Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஐப்பசியில் அடைமழை! வளப்படுத்திடுமா நம் வாழ்வை?

காலங்காலமாக, தமிழக மக்களிடையே, "ஐப்பசியில் அடை மழை...!" என்றொரு மூதுரை நிலவிவருவது அனைவரும் அறிந்ததே!!அதாவது, தமிழகத்தில் மாரிக்காலம் (மழைக்காலம்) ஆரம்பமாகிறது என்பது பொருள். வானியலில், காலம் காலமாக பல அறிஞர்களை உலகிற்கு அளித்த பெருமை தமிழகத்திற்கு உண்டு!நவகிரகங்களுக்கும் சக்தியளிக்கும் பெருமை பெற்றுள்ள சூரிய பகவான், அவரது நீச்ச ராசியான துலாம் ராசியைக் கடக்கும் சுமார் ஒரு மாதக் காலத்தையே துலாம் மாதம் என்றும், ஐப்பசி மாதம் என்றும் கூறுகிறோம்,ஐப்பசி மாதம் முழுவதும், குரு பகவான் தமிழகத்தின் தெய்வீக நதியான காவிரியில் ஆவீர்பவித்து இருப்பதாக புராதன வானியல் மற்றும் ஜோதிட நூல்கள் விவரிக்கின்றன. அதனால்தான், துலாம் மாதம் எனப்படும் புண்ணிய மாதத்தில், தினந்தோறும் காவிரிப் புண்ணிய நதியில் புனித நீராடுவது, பாவங்களனைத்தையும் போக்கி, புண்ணிய பலன்களை அபரிமிதமாக அளிப்பதாக, "ஸ்ரீரங்க மகாத்மியம்", "காவிரி புராணம்" போன்ற புராதன தெய்வீக நூல்கள் விவரித்துள்ளன.அகத்திய மாமுனிவரால், தமிழகத்திற்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம் காவிரி நதியாகும்.வைகுண்டத்தில், பிரம்ம தேவரால் ஆராதிக்கப்பட்டுவந்த ஸ்ரீரங்கநாதன், தனது திருஉள்ளம் உகந்து, ஸ்ரீரங்க விமானத்துடன் திருவரங்க திவ்ய ேக்ஷத்திரத்தில் எழுந்தருளியதற்கு, காவிரி நதியே முக்கிய காரணமாகும்! இதனை ஸ்ரீரங்க மகாத்மியம் கட்டியம் கூறுகிறது."திருவரங்கத்தில், சரீரத்தைத் துறக்கும் ஜீவனுக்கு வைகுண்டம் வரவேற்பளிக்கிறது..." எனக் கூறுகின்றன, புராதன நூல்கள்.

தங்கள் இறுதி நாட்களைத் திருவரங்கத்தில்தான் கழிக்க வேண்டும் என்ற மனவுறுதியுடன் வாழ்ந்துவந்த பெரியோர்கள் ஏராளம், ஏராளம்.தென்திருக்காவேரி எனப் பூஜிக்கப்படும் கொள்ளிடம் நதிக் கரையில் திகழும் மயானத்திற்கு, "பாடுவான்துறை" என்ற பெயருண்டு. திருப்பாணன் என்ற பக்தன், கொள்ளிட நதிக்கரையில் நின்றுகொண்டே அரங்கனின் அன்றாட அலங்கார அழகினை விவரித்துப் பாடுவது வழக்கம். அதனால்தான் அந்தக் கொள்ளிடம்் துறைக்கு, பாடுவான்துறை என்ற புகழ்ப் பெயர் ஏற்பட்டது.ஆதலால், காலங்காலமாக திருவரங்கம், வைகுண்டத்தின் வாயிலாகக்் கருதியே பெரியோர்களால் பூஜிக்கப்பட்டுவருகிறது, இன்றும்!!திருவரங்கத்தையும், திருக்காவேரியையும் உள்ளத்தில் வைத்தே பூஜித்துவந்துள்ளனர், அனைத்து ஆழ்வார்களும் - பெரியோர்களும்! வைணவத்தின் ஆணிவேறாகத் திகழ்கிறது, இன்றும் திருவரங்கம்!! அந்நியர்களின் படையெடுப்புகளின்போது, அரங்கனின் திருக்கோயிலைக் காப்பாற்றுவதற்காக, தங்கள் இன்னுயிரையே தியாகம் செய்த பெரியோர்கள் ஏராளம், ஏராளம்!அரங்கன் மீது அளவற்ற பக்தி பூண்ட, பரம பக்தை வெள்ளையம்மாள் என்ற இளம்பெண், திருவரங்கத் திருக்கோயிலை கொள்ளையடித்த பகை மன்னனைக் கொன்று, தானும் தனது இன்னுயிரைத் தியாகம் செய்த அப்பெண்ணின் பெயரிலேயே "வெள்ளையம்மாள் கோபுரம்" என்று திகழ்வதை இன்றளவும் காணலாம்.

தமிழகத்தின் சரித்திரத்துடன், பின்னிப் பிணைந்துள்ளது, திருவரங்கத் திருக்கோயில்!பாரதப் புண்ணியப் பூமியின் சரித்திரத்திலும் திருவரங்க ேக்ஷத்திரம், தனிப் புகழ் பெற்றுள்ளதை "திருவரங்க ேக்ஷத்திர மகாத்மியம்" என்னும் நூலில் மிகவும் சிலாகித்துக் கூறப்பட்டுள்ளது.திருவரங்கமும், காவிரி புண்ணிய நதியும் பாரதப் புண்ணிய பூமியின் திவ்ய சரித்திரத்தில் புகழ்பெற்றுத் திகழ்கின்றன."துலாம் மாதம்" எனப்படும் ஐப்பசி மாதமும், காவிரியும், திருவரங்கமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளது. இம்மாதத்தில் காவிரி புனித நதியுடன் பாரதப்புண்ணிய பூமியின் அனைத்து புண்ணிய நதிகளும் சங்கமிப்பதாக அனைத்து புராணங்களிலும் விவரிக்கப்பட்டுள்ளன.ஆதலால்தான், வைணவ அவதாரப் புருஷரான ஸ்ரீமத் ராமானுஜர், ஒரு சமயம் ஐப்பசி மாதம் முழுவதும், தினமும் காவிரி நதியில் புனித நீராடி, திருவரங்கத்து இன்னமுதனான, நம்பெருமாளாகிய, ஸ்ரீரெங்கநாதரைப் பூஜித்து வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.காவிரி நதியின் தெய்வீகப் பெருமையை விவரித்துள்ள "திவ்யப்பிரபந்த"மும் பொன்னி நதியின் (காவிரி) தெய்வீகப் பெருமையையும், சக்தியையும்,

கங்கையில் புனிதமாய காவிரி நடுவு

பாட்டு, பொங்குநீர் பரந்து பாயும்

பூம்பொழில் அரங்கம் தன்னுள், எங்கள்

மால் இறைவன் ஈசன் கிடந்ததோர்

கிடக்கை கண்டும், எங்ஙனம் மறந்து

வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே!

- எனப் போற்றுகிறது.

இத்தகைய தெய்வீக சக்தியும், பெருமையும் பெற்றுள்ள ஐப்பசி மாதத்தின் கிரக சஞ்சார நிலைகளையும், பலா - பலன்களையும் துல்லியமாகக் கணித்துக் கூறியுள்ளோம். இதனால், எமது வாசக அன்பர்கள் பயனடைந்தால், மகிழ்ச்சியையும், மன நிறைவையும் பெறுவோம்!! துலாம் மாதத்தின் முக்கிய கிரக சஞ்சார அம்சம், சூரியன், துலாம் ராசியைக் கடக்கும் ஒரு மாதக் காலம், வீரியம் குறைவதே ஆகும். இதனையே துலாம் அவரது "நீச்ச ராசி" (பலம் குறைதல்) என ஜோதிடக் கலை விவரித்துள்ளது.

ஐப்பசி மாதத்தின் புண்ணிய தினங்கள்!

ஐப்பசி 1 (18-10-2025) - சனிக்்கிழமை : துலா - காவேரி ஸ்நானம் ஆரம்பம். வருடத்தில் ஒரு முறையாவது (அதாவது இன்றாவது) ஸ்ரீரங்கம் சென்று, காவிரி துலாஸ்நானம் செய்ய வேண்டும். ேதவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி நிகழ்ந்த போரில் தேவர்களுக்குப் பெருத்த சேதமும், அசுரகுருவாகிய சுக்ராச்சாரியாரின் உதவியினால், மரித்த அசுரர்கள் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் போரிட ஆயத்தமானதால், அசுரர்களின் பலம் அதிகரித்துக் கொண்டே போயிற்று. இதனைத் தடுக்க எண்ணிய பகவான் மகாவிஷ்ணுவால் எடுக்கப்பட்ட அவதாரமே தன்வந்தரி அவதாரம். திவ்ய ஹஸ்தங்களில் சங்கு - சக்ரதாரியாகவும். மற்ற இரு ஹஸ்தங்களில் அட்டைப்பூச்சியும், அமுத கலத்துடனும் சேவை ஸாதிக்கும் எம்பெருமானை துளசி இதழ் கொண்டு பூஜித்தால், தேக ஆரோக்கியம் மேம்படும். வீட்டிலுள்ள அனைவரும் மன மகிழ்ச்சியுடனும், மன அமைதியுடனும் ஆயிரம் பிறைகளைக் காணும் (80 வயதினைக் கடந்தும், திடகாத்திரத்துடனும், தேக ஆரோக்கியத்துடனும் மருந்துக்குக்கூட ஆங்கில மருத்துவரை அணுகாவண்ணம்) காத்தருள்புரிந்திடுவார், இக-பர சுகப் பேற்றினையும் பெற்று இன்புறுவர்.

ஐப்பசி 02 (19-10-2025) - ஞாயிற்றுக்கிழமை : இரவு நரக சதுர்த்தி ஸ்நானம். எம தீபம். இன்றைய தினத்தில் மாலை நேரத்தில், பிரதோஷ காலத்தில் தெற்கு திசை நோக்கி அரிசிமாக்கோலமிட்டு, உங்கள் வீட்டிலுள்ளவர்கள் தலா மூன்று அகல் விளக்குகள் தென்திசை நோக்கி நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவைத்திடல் வேண்டும். இதனால், வீட்டிலுள்ள அனைவரும் நோய்-நொடிகளற்ற, நீண்ட ஆயுள் - ஆரோக்கியம் கிடைக்கப்பெறப்போவது திண்ணம். மேலும் இன்று தனத் திரயோதசி. இன்றைய தினத்தில் ஒரு குந்துமணி அளவிலாவது ஸ்வர்ணம் (தங்கம்) வாங்கினால், தங்கத்தின் அதிதேவதையாகிய மஹாலட்சுமி - அஷ்டலட்சுமியும் உங்கள் இல்லத்தை அலங்கரி்த்து, நித்தியவாசம் புரிவார்கள்.

ஐப்பசி 3 (20-10-2025) - திங்கட்கிழமை தீபாவளிப் பண்டிகை.

ஐப்பசி 4 (21-10-2025) - செவ்வாய்க்கிழமை : அமாவாசை. லட்சுமி - குபேர பூஜை. கேதார கௌரி விரதம் - இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், 18 வெற்றிலை, 18 களி - கொட்டைப்பாக்கு, 18 பழங்களை அமுது செய்வித்து வழிபட்டால், ஏழேழு பிறவியிலும், ஏழ்மை உங்களை அணுகாது. உங்களை மட்டுமல்ல, உங்களைச் சேர்ந்த - உங்களுடைய சுற்றத்தாரும் அஷ்ட’ஐஸ்வர்யங்களுடன் வாழ்வார்கள்.

ஐப்பசி 5 (22-10-2025) - புதன்கிழமை: கந்தர் சஷ்டி ஆரம்பம்.

ஐப்பசி 6 (23-10-2025) - வியாழக்்கிழமை: எம துவிதியை. எம தர்ம ராஜரைப் பூஜிக்க வேண்டிய பரம புண்ணிய தினம். இன்றைய தினத்தில் சகோதரன் - சகோதரி அன்புப் பிணைப்பை அறிவுறுத்தும் வண்ணமாக, சகோதரன், அன்புச் சகோதரியின் இல்லத்திற்குச் சென்று, விருந்துண்டு, சகோதரி - கணவர், குழந்தைகளுக்கு புடவை - வேட்டி வஸ்திரங்களைக் கொடுத்து, வயதில் பெரியவர்களானால், வணங்கி, வாழ்த்திவிட்டு வர வேண்டும்‘ ஒருவேளை சகோதரி சிறியவராக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு வஸ்திரங்களைக் கொடுத்து, ஆசீர்வதித்துவிட்டு வரவேண்டும். இரு குடும்பத்தாரும், அந்நியோன்ய பாவத்துடனும், ஒத்த கருத்துடையோராகவும், முகத்தில் இரு கண்கள் இருந்தாலும், பார்வை ஒன்றைப் போல ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக பரிமளிப்பர். இருவீட்டாரும் தீர்க்க நித்திய சுமங்கலிகளாகவும் தொட்டதெல்லபாம் துலங்கவரும் தாய்க்குலமென வைய்யத்துள் வாழ்வாங்கு வாழ்வர்.

ஐப்பசி 10 (27-10-2025) திங்கட்கிழமை: சூர சம்ஹாரம், சஷ்டி விரதம்.

ஐப்பசி 13 (30-10-2025) - வியாழக்கிழமை : அக்ஷய நவமி. இந்நன்னாளில், வேத அத்தியானம் செய்தவர்களுக்கு அல்லது ஏழை- எளியோருக்கு பூஷணிக்காய் அல்லது பரங்கிக்காய் (மஞ்சள் பூசணிக்காய்) தானம் செய்தால், உங்கள் மீதும், உங்கள் வீட்டாரின்மீதும் கண்திருஷ்டி ஏதேனும் இருப்பின் அவை அப்போதே விலகி ஓடிடும். கண்களுக்கு மகத்துவமான சக்தி உண்டு, அதனால்தான் மகாபாரதப் போரில் காந்தாரி, தன் மகனான துரியோதனனை, தன் கண்களிலிருந்து கட்டுக்களைக் களைந்து, துரியோதனனை, தன் கண்களால் கடாக்ஷித்தாள் என்பதும், மீன்கள் தங்கள் பார்வை மூலமே தன் முட்டைகளை பொரிந்து வெளிவரச் செய்வதையும் இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் - கண் பார்வையின் மகத்துவத்தைப் பறைசாற்றுகின்றன.

ஐப்பசி 16 (2-11-2025) - ஞாயிற்றுக்்கிழமை : ஸ்ரீமகரிஷி யாக்கியவல்கியர் ஜெயந்தி. துவாதசி. சாதுர்மாஸ்ய விரத பூர்த்தி.

ஐப்பசி 18 (4-11-2025) - செவ்வாய்க்்கிழமை : பால், பசுந்தயிர், வெண் சங்கு, மல்லிகையொத்த நிறத்தையுடையோனும், அமுதம் பெறவேண்டி பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து உதித்தோனும், ஆலகால விஷத்தை அருந்தி உலக உயிர்களைக் காப்பாற்றியருளியதற்குக் கைம்மாறாக உடைந்த பிறையை சிவபெருமானுக்கு அளித்து, அவரும் பின்னமாகிய சந்திரனை உதாசீனப்படுத்தாமல் தன் சிரஸை அலங்கரிக்கச் செய்ததனால், செருக்கடைந்தவரும், மனித உடலுக்கும் அவ்வுடலை வழிநடத்தும் மனத்திற்கு ஆதிபத்தியம் கொண்டவரும், ஒருவரின் ஜனன ஜாதகத்தில் சந்திர பலமே மூலமாகும் என்பதை ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படடுகின்றவரும் அனைத்துவித சுகங்களுக்கும் காரகத்துவம் வாய்ந்தவரும், சுப முகூர்த்தங்களை நிச்சயிக்கும்போது இவரை அச்சாரமாகக் கொண்டுதான் நிர்ணயிக்கப்படுவதும், ரோகிணி, ஹஸ்தம், இம்மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயக, குரு - சுக்கிரன் இரு கிரகங்களுடனும் சேர்ந்தனர், இன்னருளை வாரி வழங்கும் இயல்புடையோனும், ராகு- கேது இருவேறு சாயாக் கிரகங்களைத் தவிர ஏனைய மற்றைய கிரகங்களுக்கு பகைக் கிரகங்களற்றவனும், ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்இம்மூன்று நட்சத்திரங்களுக்கும் ஆதிபத்தியம் கொண்டவருமாகிய, சந்திர ஜெயந்தி!இன்றைய நன்னாளில், வெண்பட்டு அல்லது வெள்ளை வஸ்திரம் வெண்சங்கு புஷ்பம், வெண்தாமரை, மல்லிகை - முல்லை, வெண் இருவாட்சிப் பூக்களைக் கொண்டு அர்ச்சித்தல் வேண்டும். உங்கள் வீட்டிலுள்ள அனைவருக்கும் தலா ஒரு நெய் அகல் தீபம் ஏற்றி வழிபட்டால், ஜனன ஜாதகத்தில் சந்திர தோஷம் ஏதாகிலும் இருப்பின் அவைகள் அனைத்தும் விலகியோடும், சந்திரனின் பரிபூரண கடாக்ஷம் பெறுவது உறுதி. கீழ்க்கண்ட சந்திர ஸ்தோத்திரத்ைத மூன்று, ஆறு, ஒன்பது அல்லது 18 முறைகள் சொல்லி வணங்கினால், பாபங்கள் விலகிடும். சகல ேக்ஷம, ஆரோக்கியம், ஐஸ்வர்யம் உங்கள் இல்லத்தில் இனிதே குடிபுகும் உங்களை எந்நாளும் விட்டகலாது!

ததிஸங்கதுஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம்!

நமாமிஸஸினம் ஸோமம் ஸம்போர் மகுடபூஷணம்!!

ஐப்பசி 22 (8-11-2025) - சனிக்்கிழமை சங்கட ஹரசதுர்த்தி

ஐப்பசி 26 (12-11-2025) - புதன்்கிழமை : காலபைராஷ்டமி இன்று நாள் முழுவதும் இரவிலும், காலபைரவரை வழிபட்டால், அனைத்துவித மனோவியாதியும் நீங்கும். சகலவித சௌபாக்கியங்களும் உங்களை வந்தடைவது திண்ணம்.

ஐப்பசி 30 (16-11-2025) - ஞாயிற்றுக்கிழமை : கடைமுகம். காவிரி நதி ஸ்நானம் விசேஷம்.

தீபாவளியன்று எண்ணெய் ஸ்நானம் வைத்துக்கொள்ள உகந்த நேரம் ஐப்பசி 3, திங்கட்கிழமைக்கு ஆங்கிலத் தேதி 20-10-2025 அதிகாலை 3 மணியிலிருந்து, 6.00க்குள் புண்ணிய ஸ்நானம் செய்தால் கங்கா ஸ்நானம் பலன் கிட்டும்.