Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

என்றென்றும் அன்புடன் திறமை இருந்தால் போதுமா?

நாம் எடுத்த முடிவு

தப்பானால் என்ன செய்வது?

உணர்வுப் பூர்வமாக முடிவு எடுப்பது சரியா? அறிவு பூர்வமாக

எடுப்பது சரியா?

எனக்கு முடிவு எடுக்க தெரியவில்லை.

இது எல்லாமே அனைவருக்கும்

இருக்கும் பொதுவான குழப்பங்கள்.

Decision making அவ்வளவு சுலபம் இல்லை. இதில் என்ன முடிவு எடுப்பது என்கிற குழப்பத்தை விட எப்பொழுது முடிவு எடுப்பது என்பது தான் மிகவும் முக்கியமாக இருக்கிறது.

எந்தெந்த இடத்தில் முடிவுகள் எடுக்கக்கூடாது என்று தெரிந்தால், அதை தவிர்ப்பதே நம்மை பிரச்னையில் தள்ளாமல் இருக்கும்.

முடிவுகள் எடுக்கும் பொழுது அதன் விளைவிற்கும் பொறுப்பு ஏற்க வேண்டியதாய் இருக்கிறது. எந்தவொரு தீர்மானமும் சரியோ தவறோ அதன் விளைவுகளை நாம் ஏற்க தயாராக இருக்க வேண்டும்.பயம் நம்மை செயல் இழக்கச் செய்யும். கரப்பான் பூச்சிக்கு இருக்கும் இறக்கையானது அதைக் காப்பாற்ற, ஆபத்திலிருந்து சட்டென்று பறக்க உதவும். சில சமயங்களில் அதைத் தாக்க வருபவர் அதை திருப்பி போட்டால், நகரத் தெரியாமல் பயத்தில் செயல் இழந்து போகும்.

குரு துரோணரைத் தான் இறந்து விட்டதாக பொய் சொல்லி கொன்று விட்டனரே இந்தப் பாண்டவர்கள் என்று அஸ்வத்தாமனின் நெஞ்சு கொதித்தது. அடி வயிற்றிலிருந்து பொங்கி எழுந்த கோபாவேசத்தில் அவன் ஒரு சபதம் செய்தான். “இல்லாத ஒன்றை பொய்யாகச் சொல்லி என் தந்தையின் மனதைத் துன்பத்திற்குள்ளாக்கிவிட்டு அவரைக் கொன்று சாய்த்து விட்டனர் கோழைகள்.போர் தர்மங்களுக்கு மாறாக இடுப்புக்குக் கீழே தொடையில் அடித்து வீழ்த்தி உயிருக்குப் போராடும் நிலையில் என் நண்பனை வைத்துவிட்டனர். நண்பா! துரியோதனா! அஸ்தினாபுரத்தின் அரசே! நான் இப்போது ஒரு சபதம் மேற்கொள்கிறேன். இன்றே, இன்றிரவே அந்த வஞ்சகர்கள் பாண்டவர்கள் அனைவரையும் நான் கொல்வேன். அவர்களது படைவீரர்கள் உட்பட அனைவரும் பிணமாகும் வரை நான் ஓயமாட்டேன். இது சத்தியம்!” என்றான் அசுவத்தாமன்.

மரணத்தின் பிடியில் மயங்கிக் கிடக்கும் துரியோதனனுக்கு நண்பன் செய்த சபதம் மனதில் சற்று ஆறுதலைக் கொடுத்தது. தான் இறப்பதைவிட தன் எதிரிகள் கொல்லப் படப் போகிறார்கள் என்பதில் அவனுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி.நண்பன் அஸ்வத்தாமனைத் தன் அருகில் வரும்படி சைகை செய்தான். அருகில் வந்த நண்பன் மீது நீர் தெளித்து, அவன் தலையில் கைவைத்து “இப்போது முதல் நீயே கௌரவர்கள் படைக்குத் தளபதி. பாண்டவர்களை அழித்து வெற்றியை ஈட்டுவது உன் பொறுப்பு. உனக்கு வெற்றி கிட்டட்டும்” என்றான், துரியன்.

கோழைகள் எப்போதும் மறைந்திருந்தே தாக்குவார்கள். படை இழந்து வஞ்சனையும், பழிவாங்கும் உணர்வும் மட்டும் மேலோங்க காத்திருந்த அசுவத்தாமன் அருகிலிருந்த ஒரு புதருள் புகுந்து மறைந்திருந்தான். அங்கிருந்து பாண்டவர்கள் பாசறை அருகில் இருந்தது. இருள் சூழ்ந்த நேரம். ஆளரவமற்ற சூழ்நிலை, பாண்டவர் முகாம்களில் கூடாரங்களில் பாண்டவர்களும், சேனை வீரர்களும் அயர்ந்த நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். அப்போது ஓசையின்று கூடாரங்களுக்குள் சென்று அசுவத்தாமன் அங்கு படுத்து உறங்கியவர்கள் அனைவரையும் வெட்டிச் சாய்த்தான்.

துருபதன் மகனும், பாஞ்சாலியின் சகோதரனுமான அந்த மாவீரனை சித்திரவைக்குள்ளாக்கித் துன்பம் தந்து கொன்றொழித்தான் அசுவத்தாமன். தன் தந்தை துரோணரைக் கொன்றவனல்லவா இவன்? என்ற ஆத்திரம் அவனுக்கு.

அடுத்தடுத்த கூடாரங்களில் பாண்டவர்களின் வாரிசுகளாக வந்து பிறந்திருந்த உபபாண்டவர்கள், பாண்டவர்கள் என்று நினைத்து ஒருவர் விடாமல் வெட்டிக் கொன்றான்.பாண்டவர்கள் இறந்து விட்டனர் என்று வெற்றியை கொண்டாடிய மூடனுக்கு, அவர்கள் உயிரோட இருப்பது சற்று நேரத்தில் தெரிந்தது.தன்னைத் தேடி பீமன், அர்ஜுனன், கண்ணன் ஆகியோர் வருவதைக் கண்டான்; அச்சத்தில் உறைந்தான். தான் உயிர் பிழைக்க ஒரே வழி தனக்குத் தெரிந்த பிரம்மாஸ்திரத்தை ஏவி இம்மூவரையும் அழிப்பது ஒன்றே என்பதுணர்ந்தான்.

அருகில் இருந்த ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து அதில் மிகவும் ஆபத்தான பிரம்மாஸ்திரத்தை மந்திரம் சொல்லி ஆவாகனம் செய்து, அதனை பாண்டவர் மீது ஏவிவிட்டான். அவன் ஏவிய அந்த பிரம்மாஸ்திரம், பாண்டவர் வம்சத்தை ஒருவர் விடாமல் நாசம் செய்துவிடும் ஆற்றல் பெற்றது. எவராலும், அல்லது எதனாலும் தடுக்க முடியாத ஆயுதம் அந்த பிரம்மாஸ்திரம்.கொடியவன் அஸ்வத்தாமனின் கேடு கெட்ட எண்ணத்தை ஸ்ரீகிருஷ்ணன் உணர்ந்து கொண்டான். பிரம்மாஸ்திரத்தை எதிர்கொள்ள இன்னுமொரு பிரம்மாஸ்திரத்தை ஏவிவிடுவது ஒன்றே வழி என்று அர்ஜுனனை நோக்கி அவனிடமுள்ள பிரம்மாஸ்திரத்தை எடுத்து அவன் மீது ஏவ கண்ணன் ஆலோசனை சொன்னான்.

இந்த ஆபத்தான தருணத்தில் நாரத முனிவரும், வியாச பகவானும் அவர்கள் முன் தோன்றி உலகையே அழிக்கும் நாசகார ஆயுதங்களான இந்த பிரம்மாஸ்திரப் பிரயோகத்தை நிறுத்திவிடும்படி கேட்டுக் கொண்டனர்.உலகைப் பற்றியோ, உயிர்களைப் பற்றியோ எந்தவித அக்கறையுமில்லாமல், சொந்த கோபதாப உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு உலகை அழிக்கும் பிரம்மாஸ்திரப் பிரயோகத்தை நிறுத்திவிடும்படி அவர்கள் உத்தரவிட்டனர்.

அர்ஜுனன் அவர்கள் சொல்படி பிரம்மாஸ்திரத்தை திரும்ப பெற்றான். அஸ்வத்தாமனுக்கோ அஸ்திரத்தை திரும்ப பெற தெரியவில்லை. அது உத்திரையின் கர்ப்பத்தை தாக்கிற்று. கிருஷ்ணர் அந்த கர்ப்பத்தை காப்பாற்றினார்.

அஸ்வத்தாமனுக்கு அவன் தந்தையை இழந்தவுடன், தலை கால் புரியவில்லை, கௌரவர்கள் வலு இழந்து கொண்டிருந்தார்கள். பெரும் பயம் அவனை ஆட்கொண்டது. முடிவு எடுக்கவேண்டிய தருணத்தில் பயத்தில் முடிவு எடுத்தான், தீரா சாபத்திற்கு ஆளானான்.பற்றும், பாசமும் முடிவு எடுக்கும் ஆற்றலுக்கு எதிரானது.உறவுகள் மீது இருக்கும் பற்று கண்ணை மறைக்கும். அக்னியை சீராக வைத்திருக்கும் பொழுது வணங்க தக்கதாக இருக்கும்.

அதுவே அதன் எல்லை மீறினால் அழித்து விடும்.கர்ணனுக்கு துரியோதனின் மேல் இருந்த பற்று கடைசி வரை தர்மத்தின் பக்கம் நிற்கவிடாமல் தடுத்தது. திருதராஷ்ட்ரன் துரியோதனின் மீது இருந்த பாசத்தினால் அவன் செய்த அக்கிரமங்களை கண்டு கொள்ளாமல் இருந்தார், அதுவே பெரும் அழிவுக்கு வழி வகுத்தது.வெறுப்பினால் எடுக்கப்படும் முடிவு விபரீதமானது.

வெறுப்பு வெளிச்சம் போல் வேகமாக பரவும். வெறுப்பு அறிவை இழக்க செய்யும்.காந்தாரிக்கு ஆத்திரமாக வந்தது. குந்திக்கு குழந்தைகள் பிறந்து விட்ட செய்தியை கேட்டதில் இருந்து அவள் கர்ப்பம் சுமையாகி போனது, அதை ஆத்திரத்தில் இறக்கி வைத்ததால், அவள் வெறுப்பில் பிறந்த நூறு குழந்தைகளும் வெறுப்புடன் வளர்ந்தன.பாரதப்போர் முடிந்த பின், கிருஷ்ணனை சந்தித்த பொழுதும் வெறுப்பு குறையவில்லை. வெறுப்புடன் யாதவ குலத்தை சபித்தாள்.பதட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் வீபரீதமானது.மனம் நம்மை அலைக்கழித்த படி தான் இருக்கும். பீஷ்மர் எடுத்த முடிவுகள் பெரும்பாலும் பதற்றத்தில் எடுக்கப்பட்டவை. ராஜ்ஜியத்தை காக்கும் பதற்றத்தில் எப்பொழுதும் இருந்தார்.

பிறரின் அறிவுரையின் பெயரில் சற்றும் ஆராயாமல் எடுக்கும் முடிவுகள், பிரச்னை வளர்க்கும். சகுனியின் உள்நோக்கம் தெரியாத துரியோதனன் எல்லா முடிவு களையும் சகுனியை கேட்டே எடுத்தான். எந்த ஒரு இடத்திலும் அவனுடைய கல்வியையோ, அறிவையோ உபயோகப்படுத்தவில்லை.நல்ல முடிவு என்பது இயற்கையாக நடக்கும். நம் மனதில் பெரும் எண்ணங்களோ, குழப்பமோ, வேறு தலையீடுகளோ இல்லாமல் இருக்கும் பொழுது தெளிவான தீர்க்கமான முடிவுகள் எடுக்க முடியும்.

பாண்டவர்கள் இறுதியாக போருக்கு போவதற்கு முன் எல்லோரிடமும் ஆலோசித்து கிருஷ்ணரை தூது அனுப்பினார்கள்.கிருஷ்ணர் கௌரவர்கள் எந்த விதத்திலும் அமைதி பேச்சு வார்த்தைக்கு உடன்பட மாட்டார்கள் என்பதையும் போர் தவிர்க்க முடியாதது என்று தெரிந்தும் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடுவில் அமைதிக்கான பேச்சு வார்த்தையை நடத்துவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று கிளம்புகிறார்.அந்த இரு பிரிவினருக்கும் இடையில் உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் ஏற்படாமல் இருக்க இதுவே சிறந்த வழி. ஆத்மார்த்தமான முயற்சிகள் தோல்வியில் முடிந்து போர் தவிர்க்க முடியாமல் போகும் நேரம் கிருஷ்ணரே பார்த்தனின் நம்பிக்கை உரியவராகவும், உறுதுணையாகவும் மாறுகிறார்.

அர்ஜுனனுக்கு குழப்பம் வரும் பொழுது எல்லாம் தன் செயல்களை நிறுத்தி தெளிவை நோக்கி நகர்ந்தான். கீதை உபதேசத்திலும் கிருஷ்ணர் அவனுக்கு பல வழிகள் காண்பித்து கொடுத்தார். அவருடைய முடிவுகள் எதையும் அர்ஜுனனின் மீது திணிக்கவில்லை. அர்ஜுனன் இறுதியில் தெளிவான முடிவை எடுத்தான்.முடிவு எடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள, தெளிந்த மனமும், நிதானமும், பொறுமையும் அதனுடன் சேர்ந்த ஆழ்ந்த நம்பிக்கையும் வேண்டும்.

(தொடரும்)

ரம்யா வாசுதேவன்