியவர்களும் பிழைக்க செய்யப்படுகிறது. அரிச்சி மலர்களை பன்னீரில் கலந்து இந்த அர்ச்சனை நடக்கிறது!
*வள்ளியை மணந்த வேடன் கோலத்தில் முருகனை காண வேண்டுமா?! அதற்கு நாமக்கல் மாவட்டம், வேலுக் குறிச்சி, ஸ்ரீ பழநியப்பர் கோயிலுக்கு செல்ல வேண்டும். இங்கு முருகன் இடக்கையில் சேவலும், வலதுகையில் வஜ்ர வேலும் இடையில், பிச்சுவா கத்தி சொருகி, பாதணிகள் அணிந்தும் உள்ளார்! மூலஸ்தானத்தில் சேவலுடன் முருகன் உள்ளது இங்கு மட்டுமோ!
*நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் காளிபட்டியில் ஸ்ரீ சுந்தர கந்த சுவாமி கோயில் உள்ளது. இங்கு பாம்பு விஷக்கடிபட்டவர்களை அழைத்து வந்து பூசாரி தீர்த்தத் தினை தெளித்தால் ‘குணமாகிறது என்கின்றனர்.
*ஈரோடு மாவட்டம், உதயகிரி மலையப் பாளையத்தில், ஸ்ரீ உதயகிரி முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு சித்திரை 13,14,15 தேதிகளில் சூரிய கிரணங்கள் முருகன் மீது விழுவது தனி சிறப்பு.!
*திருப்பூர் மாவட்ட வெள்ளைக் கோயில் நகரில் ஸ்ரீ வீரகுமார சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்குள்ள விநாயகர் வாதாபியிலிருந்து எடுத்து வரப்பட்டவர் என கூறுகின்றனர்.
*கேரளாவில் சுப்ரமணிய சுவாமிக்கு நல்ல மதிப்பு உண்டு. இந்த வகையில் சில பிரபலமான சுப்ரமணியா கோயில்களை அறிந்து கொள்வோம்.
1.ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் ஹரிபாத். இதனை தென்பழனி என அழைக்கின்றனர். இது ஆலப்புழா ஜில்லாவில் உள்ளது.
2. உதயனபுரம் சுப்ரமணியா கோயில் இங்கு மரத்தில் செதுக்கிய அற்புதமான வேலைப்பாடுகளை காணலாம்!
3. ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் பாயனூர். இது கன்னுர் ஜில்லாவில் உள்ளது. மிகவும் பிரபலமானது.!
4. கன்னுர் நகரிலேயே பெரிலசேரி சுப்ரமணியா கோயில் உள்ளது. கட்டிட கலைக்கு பெயர் போன கோயில்.!!
5. காகர்கோடு ஜில்லாவில் தரவத் சுப்ரமணியா கோயில் பள்ளிக்காரவும்; கட்டிடகலைக்கு பெயர் போன கோயில்.
*மகாபலிபுரம் அருகே சாலு வங்குப்பம் என்ற இடத்தில் 2005ம் ஆண்டு ஒரு முருகன் கோயில் உள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. வடக்கு பார்த்த இந்த ஆலயம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி, தமிழிச் சங்க காலம் (கி.மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி.3ம் நூற்றாண்டு வரை) மேற்பகுதி கி.பி. 8ம் நூற்றாண்டை சேர்ந்த தாம்! சங்க கால கோயில், செங்கல்கட்டுமானத்துடனும், மேற்பகுதி கருங்கல் கட்டு மானத்தையும் கொண்டது! தமிழ் நாட்டின் மிகப் பழைய முருகன் கோயில் இது தானாம்!
*மற்றொன்ற வீற்றிருந்த பெருமாள் கோயில் வேப்பத்தூர் சாளவங்குப்பம் முருகன் கோயில். இங்கு ஆரம்பத்தில் வேல் வழிபாடு இருந்தது என கூறுகின்றனர். இந்த ஆலயம் 2200 ஆண்டுகள் பழமையானது எனவும் கூறுகிறார்கள்.
*நாகை நீலா தெற்கு வீதியில் ஸ்ரீ குமரன் திருக்கோயில் உள்ளது. குபேரன், தன் மகளான தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து கொடுத்தான். அப்போது ஜராவத யானையை சீதனமாக தந்தான். அதுவே நாகை ஸ்ரீ குமரன் கோயிலில் வாகனம்!
*ஆலங்குடி (புதுக்கோட்டை) ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோயிலை தென் பழனி என செல்லமாக அழைக்கின்றனர். இந்த கோயில் சார்ந்து சுவையான தகவல்! சுப்பிரமணிய வழுவாடியார் என்கிற ஜமீன்தார், தனது தள்ளாத வயதில் ஆண்டு தோறும் தரிசிக்கச் செல்லும் பழனி முருகனை தரிசிக்க இயலவில்லையே என நினைத்த போது, கிழவர் வடிவில் முருகன் தோன்றி கட்டச் சொன்ன ஆலயம் இது.
*திண்டுக்கல் மாவட்டத்தின் ஏட்டன் சத்திரத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோயில் ‘மிட்டாய் முருகன் கோயில்’. காரணம், இங்கு முருகனுக்கு சாக்லெட் மற்றும் இதர இனிப்பு வகைகள் இங்கு நிவேதனம் செய்யப்படுகிறது. ஒருவர் தனக்கு குழந்தை பாக்கியம் கிட்ட அவர் இனிப்பினை, தன் நண்பர்கள், உறவினருக்கு கொடுத்தார். முருகன் அவர் கனவில் தோன்றி, தனக்கு ஏன் தரவில்லை எனக் கேட்டது தான் இதன் பின்னணி!
*திண்டுக்கல் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் திருமலைக்கேணி என்ற இடத்தில் சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு இரு சுனைகள் உள்ளன. இவை முருகன்; பழனி சென்றடையும் முன் தன் வேலால் உருவாக்கியவை. ஒன்றில் சுடு நீரும் மற்றொன்றில் குளிர் நீரும்வற்றாத சுனைகளாக உள்ளன. இவற்றிற்கு வள்ளி, தெய்வானை சுனைகள் எனப் பெயர்!