Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

எனக்கு நானே நண்பன், நானே பகைவன்!

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 100 (பகவத்கீதை உரை)

நமக்கு வழங்கப்படும் ஒரு பொருளை ‘வேண்டாம்’ என்றுகூறி மறுப்பதற்கு மன உறுதி வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் அந்த கணநேரத்துக்குள் அந்தப் பொருள் நமக்குத் தேவையா, அது இல்லாவிட்டால் நமக்கு ஒன்றும் நஷ்டமோ, பாதிப்போ இல்லையே; ஆனாலும் கொடுப்பதை மறுப்பானேன், வாங்கிக் கொள்வோம், பயன்பாடு இல்லையென்றால் பரண் மேல் தூக்கிப் போடுவோம் என்றெல்லாமும் யோசித்தோமானால், அந்தப் பொருள் மீதான இச்சை நம்மை எந்த அளவுக்கு ஆட்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அல்லது கொடுப்பவர் மனம் வருந்தக் கூடாதே என்பதற்காக வாங்கி வைத்துக்கொண்டு, மூலையில் தூக்கிப் போடுவது அல்லது ஓரிரு நாட்கள் கழித்துக் குப்பையில் சேர்ப்பது என்று செய்தால் அது கொடுத்தவருக்கும்,

அந்தப் பொருளுக்கும் நாம் செய்யும் அவமரியாதைதானே!

ஆகவே ‘வேண்டாம்’ என்று மறுப்பதற்குக் குற்ற உணர்வு கொள்ள வேண்டாம். அதாவது அந்தப் பொருள் மீது இச்சையே எழாதபடி பார்த்துக் கொள்ளலாம்.

``உத்தரேதாத்மனாத்மானம் நாத்மானமவஸாதயேத்

ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத்மைவ

ரிபுராத்மன’’ (6:5)

‘‘உன்னை நீயே உயர்த்திக் கொள். நீயாக ஏன் உன்னை இழிவு படுத்திக் கொள்கிறாய்? உன் நிலையின் இருப்பு உன்னிடமே இருக்கிறது. ஆமாம், நீயே உனக்கு நண்பன், நீயே உனக்குப் பகைவன்.’’ யாசகம் கோருவது இழிவு. நமக்கு அளிக்கப்படுவதை மறுப்பது உயர்வு. நமக்கு அளிக்கப்படுவது இல்லாமல் நம்மால் வாழ்க்கையை நிம்மதியாக, மகிழ்ச்சியாக நடத்திச் செல்லமுடியும்தான். ஆகவே ‘வேண்டாம்’ என்பது உயர்வுதான். இதில் இன்னொரு பரோபகாரமும் இருக்கிறது. அதாவது, தனக்கு வேண்டாதது, அது அவசியமாகத் தேவைப்படும் இன்னொருவருக்கு அளிக்கப்படலாம் இல்லையா? ஆங்கிலேயரிடமிருந்து நம் பாரதத்தை மீட்க எத்தனையோ லட்சக் கணக்கான போராளிகள் தம் உடைமை, உயிர் எல்லாவற்றையும் தியாகம் செய்தார்கள்.

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னாலேயே அதற்காகப் பாடுபட்டவர்களில் பலர் அதைக் காண முடியாமலேயே சிறைக் கொடுமையாலும், அதனால் ஏற்பட்ட உடல் நலச் சிதைவாலும் அல்லது தண்டனையாகத் தூக்கிலிடப்பட்டும் உயிர் நீத்துவிட்டார்கள். ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகும் உயிர் வாழ்ந்தவர்களில் பலர், தங்களுடைய தியாகங்களுக்கு அங்கீகாரமாகக் கொடுக்கப்பட்ட அரசாங்கச் சலுகைகளை ‘வேண்டாம்’ என்று சொல்லி மறுத்து விட்டார்கள். ‘சுதந்திரம் என்ற நாட்டுப் பலனைத் தவிர சுய ஆதாயம் எதற்காகவும் நாங்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடவில்லை,’ என்று கம்பீரமாக சொல்லி நிமிர்ந்து நின்றார்கள். இத்தகைய மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் கிருஷ்ணன் அறிவுறுத்துகிறார்.

‘நட்பும், பகையும் நமக்குள்ளேயே,’ என்கிறார். அதாவது நமக்கு நாமே நண்பர்; நாமே எதிரி. தனக்குத் தானே நண்பராக விளங்குபவர்கள் வெகுசிலரே. இவர்களுக்கு வெளியிலிருந்து பகை வருவதற்கான வாய்ப்பே இல்லை. அதேபோல, தனக்குத் தானே எதிரியாக விளங்குபவர்களும் அநேகர். இவர்களுக்கு வெளியிலிருந்து நண்பர்கள் அமைவது என்பது வெகு அபூர்வமே - அவ்வாறு அமைபவர்களையும் தன் மனப்போக்கால் விரைவில் பகைவராக மாற்றும் வல்லமை இவர்களுக்கு உண்டு!

‘உன் மனசாட்சிப்படி நடந்துகொள்,’ என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அப்படியென்றால்? நல்ல படியாகவா, தீயவழியாகவா? இங்கேதான் நமக்குள் நண்பரையோ, பகைவரையோ உருவாக்கிக் கொள்ளும் ப்ராஸஸில் நாம் தடுமாறுகிறோம். இந்தத் தடுமாற்றத்துக்கு நம் இச்சைதான் பெரிதும் துணை போகிறது. சேவை மனப்பான்மையுடன் அணுகும் போது நட்பு பலிதமாகிறது. ஏதேனும் ஆதாயம் எதிர்பார்க்கும்போது பகைதான் வளர்கிறது.

‘நான் போய் யாரையும் பார்க்க மாட்டேன், ஆனால் பிறர் என்னைப் பார்க்க வரவேண்டும்!’ என்ற மனோபாவம் நட்பை வளர்க்குமா? இத்தகைய எண்ணம் கொண்டவர் உடல் நலமின்றி படுத்த படுக்கையாக இருந்தாலும், ஆறுதல் சொல்லவாவது யாராவது வருவாரா என்ன? மனதில் ஊன்றும் விதைதானே விளையும்? மௌக்கலாயனர் என்பவர் புத்தரின் சீடர். சில சந்நியாசிகளுடன் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாகத் தரையில் பதிந்து மேலே நீட்டிக் கொண்டிருந்த ஒரு கல்லில் அவர் கால் விரல் தடுக்கியது. அது குருதியைப் பெருக்கியது. உடனே அவர் தன் கரங்களை மேல்நோக்கி உயர்த்தி, கண்களை மூடி ஆனந்த பாவத்தில் லயித்தார். உடன் வந்தவர்களுக்குக் குழப்பம். ‘அடசே, கல் தடுக்கிவிட்டுவிட்டது,’ என்றோ, ‘எவனோ மடையன் இங்கே கல்லைப் பதித்து வைத்துவிட்டான்,’ என்றோ அலுத்துக்கொள்ளாமல், கரம் கூப்பி ஆனந்த லஹரியில் ஆழ்ந்து விட்டாரே என்று அவர்களுக்கு வியப்பு.

தற்காலிக மோனத்திலிருந்து வெளிவந்த மௌக்கலாயனர், அவர்களிடம், ‘‘என் பகை தீர்ந்தது! நான் எப்போதோ, எதற்காகவோ ஒரு பாறையை அடித்து உடைத்திருப்பேன். அப்போது நான் விதைத்த அந்தப் பகை, இப்போது பழி தீர்த்துக் கொண்டது. ஆகவே நான் விடுதலையாகிவிட்டேன்,’’ என்று சொன்னார். இங்கே காயமோ, ரத்தமோ, வலியோ ஒரு பொருட்டே அல்ல. முன்வினைக்கான பலன் இது. அவ்வளவுதான். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா,’ என்பதற்கும், ‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்பதற்கும் இதுவே தத்துவார்த்த அர்த்தம்!

நம்மைவிட பலவீனமானவர்களை அழவிட்டு வேடிக்கை பார்க்கும் குரூர சந்தோஷம் பலரிடம் உண்டு. நம்மை எதிர்த்துத் தாக்கவோ, ஏன் பேசவோகூட முடியாத அவர்களுடைய பலவீனத்தைத் தம் தற்காலிக கொடூர சந்தோஷத்துக்கு இரையாக்கிக் கொண்டிருப்பார்கள். துரதிருஷ்டவசமாக இதே மனப்பாங்கு விஸ்தரிக்கப்படும்போது, அதன் ரியாக்‌ஷனும், பலனும் விபரீதமாகவே இருக்கும்! ஆமாம், ஒருவன் அடி பணிந்தானென்றால், எல்லோருமே அப்படித்தான் என்ற இளக்காரம் மனசுக்குள் புகுந்து கொள்ளும். ஆனால், தானே அடிபட்ட பிறகுதான் புத்தி வரும். அந்த புத்தி நிலைத்து நிற்குமா என்பதும் சந்தேகமே! கிராமத்தில் தன் கையில் சவுக்கை வைத்துக் கொண்டு அதனால் மாடுகளை அடித்தும், வாயாலும் பலவாறாக அவற்றை அதட்டியும் வண்டியை ஓட்டுகிறான் ஒருவன்.

மாடுகள் பயந்து கொண்டு, அவன் எதிர்பார்க்கும் வேகத்துக்கு வண்டியை இழுத்துக் கொண்டு ஓட முயற்சிக்கின்றன. இந்த ஓட்டத்தில் வெறுப்பு இருக்கும். ஏதேனும் ஒரு கட்டத்தில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அப்படியே படுத்துவிடும். அதற்குப் பிறகு வண்டிக்காரன் எத்தனை அடி அடித்தாலும், ‘இது தெரிந்தது தானே,’ என்ற அலட்சியப் பொருமலில் எழுத்திருக்கவே முயற்சிக்காது. அதே, ‘ஓட்ரா ராஜா, ஓட்ரா…’ என்ற அன்புச் சொல்லால், அவற்றின் முதுகைக் கைகளால் வருடிவிட்டபடி வண்டி ஓட்டினால், இந்த ஓட்டத்தில் உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் உணர முடியும். மாடுதானே, திருப்பித் தாக்கவா போகிறது என்ற அகம்பாவத்தைவிட, ‘என்னோடு வாழ்கிறது, என் குடும்பத்தில் ஒன்றாக,’ என்ற பாசம்தான் நட்பை வெல்லும்.

மாட்டை அடித்து விரட்டியவன் அதற்கு முன்னாலேயே தனக்குத் தானே விரோதியாகி விட்டவன்! தனக்கு எதிலும் ஆதாயம் வேண்டும் என்ற மனப்போக்கில் பிறரையும் எதிரிகளாக மாற்றிக்கொண்டவன். இத்தகையவன் தனக்கு நண்பனாக இல்லாதவன், பிற யாருக்கும் நண்பனாக இருக்கக் கூடாது என்ற விபரீத ஆசையையும் கொண்டவனாக இருக்கிறான்! ஆக, இவனுடைய பகை எண்ணிக்கைதான் கூடிக் கொண்டே போகிறதே தவிர, நட்பு ரேகை கண்ணுக்கே எட்டாமல் போய்விடுகிறது.

‘‘உனக்கு நீ நல்லவனாக இரு,’’ என்று அர்ஜுனனுக்கு போதிக்கிறார் கிருஷ்ணன். ‘‘அதாவது தர்மத்துக்குத் தலைவணங்கு. உனக்கே நீ நல்லவனாகும்போதுதான் உனக்கு தர்மத்தின் பாதை தெளிவாகத் தெரியும். அப்போது தர்மத்துக்கு எதிரானவர்களை அடையாளம் கண்டுகொள்வதோடு, அவர்களை எதிர்க்கவும், வெல்லவும் முடியும். தர்மம் ஒன்றுதான். அதுதான் நிலைத்திருப்பது. அதற்காகப் போராடுவது நல்லதைச் சார்ந்த முயற்சிதான்.

இந்த முயற்சியில் ஏற்படக்கூடிய எதிர்த் தரப்பு இழப்புகளுக்கு நீ வருந்தவோ, சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கவோ தேவையே இல்லை.’’ பாண்டிச்சேரி அரவிந்த அன்னை சொல்வார்: ‘‘கல்லுக்குள் ஈரம் இருக்கிறது என்பதன் பொருள் என்ன? ஜடப்பொருள் என்று எதுவுமே இல்லை. எல்லாமே உணர்வு கொண்டவைதான். எல்லாமே நேசிக்கப்பட வேண்டியவைதான். இதற்கு அடிப்படைத் தேவை நாம் நல்லதையே நினைக்க வேண்டும், அவ்வளவுதான்’’. ‘‘எதிர்ப்படும் மனிதர்கள் மட்டுமல்ல, மரம், செடி, கட்டடம், விளக்குக் கம்பம், விலங்குகள், பறவைகள் எல்லாமே நலமாக விளங்கட்டும் என்று எண்ணுங்கள். அவ்வாறு எண்ணம் கொள்ளும்போதே நம் அகம் மலர்வது நம் முகத்தில் பிரதிபலிக்கும்.

எதிர்ப்படுவோரை மதிக்கச் செய்யும். அதுமட்டுமல்ல, நம் எண்ணம் டெலி பதியாக அவர் மனசுக்குள்ளும் போய் உட்கார்ந்துகொள்ளும். அவரையும் அதே நல்லெண்ண பாதைக்குத் திருப்பும்!’’ வட இந்தியாவில் குறிப்பாக யாத்திரைத் தலங்களில் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும்போது, ‘ராம், ராம்…’, ‘ராதே கிருஷ்ணா,’ என்று சொல்லிக்கொள்வார்கள். இத்தனைக்கும் அவர்கள் ஒருவருக்கொருவர் முன் அறிமுகமில்லாதவர்களாகவே இருப்பார்கள். ஆனாலும் இந்த முகமன், ‘இறையருள் உங்களுக்கு பரிபூரணமாகக் கிடைக்கட்டும்,’ என்ற நல்லெண்ணத்தின் சுருக்கமான வெளிப்பாடுதான்.

இறை நம்பிக்கை மிகுந்த அவர்கள், தாங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் ராமனையே, கிருஷ்ணனையே காண்பதாக எண்ணி சந்தோஷப்படுகிறார்கள். இப்படி முகமன் கூறும் சந்தர்ப்பங்களை எல்லாம் இறைசந்திப்புக்கான வாய்ப்பாகவே அவர்கள் கருதுகிறார்கள். இத்தகைய இறைச் சிந்தனை பகையையா வளர்க்கும்? நல்லிணக்கத்தைதானே மேம்படுத்தும்! கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு உபதேசித்த இந்த கீதை, நமக்கே சொல்வது போல இருக்கிறதா? அதுதான் உண்மை. நான்கு யுகங்களில், அடுத்தடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தர்மம் நசிந்து வருவதைக் கண்ட கிருஷ்ணன், அடுத்த கலியுகம், அதர்ம யுகமாகவே இருக்கும் என்ற கணிப்பில் ஆற்றிய உரைதான் இது.

முதலாவதான கிருத யுகம், அப்பழுக்கற்ற தர்மம் தழைத்தோங்கிய சத்ய யுகமாகத் திகழ்ந்தது. அடுத்து வந்த திரேதா யுகத்தில் தர்மத்துக்குக் கொஞ்சம் பங்கம் ஏற்பட்டது. இப்போதுதான் மஹாவிஷ்ணு, ராம அவதாரம் மேற்கொண்டு அரக்கர் ரூபத்தில் வந்த அநீதிகளை அழிக்கப் பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். அதற்கு அடுத்ததான துவாபர யுகத்திலோ தர்மத்துக்குப் பெரிய தலைக்குனிவு ஏற்பட்டது. இப்போதுதான் கிருஷ்ணன் அவதரித்து தர்மத்தை நிலை நாட்ட, அநீதிக்கு எதிராகப் போராடினார். நியாயவான்களுக்கு ஆதரவாக விளங்கினார். சூதும், வஞ்சனையும் நிறைந்தவர்களுக்கு அவர்களுடைய அதே குணங்களால் அவர்களை அழித்தொழித்தார்.

ஆனால், நான்காவதான கலியுகத்தில் அதர்மமே கோலோச்சும் என்று ஊகித்த அவர், அர்ஜுனனுடைய மனக் கோணலை நேராக்கும் சாக்கில், கலியுக மக்களுக்கு நற்பண்புத் தகவல்களை, அறிவுரைகளை, பகவத் கீதையாக உபதேசித்தார். ஆகவே நேரடியாக அர்ஜுனனிடம் அவர் பேசுகிறார் என்றால், கலியுக மக்களிடமும் அதன் மூலம் தர்மம் மிக்க வாழ்க்கையை மேற்கொள்ளும் வழிகளைச் சொல்லித் தருகிறார் என்றுதான் அர்த்தம்.

700 ஸ்லோகங்கள் கொண்ட நீண்ட இந்த உபதேசத்தில் ஒரு சொல்லைக்கூட கிருஷ்ணன் தவறாக உபயோகிக்கவில்லை என்கிறார் தத்துவ ஞானி ஓஷோ.‘‘அவருடைய சொற்களில் ஆடம்பரமில்லை, அதிகாரமில்லை ஆனால், கனிவான எச்சரிக்கை இருக்கிறது. வீணாக பயமுறுத்தவில்லை. அதே சமயம் சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் விட்டதில்லை. ஒரே விஷயத்தை அவர் திரும்பத் திரும்பச் சொல்வது போலதான் இருக்கும். அது எம்ஃபஸைஸ் செய்வதற்குத்தான், அதாவது அழுத்தமாக, வலியுறுத்திக் கூறுவதற்குதான்.’’

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்