Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

?பித்ருக்களுக்கு வீட்டில் தர்ப்பணம் கொடுப்பது நல்லதா? ஆற்றங்கரைஓரத்தில் தர்ப்பணம் கொடுப்பது நல்லதா?

பொதுவாக சிராத்தம் எனப்படும் முன்னோர் வழிபாட்டினை நம் வீட்டில்தான் மேற்கொள்ள வேண்டும். மாதந்தோறும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வோர், மாதப்பிறப்பு நாட்களில் தர்ப்பணம் செய்வோர் மற்றும் ஒரு வருடத்தில் ஷண்ணவதி என்று அழைக்கப்படும் 96 நாட்களில் தர்ப்பணம் செய்வோரும் வீட்டில்தான் செய்ய வேண்டும். அதே நேரத்தில், வீட்டில் வசதியாக இல்லை என்று கருதுபவர்கள் ஆற்றங்கரை ஓரத்தில் தர்ப்பணம் செய்யலாம். முடிந்தவரை நம் முன்னோருக்கான சிரார்த்தத்தை நம் வீட்டில்தான் செய்ய வேண்டும். தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் மட்டும் தர்ப்பணம் செய்வோர் ஆற்றங்கரை ஓரத்திலோ, சமுத்திரக் கரையிலோ அல்லது புண்ணிய தீர்த்தங்களின் ஓரத்திலோ அமர்ந்து செய்யலாம். அதேபோல க்ஷேத்ராடனம் எனும் தீர்த்தயாத்திரை மேற்கொள்வோர் காசி, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும்போது அது எந்த நாளாக இருந்தாலும் அந்த நதிக்கரைகளில் அமர்ந்து அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

?எல்லாம் இறைவன் செயல் என்பதன் விளக்கம் என்ன?

- சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

அவன் இன்றி இந்த உலகில் ஓர் அணுவும் அசையாது என்பதே அதன் பொருள். இந்த உலகில் நடக்கின்ற அனைத்து செயல்களுமே ஆண்டவனின் ஆணையின் பேரில்தான் நடக்கிறது. அது இன்பமாய் இருந்தாலும் சரி, துன்பமாய் இருந்தாலும் சரி, எதுவாகினும் அனைத்தும் ஆண்டவனின் செயல்தான். அதன் சூட்சுமம் என்ன என்பது பின்னாளில்தான் புரியவரும். நம்முடைய பணி என்பது கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்பதே.

?ஒரே நாளில் இரண்டு துக்க நிகழ்வுகளுக்கு ஒருவர் செல்லக்கூடாது என்கிறார்களே?

- வண்ணை கணேசன், சென்னை.

இந்த கூற்றினில் உண்மை இல்லை. எப்படிச் செல்ல வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நம் வீட்டில் இருந்து புறப்பட்டு ஒரே நேரத்தில் இரண்டு துக்க நிகழ்வுகளுக்கு கண்டிப்பாக செல்லக் கூடாது. முதலில் ஒரு துக்க நிகழ்விற்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து தலைக்கு குளித்துவிட வேண்டும். அணிந்திருக்கும் ஆடைகளையும் அவிழ்த்து நனைத்துவிட வேண்டும். அதன்பின் அவசியம் சென்றாக வேண்டும் எனும் பட்சத்தில், மீண்டும் வேறு ஆடை அணிந்து கொண்டு இரண்டாவது துக்க நிகழ்விற்குச் சென்று திரும்பி வந்து மீண்டும் அதே போல ஆடைகளை அவிழ்த்து நனைத்துவிட்டு இரண்டாவது முறையும் தலைக்கு ஸ்நானம் செய்துவிட வேண்டும். இதுபோல ஒரே நாளில் இரண்டு முறை தலைக்கு குளிப்பதற்கு நம்முடைய உடல் ஒத்துழைக்கும் பட்சத்தில் ஒரே நாளில் இரண்டு துக்க நிகழ்வுகளுக்கு சென்று வரலாம். இங்கே கவனிக்க வேண்டியது, ஒரு வீட்டில் இருக்கும் இறப்புத் தீட்டினை மற்றொரு வீட்டில் இருக்கும் இறப்புத் தீட்டோடு கலக்கக் கூடாது என்பதே.

?சிலர் தங்களது குழந்தைகளை கோயில்களில் விற்று வாங்கு கிறார்களே, ஏன்?

- சு.ஆறுமுகம், கழுகுமலை.

குழந்தை பிறந்த நேரத்தைக் கொண்டு நேரம் சரியில்லை என்று ஜோதிடத்தின் மூலமாக உணர்ந்தாலோ அல்லது குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமானாலோ இதுபோன்ற பிரார்த்தனையை தங்களுடைய இஷ்ட தெய்வத்திடம் வைத்துக் கொள்கிறார்கள். அதாவது இது என்னுடைய குழந்தை அல்ல, உன்னுடைய குழந்தை, உனக்குச் சொந்தமான குழந்தையை உன்னுடைய ஆலயத்தில் இருந்து வாங்கி வந்திருக்கிறேன், அதனை காக்க வேண்டியது உன்னுடைய கடமை என்று ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை வைத்து இது போன்று செய்கிறார்கள். இந்த உலகில் தோன்றும் அனைத்து ஜீவராசிகளுமே ஆண்டவனுடைய பிள்ளைகள்தான் என்ற நம்பிக்கை இருந்தாலே போதுமானது. இருந்தாலும், இது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது என்பதால் இதனை குறை கூற இயலாது.

?என் ராசி சிம்மம், பூர நட்சத்திரத்தில் பிறந்த நான் சினிமாவில் சாதிக்க வாய்ப்பு உள்ளதா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?

- பொன்விழி, அன்னூர்.

ஜாதகத்தில் சுக்ரனின் பலம் நன்றாக இருந்தால் மட்டுமே சினிமாவில் சாதிக்க முடியும். சினிமாவிலும் ஒளிப்பதிவு, எடிட்டிங், பாடல் எழுதுதல், இசையமைப்பு, நடிப்பு, இயக்கம் உள்ளிட்ட பல துறைகள் உண்டு என்பதால் உங்கள் ஜனன ஜாதகத்தில் அதற்குரிய கிரஹங்கள் வலிமை பெற்று சுக்ரனின் அம்சத்தையோ அல்லது சுக்ரனின் இணைவையோ பெற்றிருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும். பூரம் நட்சத்திரம் என்பது சுக்ரனின் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரம் என்பதால் இயற்கையில் உங்களுக்கு சினிமாவின் மீது ஆர்வம் என்பது இருக்கிறது. ஆயினும் ஜனன ஜாதகத்தில் சுக்ரனின் பலம் நன்றாக உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்த்துவிட்டு அதன்பின்பு முடிவு எடுப்பதே நல்லது.

?பரிகாரங்கள் உடனடியாக நற்பலன்களை கொடுப்பதில்லையே?

- கே.பிரபாவதி,

மேலகிருஷ்ணன்புதூர்.பரிகாரம் செய்வதால் துன்பங்களும் தடைகளும் அகன்றுவிடும் என்று தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். பரிகாரம் செய்வது என்பது வரக்கூடிய இடைஞ்சல்களையும் தடைகளையும் அவற்றால் உண்டாகக்கூடிய துன்பங்களையும் எதிர்கொண்டு வெற்றி காணும் மனோபலமும் உடல்பலமும் நமக்குக் கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் என்ற உண்மையைப் புரிந்துகொண்டாலே போதும். ஐம்பெருங்காப்பியங்களுள் பிரதானமான சிலப்பதிகாரம் நமக்குச் சொல்வது ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதைத்தானே. ஊழ்வினைப் பயனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்பது அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. பரிகாரங்கள் செய்வதால் ஊழ்வினைப் பயனால் உண்டாகும் கஷ்டத்தினை எதிர்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் வந்து சேர்கிறது. அந்த மனப்பக்குவத்தின் மூலமாக துன்பத்தின் தாக்கத்தினை வேண்டுமானால் குறைத்துக்கொள்ள முடியும். ஆயினும் அதன் அடிப்படைப் பலனை நிச்சயம் அனுபவித்தே ஆகவேண்டும். எதுவாக இருந்தாலும் அனுபவித்துத் தீர்ப்பதுதான் உலகத்தின் ஆகச்சிறந்த பரிகாரம். இறைவன் நம்முடனேயே இருக்கிறான் என்று நம்பினாலே நீங்கள் செய்யும் பரிகாரங்கள் அனைத்தும் நிச்சயமாகப் பலன் தரும்.

?வெள்ளி நவரத்தின மோதிரம் எந்த விரலில் அணியவேண்டும்?

- கு.து.லிங்கமணி,

மார்த்தாண்டன்பட்டி.

எந்த மோதிரமாக இருந்தாலும்சுண்டுவிரலுக்கு அருகில் உள்ள மோதிர விரலில்தான் அணிய வேண்டும். அதனால்தான் அந்த விரலுக்கு மோதிரவிரல் என்று பெயர். மோதிரவிரல் தவிர்த்து மற்ற விரல்களில் மோதிரம் அணியக்கூடாது.

திருக்கோவிலூர் KB ஹரிபிரசாத் சர்மா