கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்தப் பண்டிகை முன் காலத்தில் ‘‘அறுவடைத் திருநாள்’’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வந்துள்ளதாக வரலாற்றுக் குறிப்புகளும், இலக்கியங்களும் தெரிவிக்கின்றன. பருவ மழைக்காலம் முடிந்து எங்கும் பசுமையும் செழுமையும் நிறைந்து காணப்படும் ‘சிங்கம்’ மாதத்தை கேரள மக்கள் ‘அறுவடைத் திருநாள்’ என்றும் போற்றி வழிபட்டு சிறப்பித் திருக்கின்றனர்.
சாதி, இனம், மதம், மொழி தாண்டி கேரளத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் வண்ணமிகு திருவிழா ‘ஓணம்’ பண்டிகையாகும். தமிழ் நாட்டில் சித்திரை மாதம் முதல் மாதமாக இருப்பது போன்று, கேரளத்தில் ‘சிங்கம்’ எனும் (ஆவணி, மாதம்தான் கேரளத்தில் முதல் மாதமாக உள்ளது. எனவே ஓணம் பண்டிகையை புத்தாண்டு கொண்டாட்டமாகவும் சிறப்பிக்கின்றனர்.
சிவன் கோயில் ஒன்றில், கருவறையில் இருந்த விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அப்போது கோயிலுக்குள் நுழைந்த எலியானது, அந்த விளக்கின் மீது ஏறி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது, எலியின் மூக்கு நுனி பட்டு விளக்கின் திரி தூண்டப்பட்டது. இதனால் அந்த விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது.
தன்னையும் அறியாமல் செய்த இந்த நற்காரியத்திற்காக அந்த எலியை அடுத்த பிறவியில் சக்கரவர்த்தியாக பிறக்க சிவபெருமான் அருள்புரிகிறார். தெரியாமல் செய்யும் நல்வினைக்கும், கடவுளின் அருள் மிகப் பெரியதாக அமையும் என்பதையே இந்த புராணக்கதை விளக்குகிறது.
சக்கரவர்த்தியாகப் பிறந்து நாடு போற்றும் அளவுக்கு இருந்த அந்த மகாபலி சக்கரவர்த்தியை மகா விஷ்ணு ஆட்கொண்டு அருள்புரிந்து வையகம் போற்றும் விதமாக செய்த நாளையே கேரள மக்கள் ‘ஓணம் பண்டிகை’யாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
சிங்கம் மாதத்தின் அஸ்தம் நட்சத்திரத்தில் இருந்து திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் தொடர்ச்சியாக இந்த விழா கேரள மக்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
‘ஓணம்’ திருநாள் கொண்டாடப் படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர். ‘கசவு’ என்று சொல்லப்படும் சுத்தமான வெண்மை நிற ஆடைகளை மட்டுமே அன்றைய தினத்தில் உடுத்துவார்கள். மேலும் பெண்கள் அனைவரும் வீட்டின் முன்பு 10- நாட்களும் தொடர்ந்து பல வகை வண்ணப் பூக்களினால் அழகு கோலங்கள் இட்டு ஆடிப் பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குரு பகவான் எந்தக் கிரகத்தைப் பார்த்தாலும், அந்த கிரகம் சுப பலன்களைத் தந்து விடும் நவக்கிரகங்களில் பூரண சுப கிரகமாக குரு திகழ்கிறார். அந்த குருவின் அம்சமாகத் திகழ்பவர் வாமனர். வியாழதிசை, வியாழ புத்தி நடப்பில் உள்ளவர்கள், குரு தோஷத்தால் திருமணம், புத்திரப் பேறு தடைபடுபவர்கள் ‘வியாழக்கிழமைகளில் வாமன மூர்த்தியை வழிபடுவதால் பல நன்மைகள் பெறலாம்.
கேரள மாநிலம் திருக்காட்கரை என்ற இடத்தில் ‘ஓணம் பண்டிகையுடன்’ தொடர்புடைய கோயில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயிலில் மகாவிஷ்ணு, வாமன அம்சமாக எழுந்தருளி தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஆகியவற்றை ஏந்தியபடி நிற்கும் இந்த பெருமாளுக்கு ‘திருக்காட்கரை அப்பன்’ என்பது திருநாமமாக உள்ளது. தாயார் பெருஞ்செல்வநாயகி, வாத்சல்யதேவி என்னும் திருநாமங்களில் அருள்புரிகிறார். இங்கு சாஸ்தாவும், மகாலட்சுமியும் தனித்தனி, சந்நதி கொண்டுள்ளனர். இங்குள்ள சிவலிங்கத் திருமேனியை. மகாபலி சக்கரவர்த்தி வழிபட்டதாக தல புராணம் தெரிவிக்கிறது. முதன் முதலாக இந்த திருக்காட்கரையப்பின் கோயிலில் தான் ஓணம் திருவிழா தொடங்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. காலப் போக்கில் இத்திருவிழா கேரள மாநிலம் முழுவதும் பரவியதாகக் கூறப்படுகிறது.
கேரளப் பகுதியில் அதிக அளவில் விளையும் சுவை மிகுந்த நேந்திரம் வாழைக்கும் திருக்காட்கரையப்பன் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அப்பகுதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தனது விளை நிலத்தில் நிறைய வாழை மரங்கள் பயிரிட்டு இருந்தார். ஆனால் அவை வளர்ந்தும் எந்தப் பலனும் தராமல் அழிந்து போனது. இப்படிப் பல முறை நிகழ்ந்ததால் அவர் மனவேதனை அடைந்தார். பின்னர் அவர் தங்கத்தால் செய்யப்பட்ட வாழைக்குலை ஒன்றை திருகாட்கரையப்பனுக்குச் சமர்ப்பித்து தனது குறையை முறையிட, பக்தரின் வேண்டுகோளை ஏற்று இறைவன் தனது அருட்பார்வையை வாழை மரங்களின் மீது செலுத்தினார். உயர்ந்து வளர்ந்திருந்த வாழை மரங்களில் குலைகள் காய்த்துத் தள்ளியது. பெருமாளின் நேத்திரங்கள் (கண்கள்) பெற்று செழித்து வளர்ந்த வாழைக் குலைகள் அன்றிலிருந்து ‘நேந்திரம் வாழை’ எனப் பெயர் பெற்றது.
‘கானம் விற்றாவது ஓணம் உண்’ என்பது கேரள பழமொழி. ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ‘ஓணம் சத்யா’ என்ற நிகழ்ச்சியின் சிறப்பை உணர்த்துவதாகும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 64-வகையான சிறப்பு உணவுகள் தயாரிக்கப் படும். இப்படி வகைவகையாக தயாரிக்கப்படும் உணவுகள் கடவுளுக்குப் படைக்கப்படும்.
மலையாள மொழியில் ‘களி’ என்பது பாரம்பரிய நடனத்தைக் குறிக்கும். புலிக்களி அல்லது கருவக்களி எனப்படும் நடனம் ஓணம் பண்டிகையில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த புலிக்களி நடனம் 200-ஆண்டுகளுக்கு முன்பு கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராமவர்ம சக்தன் தம்புரான் என்பவரால் ஓணம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது.
ஓணம் பண்டிகைைய முன்னிட்டு கேரளாவில் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப் போட்டிகள், பாரம் பரிய நடனம் என பல கலை நிகழ்ச்சிகள் 10-நாட்கள் நடைபெறும். எங்ஙனும் மலையான பக்திப் பாடல்கள், கிராமியப் பாடல்கள் ஒலித்த வண்ணமிருக்கும்.
ஓணம் திருநாள் தொடர்ச்சியாக 10-நாட்கள் வெகு சிறப்பாக, விமரிசையாக கொண்டாடப்படும்.இந்த ஓணம் பண்டிகையில் ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்து கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன என்பது தான் சிறப்பிலும் சிறப்பாகும்.
பண்டிகையில் முதல் நாள் அத்தம் என்றும், இரண்டாம் நாள் சித்திரா என்றும் மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில் பெரிய அளவில் பூக்களால் அந்தப் பூ கோலங்கள் போடுவதும், கேரள மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் கொடுத்தும் மகிழ்வர்.
நான்காம் நாளான விசாகத்தில் ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் 64- வகையான உணவுகள் தயாரித்து இறைவனுக்குப் படைக்கிறார்கள். இதனை ‘ஓணம் சத்யா’ என்பர். ஓணம் பண்டிகையில் இந்த ஓணம் சத்யா மிகவும் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறது.
ஐந்தாம் நாள் அனுஷம் எனப்படும். அன்றைய தினம் கேரளாவின் பாரம்பரியமான படகுப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடியபடி துடுப்பு போட்டு செலுத்துவார்கள். இதனைக்காண கேரளா மட்டுமின்றி பாரத நாடெங்குமிருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானவர்கள் வந்து குவிகிறார்கள்.
ஆறாம் நாள் விழா திரிக்கேட்டா என்றும், ஏழாம் நாள் மூலம் என்றும், எட்டாம் நாள் பூராடம் என்றும், ஒன்பதாம் நாள் உத்திராடம் என்றும் அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம். இன்றைய தினம் தான் மகாபலி சக்கரவர்த்தி தன்னுடைய நாட்டு மக்களைப் பார்ப்பதற்காக வருகை புரிவதாக ஓணம் திருநாள் வரலாறு கூறுகிறது.
கேரள விழாக்களில் யானைகளுக்கு தனி இடம் உண்டு. அந்த வகையில் ஓணம் திருவிழாவிலும் யானைத் திருவிழா நடத்தப்படுகிறது. 10-ம் நாளான திருவோணம் அன்று விலை உயர்ந்த பொன் மற்றும் மணிகளாலான கவசங்களாலும் தோரணங்களாலும் யானைகளை அலங்கரித்து வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வருவார்கள்.
மகாபலிச் சக்கரவர்த்தி ஆண்ட காலத்தில் ‘‘பசியும் இல்லை. பஞ்சமும் இல்லை. பொய்யும் இல்லை. புரட்டலும் இல்லை. பயமும் இல்லை. பிணியும் இல்லை. எல்லா மனிதர்களும் ஒன்றாகவே கருதப்பட்டனர். எல்லோரும் ஒற்றுமையாகவே இருந்தார்கள்!’’ என்று கூறும் ஓணப்பாட்டு கேரளாவில் மிகவும் பிரபலமானது. அந்த நாள் இனி என்று வருமோ?