Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குபேர பானையை எந்த திசையில் வைக்க வேண்டும்?

?ரமணர் + ராகவேந்திரர் + ஷீரடிபாபா என மூவரின் எனர்ஜிகளைப் பெற என்ன தவம் முக்கியம்?

- ஆர்.ஜே.கல்யாணி, நெல்லை.

இந்த மூவரும் மனிதர்களாக வாழ்ந்து தெய்வ நிலையை அடைந்தவர்கள். தனக்கென வாழாமல் உலகத்தாரின் நன்மைக்காக வாழ்ந்தவர்கள். அவர்கள் சொன்ன கருத்துக்களைப் பின்பற்றி நடந்தாலே போதுமானது. உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவதும், இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுவதும், மற்றவர்கள் மனம் நோகாமல் நடப்பதுவுமே சிறந்த தவம். இம்மூன்றைப் பின்பற்றினாலே நாமும் அவர்களைப் போல தெய்வீக நிலையை அடையலாம்.

?பெண்குழந்தை பிறந்தால் அப்பா சாடையும், ஆண் குழந்தை என்றால் அம்மா சாடையும் இருந்தால் யோகமா?

- சு.ஆறுமுகம், கழுகுமலை.

பலரும் அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால், இந்த கருத்திற்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை. பொதுவாக, தந்தைக்கு பெண் குழந்தையின் மீதும், தாய்க்கு ஆண் குழந்தையின் மீதும் பாசம் என்பது சற்று அதிகமாக இருக்கும். எந்தக் குழந்தையாயினும் அது ஒழுக்கமுள்ள குழந்தையாக இருந்தால்தான் யோகம். நல்ல குழந்தை என்று பிறர் சொல்லக் கேட்பதுதான் பெற்றோருக்கு உண்மையான யோகம் ஆகும்.

?குபேர பானையை எந்த திசையில் வைக்க வேண்டும்?

- ராஜிராதா, பெங்களூர்.

குபேரனின் திசை வடக்கு என்பதால், வடக்கு திசையில் வைப்பது நல்லது. பூஜை அறையின் வட பாகத்தில் கிழக்கு நோக்கியவாறு வைக்கலாம்.

?உழவாரப் பணியின் மேன்மையைக் கூறவும்?

- ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

இது ஆலயத்திற்குச் சென்று இறைவனை வணங்குவதைவிட மேலான புண்ணியத்தைத் தரக்கூடியது. என்கடன் பணி செய்து கிடப்பதே என்று வாழ்நாள் முழுவதும் இந்த உழவாரப் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அதன் மூலம் இறைவனை அடைந்தவர் திருநாவுக்கரசர். ஆலயத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதே உழவாரப் பணி ஆகும். புதர்மண்டிப் போகாமல் ஆலயங்களை பாதுகாப்பது, குப்பை கூளங்கள் ஏதுமின்றி ஆலயத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது, ஆலயத் தூண்கள், சுற்றுச்சுவர், தரை ஆகியவற்றை தூய்மைப்படுத்துவது, பிராகாரத்தில் உள்ள சிலைகளில் மாவுக்காப்பு இட்டு அந்த சிலைகளில் அண்டியுள்ள அழுக்கினை நீக்குவது உட்பட ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் பணிகள் அனைத்தும் இதற்குள் அடங்கும். இந்த உழவாரப் பணியை மேற்கொள்வோரின் உள்ளம் மட்டுமல்ல அவர்களின் இல்லத்திலும் இறையருள் என்பது என்றென்றும் நிறைந்திருக்கும்.

?மரண பயம் போக எந்த கடவுளை வணங்க வேண்டும்?

- ரங்கசாமி திருச்சி.

ம்ருத்யுஞ்ஜயன் என்றழைக்கப்படும் பரமேஸ்வரனை வணங்க வேண்டும். `ம்ருத்யு’ என்றால் மரணம், ஜயன் என்றால் வெற்றி கொள்பவன், அதாவது ம்ருத்யுஞ்ஜயன் என்றால் மரணத்தை வென்றவன் என்று பொருள். மரணத்தை யாராலும் தவிர்க்க முடியாது. அதே நேரத்தில், ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து வந்தால் மரணபயம் என்பது நீங்கிவிடும். `நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தாலே மரணபயம் என்பது நீங்கிவிடும். வைணவ சம்பிரதாயத்தை பின்தொடர்பவர்கள் என்றால், வைகுந்தவாசப் பெருமாளை அதாவது பாம்பணையில் பள்ளிக் கொண்டிருக்கும் பெருமாளை மனதிலே தியானித்து `ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை தொடர்ந்து ஜபம் செய்து வந்தால் மரணபயம் என்பது நீங்கிவிடும்.

?எங்கள் வீடு மிகச் சிறியது. தனித் தனியே குளியல் அறை, கழிப்பறை போன்றவை இல்லை. அதனால் ஏதேனும் தோஷமோ அல்லது வாஸ்து பிரச்னையோ ஏற்படுமா?

- மீனா ராம்குமார், திருவானைக்காவல்.

வீட்டிற்குள்ளேயே குளியல் மற்றும் கழிப்பறைகளை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது அவற்றை படுக்கை அறையோடு இணைக்காமல் தனியாக அமைப்பது நல்லது. இது போக, இவை இரண்டையும் ஒன்றாக இணைத்து வைத்திருக்காமல் தனித் தனியேதான் அமைக்க வேண்டும். இடப்பற்றாக்குறையின் காரணமாக வேறு வழியின்றி அட்டாச்டு குளியல் & கழிப்பறைகளை அமைப்பவர்கள் குறைந்த பட்சமாக இவை இரண்டுக்கும் இடையே ஒரு தடுப்பு வைத்திருக்க வேண்டும். அத்துடன் குளியலறைப் பகுதிக்கும் கழிப்பறைப் பகுதிக்கும் ஒன்றரை அடி உயர வித்தியாசம் இருப்பதும் ஓரளவிற்கு நன்மையைத் தரும். வடகிழக்கு அல்லது தென்கிழக்கு மூலைகளில் குளியல் மற்றும் கழிப்பறைகள் இருக்கக் கூடாது. அப்படி அமைந்தால் அந்த வீட்டில் ஆரோக்ய குறைபாடு தோன்ற வாய்ப்புண்டு.

?வாழை இலை போட்டுச் சாப்பிடும்போது, இலையின் நுனி இடது கைப்பக்கமாக இருக்க வேண்டும் என்கிறார்களே, அது ஏன்?

- பிரியாதேவி, மதுரை.

சேக்கிழார் இதையே வேறு விதமாகச் சொல்கிறார். நுனி இடது கைப்பக்கமாக என்று சொல்லவில்லை அவர்; ‘ஈர் வாய் வலம் பெற வைத்து’ என்கிறார். இடது என்பது அமங்கலம். வலது என்பது மங்கலம். வலம் வருதல் என்று சொல்கிறோம் அல்லவா? அதன் காரணமாகவே, நுனி இடப்பக்கமாக என்று சொல்லாமல், இலையின் நறுக்கிய பகுதியை வலப்பக்கமாக வைத்து என்று பெரிய புராணத்தில் சொல்கிறார் சேக்கிழார். அமங்கலச் சொல் இல்லாத அற்புதமான நூல் பெரிய புராணம். நுனி வாழை இலையில் நுனிப்பகுதி மிகவும் சிறிதாகச்சுருங்கி இருக்கும். நறுக்கப்பட்ட பகுதி அகன்று விரிந்து இருக்கும். சுருங்கிய நுனிப்பகுதி, சரியாகத் தூய்மை செய்யப்படாமல் இருக்கும். அடுத்தது என்னதான் அப்பகுதியை சுருக்கம் நீக்கி வைத்தாலும், அப்பகுதியில் எதையாவது வைத்தால் அது சுருங்கும்.

உண்பதற்கு இடைஞ்சலாக இருக்கும். அதன் காரணமாகவே உணவின்போது மிகவும் குறைந்த அளவு உபயோகிக்கும் பொருட்களை அதிகம் ஈரம் இல்லாத பொருட்களை நுனிப் பக்கம் வைத்து, பச்சடி, கூட்டு, பாயசம் முதலான அதிகம் உபயோகிக்கும் ஈரப்பொருட்களை, இலையின் அகன்ற பக்கம் வைத்தார்கள்.

?எங்கள் வீட்டில் அமாவாசை நாளன்று நாகபாம்பு ஒன்று வந்துவிட்டது. ஆனால், அதை அடிக்கவில்லை. அமாவாசை அன்று அடித்தால் தவறா?

- கே.எம்.ஸ்வீட்முருகன், கிருஷ்ணகிரி.

பொதுவாக அது எந்த நாளாக இருந்தாலும் சரி, பிற உயிரினங்களை கொல்வது என்பது தவறு. அதே நேரத்தில், பூரான், தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நம்முடைய வசிப்பிடத்திற்கு வரும்போது முடிந்தவரை அவற்றை உயிருடன் பிடித்து, அவற்றிற்குரிய இடத்திலே கொண்டு சென்று விட்டுவிட வேண்டும். இயலாத பட்சத்தில் அதாவது அந்த ஜந்துக்களால் நமது உயிருக்கு ஆபத்து நேரும் என்று உணரும்போது அது எந்த நாளாக இருந்தாலும் அதனை அடிப்பதில் எந்தவிதமான தவறும் இல்லை.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பி வைக்கவும். ஏன் எதற்கு எப்படி..? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004.