ஒருவர் ஏதாவது ஒரு விஷயத்தை மிகவும் விரிவாகப் பேசினால் “என்ன, பெரிய புராணமாக இருக்கிறது?” என்று சொல்வார்கள். புராணம் என்பது பெரிய அளவில் ஒரு விஷயத்தை விஸ்தாரமாகக் கூறுவது என்ற பொருளில் சொல்லப்படுகிறது. நம்முடைய நாட்டின் பெருமையில் ஒன்று இங்கு பழக்கத்தில் உள்ள புராணங்களும், புராணக் கதைகளும் ஆகும். புராணம் என்ற சொல்லுக்கு பழமையானது அல்லது பழங்கதை என்று பொருள் வரும்.
இதனுடைய பழமையை அறிவது கடினம். ஆனால் வேத தர்மங்களைச் சொல்வதற்காகவே புராணங்களும் இதிகாசங்களும் எழுதப்பட்டன என்றொரு கூற்று பெரியோர்களால் சொல்லப்படுகிறது. இக்கூற்றின் அடிப்படையில் பார்க்கும் பொழுது வேதம் என்பது சில மறைமுகமான - சூட்சுமமான - தர்மங்களை உள்ளடக்கியதால் அதை எளிதாக மற்றவர்களால் விளங்கிக் கொள்ள முடிவதில்லை.
அந்த சூட்சும விளக்கத்தை கதை வடிவில் சொல்வதற்காகவே புராணங்களும் இதிகாசங்களும் இயற்றப்பட்டன என்பார்கள். வைணவத்தில் ரகசிய நூல் ஒன்றில் பிள்ளை லோகாச்சாரியார் இப்படிச் சொல்கின்றார். வேதத்தின் அர்த்தத்தை அறுதி இடுவது (நிர்ணயிப்பது) இதிகாச புராணங்களினாலே என்பார். இதிகாசம், புராணம் இரண்டுக்கும் என்ன வேறுபாடு? என்று கேட்கலாம். இரண்டும் பழமையானது தான். ஆனால் ஒரு சின்ன வேறுபாடு உண்டு. இதிகாசம் என்றால் இப்படி நடந்தது என்று பொருள். புராணம் என்றால் பழமையானது என்று பொருள்.
இதிகாசங்கள் இரண்டு. ஒன்று ராமாயணம் இன்னொன்று மகாபாரதம். ராமாயணத்தை இயற்றியவர் வால்மீகி முனிவர் அந்த ராமாயணக் கதையிலேயே வால்மீகி முனிவரும் வருவார். அதைப் போலவே மகாபாரதத்தை இயற்றியவர் வியாசர். வியாசர் கதை முழுக்க ஆங்காங்கே ஒரு பாத்திரமாக வருவார்.
ஆனால், புராணங்கள் அப்படி அல்ல. பல்லாண்டுகளாக செவி வழிச் செய்தியாக வந்த விஷயங்களை முனிவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு பரப்பி வந்ததை புராணங்களின் துவக்க கால மாகச் சொல்லலாம். இதை முறைப்படுத்தித் தொகுத்தவர் வேதத்தைத் தொகுத்துத்தந்த வியாசர். இதிகாசங்கள் இரண்டு என்பது போலவே புராணங்கள் 18. இந்த 18 புராணங்களே பிரதானமாக புழக்கத்தில் உள்ளன.
18 புராணங்கள்
இந்த 18 புராணங்கள் என்னென்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.
1. பிரம்மபுராணம்.
2. பத்ம புராணம்.
3. விஷ்ணு புராணம்.
4. வாயுபுராணம்.
5. பாகவத புராணம்.
6. நாரத புராணம்.
7. மார்க்கண்டேய புராணம்.
8. அக்னி புராணம்.
9. பவிஷ்ய புராணம்.
10. பிரம்ம வைவர்த்த புராணம்.
11. லிங்க புராணம்.
12. வராக புராணம்.
13. ஸ்கந்த புராணம்.
14. வாமன புராணம்.
15. கூர்ம புராணம்.
16. மச்ச புராணம்.
17. கருட புராணம்.
18. பிரம்மாண்ட புராணம்.
இது தவிர உப புராணங்களும் உண்டு.
1. சனத்குமார புராணம்.
2. நரசிங்க புராணம்.
3. சிவ புராணம்.
4. பிரஹன்னாரதீய புராணம்.
5. துர்வாச புராணம்.
6. கபில புராணம்.
7. மானவ புராணம்.
8. ஒளசஸை புராணம்.
9. வருண புராணம்.
10. ஆதித்ய புராணம்.
11. மகேச்வர புராணம்.
12. வசிட்ட புராணம்.
13. பார்க்கவ புராணம்.
14. காளிகா புராணம்.
15. சாம்ப புராணம்.
16. நந்திகேஸ்வர புராணம்.
17. சௌர புராணம்.
18. பராசர புராணம்.
இப்புராணங்கள் பெரும்பாலும் பல்வேறு கதைகளை கொண்டிருந்தாலும், இதன் உட்கூறாக இந்த பிரபஞ்சத்தைப் பற்றியும், இயற்கையைப் பற்றியும், மனித குல தோற்றத்தைப் பற்றியும், ஆறுகளைப் பற்றியும், மலைகளைப் பற்றியும், கால நிலைகளைப் பற்றியும், காலத்துக்கேற்ற தர்மங்களைப் பற்றியும் மக்கள் வாழ்க்கையைப் பற்றியும், யாகங்களைப் பற்றியும் ஆரோக்கியத்தைப் பற்றியும், மூலிகை மருந்துகளைப் பற்றியும் எத்தனையோ செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. ஒவ்வொரு புராணங்களிலும் நூற்றுக்கணக்கான கதைகளும் உபகதைகளும் இருக்கின்றன. அந்தக் கதைகளில் நடக்கின்ற சம்பவத்தை இன்றைய வாழ்வியலோடு நாம் பொருத்திப் பார்க்க முடியாது.
அவைகளில் பல கதைகள் இடைச் செருகல்களாக இருக்கலாம். இன்றைய வாழ்வியலுக்குப் பொருத்தமில்லாததாக இருக்கலாம். ஆனால், அக்கதைகளின் இடையே ஊடுருவி நிற்கும் தர்மமானது ஒரே விஷயத்தை அடிப்படையாகக் கொண்டது.
1. சத்தியத்தைப் பேச வேண்டும்.
2. தர்ம வழியில் நடக்க வேண்டும்.
அற வாழ்வுதான் ஒரு மனிதனை உயர்த்தும் என்பதை ஆணித்தரமாகச் சொல்கின்ற கதைகள் புராணங்களில் உண்டு. பிரபஞ்சத்தின் தோற்றம், உயிர்களின் பிறப்பு, உயிர்களின் இறப்பு, உயிர்கள் இறந்தபின் செல்லுகின்ற உலகங்கள், மறுபிறப்பு என பல்வேறு விதமான விஷயங்கள் புராணங்களில் கொட்டி கிடக்கின்றன.
எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் பிரபஞ்ச ரகசியத்தை, எப்படி இவ்வளவு நுட்பமாகத் தெரிந்து கொண்டார்கள் என்ற வியப்பு, இந்தப் புராணங்களைப் படிக்கும் பொழுது நமக்கு ஏற்படுகிறது. அதைப் போலவே இதில் உள்ள சில கதைகள், இன்றைய வாழ்வியலோடு கொஞ்சமும் பொருத்தம் இல்லாததாக நம்ப முடியாததாக இருந்தாலும் கூட, அதில் இருக்கும் சில செய்திகள் அற்புதமான வாழ்வியல் அறங்களை அழுத்தமாக எடுத்துரைப்பதைக் காண்கின்றோம்.
தமிழ் இலக்கியத்தில் புராணம்
புராணம் என்ற சொல், தமிழ் இலக்கியத்தில் மணிமேகலையில் முதன் முதலில் வருகிறது சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதையில் வைணவவாதியைக் குறிப்பிடும் போது காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், புராணம் என்ற சொல், தமிழ் மொழியில் மணிமேகலை தோன்றிய காலத்திலேயே வழங்கப் பெற்றுள்ளது என அறிய முடிகிறது. ``புராணவித்’’ ``புராணி’’ போன்ற சொற்கள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணப்படுகின்றன.
எனினும், இச்சொற்கள் புராணத்தைக் குறிக்கவில்லை பழமையானவன், பழமையைப் பரப்புகிறவன் என்ற பொருளிலேயே இச்சொற்கள் வழங்கியிருக்கின்றன. திருவாசகத்திலே மாணிக்கவாசகர் முதலில் பாடியது சிவபுராணம், அங்கே புராணம் என்பதில் இறைவனுடைய பழமையைச் சொல்கிறார்கள். ஆகவே புராணம் என்ற சொல்லுக்குப் பழமை என்பது பொருள் சேக்கிழாரின் பெரியபுராணம் புகழ்பெற்றது.
வேதவியாசரின் மகன் சுகரிடமிருந்து கற்ற புராணங்கள் மற்றும் இதிகாசங்களை வைசம்பாயனர், அத்தினாபுரத்து மன்னன் பரிட்சித்திற்கு எடுத்துக் கூறும் போது அங்கிருந்த சூத பௌராணிகரான உக்கிரசிரவஸ் அவைகளை நன்கு கேட்டார். அப்புராண இதிகாசங்களை, கோமதி ஆற்றாங்கரையில் அமைந்திருந்த நைமிசாரண்யம் எனப்படும் இடத்தில் உள்ள குலபதி சௌனகர் முதலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார் என மகாபாரதத்தில் குறிப்படப்பட்டுள்ளது. இந்த நைமிசாரண்யம் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் (பத்துப் பாசுரங்கள்) செய்யப்பட்ட 108 வைணவத் தலங்களில் ஒன்றாக உள்ளது.
புராணங்கள் எப்பொழுது எழுதப்பட்டன?
இந்தப் புராணங்கள் எப்பொழுது எழுதப்பட்டன என்று சொல்வதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்றால் ஆதாரம் இல்லை. இந்தப் புராணங்களில் வரும் முனிவர்கள் ஒவ்வொருவரும் வேறு வேறு புராணங்களிலும் வருகின்றார்கள். இரண்டு முனிவர்களும் ஒரே முனிவர் தானா என்பதில்கூட சில இடங்களில் கருத்து வேறு பாடுகள் இருக்கின்றன. வேதகாலத்தை ஒட்டி புராண காலம் இருந்தது என்ற அடிப்படையில் புராணங்கள் பழமையானவை என்று எடுத்துக் கொள்ளலாம். இந்தப் புராண பெயர்களிலே பல கருத்து வேறுபாடுகள் உண்டு. 18 புராணங்கள் என்னென்ன என்பதிலும், அவைகளில் ``தாமச புராணம்’’, ``ராஜசபுராணம்’’, ``சாத்வீக புராணம்’’ என்று வகை பிரிப்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.
18 புராணங்களிலேயே மிகப் பெரியதாக ``ஸ்கந்த புராணமும்’’, மிகச் சிறியதாக ``மார்க்கண்டேய புராணமும்’’ இருக்கிறது. இந்த பிரபஞ்சம் முதல் முதலாக எப்பொழுது தோன்றியது? எப்படி தோன்றியது? எதுவரைக்கும் இந்த பிரபஞ்சம் இருக்கும்? குறிப்பாக நம்முடைய பூமியை ஏன் கர்ம பூமி என்று சொல்லுகின்றோம்? இந்த பூமியில் மட்டும் ஏன் யாகங்களைச் செய்ய வேண்டும்? தெய்வங்கள் ஏன் இந்த பூமியில் மட்டுமே அவதாரம் செய்கின்றார்கள்? இந்த பூமியில் வாழும் மனிதர்களுக்கு உள்ள சிறப்பு என்ன? மற்ற உயிரினங்களுக்கு உள்ள சிறப்பு என்ன?
இந்த பிரபஞ்சம் எப்பொழுது ஒடுங்கும் அதாவது பிரளய நிலைக்குச் செல்லும்? பிரளய நிலைக்குச் சென்ற பின்னால் எத்தனை காலம் பிரளயத்தில் இருக்கும்? இங்குள்ள ஆலயங்கள், புனித நதிகள் போன்ற பல செய்திகளும், அந்தக் காலத்து மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்? எந்த உணவு உண்டார்கள்? ஆரோக்கியத்தை எப்படி பராமரித்தார்கள்? என்று ஏராளமான செய்திகளும், போர்க் கருவிகளைப் பற்றிய செய்திகளும்கூட இருக்கின்றன. இது தவிர ஒவ்வொரு புராணத்திலும் நூற்றுக்கணக்கான அற்புதமான கதைகள் இருக்கின்றன.
ஒரு புராணத்தில் உள்ள கதை இன்னொரு புராணத்தில் வேறு மாதிரியாக இருப்பதையும் பார்க்கின்றோம். வெவ்வேறு காலத்தில் அல்லது வெவ்வேறு பகுதியில் உள்ள மக்களால் சொல்லப்பட்ட கதை களாக இருக்கலாம் அல்லது மக்களுக்குச் சொல்லப்பட்ட கதைகளாக இருக்கலாம். அப்படியானால் எப்பொழுதோ இயற்றப்பட்ட இந்தப் புராணங்களினாலே இன்றைய விஞ்ஞான யுகத்திலே வாழும் நமக்கு ஏதாவது பலன் உண்டா? என்ற ஒரு கேள்வி எழும். நிச்சயம் பலன் உண்டு. இன்றைக்கு மட்டுமல்ல எதிர்காலத்திலே வாழும் மனிதர்களுக்கும் இதில் ஏராளமான செய்திகள் உண்டு.
உலகில் பிறந்த மனிதன் பல்வேறு சிக்கல்கள் நிறைந்த வாழ்க்கையில் பல நேரங்களில் முடிவெடுக்க முடியாமல் திணறுவதைப் பார்க்கின்றோம். அம்மாதிரியான சமயங்களில் எப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து அமைதியான வாழ்க்கையை மேற்கொள்வது என்பதை புராணங்கள் கதைகளின் மூலமாகத் தெரிவிக்கின்றன. அறம், பொருள், இன்பம் என்கின்ற மூன்றையும் எப்படி வாழ்வியலில் பயன்படுத்தி நிறைவாக வீடு பேறு என்கிற பிறப்பற்ற நிலையை அடைவது என்கின்ற வழி வகைகளையும் இந்தப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இனி, ஒவ்வொரு புராணத்தைப் பற்றி சுருக்கமாகவும், அதில் அமைந்துள்ள அற்புத கதைகளைப் பற்றியும் நாம் அறிந்து கொள்வோம்.
முனைவர் ஸ்ரீராம்

