?வெற்றிலைபாக்கு போடும் போது, இரண்டு மூன்று வெற்றிலைகளாகச் சேர்ந்தாற்போல், ஒன்றாகப் போடக்கூடாது. கூட இருப்பவர்களுக்கு ஆகாது என்கிறார்கள். அது ஏன்?
- கணேஷ், கும்பகோணம்.
வெற்றிலைக்கொடியில் இருக்கும் வெற்றிலைகளில் சிலசமயம் கொடிய விஷத்தன்மை உள்ள சில பூச்சிகளும் புழுக்களும் இருக்கும். 2,3 வெற்றிலைகளாக எடுத்துப் போட்டால், விஷத்தன்மை கொண்ட அவற்றால் தீங்கு விளையும். வெற்றிலையை ஒவ்வொன்றாக எடுத்து, முன்னும் பின்னும் நன்றாகத் துடைத்துவிட்டுப் போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் சில வெற்றிலைகள் காரத்தன்மை அதிகம் கொண்டவையாக இருக்கும். 2,3 ஆகச் சேர்த்துப் போட்டால், பாதிப்பு விளையக் கூடும். நம் நலனுக்காகவே முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.
?இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டேன். அதற்கு என்ன பலன்?
- கோவிந்தராஜன், குடியாத்தம்.
நீங்கள் எந்த ஜாமத்தில் அந்தக் கனவினைக் கண்டீர்கள் என்பதைப் பொறுத்து பலன் என்பது மாறுபடும். பொதுவாக பகலில் உறங்கும் போது காணும் கனவிற்கு பலன் கிடையாது. இரவுப் பொழுதில் கடைசி ஜாமத்தில் காணும் பலனிற்கு முழுமையான பலன் உண்டு. இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இறந்தவர் உங்கள் உறவினர் அல்லது நண்பர், நன்றாகத் தெரிந்த நபர் எனும் பட்சத்தில் அவருக்குச் செய்ய வேண்டிய கடன் ஒன்று பாக்கி இருப்பதாகப் பொருள். அவர் உயிருடன் இருக்கும் போது நாம் அவருக்கு எதையோ ஒன்றைச் செய்கிறோம் என்ற உறுதியைத் தந்துவிட்டு அதனைக் காப்பாற்ற இயலாமல் போயிருக்கலாம். அதனை நினைவிற்குக் கொண்டு வந்து அவருக்குச் சொன்ன வாக்கினை அவருடைய வாரிசுதாரர்கள் மூலமாக நிறைவேற்ற வேண்டும். அல்லது அவர் தனது வாரிசுகளுக்கு எதையோ ஒன்றைச் செய்ய வேண்டி நம்மிடம் வேண்டுகோள் வைப்பதாகவும் பொருள் கொள்ளலாம். கனவில் வந்தவர்கள் நமது பெற்றோர்களாக இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடன்களை அவசியம் செய்தாக வேண்டும். ஒரு சிலர் இறந்து போன அரசியல் தலைவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டதாகச் சொல்வார்கள். இதெல்லாம் அவர்களது ஆழ்மனதில் உள்ள கற்பனையின் வெளிப்பாடே அன்றி அதுபோன்ற கனவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை.
?மூன்று சகோதரர்கள் ஒன்றாக சிராத்தம் செய்யலாமா அல்லது தனித்தனியே சிராத்தம் செய்ய வேண்டுமா?
- என். பிரபாகரன், சின்ன காஞ்சிபுரம்.
சகோதரர்கள் ஒன்றாக இணைந்து வசிக்கும் பட்சத்தில் ஒன்றாகவே சிராத்தம் செய்யலாம். வெவ்வேறு ஊர்களில் தனித்தனியே வசிப்பவர்கள் என்றால் தனித்தனியாகத்தான் சிராத்தம் செய்ய வேண்டும். பாகம் பிரிந்துவிட்டாலே சிராத்தமும் தனிதான் என்பதை சாஸ்திரம் உறுதியாகச் சொல்கிறது. பாகம் என்றால் சொத்தில் பாகப்பிரிவினை என்று பொருள்காணக் கூடாது. பாகம் என்றால் சமையல் என்று பொருள். நல்ல ருசியாக சமைப்பதை நளபாகம் என்று சொல்லக் கேட்டிருப்போம். ஆக, இங்கே பாகம் என்ற வார்த்தைக்கு சமையல் என்று பொருள். தனித்தனியே சமையல் செய்து சாப்பிடுபவர்கள் என்றால் சகோதரர்கள் எல்லோரும் தனித்தனியேதான் சிராத்தம் செய்ய வேண்டும். அதேபோல நாம் எங்கு குடியிருக்கிறோமோ அங்கேதான் சிராத்தம் செய்ய வேண்டும். அதாவது, நாம் எங்கு சமைத்து சாப்பிடுகிறோமோ அந்த இடத்தில்தான் சிராத்தத்தையும் செய்ய வேண்டும்.
